வ.வே. சு. ஐயர்


நூலகம்:

நான் கண்ட நால்வர் 

எழுத்து: வெ. சாமிநாத சர்மா

போன இதழில், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களைப் பற்றிய விபரங்கள் பல அறிந்தோம். இந்த இதழில் திரு. வ.வே.சு. ஐயர் அவர்களைப் பற்றி வெ.சாமிநாத சர்மாவின் பார்வையில் அறியப் போகிறோம். இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால், ஆசிரியர் சாமிநாதன் வ.வே.சு.ஐயருடன் நெருங்கிப் பழகியவர். அவரின் கீழ் உதவி ஆசிரியராகப் பல வருடங்கள் பணிபுரிந்தவர். ஆகையால், விபரங்கள் அனைத்தும் நேரடியான உண்மை நிலவரம் என்பதை அறியலாம். நீண்டு இருப்பினும், படிக்க மிகவும் சுவை உள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள். தவறாமல் படிக்கவும்.     - ஆசிரியர்.

1. தேசபக்தன் பத்திரிகைக்கு ஆசிரியராக திரு.வி.கலியாணசுந்தர முதலியாருக்குப் பிறகு பொறுப்பேற்றார். அப்பொழுதுதான் ஐயரை நான் முதல் முதலாகப் பார்த்தேன். கோடிட்ட நெற்றி; அதில் பிறை வடிவமான சந்தனப்பொட்டு; புன்சிரிப்பு தவழும் உதடுகள்; ஒழுங்காகச் சீவிவிடப்பட்ட தலைமயிரும், தாடி மீசையும், கட்டுமஸ்தான சரீரம்; அதை ஒர் உத்தரீயம் மறைத்துக் கொண்டிருந்தது; இடுப்பிலே பஞ்சகச்ச வேஷ்டி; கையிலே ஒரு புத்தகக் கட்டு; இந்தத் திருக்கோலத்தில் காட்சியளித்தார் ஐயர்.

வந்ததும் உதவி ஆசிரியர்களாகிய எங்கள் எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் செய்தார்; நாங்களும் பிரதி வணக்கம் செய்தோம். பரலி நெல்லையப்பர், அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். 'உங்களோடு சேர்ந்து பணியாற்ற வந்திருக்கிறேன்' என்றார் ஐயர்.

'எங்கள் பாக்கியம்' என்றார் நெல்லையப்பர்.

அப்பொழுது அவர் வந்து நின்ற திருக்கோலத்தையும், சிரித்த முகத்துடன் இரண்டு மூன்று வார்த்தைகள் சொன்னதையும் என்னால் மறக்கவே முடியாது. அவர் வணக்கம் செய்தார் என்றால் தலை குனிந்தன்று; தலை நிமிர்ந்துதான். ஆண்டவன் ஒருவனுக்குத் தவிர மற்ற யாருக்கும் அவர் தலை குனிந்தது கிடையாது.

2. ஐயர், ஒருதரமாவது கலகலவென்று உரக்கச் சிரித்து நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான புன்சிரிப்புதான். அவருடைய நடையிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு போக்கிலும் எப்படி ஒருவித நிதானமும் கம்பீரமும் இருந்தனவோ, அப்படியே அவருடைய புன்சிரிப்பும் ஒருவித அடக்கமும் கம்பீரமும் கலந்து விளங்கின. அவர் சிரித்துக் கொண்டே நம்மிடம் சம்பாஷிக்கிற போது 'ஓ! இந்த ஆத்மா, எத்தனையோ கஷ்டங்களை மகா அலட்சியத்துடன் சமாளித்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட துன்பங்கள் வந்த காலத்திலும் கொஞ்சங்கூட கலங்காத மனம் இந்த வஜ்ர சரீரத்திற்குள் இருக்க வேண்டும்' என்பன போன்ற எண்ணங்களே நமக்கு உண்டாகும்.

3. ஐயருடைய பன்மொழிப் புலமை என்னை வியக்கச் செய்தது. தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்சு, கிரேக்கம், லத்தீன் ஆகிய பஷைகளில் அவர் வல்லவர். தெலுங்கும் கன்னடமும் பேசக் கேட்டிருக்கிறேன். அந்தந்த மொழியினையும் அந்தந்த மொழியினர் பேசுகின்ற மாதிரியே பேசுவார். உச்சரிப்பில் சிறிது கூட மாற்றம் இராது. லண்டனிலிருந்து தப்பி வந்த பொழுது அவர் ஒரு முஸ்லிமாகவே நடித்து வந்தாரென்று நான் கேள்விப்பட்டிருந்தேன். அது சாத்தியமா? என்று நான் சந்தேகித்தது முண்டு. ஆனால் அவரோடு நெருங்கிப் பழகிய பின்னர் அவருக்கு எதுவும் சாத்தியமென்று தெரிந்தேன்.

