குரு பூர்ணிமா – 16-07-2019 & புத்த பூர்ணிமா – 16-07-2019


குரு பூர்ணிமா – 16-07-2019






குரு பூர்ணிமா என்பது வியாச பூஜையைக் குறிக்கும். அந்த புன்னிய நாள் இந்த வருடம் 16-07-2019 செவ்வாய்க்கிழமை வந்துள்ளது. அந்த நாள் சாந்திரமானப்படி ஆஷாட பெளர்ணமி அன்று வரும். இந்த வருடத்தில் சந்திர கிரஹணமும் சேர்ந்து அந்த வியாசர் பிறந்த நன் நாளில் வந்துள்ளது, வெகு சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
குரு என்ற சொல்லில் கு என்ற எழுத்திற்கு இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்ற எழுத்திற்கு போக்குபவர் என்றும் சம்ஸ்கிரதத்தில் அர்த்தம் சொல்வார்கள். ஆகையால், குருவையும், குருவுக்குக் குருவான மஹா குரு வியாசரையும் வணங்கினால் நமது இருளான அறியாமை அழிந்து, பகவான் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நன் நாளில் ஒவ்வொரு இந்துவும் கல்விக்கண்களைத் திறந்த தமது குருவை நினைத்து வணங்குவதைக் கடமையாக உபதேசித்துள்ளனர்.
வியாசர் இந்து மதத்திற்கு மஹா குருவாக – மூல புருஷராக விளங்குகிறார். மஹாபாரத்தை எழுதிய வியாசர் கிருஷ்ண த்வைபாயண வியாசர் என்று புகழப்படுகிறார். ரிஷி பரசாரவிற்கும், அவரது மனைவி மீனவ குலத்தைச் சார்ந்த சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவராவார். குலத்திற்கும் குருஸ்தானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இந்து மதம் பலவிதங்களில் நிரூபித்துள்ளதை உலகம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
அந்த வியாசரது பிறந்த தினம் தான் குருபூர்ணிமா என்று துதிக்க்கப்படும் புன்னிய தினமாகும். அவரை வியாச பகவான் என்றே கடவுள் ஸ்தானத்தில் வைத்து பூஜைகள் அந்த குரு பூர்ணிமாவில் இந்து மத குருமார்கள் ஆண்டுதோரும் வெகு சிறப்பாக நடத்திக் கொண்டாடுவார்கள். சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரத்தை அந்த குருபூர்ணிமாவில் முதலில் வியாசர் பூஜை செய்து ஆரம்பிப்பார்கள்.
வியாசரை வேத வியாசர் என்றே போற்றுவார்கள். இந்து மதத்தின் ஆணி வேர் வேதமாகும். வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நம் இந்து மதத்திற்கு ‘வைதிக மதம்’ என்றே பெயர். வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. அந்த வேதங்களை வியாசர் துவாபரயுக முடிவில் ருக், எதிர், சாமம், அதர்வனம் என்று நான்காகப் பிரித்து ஸ்வரத்தோடு அத்தியாயனம் செய்தார். இவை உலகில் தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக ஜைமினி, வைசம்பாயனர், ஸுமந்து, பைலர் ஆகிய நான்கு முனிவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் வேதத்தின் தாத்பர்யத்தை 18 புராணங்களாக்கி சூத முனிவருக்கு உபதேசித்து அனைவரும் பயன் அடையச் செய்தார். மேலும், வேதத்தின் தத்துவங்களை உள்ளடக்கி சுருக்கமாக ‘பிரம்ம சூத்திரம்’ எழுதினார். ஸ்ரீ ஆதிசங்கரர் முதற் கொண்டு பலரும் இதற்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளனர்.
‘வியாசே விசால புத்தே’ என்று அவருடைய இதயம் விசாலமானது என்றும், அன்பு மயமானதென்றும் துதித்துப் போற்றுவார்கள்.
ஒரு சமயம் வேத வியாசரிடம் சென்று, ‘சுவாமி! நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் எங்களால் படிக்க முடியவில்லை. எனவே இவற்றின் சாரத்தை எங்களுக்கு உபதேசிக்க வேண்டும்’ என்று சில சிஷ்யர்கள் கேட்டார்கள்.
அதற்கு வேத வியாசர் ‘நான் எழுதிய அனைத்து நூல்களின் சாரமும் இந்த இரண்டே வரிகளில் அடங்கி உள்ளன. ‘பரபீடனம் பாபம்; பரோபகாரம் புண்யம்’ என்பது தான் அந்த சொற்கள். அதாவது ‘பிறருக்கு தீமை செய்வது பாவம். பிறருக்கு உதவி செய்வது புண்ணியம்’ என்பதாகும்’ என்று விளக்கி உள்ளார்.
வியாச பூஜையின் போது, கீழ்க்கண்ட சம்ஸ்கிருத ஸ்லோகத்தை மனமுருகிச் சொன்னால் குருவின் அனுக்கிரகம் கட்டாயம் கிட்டும்:
குருப்பிரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வராஹா
குரு ஸாக்க்ஷாத் பர பிரம்மா
தஸ்மே ஸ்ரீ குருவே நமஹா”

இதன் பொருள்:’குரு என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களின் பிரதிநிதியாக இருப்பவர். அவர் தான் அறிவை வளர்த்து, காப்பாற்றி, அஞ்ஞான இருளை அழிப்பவர். அப்படிப்பட்ட குருவை நான் வணங்குகிறேன்.’

