என் இன்னொரு அம்மா




அம்மாவின் ஸ்தானம் மிகவும் உன்னதமானது. புனிதமானது. தெய்வத்திற்குச் சமமானது. ஆனால், அந்த ஸ்தானத்தைப் பெருவதற்கு, அந்தத் தாய் செய்யும் தியாகம் தான் எத்தனை?

அப்படிப்பட்ட உன்னத ஸ்தானத்தை நான் இன்னொரு ஜீவனுக்கு கொடுக்க விழைகிறேன். அந்த ஜீவன் தான் என் மாமியார். ஆம், என் மாமியார் தான் என் இன்னொரு அம்மா.

என் இன்னொரு அம்மா துரும்பாக இளைத்து, நடக்கும் பொழுது சிறிது கூனும் விழும். அவர் பேசுவது மிக மெதுவாகத்தான். கண்ணாடி அணிந்து, அவர் ஸ்லோகப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது, எனக்கு மஹா பெரியவாளின் நினப்பு வரும். அது ஏன் என்று என்னால் விளக்க முடியவில்லை. அவரது முகத்தின் தேஜஸ் அப்படி.

என் இன்னொரு அம்மா இளவயதிலேயே விதவையாகியவர். அந்த துக்கத்தால், சரியான ஆகாரம் கொள்ளாமல், தன் உடம்பைப் பேணாமல் இருந்து விட்டார்.

வாழ்க்கையில் அவர் பட்ட துன்பங்கள் அவர் உடல் பூராவும் பரவி உருக்குலைய வைத்து விட்டது. ஆனாலும், தான் பெற்ற இரண்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டிய கடமைகள் தான் அவருக்குப் பலத்தை கொடுத்திருக்க வேண்டும்.
எனக்குக் கல்யாணம் ஆன பொழுது, அவரது இரண்டு பையன்களும் சென்னையில் வேலையாகி இருந்தார்கள். அவரது மூத்த மகளுக்கு கல்யாணமாகி சென்னையில் கணவன் வீட்டில் வாசம். அவரது இரண்டு பையன்களுக்கும்  அப்போது கல்யாணமாகிவில்லை.

காரைக்குடியில் தான் என் கல்யாணம். என் தாய் சபையில் என் அருகில் இருந்தார். என் தாயும் விதவைதான். ஆனால், அதற்காக என் தாயை எங்கள் வீட்டில் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒதுக்கி வைப்பதில்லை. 

தாயைத் தெய்வத்திற்குச் சமானமாகச் சொல்லி விட்டு, அந்த தெய்வத்தை ஒதுக்குவதா? எனக்கும் சித்தப்பா உண்டு. ஆனால் அவரது பேச்சு எங்களிடம் எடுபடாது. அதனால் என் தாயாரை சுப காரியங்களின் போது முன்னிலைப் படுத்துவதில் எங்கள் வீட்டில் பிரச்சனை இல்லை.

ஆனால், என் மனைவி வீட்டில் நிலைமை வேறு போலும். என் கல்யாணப் போட்டோவில் என் மாமியார் ஒரு ஓரமாக அடுக்களையின் அருகில் இருந்து தான் கல்யாண வைபவங்களைக் கண்டார் என்பதை என்னால் பிறகு அறிய முடிந்தது. அவர்கள் வீட்டில் சித்தப்பாவின் ஆதிக்கம் – ஏன், அராஜகம் என் மாமியார் ஒதிங்கி இருக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கலாம்.


கல்யாணத்திற்குப் பிறகு சென்னையில் என் கல்யாண ரிசப்பனை நான் ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தேன்.