ஐயரை நான் பல மொழிகளில் பேசிக் காட்டுமாறு கேட்பேன். அவரும் சலியாமல் பேசிக்காட்டுவார்; அல்லது படித்துக் காட்டுவார். ஒவ்வொரு மொழியும் எப்படிப் பேசப்படுகிறதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பது என் ஆவல். என் ஆவலை அவரிடம் உரிமையோடு தெரிவித்துக் கொள்வேன். அவரும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுப்பதோடு நில்லாமல், 'ஒரு மொழி எப்படிப் பேசப்படுகிறதென்பதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது; அந்த மொழிக்குள் நுழைந்து பார்க்க வேண்டும்; அதன் இலக்கியங்களில் சிலவற்றையேனும் ருசி பார்க்க வேண்டும்' என்று அறிவுறுத்துவார்; சந்தர்ப்பம் வாய்க்கிறபோது ருசி பார்க்கும்படியும் செய்வார்.

4. கல்கத்தாவில் ராமானந்த சாட்டர்ஜீயின் ஆசிரியர் பொறுப்பில் நடைபெற்று வந்த மாடர்ன் ரெவ்யு என்ற ஆங்கில மாதப் பத்திரிகை மாதிரி தமிழில் சிறந்த இலக்கியப் பத்திரிகை வெளிவர வேண்டுமென்பார் ஐயர். கம்ப நிலையம் என்ற நூல் வெளியீட்டு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் மேனாட்டு இலக்கியங்களில் சிறப்பானவற்றைத் தமிழ்படுத்தி வெளியிட வேண்டுமென்ற ஆவல் பெரிதும் கொண்டிருந்தார். சேரமாதேவி குரு குலம் தொடங்கி அதிலிருந்து பாலபாரதி என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டதன் மூலம் தமது திட்டத்தின் ஒரு பகுதியை, தமது ஆவல்களில் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். அந்தப் பாலபாரதி பத்திரிகை அவருடைய பன்மொழிப்புலமையைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. ஆனால் அதற்குப் போதிய ஆதரவு இல்லை. குருகுல அலுவல் நிமித்தம் அவர் சென்னை போகும் போது, இதைப் பற்றிச் சொல்லி வேதனைப்படுவார்; சந்தாதாரர்களைச் சேர்த்துத் தரும்படி அன்பர் சிலரை வேண்டுவார். தமிழன்னைக்குச் சேவை செய்ய வேண்டுமென்று அவர் துடித்த துடிப்பு, அந்தத் துடிப்பு, படித்தவர்களென்றும், பணக்காரர்களென்றும் விளம்பரமாகியுள்ள ஒரு சிலருடைய இதயத்தைத் தொட வேண்டுமென்று அவர் கொண்ட ஆவல், அந்த ஆவல் நிறைவேற அவர் எடுத்துக் கொண்ட முயற்சி. அந்த முயற்சி கைகூடாத சமயங்களில் அவர் அடைந்த மன்ச் சோர்வு, இவைகளைப் பற்றி எப்படி விவரித்து எழுதுவேன்? எனது எழுதுகோலுக்குச் சக்தி யில்லையே.

5. இலக்கிய சம்பந்தமான சம்பாஷணைகளில், ஐயருடைய பரந்த அறிவு ஒளிவிட்டு வீசுவதைப் பார்க்கலாம். கம்பனும் வள்ளுவனும், வால்மீகியும் காளிதாசனும், ஹோமரும், வரிஜிலும் அவர் வாக்கிலே களி நடனம் புரிவார்கள். இருந்தாலும், கம்பனையும், வள்ளுவரையும் அவர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடி வந்தாரென்று சொல்லலாம்.

ஐயர், தேசபக்தன் பத்திரிகையில் ரோம் எண்களுக்குப் பதில் தமிழ் எண்களையே உபயோகிக்க வேண்டுமென்ற புதிய ஏற்பாட்டைச் செய்தார். அப்பொழுது இது புதிய ஏற்பாடாக எங்களுக்குத் தோன்றியது. அதனால் தான் புதிய ஏற்பாடென்று இங்கே சொல்கிறேன். உண்மையில் இது பழைய ஏற்பாடு. பத்திரிகையில், பக்கங்களின் எண், வருஷம், மாதம், தேதி முதலியவைகளைக் குறிப்பிடும் எண்கள் ஆகிய யாவும் தமிழ் எண்களாகவே இருக்கும். முதலில் இஃது எங்களுக்குச் சிறிது சங்கடமாகவே இருந்தது. 'வாசகர்கள் இதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்' என்று சொல்லி இந்தச் சங்கடத்திலிருந்து விடுதலை பெறப்பார்த்தோம். முடியவில்லை. 'தொடர்ந்தாற்போல் தமிழ் எண்களைக் கையாண்டு வந்தால் வாசகர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்' என்று எங்களுக்குச் சமாதானம் கூறிவிடுவார். 'நாமே வழக்கில் கொண்டு வராவிட்டால் மற்றவர்கள் எப்படி வழக்கில் கொண்டு வருவார்கள்? நாமல்லவோ வழி காட்ட வேண்டும்? நம்முடையது தினசரிப் பத்திரிகை. தினந்தோறும் தமிழ் எண்களை வாசகர்களின் கண்களில் படும்படி செய்துவர நமக்குத்தான் நிறையச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆகையால் நாம் தான் அதைச் செய்ய வேண்டும்' என்றெல்லாம் பேசுவார்.

