கர்நாடக அரசியல் நாடகம்







கர்நாடகாவின் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு முன் அதன் அசெம்பளியின் கட்சிகளின் நிலவரம் இது தான்: மொத்த அசெம்பளி மெம்பர்கள்: 224. அதில் பி.ஜே.பி. 105, காங்கிரஸ் 79, ஜேடிஎஸ் 37, பி.எஸ்.பி 1, மற்றவர்கள் 2.

காங்கிரசும் – ஜேடிஎஸ் இணைந்து பிஜேபியை ஆட்சி அமைக்க வரவிடாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரினாலும், அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற நிலையில் பிஜேபியின் எடியுரப்பாவை முதன் மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்திரவிட்டார். அதை காங்கிரஸ் – ஜேடிஎஸ். எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடி, உச்ச நீதிமன்றமும் இன்னும் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்திரவிட்டவுடன், எடியுரப்பா சட்ட சபையில் ஒரு நீண்ட உரை நிகழ்த்தி நம்பிக்கை ஓட்டு எடுப்பதற்கு முன்பாகவே தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அதன் பிறகு காங்கிரஸ் – ஜேடிஎஸ். கூட்டணி ஆட்சி எச்.டி.குமாரசாமி முதல்வர் – ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. சித்தாராமையாவை காங்கிரஸ் ஒரங்கட்ட நினைப்பதாக நினைத்த அவரது எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு பிற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பதிலடி கொடுத்து வெளிப்படையாக மீடியாக்களிடம் குற்றம் சாட்டினார்கள். இதே போல் ஜேடிஎஸ். எம்.எல்.ஏக்களும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் பரஸ்பரம் குற்றம் சாட்ட, குமாரஸ்வாமியும் ‘பதவியில் இருப்பது விஷம் சாப்பிடுவது போல் இருக்கிறது. என்னை எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் தான் முதல் மந்திரி பதவியைக் கொடுத்து உட்கார வைத்தது. ஆனால், காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவை அளிக்கத் தவறி விட்டது. நான் ஒரு விபத்தில் பதவி ஏற்ற முதல்வராகத் தான் ஆட்சி செய்கிறேன். மக்களும் எங்கள் கட்சிக்கு முழுப் பெரும்பான்மையைக் கொடுக்க வில்லை. எனக்கு பதவி ஆசை கிடையாது’ என்ற அளவில் புலம்ப ஆரம்பித்தார். அவரது தந்தையும் காங்கிரசையும் குறிப்பாக சித்தராமையாவையும் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில் இரண்டு காங்கிரஸ்காரர்கள் ராஜினாமா செய்தனர். லோக் சபா தேர்தலில் 28 இடங்களில் காங்கிரஸ் – ஜேடிஎஸ். கட்சிகள் தலா ஒரு இடம் தான் வென்றன. தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப்ப மொவ்ளி போன்ற ஜாம்பவான்களுடன் குமாரஸ்வாமியின் நடிகர் மகன் நிகில் கவுடாவும் தோற்றது ஏற்கனவே ஒருங்கிணைப்பு இல்லாத காங்கிரஸ்-ஜேடிஎஸ். கூட்டணியை ஆட்டம் காண வைத்தது.
இதன் தாக்கத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்து 13 எம்.எல்.ஏக்கள் – ஜேடிஎஸ்லிருந்து 3 எம்.எல்.ஏக்கள் மொத்தம் 16 பேர்கள் ராஜினாமா செய்தது இரு கட்சிகளின் பெரும்பான்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த ராஜினாமாக் கடிதங்களுக்கு எந்தவிதமான முடிவையும் எடுக்காமல், அவர்களை எப்படியாவது – அனைவரையும் இல்லாவிடினும், ஒரு சிலரையாவது ராஜினாமாக் கடிதங்களை வாபஸ் வாங்க முயற்சியில், காங்கிரஸின் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி மட்டும் தமது ராஜினாமாக் கடிதத்தை வாபஸ் பெற்று கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், மற்றவர்கள் குறிப்பாக அவருடைய அறிவுரையின் படி அவருடன் ராஜினாமாக் கடிதங்கள் கொடுத்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக தாங்கள் எக் காரணங்கள் கொண்டும் தங்களது ராஜினா முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே மீடியாவில் கருத்து வெளியிட்டு விட்டார்கள். ஆகையால் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுக்காமல் காலம் தாழ்த்துவது கூட்டணிக் கட்சியின் குதிரை பேர மனநிலையையே காட்டுவதாக இருக்கிறது.

காங்கிரஸ் – ஜேடிஎஸ். கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அரசை எப்படியாவது காப்பாற்ற பல முயற்சிகளை – உண்மையிலே தந்திரங்களை மேற்கொண்டார்கள்.

ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ மற்றும் ஒரு பிஎஸ்பி எம்.எல்.ஏ. ஆகிய இருவருக்கும் மந்திரி பதவிகளைக் கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெற முனைந்தார். இது மற்ற இரு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் எரிச்சலையும், கட்சியைக் காப்பாற்ற தலைவர்கள் எதையும் செய்யச் துணியும் மன நிலையைக் கண்டு வெறுப்புற்றனர். 