பக்கத்து நாடான நேபாளத்தில் திரினோக் குஹா பூர்ணிமா என்று இந்த நாளை பள்ளிகளில் மிகவும் பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர். அந்த நாளைத் தான் அவர்கள் ‘ஆசிரியர் தினம்’ என்று சொல்லி பள்ளி ஆசிரியர்களைப் போற்றுகிறார்கள்.








குரு பூர்ணிமாவை புத்த பூர்ணிமா என்று பவுத்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் தான் புத்தர் வாரணாசிக்கு 10 கி.மீ. தூரத்தில் கங்கை – வருணா நதிகளின் சங்கமம் ஆகும் இடமான சாரநாத் என்ற மான் பூங்காவில் தமது முதல் உபதேசத்தை ஐந்து சீடர்களுக்கு உபதேசித்தார். இந்த ஐந்து சீடர்கள் தான் புத்த மதத்தின் முதல் ‘சங்க அங்கத்தினர்கள்’. சங்கம் என்றால் பூர்ணமான உள்ளொளி பெற்ற புத்த பிக்ஷுக்களைக் கொண்ட குழு என்று பொருள்.

சாரநாத் என்பது சம்கிருத வார்த்தையான ‘சாரங்கநாதா’ என்பதிலிருந்து உருவானதாகும். அதற்கு ‘மான்களின் ராஜா’ என்று பொருள். புத்தர் கதை ஒன்றில் ஒரு மானை ஒரு அரசர் கொல்ல முயன்ற போது, சித்தார்த்தன் மானுக்குப் பதில் என்னை கொல்லுங்கள் என்று முன் வந்தததும், அதைக் கண்டு மனம் வருந்தி, அந்த இடத்தில் மான்களுக்கு ஒரு சரணாளயம் உருவாக்கினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.  

சாரநாத்திற்கு இசிபட்டனா என்ற பெயரும் உண்டு. அதற்கு ‘சாதுக்கள் வான் மார்க்கமாக வந்து தங்கிய இடம்’ என்று பொருள். புத்தகயாவில் சித்தார்த்தன் ஞானம் பெற்ற ஏழு வாரங்கள் கழிந்த பிறகு, சாரநாத்திற்குச் செல்ல கங்கையைக் கடக்க வேண்டிய கட்டாயம் வந்தது. ஆனால், புத்தரிடம் ஓடக்காரனுக்குக் கொடுக்க காசில்லை. ஆகையால் அவர் ஆகாய மார்க்கமாகவே சாரநாத்திற்குச் சென்றதாகச் சொல்வர். இதனாலும் இசிபட்டனா என்ற பெயர் வந்ததாகவும் சொல்வர்.

புத்தர் முதன் முதலில் தமது ஐந்து சீடர்களுக்கு உபதேசித்த நான்கு உன்னதமான உபதேசம் இது தான்:

1. உலகில் துன்பம் உண்டு 
2. துன்பத்தின் காரணத்தை அறியவேண்டும்.
3. துன்பத்தைப் போக்கும் காரணத்தை அறிய வேண்டும். 
4. துன்பத்தைப் போக்கும் பாதையில் பயணிக்க வேண்டும்.

துன்பத்தைப் போக்கும் பாதை எட்டு வகையானவைகள் என்று சொல்லி அவைகளை புத்தர் பட்டியலிட்டுச் சொல்கிறார்:

1. நேர்மையான கொள்கை 
2. நேர்மையான நோக்கம் 
3. நேரமையான பேச்சு   
4. நேர்மையான நடவடிக்கை 
5. நேரமையான வாழ்க்கை 
6. நேர்மையான முயற்சி 
7. நேர்மையான கருணை உள்ளம் 
8. நேர்மையான தியானம்

புத்தர் தமது சீடர்களுக்கு மத்திமமான பாதையையே கடைப்பிடிக்கும் படி உபதேதிக்கிறார். ‘அதீத காம இச்சைக்கு பலி ஆகாமல் உடலை காப்பதைப் போல், உடலை அதீதமாக வருத்தி தபஸ் செய்வதையும் தவிர்க்கவும்’ என்பது தான் புத்தரின் மத்திமமான பாதையாகும். இந்தப் பாதையில் செல்ல மேலே சொன்ன நான்கு அடிப்படை உபதேசங்களும், எட்டு பாதைகளும் வழிகாட்டி நிர்வாண நிலையை அடைய வழிகாட்டும்.
இந்த புத்தரின் வழிகாட்டுதலைத் தான் தர்மாகாக்கா பவட்டானா சூத்திரம் என்று கொண்டாடுகிறார்கள். அதற்கு ‘தர்மச் சக்கரத்தை சுழலவிடல்’ என்று பொருள். 
புனிதமான வியாசர் பிறந்த தினம் மற்றும் புத்தர் ஞானம் பெற்று சாரநாத்தில் தமது முதல் போதனையை ஐந்து சீடர்களுக்கு போதித்த தினம் ஆகிய பெருமையைப் பெற்ற குரு பூர்ணிமா நாளில் வாய்மை வாசகர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அனைத்துவிதமான நலன்களைப் பெற்று பேரும் – புகழோடும் நீண்ட நாள் வாழ வியாசர் – புத்தர் அவர்களின் அடிபணிந்து வேண்டுகிறோம். வாழ்க வளமுடன்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017