6. தேசபக்தனில், எல்லோராலும் சர்வசாதாரணமாக வழங்கப்பட்டு வந்த ஆங்கிலச் சொற்களுக்குப் பதில் தமிழ்ச் சொற்களையே வழங்க வேண்டுமென்ற நியதியைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, டிராம் வண்டி என்று எழுதமாட்டார்; மின்சார வீதி வண்டி என்றே எழுதுவார். ஹைகோர்ட்டுக்கு உயர்தர நீதி ஸ்தலம்; ரெயில்வே ஸ்டேஷனுக்கு புகைரத நிலையம்; இப்படி, இப்படி ஜனங்களுக்குப் புரிகின்ற முறையில் வடசொற்களைக் கலந்து எழுதுவதனால், தமிழ்ப் பாஷையின் கெளரவம் குன்றிவிடாதென்பதும், உண்மையில் அது தமிழ்ப் பாஷைக்கு ஒரு கம்பீரத்தையே கொடுக்கிறதென்பதும் அவர் கருத்து. அவருடைய எழுத்துக்கள், பொருள் ஆழமும், நடைகம்பீரமும் கொண்டவாயிருந்தன என்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை.

7. ஐயருடைய வைதிகத் தோற்றம், பலருடைய சந்தேகப் பார்வைக்கு அவரை ஆளாக்கி விட்டது. இது பெரிதும் வருந்தத் தக்க விஷயம். உண்மையில் அவர் ஆசார சீலர்; ஹிந்து தர்மத்தை நெறி தவறாமல் அனுஷ்டித்து வந்தார். அப்படித் தாம் அனுஷ்டிப்பதைப் பார்த்து, அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பரிகாசம் செய்வரோ என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால் செம்பு ஜலமில்லாமல் செல்ல மாட்டார். செம்பு அகப்படாவிட்டால் தகரக் குவளையையாவது எடுத்துச் செல்வார். அப்பொழுது அவரைப் பார்த்தால் பத்தாம் பசலி பிராமணர் போலவே தோன்றும். இது மிகச் சிறிய விஷயம் தான். ஆனால் இதைக் கண்டிப்பாகச் செய்து வந்தார்.

அவரோடு நெருங்கிப் பழகியவர்கள்தான் அவருடைய தூய்மையான உள்ளத்தைப் பார்க்க முடியும். அதில் உயர்வு தாழ்வு என்ற வேற்றுமைக்கறை படிந்ததேயில்லை. தர்ம தேவதையின் சாட்சியாக இதை நான் கூற முடியும். அவர் பிராமண குலத்தில் பிறந்தவர் என்ற நோக்கோடு அவரைப் பார்த்தனர் பலர். ஆனால், அவர் பிராமணராகவே வாழ்ந்து வந்தார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். அப்படியானால் பிராமணன் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஒரு வடமொழி நூல் இதற்குப் பின் வருவாறு விடை கூறுகிறது: 'யோகசாதனம், தபஸ், புலனடக்கம், பரந்த நோக்கு, சத்திய சீலம், மனோ வாக்கு காயத்தில் தூய்மை, வேத ஞானம், தயாளகுணம், லெளகிக விவகார ஞானம், கூர்மையான அறிவு, தெய்வ பக்தி முதலிய தன்மைகளுடையவர்கள் தான் பிராமணர்கள்.'

இந்த இலக்கணத்திற்கு பொருந்தும் வகையில் ஐயர் திகழ்ந்தாரென்பதை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள்.

8. தீண்டாதாருக்கு உபநயனம் முதலிய சமஸ்காரங்களைச் செய்வித்து அவர்களைப் பல வழிகளிலும் உயர்த்த வேண்டுமென்று ஐயர் சில திட்டங்கள் வகுத்திருந்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒரு குலமாக ஓரினமாக வாழவேண்டுமென்று அடிக்கடி பேசுவார். அவர்களுக்குள் உயர்வு தாழ்வு இல்லை யென்பது அவர் கருத்து. ஜாதி என்ற சொல்லை, விரிந்த பொருளிலேயே அவர் உபயோகித்து வந்தார். உணவு உட்கொள்ளும் விஷயத்தில் அவர் ஒதுக்கல் முறையைக் கையாண்டதில்லை.

தேசபக்தன் ஆசிரியராயிருந்த காலத்தில் இடைவேளைச் சிற்றுண்டிக்காக, காரியாலத்திற்குச் சுமார் ஒரு பர்லாங்கு தூரத்திலிருந்த ஒரு ஹோட்டலிருந்து தோசை தருவிப்பார். ஒரே ஒரு தோசை தான். ஆனால், அது நெய்த் தோசையாக இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு நிரம்பப் பிடிக்கும். காரியாலத்தில் உள்ள யாராவது ஒரு பையன் தான் அனேகமாக அச்சுக் கோப்பவர்களில் ஒருவன் தான் அதை வாங்கிக் கொண்டு வருவான். அவனுடைய குலம் கோத்திரம் முதலியவைகளைப் பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை.