சென்னையில் கல்யாணத்தை நடத்த என் புரசவாக்கம் சித்தப்பா சொன்னாலும், ஏதோ எனக்குச் சென்னையில் என் கல்யாணத்தை நடத்த விருப்பமில்லை. என் அண்ணா கல்யாணத்தில் ரிசப்பஷனில் எந்த வித ஏற்பாடும் பண்ணாத காரணத்தினால் கூட்டம் உண்மையிலேயே அதிகம் வர, அந்த சிறிய கல்யாண மண்டப ஹால் தவித்தது. எந்த விதமான வரவேற்பு ஏற்பாடுகளும், விருந்தும் இல்லாததால் அந்த ரிசப்ஷன் தோல்வியில் முடிந்தது. இதை முன் கூட்டியே அறியாதது என் அண்ணாவின் அறியாமையைத் தான் காட்டுகிறது. பெண் வீட்டாறும் அதைப் பற்றி கேட்காமல் இந்த கலாட்டாவிற்கு துணை போனவர்கள் தான்.

அந்த சம்பவமே அண்ணா – மன்னியின் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட அடிக்கல்லாக அமைந்து அந்த சோக நினைப்பு வாழ்நாள் முழுதும் அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. அதன் ஜ்வாலையில் நான், என் அம்மா, மன்னி – ஆகியவர்கள் அவதிப்பட்டது என்பதும் உண்மையாகும். அதற்கு முழுப்பொருப்பும் அண்ணாதான்.

ஆகையால் தான் கல்யாணம் வெளியூரில் நடந்தால் ரிசப்பஷனை என் மேற்பார்வையில் ஒரு ஹோட்டலில் – அந்த ஹோட்டலையும் நான் அப்போதே தீர்மானித்து – அதன் தோராயமான செலவுகளையும் கணக்கிட்டு – என் கல்யாணப் பேச்சு எழுவதற்கு முன்பே திட்டம் போட்டு விட்டேன். அண்ணா செய்த அந்தத் தப்பை நான் தவிர்க்கவே பெண்வீட்டாரிடம் – அவர்கள் சென்னையில் கல்யாணம் செய்வது எங்களுக்குச் சிரமம் என்று சொன்னவுடன் அப்படியே உங்கள் விருப்பம் போல் காரைக்குடியிலேயே கல்யாணத்தை நடத்தும் படி – சொல்லி விட்டேன். அண்ணாவோ அம்மாவோ இதற்கு மறுப்புத் தெரிவிக்க வில்லை.

மயிலாப்பூர் லஸ் அருகில் உள்ள ஹோட்டலில் ரிசப்பன். அதில் என் மாமியார் கலந்து கொள்ள மாட்டார் என்று என் மனைவி வீட்டில் சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை.

‘என் தாயார் கலந்து கொள்ளும் பொழுது, என் மாமியாரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்’ என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
அதனால் என் தாயாரும், என் மாமியாரும் மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். நான் என் தாயாரின் பக்கத்திலும், என் மனைவி என் மாமியாரின் பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டு, போட்டோ எடுத்துக் கொண்டோம். 

என் மாமியாரின் போட்டோ ஒன்றும் கிடையாது என்பது எனக்கு அப்போது தெரியாது. இந்த என் மாமியாரின் போட்டோ தான் பிறகு, அவரது ஞாபகார்த்தமான போட்டோவாக பெரிது பண்ண உபயோகமாக இருந்ததாக, என் மைத்துனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
**************************************************************
என் மாமியார் தன் இரு பிள்ளைகளுடன் புரசவாக்கத்தில் ஜாகை. ஒண்டிக் குடுத்தன வீடு. வீடு மிக மிகச் சின்னது. மூன்று ரூம்கள் அடுத்தடுத்து. அடுக்களையும் அதில் சேர்ந்தது. ஒரே இருட்டு. பகல் – இரவு என்று 24 மணி நேரமும் வெளிச்சத்திற்கு மின்சார விளக்கு – காற்றுக்கு பேன் என்று இருக்கும் நிலை. அதுவும் என் மாமியார் பல மணி நேரம் வாசம் செய்யும் அடுக்களையிலோ கும்மிருட்டு. அங்கு இயற்கையான காற்று கொஞ்சம் கூட வீசாது. மேலும் அந்த அறையும் மற்ற இரு ரூம்களைவிடவும் சின்னது. என் மாமியாருக்கு ஆஸ்மா தொல்லையும் உண்டு.

