எதிர்ப்பதும், எதிர் கொள்வதும்
எதிர்ப்பதும், எதிர் கொள்வதும்
நமது வாழ்வில் நாம் இரண்டு விதமான மன நிலையில் அநேக நேரங்களில் இருக்க வேண்டிய
நிர்ப்பந்தம் உண்டு. அவைகளை எதிர்க்கும் மன நிலை (Reaction Mode) என்றும், எதிர்கொள்ளும்
மன நிலை (Responsive Mode) என்றும் குறிப்பிடலாம்.
அந்த இரண்டு மன நிலைகளைப் பற்றி விவரிப்பது தான் இக் கட்டுரையின் நோக்கம்.
எதிர்க்கும் மன நிலை:
முதலில் எதிர்க்கும் மன நிலையைப் பார்ப்போம். இந்த நிலையில் மனத்தில் அழுத்தம்
உண்டாவதை மனிதர்கள் உணர்வார்கள். இதில் ஒருவர் கட்டாயத்தின் பளுவின் சக்தியால் தாக்கப்பட்டு,
ஒரு தவறான அவசர முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்படும். இதில் எடுக்கும் முடிவில் ஒரு
விஷயத்தில் அடங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து, ஒரு தெளிவான பார்வையைப் பெற
நாம் தவறி விடுகிறோம். தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு ஆளாகி, அவசரப்பட்டு முடிவெடுக்கும்
நிலை உண்டாகிறது. அதனால், நாம் கோபப்பட்டும்,
கவலைப் பட்டும், வெறுப்படைந்தும் ஆகிய மன நிலையால் துன்பப்பட்டுத் தவிக்க வேண்டி வரும்.
நாம் எதிர்க்கும் மன நிலையில் இருக்கும் போது, நமது தேர்வு மற்றும் முடிவெடுக்கும்
திறன்கள் தீவிரமாகப் பாதிக்கப்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகும். இந்த நிலையில்
நாம் அவசர முடிவெடுத்து, அதற்காக அடிக்கடி நாம் வருந்துவதுண்டு. மேலும், இந்த முடிவு
மற்ற நபர்களை வெறுப்படையச் செய்து, அவர்களிடம் தூங்கிக் கொண்டிருந்த தீய குணங்களை வெளிப்படுத்தும்
நிலைக்குக் கொண்டு விட்டுவிடும்.
இந்த மன நிலையில் நல்ல வாய்ப்புகள் நம் கதவைத் தட்டினால், நாம் அநேகமாக வேண்டா
வெறுப்பாக அவைகளைச் சந்திக்க முனைவோம். அதை சந்தேகக் கண்களுடன் பார்த்து, எதிர்மறை
எண்ணங்களை மனத்தில் கொண்டு, அந்த நல்ல வாய்ப்புகளை இழந்து தவிக்க வேண்டிவரும்.
எதிர்கொள்ளும் மன நிலை:
அடுத்து நாம் தெரிய வேண்டியது எதிர்கொள்ளும் மன நிலையாகும்.
இந்த நிலையில் மனது மிகவும் சஞ்சலமற்று, தெளிவாக இருக்கும். எந்தப் பிரச்சனையையும்
எதிர் கொள்ளும் நிலையில், நாம் நம் நிலையில் மிகவும் தீர்க்கமான முடிவோடு இருப்போம்.
பிரச்சனையை முழுவடிவில் பார்த்து - நமது சொந்த விருப்புகளைப் புறந்தள்ளி, தெளிவான மன
நிலையில் இருப்போம். ஆகையால், பிரச்சனையில் முடிவெடுப்பதில், நாம் பிடிவாதமாக விடாப்பிடியாக
ஒரு முடிவையே கொள்ளாமல், பிறர் கருத்துக்களைக் கேட்டு, நமது முடிவை மாற்றும் மன நிலையுடன்,
அமைதியான முறையில் முடிவெடுக்கும் தன்மையை வளர்ப்போம். இந்த எதிர்கொள்ளும் மன நிலையில்
தான் ஒரு மனிதன் மிகவும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.
அது மட்டும் அல்ல. இந்த நிலையில், நாம் எதிர் தரப்பு மனிதர்களின் சிறப்பான அம்சங்களையும்
வெளிக்கொண்டு வர முடியும். அத்துடன், எடுக்கும் முடிவுகள் மிகவும் சிறப்பாக அமையும்.
வாய்ப்புகள் நம் கதவுகளைத் தட்டும் போது, அவைகளைத் திறந்த மனதுடன் எதிர்கொண்டு,
புதிய கருத்துக்களுக்கும் வழி வகிப்போம்.
ஆகையால், இந்த இரண்டு மன நிலைகளில் சிறந்த ஒன்றான ‘எதிர்கொள்ளும் மன நிலையை’
தேர்வு செய்து வாழ்க்கையில் வெற்றி அடைய முயல வேண்டும்.
Comments