கடன்பட்ட பொருளாதார சிக்கலால் கலவரத் தீயில் பற்றி எரியும் இலங்கை

அனுமன் வாலில் இலங்கை அரசன் ராவணன் தீயை வைத்து தண்டனை கொடுப்பதாக நினைத்துச் செய்தது இலங்கையே தீயில் எரியும் நிலை ஏற்பட்டது என்பது தான் ராமாயணம் சொல்லும் செய்தி.

அந்த ராமாயண கால ராவணன் போல் கடந்தகால பல இலங்கை அரசுகள் அபரிமிதமாக கடன் வாங்கி – கடனின் முதல் – வட்டி ஆகியவைகளைக் கட்டவும் மேலும் கடன் வாங்கி அந்தக் கடன் தீயில் திவாலாகும் நிலைக்கு இலங்கையை தள்ளி விட்ட அவலம் தான் இன்றைய நிலையாகும்.

1965-ம் ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஸ்ரீ லங்கை அரசுக்கு 16 தடவை நிதி உதவி செய்துள்ளது. அந்த நிதிகளை அளிக்கும் போதெல்லாம் ஸ்ரீ லங்கை அரசுக்கு பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கவும், நிதிக் கொள்கையை பொருளாதார மேம்பாட்டிற்கு ஏற்ப விதிவகுக்கவும், அரசு வழங்கும் உணவு மான்யத்தைக் கட்டுப்படுத்தவும், ஸ்ரீலங்கா நாணய மதிப்பைக் குறைத்து அதன் மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தவும்என்று அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் $78.70 கோடி அளவில் கொரானாவின் பாதிப்பிலிருந்து மீளமட்டும் தனியாக சென்ற ஆகஸ்ட் மாதத்தில்  கடன் வாங்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசு.

2022 வருடத்தில் இலங்கை அரசு சுமார் $70 லட்சம் கடன் திருப்பிச் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் அதன் அன்னிய நிதி இறுப்பு 70 சதவிகிதம் அளவில் ஜனவரி 2022-லிருந்து சரிந்த வண்ணம் உள்ளது. அதன் அன்னிய நிதி நிலை $2.31 மில்லியன் தான். அது கொடுக்க வேண்டிய அன்னியக் கடனோ $4 மில்லியனாகும்.

சர்வதேச நாணய நிதியம் கடனைத் தவிர, ஸ்ரீலங்கா $12.55 பில்லியன் அளவில் ஏழியன் டெவலெப்மெண்ட் பாங்க், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்து கடன் என்று கடன் சுமையால் திணறுகிறது. இது ஸ்ரீலங்காவின் சர்வதேச கடன் பத்திரங்களாக 36% அளவில் – ஏழியன் பாங்க் – 15 %, ஜப்பான் கடன் 11% & சீனா கடன் 10% என்ற நிலையில் உள்ளது.

ஸ்ரீலங்காவின் கடன் சுமை 2019 வருடம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94% ஆக இருந்தது 2021-ம் வருடத்தில் அது 119% உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களில் அதீதமான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு, அவைகளைச் சரிசெய்ய அயல்நாட்டுப் பொருட்களை வாங்கி இறக்குமதி செய்ய நிதி இல்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து

விடங்கொண்ட மீனைப் போலும்

      வெந்தழல் மெழுகைப் போலும்

படங்கொண்ட பந்தழல்வாய்

       பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராமன் பாணம்

       செருக்களத்துற்ற போது

கடன்கொண்ட நெஞ்சம் போல்

        கலங்கினான் இலங்கை வேந்தன்

-     என்ற அவல நிலையில் ஸ்ரீலங்கா செய்வதறியாது தவிக்கிறது.

ஸ்ரீ லங்காவின் அன்னிய நிதி வரவு அதன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியர்களால் வரும். 2019-ம் வருடம் ஏப்ரல் மாதம் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கோவிட் -19 சர்வதேச நோய்ப் பரவல் ஆகிய இரண்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்னிய நிதிக் கையிருப்பு குறைய அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பண்டங்கள், மருத்துகள், பெட்ரோல், மண்ணெண்ணை போன்றவைகளை இறக்குமதி செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு நிதி நெருக்கடியால் ஸ்ரீ லங்கா திணறிகொண்டிருக்கிறது.

பொருட்கள் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, விலைவாசிகள் விண்ணைத் தொட்டுவிட்டன. மேலும் மின் வெட்டு 13 மணிக்கு மேலும் நீடித்து அதுவும் பலவிதமான பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி விட்டது.

ஸ்ரீ லங்காவின் ஏற்றுமதியின் முக்கிய அங்கம் வகிப்பது தேயிலை, காப்பி, ரப்பர், வாசனைத் திரவியங்கள் ஆகும். இந்தப் பயிர்களுக்கு ரசாயன உரங்கள் வேண்டும். அவைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாக வேண்டும். அன்னிய நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அனைத்து ரசாயன உர இறக்குமதியை 2021 ஆண்டு பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சே ரத்து செய்து விட்டார். அனைவரும் இயற்கை உரத்திற்கு மாறுங்கள் என்று உத்திரவிட அதனால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியும் குறைந்து, அன்னிய நிதி வரவும் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த அவரது தவறான முடிவை அவரே பிறகு வாபஸ் வாங்கினாலும், அதனால் ஏற்பட்ட தாக்கம் போகவில்லை.