ஆனால், அந்த வீடு தான் எனக்கு அரண்மனையை விட ஆனந்தம் கொடுக்கும். அதற்கு முழு முதற் காரணமும் என் மாமியாரின் நளபாகம். அந்த காற்றில்லாத இருளான குறுகிய அந்த அடுக்களையிலிருந்து பலகாரம் விதவிதமாக அளவில்லாமல் அன்போடு வெளிவரும்.
நான் மாத்திரம் தனியாக அங்கு சென்றதில்லை. என் நண்பர்களுடன் பல முறை சென்றுள்ளேன். அங்கு தவறாமல் ருசியான பதார்த்தங்கள் எங்களுக்குக் கிடைக்கும்.

என் வீட்டில் அண்ணாவால் பல நாட்கள் சண்டைதான். சமைத்தாலும் அதைச் சாப்பிட முடியாமல் ஓயாது சண்டைபோட்டு, வீடே துக்கத்தில் மூழ்கி இருக்கும் நாட்கள் அதிகம். அம்மாவை அழவைப்பதில் அண்ணாவிற்கு என்ன கொடூர எண்ணமோ? ஆகையால் நான் என் நண்பர்கள் ஒருவரையும் என் வீட்டிற்கு அழைப்பதில்லை. ஏன், இதனாலேயே எனக்கு நண்பர்களும் அதிகம் கிடையாது.

அதற்குப் பிராயச்சித்தமாகத் தான் நான் என் மாமியார் வீட்டிற்குத் தான் – என் மனைவி அங்கு இருக்கும் போதெல்லாம் – என் ஒரு சில நண்பர்களை அழைத்து மாமியாரின் நளபாக விருந்தை நண்பர்களுடன் சாப்பிட்டு அனுபவித்திருக்கிறேன். இதனால் மாமியாருக்குச் சிரமமாக இருக்குமே என்ற எண்ணம் என் மனத்தில் எழாததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என் மாமியாரை என் ‘இன்னொரு அம்மா’ என்று வணங்கியதால் இருக்கும் என்று இப்போது கருதுகிறேன்.

என் நண்பன் கிருஷ்ணன் அடிக்கடி சொல்வான்: ‘டே, டிபன், காபி என்றால் உன் மாமியார் வீட்டில் கிடைப்பது போல் எங்கும் கிடைக்காது. காபியின் ருசு .. ஆஹா, என்னால் மறக்கவே முடியாது. சாப்பாடும் அற்புதம். ஒரு நாளைப்போல் என்றும் அதே ருசியாக எப்படியடா உன் மாமியாரால் சமைத்துப் போட முடிகிறது!’

இதை என் மாமியார் காதுபடவே பல முறை சொல்லி இருக்கிறான்.
‘நான் சொல்ல நினைத்ததை, என் நண்பன் வாய்விட்டுச் சொல்லி விட்டான்’ என்பதில் எனக்கும் திருப்தி தான். ஆனால், என் மனைவியிடமும், என் மைத்துனர்களிடமும் என் மாமியாரின் நளபாகத்தைப் பற்றியும், தாராளமாகப் பரிமாறும் பரந்த உள்ளத்தையும் பல முறை சொல்லி இருக்கிறேன்.

அன்புக்கு அளவு இல்லை. அதிலும் தன் குழந்தைகளுக்கு அன்னம் அளித்துப் போஷிப்பதில் அன்னையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், உறவுக்காரர்களையும் மற்றவர்களையும் தான் பெற்ற சொந்தக் குழந்தைகளைப் போல் பேணுவது – அதுவும் முழு அன்புடன் பேணுவது அவவளவு எளிதல்ல.

எளிமையின் உருவமாக இருந்த என் மாமியார் விருந்தோம்பலில் இமாலயச் சிகரம்.

நான் இந்த என் மாமியாரின் அன்பு மழையில் கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங்கள் நனைந்தேன். அதற்குப் பிறகு பணி நிமித்தமாக வெளியூரில் மாற்றலாகி விட்டேன்.