'தம்பீ, கை கால்களைக் கழுவிக் கொண்டு சுத்தமாகப் போக வேண்டும், தெரியுமா?'  என்று மட்டும் சொல்லி அவனிடம் காசு கொடுத்தனுப்புவார்.

9. ஐயரை, புரட்சி வீரராகவும், நூலாசிரியராகவும், சேரமாதேவி குருகுல ஸ்தாபகராகவுமே தமிழ் நாட்டில் பலர் அறிவர். ஆனால், அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது பலருக்குத் தெரியாது. அவர், நாடகக் கலையின் நுட்பங்களை நன்கு அறிந்தவர். அவருக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தபடியால், ஒவ்வொரு மொழியிலும் நாடகக் கலை எப்படி வளர்ந்து வந்திருக்கிறதென்பதை, ஆராய்ச்சி செய்து வைத்திருந்தார். ஆங்கிலப் புலவனான ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், பிரெஞ்சுப் புலவரான ராஸீன் என்பவனுடைய நாடகங்களிலும் அவருக்குத் தனிக் காதல். அவற்றில் சிலவற்றையேனும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென்பது அவருடைய ஆவல்.

10. பிறரிடத்தில் இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டுமென்றால் ஐயரிடத்தில் தான் பாடங்கற்றுக் கொள்ள வேண்டும். வாய்தவறி அவமரியாதையான ஒரு வார்த்தை கூட வெளிவராது. நம்மைச் சந்திக்க வருகிறவர்களின் அறிவுப் பக்குவம், மனப் பக்குவம் இவைகளை எளிதிலே உணர்ந்து அவர்களிடம் அந்தப் பக்குவத்திற்குத் தகுந்த படிப் பேசுவார். மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டியிருந்தாலும் இனிமையான மொழிகளில்தான் தெரிவிப்பார். ஆத்திரமோ, பதற்றமோ அவர் அடைந்ததை நான் பார்த்ததில்லை. அச்சகத்திலோ, காரியாலயத்திலோ யாரேனும் தவறு செய்து விட்டால் அதற்காக அவரைக் கடிந்து கொள்ள மாட்டார்; நயமான முறையில் அவரைத் திருத்துவார்.

11.  ஐயர் எழுதிய ஒரு கட்டுரை சட்ட விரோதமானது என்று, ஆசிரியர் என்ற முறையில் பொறுப்பேற்றுக் கொண்டு பெல்லாரி சிறையில் ஒன்பது மாத காலவாசம். 1922-ஆம் வருஷம் ஜீன் மாதம் மூன்றாவது வாரம் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் நண்பர்கள் பலருடம் நானும் சென்றேன்.   எனது புதுமையான தாடிக் கோலத்தைப் பார்த்து. 'என்ன விசேஷம்?' என்று கேட்டார். அதற்குக் காரணம் இருக்கிறது. தாடி மீசை வளர்த்து வந்தேன். சட்டை போடுவதில்லை. உத்தரீயம் மட்டும் தான். இடுப்பில் நான்கு முழவேஷ்டி உடுத்தமாட்டேன். எட்டு முழ வேஷ்டிதான். பரமவைதிக கோலம். ஐயரை அப்படியே காபி அடித்து விட்டாற்போலிருக்கிறது என்று நண்பர்களே முடிவு கட்டிவிடாதீர்கள். எதிலும் காபி அடிக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது.

1922-ஆம் வருஷம் மார்ச் மாதம் 18-ம் தேதி காந்தியடிகள் ஆறுவருஷச் சிறைத் தண்டனை பெற்றார். இஃது என் உள்ளத்தை உலுக்கி விட்டது. அவர் விடுதலை பெறும்வரை தீட்சை வளர்ப்பதென்று சங்கற்பம் செய்து கொண்டேன். பிரதி மாதமும் பதினெட்டாம் தேதியை விரத நாளாகக் கொண்டாட உறுதி பூண்டேன். அப்படியே, பிரதி மாதமும் 18-ம் தேதி உண்ணாவிரதத்தையும் மெளன விரதத்தையும் அனுஷ்டித்து வந்தேன். அன்று என் இல்லத்தில் தேசிய பஜனை நடைபெறும். அரசாங்க உத்தியோகஸ்தர் உட்பட அன்பர் பலர் அதில் கலந்து கொள்வர். அரசாங்க உத்தியோகஸ்தரில் சிலருக்கு தேசிய இயக்கத்தில் மனப்பூர்வமான அனுதாபம் இருந்தது; ஆனால், அந்த இயக்கத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாதவர்களா யிருந்தார்கள். இருப்பினும், நான் நவசக்தி காரியாலயத்திற்குச் செல்லத் தவறமாட்டேன்.

12. ஐயர், நட்புக்காகத் தமது கருத்தை மறைத்தோ மழுப்பியோ சொல்ல மாட்டார். பாரதியாரும், ஐயரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பதையும், ஒருவருடைய மேதையில் மற்றொருவருக்கு எவ்வளவு மதிப்பு இருந்த தென்பதையும் தமிழுலகம் நன்கறியும். இருந்தாலும், பாரதியாருடைய காதற்பாட்டுக்களிற் சில, சிறிது வரம்பு மீறிவிட்டனவோ என்று ஐயர் கருதினார். பாரதியார் பாடல்கள் அடங்கிய பதிப்பு ஒன்றின் முகவுரையில் ஐயர் தமது இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார்.