இதனாலேயே 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாகச் சொல்கிறார்கள்.
இதை விட ஒரு விபரீதமான ‘காமராஜ் பிளான்’ போல் ஒன்றை குமாரஸ்வாமி நடத்தினார். அனைத்து மந்திரிகளையும் – துணை முதல் மந்திரியும் ராஜினாமா கடிதங்களை குமாரஸ்வாமி வாங்கி வைத்துக் கொண்டு, 15 ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் திட்டத்தையும் கையில் எடுத்தார். அதுவும் பலன் தராது என்று தான் படுகிறது.

ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தை நாடினர். உச்ச நீதி மன்றமும் ’15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதங்களைப் பற்றி சபாநாயகர் முடிவு செய்யட்டும். ஆனால் அவர்களை சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தக் கூடாது. கொறடா உத்திரவும் பிறப்பிக்கக் கூடாது’ என்று தீர்ப்பு வழங்கியது குமாரஸ்வாமி – சபாநாயகர் இருவருக்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது. அத்துடன் கவர்னர் முதன் மந்திரிக்கு ’18-ம் தேதியே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என்பதையும் குமாரஸ்வாமி மதிக்க வில்லை.

சபாநாயகர் 19-ம் தேதி அன்று ‘நம்பிக்கைத் தீர்மானத்தை அங்கத்தினர்கள் பேச அனுமதிக்கும் அதே நேரத்தில் அதற்கு ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். ஆகையால் வரும் 22-ம் தேதி ஜூலை அன்று நம்பிக்கை தீர்மானத்தின் மேல் ஓட்டெடுப்பு நடக்கும்’ என்று அறிவித்தார்.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க எம்.எல்.ஏக்கள் புதிய ராஜினாமாக் கடிதங்களுடன் சபாநாயகரைப் பார்க்க இருந்த சமயத்தில் டி.கே. சிவகுமார் சிலரின் ராஜினாமாக் கடிதங்களைப் பிடிங்கி கிழித்தெறிந்தார். இது மிகவும் கண்டிக்கத் தக்க செயலாகும். அதற்கு அவர் பிறகு மன்னிப்புக் கேட்டாலும், இந்த அவரது செயல் ஜனநாயக மரபை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தக் கூத்து நடந்து வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரியைத் தவிர்த்து ஒருவரும் பதவியில் இல்லை என்று தான் தார்மீக அடிப்படையில் இருக்கும் நிலையாகக் கொள்ள வேண்டும். ஆனாலும் பல கோப்புகளில் உத்திரவுகள் போடப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.

சபாநாயகரும் சமநிலை தவறி செயல்படுகிறாரோ என்ற அச்சம் எழுகிறது. ‘எல்லோரும் எதையும் பேசுங்கள். மக்கள் தெரிந்து கொள்ளட்டும்’ என்று வெளிப்படையாகச் சொல்வது சபையின் கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடும் செயல் என்று தான் அவரைக் குற்றம் சொல்லத் தோன்றுகிறது.
மேலும் சபாநாயகர் கூட்டணி அரசு மந்திரிகளுக்கு சீட்டுக்களை கொடுத்து உதவும் வீடியோ காட்சியும் வெளிவந்துள்ளது. முன்பு இதே சபாநாயகர் ‘நான் என்ன போஸ்ட் மேனா? எனது ஆபீசில் எப்போதும் இருந்து எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக் கடிதங்களை வாங்குவதற்கு? நான் ஒரு குறிப்பிட்ட நாளில் தான் ஆபீஸ் வருகிறேன். அப்போது என்னைச் சந்தித்து கொடுக்கலாம்’ என்று சொன்னார். ஆனால், பிறகு இதே சபாநாயகர் ‘நான் ஒரு போதும் என் கடமையைச் செய்வதில் தவறுவதில்லை. நான் எம்.எல்.ஏக்களுக்கு என்னைச் சந்திப்பதில் எந்த இடையூறும் செய்யவில்லை’ என்று பொய் சொன்னது சபாநாயகர் ‘சபை சபாநாயகராக’ செயல்படாமல், ‘கூட்டணி அரசின் சபாநாயகராகவே’ செயல்படுவதாகப் படுகிறது.

இந்த ஜூலை மாதத்திலிருந்தே கர்நாடகா அரசியல் நாடகம் 23-ம் தேதி புதன் கிழமை தான் அதுவும் சபாநாயகர் ‘இன்று வாக்கெடுப்பு நடக்காவிடில் நான் ராஜினாமா செய்வது நிச்சயம். அதற்குத் தயாராக நான் ராஜினாமாக் கடித்துடன் தான் சபைக்கு வந்துள்ளேன்’ என்று கூறி தமது ராஜினாமாக் கடிதத்தை எடியுரப்பாவிடம் காண்பிக்க காவலாளியிடம் கொடுத்து மீண்டும் அதை தமது பைக்குள் வைத்துக் கொண்டார். ஆகையால் தான் குமாரசாமியும் – காங்கிரசும் வேறு வழி இன்றி நம்பிக்கை ஓட்டெடுக்க, அதில் காங்கிரஸ்-ஜேடிஎஸ். கூட்டணி 99 – பிஜேபி. 105 – சபைக்கு வராதவர்கள் – 20 என்ற அளவில் குமாரசாமி பதவி விலகினார்.


இதன் மூலம் பிஜேபி அரசு பதவி ஏற்க ராஜினாமா செய்த 12 காங்கிரஸ் + 3 ஜேடிஎஸ் எம். எல். ஏக்களின் நிலை அறிந்த பிறகு தான் எடிபூரப்பா ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோருவார் என்று தெரிகிறது. ஆகையால் கர்நாடக அரசியலின் குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்லை என்று தான் படுகிறது. 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017