மதுரையில் நான் என் மனைவி, என் பெண் குழந்தை மீரா, என் தாய், என் அக்காவின் மூத்த பிள்ளை அம்பி ஆகியவர்கள் வசித்து வந்தோம். சென்னையிலிருந்து மாற்றலாகி பெரிய குளம், திருமங்கலம், பிறகு மதுரை என்று நான்கு வருடங்களாக வீடு மாற்றல் இருந்தது. அம்பி என்னுடன் தான் படிப்பிற்காக இருந்தான். அப்போது அம்பி 9-10 –வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். அம்பியை என் வீட்டுப் பிள்ளையாகத்தான் எல்லோரும் சொல்வார்கள்.

ஒரு நாள் இடியும் மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நான் அப்போது ஆபீசில் இருந்தேன். எனக்கு ஒரு போன் என் உறவுக்காரரிடமிருந்து வந்தது. என் வீட்டில் போன் கிடையாது. அப்போதெல்லாம் போன் வசதிகள் மிகக் குறைவு.

‘சென்னை உடனே செல்ல வேண்டும். மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை’ என்று எனக்கு போனில் தெரிக்கப் பட்டது. அப்போது இரவு சுமார் 7 மணி இருக்கும். நான் என் ஜாவா மோட்டார் சைக்கிளில் ஆபிசிலிருந்து என் வீட்டிற்கு அந்த கொட்டும் மழையில் நனைந்த படியே வண்டியை ஓட்டிச் சென்றேன். ஆபிசிலிருந்து என் வீடு சுமார் 3 கி.மீ. இருக்கும்.

‘என் மாமியாரின் உயிருக்கு ஆபத்தாகி இருக்குமோ?’ என்ற சந்தேகம் எனக்கு உண்டாயிற்று. வீட்டிற்கு வந்ததும், என் மதுரை உறவுக்காரரின் காரிலேயே மதுரை ரயில்வே ஸ்டனுக்கு நான், என் மனைவி, என் பெண் குழந்தை மீரா அகியவர்களோடு வந்து, டிக்கட் வாங்கி சென்னைக்கு ரயில் ஏறினேன்.

அதிகாலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் என் மாமியார் வீட்டிற்குச் சென்றோம்.

என் சந்தேகம் நிஜமாகி விட்டது. என் மாமியார் நேற்றே காலமாகி விட்ட தகவல் கிடைத்தது. சில காலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிக்ஷை பெற்ற விவரம் அப்பொழுதான் தெரிந்தது. முன்பே தெரிந்திருந்தால், நான் என் மனைவியை உடனே அனுப்பி இருப்பேன். நானும் உடனே வந்து பார்த்திருப்பேன். அந்த பாக்கியம் கிடைக்காமல் போய் விட்டது.

கண்ணீர் விட்டுக் கதறிய என் மனைவி, ஒன்றும் புரியாமல் விழிக்கும் என் குழந்தையான மீரா – மிகவும் மனத்தைப் பிழியும் காட்சி தான். ஒரு கால கட்டத்தில் கதறிய என் மனைவியைச் சமாதானம் செய்தேன். என்றாலும் துக்கம் காலத்தால் தான் படிப்படியாகக் குறையும். அதிலும் அம்மாவின் இழப்பு என்பது சாதாரணமானதில்லையே!

ஆமாம், எனக்கும் அம்மாவானவரை நினைத்து நானும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.எனக்கு நான் தான் சமாதானம் சொல்ல வேண்டும்.
என் மாமியார் கிரேக்கியம் – அதாவது சுப காரியம் அன்று நடந்த ஒரு சம்வம் தான் என் மனத்தில் நிலைத்து நின்றது.