13. 1908-ஆம் வருஷம் தீபாவளியின் போது, இந்தியா ஹவுசில் சிறு விருந்தொன்று நடத்துவது என்றும், இதற்கு லண்டனிலுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைப்பதென்றும், விருந்துக்குப் பிறகு ஒரு சிறு கூட்டம் நடத்துவதென்றும் சவர்க்காரும், ஐயரும் தீர்மானித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். விருந்துக்கு வருமாறும், பிறகு நடக்கவிருக்கும் கூட்டத்திற்குத் தலைமை வகித்துச் சில வார்த்தைகள் பேசுமாறும் இருவரும் காந்தியடிகளைக் கேட்டுக் கொண்டனர். காந்தியடிகளும் சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார். என்ன நிபந்தனைகள்? விருந்து எளிய முறையில் நடைபெற வேண்டும்; எல்லாம் மரக்கறி பதார்த்தங்களாகவே இருக்க வேண்டும். சமையலுக்கு வெளியார் யாரும் தேவையில்லை; நம் கையாலேயே தயார் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

விருந்து தினத்தன்று மாலை இந்தியா ஹவுஸில் சமையல் வேலையில் எல்லோரும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். டாக்டர் ராஜந்தான் மேற்பார்வை. இரவு ஏழரை மணிக்கு விருந்து தொடங்குவதென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுமார் ஆறு மணிக்கு மிகுந்த எளிய தோற்றத்துடன் ஒருவர் இந்தியா ஹவுஸ்ஸுக்குள் நிழைந்தார். யாரோ ஒரு ஏழை, இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக அங்குள்ளவர்கள் கருதினார்கள். வந்தவரும் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களோடு சேர்ந்து கொண்டார். டாக்டர் ராஜன், அவரை இன்னாரென்று விவரமாக விசாரித்துக் கொள்ளாமல், அவரை அதிகாரத்தோடு வேலை வாங்கினார். அவரும் புன்சிரிப்புடன் தமக்கு இட்ட வேலைகளை ஒழுங்காகச் செய்து வந்தார். அப்பொழுது, சவர்க்காரோ, ஐயரோ அங்கிருக்க வில்லை. சிறிது நேரங்கழித்து, வெளியிலே சென்றிருந்த ஐயர் திரும்பி வந்தார். பார்த்தார் உள்ளே நடைபெறுகிறவைகளை, 'அடடா!  இவரையா வேலை வாங்குகிறீர்கள்? இவர்தானே இன்றைய கூட்டத்திற்குத் தலைவர்!' என்று சிறிது கடுகடுத்துப் பேசிவிட்டு, அந்த ஏழை மனிதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த ஏழை மனிதர் தான் காந்தியடிகள்!

விருந்து நடைபெற்றது. காந்தியடிகள் எல்லோருடனும் உட்கார்ந்து உண்டார். பிறகு, பாத்திரங்களைக் கழுவி அவற்றை உரிய இடங்களில் ஒழுங்காக வைப்பதில் மற்றவர்களுக்குத் துணையாயிருந்தார். பிறகு நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் பேசுகிற போது, லண்டனில் மரக்கறி உணவு வகைகள் அடங்கிய விருந்து நடத்துவது எவ்வளவு கடினமென்பது தமக்குத் தெரியுமென்றும் விருந்தில் கலந்து கொள்ளத் தமக்குச் சந்தர்ப்பம் அளித்ததற்காகப் பெரிதும் சந்தோஷப்படுவதாகவும், விருந்து தயாரிப்பு வேலையில் தம்மை உபயோகப்படுத்திக் கொண்டதற்காக நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்துக் கொண்டு, சத்தியத்திலும், அஹிம்சையிலும் தமக்குக் குன்றாத நம்பிக்கை இருக்கிறதென்றும், இவ்விரண்டையும் உறுதியாகக் கடைப்பிடிப்பதின் மூலம் தான் இந்தியா சுயராஜ்ய லட்சியத்தை அடைய முடியுமென்றும் தெரிவித்தார். காலக்கிரமத்தில் ஐயர், காந்தியடிகளின் கொள்கைகளை ஒப்புக்கொண்டு, தமிழ் நாட்டில் சத்தியாக்கிரக இயக்கம் வெற்றி பெறுவதற்குப் பெரிதும் உழைத்தார்.

13. இந்தியா ஹவுஸ் மீது போலீசாரின் கண்காணிப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வந்தது. இதில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் பின்னொருவராக வெளியில் சென்று வசிக்க ஆரம்பித்தார்கள். சவர்க்கார், வைத்திய சிகிக்கைக்காக, பாரிசுக்குச் செல்ல வேண்டிய அவசியத்துக்குட்பட்டார். ஐயர், லண்டனிலேயே ஒரு ஹோட்டலில் சென்று தங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு ஐயர் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி பட்டமும் பெற்றார். ஆனால் உடனே அதை மறுத்து விட்டார். எந்த நோக்கத்திற்காக தாம் லண்டன் வந்தாரோ அந்த நோக்கத்தைத் தாமே சிதற அடித்துக் கொண்டார். எல்லாம் தாய் நாட்டிற்காகத்தான்! தாய் நாட்டின் விடுதலைக்காக, தம்முடைய சர்வத்தையும் அர்ப்பணம் செய்த மகா தியாகி! முதன் முதல் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்து பட்டத்தைத் துறந்தவர் ஐயர் தான்! அப்பொழுது இவருக்கு வயது 21!

