ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகளின் அருளுரை
“ஸ்ரத்தை” என்கிற
சப்தத்திற்கு நிஷ்க்ருஷ்டமான (தெளிவான) அர்த்தத்தை சங்கரபகவத்பாதாள்
விவேகசூடாமணியில் கூறியிருக்கிறார்.
சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய
ஸத்யபுத்த்யா வதாரண I
ஸா
ச்ரத்தா கதிதா ஸத்பிர்யயா வஸ்தூபலப்யதே II
அதாவது
சாஸ்திரத்திலும் ஆசார்யாளுடைய வாக்கியத்திலும் மிகவும் பிராமாண்ய புத்தி (உண்மை
என்கிற எண்ணம்) இருந்தால் அதற்குத்தான் “ஸ்ரத்தை” என்று பெயர்.
“சாஸ்திரத்தில்
இப்படி இருக்கிறது. அது அப்படித்தான்
நடக்கும்” என்ற தீர்மானம் இருக்க வேண்டும்.
அநேக ஜனங்கள், “சாஸ்திரத்தில் கூறியபடி
எல்லாவற்றையும் செய்தோம். ஆனால், அதில் சொல்லப்பட்ட காரியம் மட்டும் ஒன்றும் ஆகவில்லை” என்று குறை
கூறுவார்கள்.
இதற்குக்
காரணம் அவர்களிடம் ஸ்ரத்தை இருக்கவில்லை என்பதேயாகும்.
“சாஸ்திரத்தில்
என்னவோ இருக்கின்றது. செய்தால் என்ன ஆகுமோ
தெரியாது. செய்து தான் பார்ப்போம்” என்ற
எண்ணம் தான் அநேகம் ஜனங்களுக்கு இருக்கிறது.
“சாஸ்திரத்தில்
இப்படி நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆசார்யாளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தையும் அப்படியே இருக்கிறது. ஆதலால் உண்மையில் இப்படித்தான் நடக்கும்” என்ற
தீர்மானம் இருக்க வேண்டும்.
இதற்காகத்தான்
“ஸத்யபுத்த்யாவதாரணா” என்ற பதத்தை
சங்கரபகவத்பாதாள் போட்டிருக்கிறார்.
இம்மாதிரி
உறுதியான நம்பிக்கையுடன் காரியம் செய்தவர்களுக்கெல்லாம் உத்க்ருஷ்டமான (உயர்வான)
பலன் கிடைத்து விட்டது. இதில்
சந்தேகமேயில்லை.
Comments