ஜெயகாந்தன் பார்வையில் அண்ணாத்துரை




பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் இன்றைய வாடிக்கையான காரியம். அதுவும் அந்தப் பிணம் இஸ்லாமியர் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத தலித் பிணமாக இருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் இதைக் கற்றது நம் கட்டுமரத்திடமும் திமுகவிடமும்தான் என்பது பல இளைய தலைமுறையினருக்குத் தெரியாது.

1969 அண்ணாதுரை இறந்துவிட்டார். அதை திரு ஜெயகாந்தன் எப்படிப் பார்க்கிறார் என்பதை பாருங்கள்.

ஒரு நாட்டின் பெருமைக்குரிய ஜனாதிபதி மறைந்தபோது கூட இல்லாத அளவுக்கு மிக அதிகமான அவலக் குரலை ரேடியோவும், தமிழக அரசாங்கமும் அருவருக்கத்தக்க முறையில் இங்கு கிளப்பின.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது.

அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர்.

நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை...

அரசியல்வாதிகள் - அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் - அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

'எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை...

கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன்?

அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது..!

(நன்றி: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் - ஜெயகாந்தன் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001)


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017