14. 1910-ல் மே மாதம், லண்ட்னில் கர்ஸன் வில்லி என்ற ஆங்கிலேயர், மதன் லால் திங்க்ரா என்ற ஓர் இந்திய இளைஞரால்  சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இந்தியா ஹவுஸில் சில காலம் வசித்து வந்தவர். இதனால் இந்தியா ஹவுஸில் வசித்து வந்த பலர் மீதும் போலீசாருக்குச் சந்தேகம் உண்டாகியது. இந்தியா ஹவுஸ் விடுதியைச் சோதனை போட்டனர். ஏதோ அகப்பட்டதை எடுத்துக் கொண்டு போலீஸ் போயினர். கடைசியில் திங்க்ராவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.          

கர்ஸன் கொலையைத் தொடர்ந்தாற்போல், இந்தியாவில் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த நாசிக் என்ற ஊரில் ஜாக்ஸன் என்ற ஒரு போலீஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கும் லண்டன் இந்தியா ஹவுஸில் வசித்து வந்தவர்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் போலீசார் கருதி விட்டார்கள். பாரிஸில் சவர்க்காரும், லண்டனில் ஐயரும் பலத்த கண்காணிப்புக்குட்பட்டார்கள். இதை ஒருவாறு தெரிந்து கொண்ட ஐயர், பாரிசிலுள்ள சவர்க்காருக்குத் தகவல் கொடுத்தார். 'இங்கிலாந்து ஒரு சுதந்திர நாடு; அங்குத் தம்மைக் கைது செய்ய மாட்டார்கள்' என்று எண்ணி, இங்கிலாந்து வந்தார் சவர்க்கார். ஆனால், இங்கிலாந்து மண்ணை மிதித்தவுடன், அவர் கைது செய்யப்பட்டு, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். ஐயருக்கு இது தெரிந்தது. தண்ணீரிலிருந்து எடுத்துத் தரையிலே விடப்பட்ட மீனைப் போல் துடித்தார். சவர்க்காரிடத்தில் அவ்வளவு ஈடுபாடு இவருக்கு. சுமார் இரண்டு மாதகாலம் சவர்க்கார் சிறையிலே கிடந்தார்.

சிறையிலே கிடந்த சவர்க்காரை ஐயர் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தார். இவரையும் சிறைப்படுத்தி  விட போலீசார் வலை வீசி யிருந்தனர். ஆனால், இவருக்கு இது தெரியாது. சவர்க்கார் இதை எப்படியோ தெரிந்து கொண்டுவிட்டார். ஐயர் வழக்கம் போல் ஒரு சவர்க்கரைச் சந்திக்கச் சிறைக்குச் சென்றார்.

சவர்க்கார்: என்ன ஐயர்! இன்னுமா நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்? அனேகமாக இன்று உங்களுக்கு வாரண்ட் பிறந்து விடும். இன்றே உங்களைக் கைதி செய்துவிடுவார்கனென்று தோன்றுகிறது. ஆகையால் உடனே தப்பி வேறு நாட்டுக்குச் சென்று விடுங்கள்.

ஐயர்: நீங்கள் சிறையில் இருக்கும் பொழுது நான் மட்டும் தப்பிச் செல்வதா? நானும் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்;.

சவர்க்கார்: பிடிவாதம் செய்ய வேண்டாம். எல்லோரும் சிறையில் கிடப்பதால் என்ன பயன்? வேறெங்கேனும் சென்று, தாய் நாட்டுக்கு உங்களாலானதைச் செய்து கொண்டிருங்கள். எப்படியும் இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் இங்கிலாந்து எல்லையை விட்டுத் தாண்டிச் சென்று விடுவது நல்லது.

ஐயருக்கு வேறு வழியில்லை. சவர்க்காரிடம் பிரியாவிடைபெற்றுக் கொண்டு, தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். ஹோட்டல் முதலாளி ஒரு அம்மையார். ஐயருடைய நேர்மையான வாழ்க்கையிலும் களங்கமற்ற தேசபக்தியிலும் அதிக மதிப்பு வைத்திருந்தவர். ஐயர் ஹோட்டலுக்கு வந்ததும், இந்த அம்மையாரிடம், தாம் உடனே புறப்பட வேண்டிய அவசியத்தைத் தெரிவித்தார். அவரும் அவசரம் அவசரமாக, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

ஐயர், இந்த ஹோட்டல் வாசத்திற்கு முந்தியே தாடி மீசை வளர்த்துக் கொண்டிருந்தார். இதுதான் இவரைப் பலவித ஆபத்துக்களினின்று காப்பாற்றிக் கொடுத்தது. யாரும் சுல்பமாக அடையாளங்கண்டு கொள்ள முடியாத தோற்றத்துடன், கையிலே ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு, விடியற்காலையில் ஹோட்டலை விட்டுக் கிளம்பினார் ஐயர். இந்தப் பெட்டியின் மீது வி.வி.எஸ். என்ற மூன்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. முதலில் பிரான்ஸ் தேசம் சென்றுவிட வேண்டு மென்பது இவர் உத்தேசம். அப்படியே துறைமுகம் சென்று கப்பலேறி விட்டார்.

