அர்க்க பத்திரமும், ரத சப்தமியும் – செவ்வாய்க் கிழமை -12-02-2019
அர்க்கன்
என்றால் சூரியன். பத்திரம் என்றால் இலை.
சூரிய இலை என்பது எருக்க இலையைக் குறிக்கும்.
அந்த
நன்நாளில் எருக்க இலையைத் தலையில் வைத்து ஸ்நானம் செய்து நம்
பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெற்று, ஆனந்த வாழ்வை அடைவோமாக.
ரத சப்தமி அல்லது மக சப்தமி என்றால் சூரியனுடைய ரதம் மாசி மகதத்தின்
சுக்ல பக்ஷ சப்தமியில் (சப்தமி என்றால் ஏழாவது) பிரவேசிப்பதைக் குறிக்கும். ஏழு
குதிரைகள் (இது சூரிய கதிர்களின் ஏழு நிறங்களைக் குறிக்கும்) பூட்டிய சூர்ய
பகவானுடைய ரதம் தெற்கே மகர ரேகையிலிருந்து வடக்கே உள்ள கடக ரேகையை நோக்கி
பயணிக்கும் ஆறுமாத காலமான உத்தராயணத்தின் ஆரம்பம் ரத சப்தமி ஆகும்.
சூரிய பகவான் ரிஷி
காஷ்யபருக்கும், அவரது தர்ம பத்தினி அதிதிக்கும் பிறந்தவர். நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த அந்தப் புண்ணியவதியை ஒரு பிராமணன் தனக்குப் பிட்சை அளிக்கத் தாமதித்ததால்,
அதிதியின் வளரும் சிசு இறக்கும் என்று சாபம் கொடுத்து விட்டார். இதை
காஷ்யபருக்குத் தெரிவிக்க, அவரோ ‘கவலைப் பட வேண்டாம். பிரகாசமான ஒளியுடன் கூடிய
ஒரு மகன் பிறப்பான்’ என்று தமது பத்தினியிடம் தெரிவித்ததாகப் புராணம் சொல்கிறது. அந்த
மகன் தான் உலகத்திற்கெல்லாம் ஒளி கொடுக்கும் தீப்பிழம்புப் பிரகாசமான சூரிய
பகவானாவார். சூரியன் பாவத்தைப் பொசுக்கும் சக்தி படைத்தவர்.
“ரத
சப்தமியில் எருக்க இலைகளை தலையில் வைத்து ஸ்நானம் செய்தால், நாம் செய்த பாவங்கள்
போவதுடன் பீஷ்மருக்கு
நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்'' என்பது வியாசரின் கூற்றாகும்.
வியாசரே
அதற்கான காரணங்களை விளக்கும் சம்பவம் இதோ:
மஹாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின்
அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ ஸேனாதிபதி பீஷ்ம பிதாமஹர் அம்பு படுக்கையில்
சாய்கிறார். அந்நேரம் தக்ஷ்ணாயனம். தக்ஷ்ணாயனத்தில் இறந்தால் முக்தி (மோக்ஷம்)
கிட்டாது. பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் உண்டு. எனவே
அவர் உத்தராயணத்தில் உயிரை விட விரும்புகிறார். ஆனால் தைமாஸம் பிறந்து உத்தராயணம்
துவங்கியும் கூட அவர் உயிர் பிரியவில்லை. பீஷ்மரை உடல் வேதனையுடன் மனோவேதனையும்
வாட்டுகிறது. தன்னைக்காண வந்த வேத வ்யாஸரிடம் தனக்கு ஏனிந்த வேதனை எனக்
கேட்கிறார். அதற்கு வ்யாஸர் ‘ஒருவர் தானாக செய்யும் துற்செயல் எவ்வளவு பாவமோ
அவ்வளவு பாவம் ஒரு துற்செயல் நடக்கும்போது அதை தடுக்க முடிந்தவர் அப்படி
தடுக்காமல் இருப்பதும்’ என்கிறார். பீஷ்மருக்கு புரிகிறது. அன்று ஹஸ்தினாபுரத்து
அரசவையில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு துகிலுரியப்பட்ட போது செயலற்று வாளாவிருந்த
பாபம் தன்னை சுற்றியுள்ளதை உணர்கிறார்.
“திரவுபதி "கண்ணா, என்னைக்
காப்பாற்றமாட்டாயா?” என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கைவிடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி'' என்கிறார் வியாசர்.
“இந்த பாபம் அகல ஏதும் ப்ராயஸ்சித்தம் உண்டா?” என பீஷ்மர் வியாஸரை
கேட்கிறார்.
‘பாபங்களைப் பொசுக்கும் சக்தி சூர்ய சக்தியே. சூர்யனுக்கு அர்க்கன்
என்று இன்னொரு பெயருமுண்டு. அர்க்கனுக்கு உகந்தது அர்க்க பத்திரம் என்ற எருக்கிலை.
சூர்யசக்தி முற்றிலும் எருக்கிலையுள் அடங்கியுள்ளது‘ எனக்கூறிய வியாஸர் தான் கையுடன்
கொணர்ந்த எருக்கிலைகளால் பீஷ்மரின் தலை, கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் ஆகிய
அங்கங்களை அலங்கரிக்கிறார். பீஷ்மரின் பாபங்கள் பொசுக்கப்பட்டு, அவரது உடல், மன
வேதனைகள் அகன்று நிம்மதியாக உயிர்விடுகிறார்.
'பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே, அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?' என்று தர்மர் வருந்தினார்.
தர்மருடைய வருத்தத்தைத் தெரிந்துகொண்ட வியாசர், ''தர்மரே வருந்த வேண்டாம். ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதுடன், பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்'' என்று வியாசர் கூறினார்.
அர்க்க பத்ரத்து (எருக்கிலை)க்கு பாபங்களை பொசுக்கும் சூர்ய சக்தி
இருப்பதால் ரதஸப்தமியன்று, நாம் நம் பாபங்களை போக்கிக்கொள்ள எருக்கிலை வைத்து
ஸ்நானம் செய்ய வேண்டும்
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெற்று, ஆனந்த வாழ்வை அடைவோமாக.
Comments