வீட்டில் உறவுக்காரர்களின் ஒரு சிறிய கூட்டம். சாஸ்திரிகளின் சடங்கு நடந்து முடிந்து, சாப்பிட ஆரம்பித்த சமயம், அப்பொழுது இரண்டு பிராமணர்கள் நடிகர் உசிலைமணி போல் தொந்தியும், தொப்பையுமாக, இரட்டையர்கள் போல், எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து என்னிடம் கேட்டார்கள்: ‘போஜனம் உண்டோ?’

நான் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ‘ஆஹா, நிச்சயம் உண்டு. கொஞ்சம் தாமசிக்கணும்!’ என்று சொன்னேன்.

‘அதெற்கென்ன? பேஷா தாமசிக்கிறோம்’ என்று சந்தோஷமாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.

நான் பிறகு உள்ளே சென்று என் மனைவியிடமும், என் மைத்துனர்களிடமும் விஷயத்தைச் சொன்னேன். தங்களின் சித்தப்பா என்ன சொல்லுவாரோ என்று பயந்தாலும், அந்த இரண்டு பேர்களுக்கும் சாப்பாடு போடுவதாக முடிவானது.

அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து இரண்டு பெரிய தலைவாழை இலைகள் போட்டுப் பறிமாறப்பட்டது. மிகவும் தாரளமாகவே பறிமாறினோம். அவர்கள் கேட்காமலேயே பதார்த்தங்கள் நிறைவாகப் பறிமாறப்பட்டன. அவர்களுக்கு பரம திருப்தி. அந்த இரண்டு பேர்களும் மிகவும் நன்றாக, ரசித்து, அதிகமாகவே சாப்பிட்டார்கள். பாயசம் இலைக்குப் பறிமாறப்பட்டதும், மிகவும் ஆனந்தமாக சில ஸ்லோகங்களைச் சொலி எங்களை வாழ்த்தினார்கள். சாப்பிட்டு முடிந்ததும் எழுந்திருக்க முடியாமல், எழுந்திருந்து, கை அலம்பினார்கள்.
அவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் நல்ல தட்சிணையும் கொடுத்தோம். 

நாங்கள் அனைவரும் அவர்களை விழுந்து வணங்கினோம்.
‘மங்களம் மங்களம் மங்களம்’ என்று வாயார மனதார அவர்கள் வாழ்த்தினார்கள்.

அவர்கள் எங்கள் வாயிலைக் கடந்து செல்வதை நாங்க்ள் கவனித்தோம். வயிறு நிறையச் சாப்பிட்டதால் அந்த இருவர்களும் நடக்கச் சிரமப் பட்டார்கள். அவ்வளவு திருப்தியாக் அவர்கள் சாப்பிட்டார்கள். அடுத்த வீட்டுத் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்த்து விட்டுத் தான் அவர்களால் மேலும் நடக்க முடிந்தது.

இதை நாங்கள் பார்ப்பதை கவனித்த அந்த இரண்டு பிராமணர்களும் தெய்வீகப் புன்னகைகள் பூத்து, தங்கள் கைகளை ஆசிர்வதிப்பதைப் போல் சைகைகள் செய்து விட்டு சென்று விட்டனர்.

என் இன்னொரு அம்மாவே அவர்களை அனுப்பியதாகவே எனக்குப் பட்டது. அவர் எங்களது அன்ன பூர்ணித் தாய் அல்லவா! அவர்களது கைகள் எவ்வளவு பேர்களுக்கு ருசியான அன்னம் அளித்திருக்கிறது. அந்த ருசியை என்னால் எப்படி மறக்க முடியும்?

என் இன்னொரு அம்மாவின் ஆசிகளின் உருவமாகத்தான் அந்த இரு பருத்த ஆத்மாக்கள் அவரது சுபகாரிய தினத்த்ஹில் வந்து அமுதுண்டு எங்களை வாழ்த்தினார்களோ!

பசி மறைந்து போம். ஆனால் ருசிக்கு என்றுமே அழிவில்லை!

என் இன்னொரு அம்மா அளித்த அன்னத்தின் ருசி இன்னும் இனிக்கிறது.

என் இன்னொரு அம்மா இன்றும் இருக்கிறார். இறக்க வில்லை



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017