பொழுது விடிந்ததும், லண்டனில் போலீஸ்காரகள், ஐயரைக் கைது செய்து கொண்டு போக, ஹோட்டலுக்கு வந்தனர். ஐயர் வெளி நாட்டுக்குப் போய் விட்டார் என்று ஹோட்டல் தலைவி தெரிவித்து விட்டார். 'தென்னிந்தியராகிய வ.வே.சு.ஐயர் எங்கு அகப்பட்டாலும் சரி. அவரை உடனே கைது செய்க' என்று எல்லா ரெயில்வே ஸ்டேஷங்களுக்கும் கப்பல்கள் செல்லும் ஊர்களுக்கும் போலீஸ் தந்திகள் கொடுத்தனர். ஐயர் ஏறிச் சென்ற கப்பலில் போலீஸ் உளவாளிகள் இருந்தார்கள். அவர்களுக்கும் தந்தி கிடைத்தது. அவர்கள், கப்பலில் ஐயரைத் தேடித் தேடிப் பார்த்தார்கள். அகப்படவில்லை.

ஆனால், கப்பலில் ஒரு இந்தியர் இருந்தார். ஆனால் அவர் தாடி, மீசையுடன் கூடிய ஒரு சீக்கியர். அவர் பக்கத்தில் வி.வி.எஸ். என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டி இருந்தது. இவர்தான் ஒரு கால் வி.வி.எஸ்.ஐயராக இருப்பாரோ என்று போலீசாருக்குச் சந்தேகம். ஆனால், இந்தச் சந்தேகத்தின் பேரில் எப்படிக் கைது செய்வது? அவர் ஐயராக இல்லாவிட்டாலோ? விபரீதமாகவல்லவோ முடியும்? எனவே ஒரு சூழ்ச்சி செய்தனர். தந்திக்கவர் ஒன்றை எடுத்து அதை நன்றாக ஒட்டி அதன் மீது வி.வி.எஸ். ஐயர் என்று ஆங்கிலத்தில் விலாசமிட்டு, ஐயரிடம் கொடுக்கச் செய்தனர். தந்தியைப் பார்த்தால் யாருக்கும் ஒரு வித திகைப்பும், முகத்தில் மாறுதலும் உண்டாகுமல்லவா? அதைக் கொண்டு ஐயர் இன்னார் என்று அறிந்து கொண்டு விடலாமென்பது போலீஸ்காரரின் எண்ணம்.

ஐயர், தந்திக் கவரை வாங்கிப் பார்த்தார். 'ஓ, இந்தக் தந்தி எனக்கல்லவே? வி.வி.எஸ்.ஐயருக்கல்லவோ இது சேர வேண்டும்?' என்று சொல்லி, கவரைத் திருப்பிக் கொடுத்து விட்டார். ஆனால் தந்தியைக் கொடுத்த போலீஸ்காரன் லேசான பேர்வழியாயில்லை. 'மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியின் மீது வி.வி.எஸ். என்று எழுதப் பட்டிருப்பதால் நீங்கள் தான் வி.வி.எஸ்.ஐயரா யிருக்கலாமென்று எண்ணினேன்' என்றான். 'இல்லை, இல்லை; என் பெயர் வி.விக்கிரம சிங்' என்றார் நிதானமாக ஐயர். இங்ஙனம் சாமர்த்தியமாகப் போலீஸ் வலையில் சிக்கிக் கொள்ளாமல் ஐயர் ஆம்ஸ்ட்டர்டாம் நகரம் வழியாக பாரிஸ் வந்து சேர்ந்தார். அங்கு, ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, காமா அம்மையார், திருமலாச்சாரி முதலிய நண்பர்கள் இவரை அன்புடன் வரவேற்று வேண்டிய செளகரியங்களைச் செய்து கொடுத்தார்கள். காமா அம்மையார் தமக்கு ஒரு தாய் போலிருந்ததாக ஐயர் ஓரிடத்தில் சொல்லி யிருக்கிறார். மேற்சொன்ன மூவரும் மட்டும் தான் இவர் ஐயர்ரென்று தெரியும். மற்றவர்கள் இவரை விக்கிரம சிங் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். பாரிசில் ஒரு வருட காலம் தங்கி விட்டு, பிறகு ஒரு பார்சி கனவான் மாதிரி வேஷந்தரித்துக் கொண்டு ரோமாபுரிக்குப் புறப்பட்டார். வழிநெடுக, தமக்கு இங்கிலீஷ் பாஷை தெரியாதது போலவே நடித்து வந்தார். பிறகு கான்ஸ்ட்டாண்டி நோபிளுக்குச் சென்று, அங்கு ஒரு முஸ்லீம் சந்நியாசியாக மாற்றிக் கொண்டார். அங்கிருந்து கெய்ரோ, பம்பாய், கொழும்பு, கடலூர் வந்து சேர்ந்தார்.