இந்தியா இலங்கை அரசுக்கு பெருமளவில் உதவிக் கரம் நீட்டி உள்ளது. $500 மில்லியன் கடன் அளவில் ஸ்ரீலங்காவிற்கு எரிபொருட்கள் அனுப்பி உள்ளது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு $2 பில்லியன் அளவில் கடன் உதவியும் அளித்துள்ளது. தமிழக அரசும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி உள்ளது.

சீன அரசும் ஸ்ரீலங்காவிற்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. அதன் முந்தைய கடனைத் திருப்பிக் கொடுக்கும் தவணைகளைத் தள்ளிப் போடவும் ஸ்ரீ லங்கா சீனாவை வேண்டி உள்ளது.

அத்துடன் ஸ்ரீ லங்கா சர்வதேச நிதி மையத்திடம் 17-வது கடனைக் கேட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்குத் திண்டாட வேண்டிய நிலையில், அவர்கள் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். இலங்கை சந்தித்துள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் வேறு வழியின்றி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

மகிந்த ராஜபக்சேயின் பூர்வீக இல்லம் – அவரது அலுவலகம் ஆகியவைகள் போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் உயிருக்கு பயந்து அவர் இப்போது இலங்கை கடற்படையினரிடம் தஞ்சம் அடைந்துள்ளார். ராஜபக்சேயின் தந்தை டி ஏ ராஜபக்சேயின் பெரிய சிலை கோபமடைந்த மக்களால் அகற்றப்பட்டது.

அவரை நாட்டை விட்டு வெளியேற கூடாது என்று கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நாட்டு மக்கள் முன்வைத்துள்னர். தங்களது கோரிக்கையை ஏற்று கோத்தபய பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் மீண்டும் போராட்டங்கள் தீவிரபடுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரி்த்துள்ளனர்.

இதனால் அதிபர் கோத்தபய அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் பிரதமர் ரணிலின் அணுகுமுறை அதிபரை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'வீட்டுக்கு செல் கோத்தா' என்ற மக்கள் போராட்டம் தொடர வேண்டும். அப்போதுதான் இலங்கை அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் ஏற்படும் என்று அதிபருக்கு எதிராக அவர் தெரிவித்துள்ள கருத்து இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஐந்து முறை முன்பு பிரதமர் பதவியில் இருந்தவர். ஆனால் அவர் முழுமையாக தமது பதவியை வகிக்காதவர். இப்போது அவருக்குக் கிடைத்த இந்தப் பதவி அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் அப்படி?

225 உறுப்பினர்கள் உடைய இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 2021 நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ரணில் விக்கிரம சிங்கேயும் தோல்வி அடைந்தார். ஆனால் 2021-ம் ஆண்டு தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் மூலமாக ஒரு எம்பி நியமிக்கப்பட அந்த ஒரே ஒரு எம்பி பதவியில் தான் அவர் இருக்கிறார். அதனால் என்ன? ரணில் விக்கிரம சிங்கேயின் அரசியல் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று கணித்த அரசியல் விமர்சகர்கள் அதிர்ச்சி அடையும் வண்ணம் இப்போது அதிர்ஷடதேவதையின் கடாக்ஷத்தால் அவருக்கு பிரதம மந்திரி பதவி கிடைத்துள்ளது. 

மீடியாக்கள் இதெல்லாம்  “உங்களுக்கு ஒவரா தெரியலையா ரணில்?” என்று கேட்க பதிலுக்கு அவர் போட்டாரே ஒரு போடு: “ஸோ வாட்? 1939 ல் வின்ஸ்டன் சர்ச்சில்  பிரதமராகும் பொழுது அவருக்கு ஆதரவாக இருந்தது 4 எம்பிக்கள் தான். 4 எம்பிக்களை வைத்து இருந்த சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக முடியும் பொழுது நான் ஏன் இலங்கை பிரதமராக கூடாது?” என்று கேட்க நிருபர்கள் மிரண்டு விட்டார்கள்.

அரசியலில் எப்பொழுது வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்பதற்கு ரணில் இப்பொழுது பிரதமரானதையே கூறலாம்.

ரணில் விக்கிரமசிங்க தனது 43 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றின் பின்னணியில் ஸ்ரீலங்காவை இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீட்டு நல்லாட்சி தருவாரா? என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

நான்கு ராஜபக்சே சகோதரர்களின் குடும்ப ஆட்சியை நிறுவ ஸ்ரீலங்கா ஓட்டர்கள் வாக்களித்து அரசு கட்டிலில் ஆட்சி செய்ய வைத்ததற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து விட்டார்கள்.

இப்போது ஸ்ரீலங்கா ஓட்டர்கள் தோற்கடித்த ரணிலுக்கு பிரதமர் பதவி கிடைத்ததுள்ளது. பதவி கிடைத்தது அவருக்கு அதிஷ்டம் தான். ஆனால் ஸ்ரீலங்கா மக்களுக்கும் அதிஷ்டமானால் நலமாகும்.

ஸ்ரீலங்கா அனுமனால் தீயில் வெந்தது. நிதி நெருக்கடித் தீயை ரணில் விக்கிரமசிங்க அணைத்து, ஸ்ரீலங்காவின் தற்கால பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்று நம்புவோமாக.

 



 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017