15. புதுச்சேரியில் இருக்கும் பொழுது ஐயர் ஒரு தெருவழியாகப் போய்க் கொண்டிருந்தார். சில போக்கிரிகள் இவரைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போய் பிரிட்டிஷ் எல்லையில் விட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்தால், அவரைப் பின் தொடர்ந்தனர். இதை அறிந்த ஐயர், ஒரு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்து, விக்கரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இரவு பூராவும் அங்கிருந்து தப்பினார். இன்னொரு நாள், ஒரு நண்பரின் வீட்டில் இருக்கும் பொழுது, சில போக்கிரிகள், அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டு, ஐயரைத் தங்களிடம் ஒப்படைக்கும் படி ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் அரை மணி நேரங்கழித்து, வீட்டிலிருந்து ஒரு சவத்தைத் தூக்கிக் கொண்டு சிலர் வெளியே வந்தனர். 'ஐயோ பாவம்! வீட்டில் சாவல்லவோ ஏற்பட்டு விட்டது' என்று அனுதாபப்பட்டுக் கொண்டு, விஷமம் செய்ய வந்த போக்கிரிகள் கலைந்து போயினர். சிறிது தூரம் சென்றதும், பிணம் போலிருந்தவர் ஐயரானார்! மற்றொரு நாள் இரவு சுமார் எட்டரை மணி இருக்கும். ஐயர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தெருவில் போலீஸ்காரர்களால் ஏவப்பட்ட கீழ்மக்கள், 'ஐயரே, வெளியில் வா .. உன்னை வெட்டிப் போடுகிறோம்...குத்திப் போடுகிறோம்' என்று கூச்சல் போட்டபடி இருந்தனர். ஐயர் முக்கியமான சில சாமாங்களையும், மனைவி, குழந்தைகளையும் மேற்கூரை வழியாக நான்கு வீடு தள்ளி யிருந்த தமது நண்பருடைய வீட்டில் கொண்டு சேர்த்த பிறகு, அதே வழியாக மீண்டும் தம் வீட்டிற்கு வந்து, கதவைத் திறந்து வேளியே வந்து, சிம்மம் போல் கர்ஜித்தார்:'இப்பொழுதே அப்புறம் போகிறீர்களா? இல்லையா?' என்று சொல்லிக் கொண்டே தம் கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். அவ்வளவுதான், ஒரு நொடியில் கூட்டம் கலைந்து போய் விட்டது.

16. ஐயர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பர்வதம் என்ற பெண்மணியிடமிருந்து ஐயருடைய ரகசியங்களையெல்லாம் தெரிந்து கொள்ள போலீஸ் எவ்வளவோ முயன்றும், அது வெற்றி பெற வில்லை. இந்த அம்மாள் நன்றி விசுவாசமுடையவள். ஐயருடைய குடும்பத்தின் சுக துக்கங்களில் பூரண பங்கெடுத்துக் கொண்டவள். போலீசார் வீசிய நப்பாசை வலையில், அசந்து மறந்து கூட விழாத மன உறுதி படைத்தவளாகயிருந்தாள். கார்ல் மார்க்ஸ் குடும்பத்திற்கு லென் சென் என்ற ஒரு பெண்மணி எப்படி வாய்த்தாளோ அப்படியே ஐயருடைய குடும்பத்திற்கு பர்வதம்மாள் வாய்த்தாள்.

17. ஐயர் திருக்குறளை ஆங்கிலத்தில் செய்யுள் வடிவமாக மொழி பெயர்த்தார். இதற்கு ஆங்கிலத்தில் நீண்டதொரு முகவுரை எழுதினார். ஐயருடைய தமிழ் மொழிப் பற்றுக்கும், பரந்த புலமைக்கும் இந்நூல் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று சுருக்கமாகச் சொல்ல விழைகிறோம். இந்த மொழிபெயர்ப்பு நூலை சுமார் ஐந்து மாதத்திற்குள் எழுதி முடித்தார்.

18. 1925-ஆம் வருடம் ஜீன் மாதம் மூன்றாம் தேதி சேரன்மாதேவி குருகுலத்துப் பிள்ளைகளுடன் ஐயர், பாபநாசம் அருவியில் நீராடச் சென்றார். கூட மகள் சுபத்திராவும் சென்றாள். சுபத்திரா, அருவியின் ஓரிடத்தைக் கடக்க முயன்றாள். முயலுகையில் கால் சறுக்கி அருவியில் விழுந்து விட்டாள். அவளைத் தாவிப் பிடிக்க ஐயர் குதித்தார். ஆனால், மகளும், தந்தையும் அருவிக்கு இறையாயினர். அவரது ஒரே மகன் வ.வே.சு.கிருஷ்ணமூர்த்தி தந்தையையும், தங்கையையும் இழந்தான். அப்போது ஐயருக்கு வயது 44 தான்
















Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017