அடல் பிஹாரி வாஜ்பாய் அமரரானார்






13 நாட்கள், 13 மாதங்கள், பிறகு 5 ஆண்டுகள் என்று மும்முறை பாரதப் பிரதமராகப் பதவி வகித்தவர். எல்லாம் பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத் தான் அவர் பிரதமராக ஆட்சி செய்தார். தனித்துப் பெரும்பான்மை பெற்றுப் பதவியிலிருந்திருந்தால், அவர் இந்தியாவை மிகப் பெரும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருப்பார்.             
தங்க நாற்கரைச் சாலைத் திட்டத்தைப் போல் இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருப்பார். அவரது ஆட்சியில் தான் டெலிபோன் அனைவருக்கும் கிடைக்க வழிவகுக்கப் பட்டது.

மொரார்ஜீ தேசாய் ஜனதா கட்சியின் ஆட்சியில் வாஜ்பாய் வெளிஉறவு மந்திரியாக யு.என். பொது அசம்பிளியில் முதல் முறையாக ஹிந்தி மொழி உரை(1977), போக்ரன் அணு ஆயுத சோதனை (மே 1998), பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் (பிப்ரவரி, 1999), லாஹூர் ஒப்பந்தம் (பிப்ரவரி 1999), கார்கில் யுத்தம் (மே – ஜூன் 1999), எதிர்கட்சித் தலைவராக இருப்பினும் பாரதப் பிரதமராக இருந்த பி.வி. ரசிம்ம ராவ் வாஜ்பாயை காஷ்மீர் பிரச்சனை குறித்துப் பேச அனுப்பியதும் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதும் – என்று பலவிதங்களிலும் பிரதமர் – அயல் நாட்டு மந்திரி – எதிர் கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து, அடல்ஜி தமது தனி முத்திரையைப் பதித்துள்ளார். ஆகையால் தான் அவரை மன்மோஹன் சிங்கும் ‘பீஷ்மப் பிதாமஹர்’ என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

இந்தியவில் இருக்கும் யு.எஸ்.தூதர் கென்னத் ஜஸ்டரும் அடல்ஜியின் – அமெரிக்காவும், இந்தியாவும் இயற்கை நண்பர்கள் – என்ற புகழ் பெற்ற கூற்றை நினைவு கூர்ந்து அடல்ஜிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
25-12-1924 – கிருஸ்மஸ் அன்று – அடல்ஜி குவாலியரில் பிறந்தார். 93-வது வயதில் 16-08-2018 அன்று டெல்லியில் காலமானார். கான்பூர் கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழு நேர பிரசாரகராக இருந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராக இருந்தவர். எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என்ற பன்முகத் தலவர். அவரது கவிதையும், பேச்சும் எதிரிகளையும் கவரும் சக்தி பெற்றவைகள். 10 முறை பாராளுமன்ற உறுப்பினர். 2 முறை ராஜ்ய சபா உறுப்பினர். 3 முறை பாரதப் பிரதமர். அவரது பேச்சுத் திறமையை அறிந்த நேருவே ‘அடல்ஜி ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார்’ என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். நேரு இறந்த போது, அடல்ஜியின் பார்லிமென்ட் பேச்சு கவிதைபோல் அற்புதமாக அமைந்தது.

13 நாள் பிரதமராக இருந்த வாஜ்பாய் பார்லிமெண்ட்டில் மிகவும் உருக்கமாகப் பேசியது சரித்தம் படைத்த உரையாகும். அப்போது, ராம் விலாஸ் பாஸ்வான், ‘நானும் ராம் தான்’ என்று பி.ஜே.பி.யின் ஹிந்துத்வாவைக் கிண்டல் செய்யும் போது, அடல்ஜி ‘நீங்கள் ராம் தான் – ஆனால், காமத்திற்கு வசப்பட்ட ராம்’ என்று சூடாகச் சொன்னார். ராம் விலாஸ் பாஸ்வான் ஏக பத்தினி விரதர் இல்லை என்பதை அடல்ஜி நாசுக்காகச் சுட்டிக் காட்டி உள்ளார்.

பாகிஸ்தானுடன் நல் உறவு கொள்வது மிகவும் அவசியம் என்பதை அடல்ஜி ‘நண்பர்களை நாம் தேர்வு செய்ய முடியும். ஆனால், அண்டை நாட்டை தேர்வு செய்ய முடியாது’ என்று சொன்னதின் மூலம் ‘பாகிஸ்தான் இயற்கையாக நமது அண்டை நாடாகி விட்டது. ஆகையால் அதனுடன் நல்லுறவு கொள்வது அவசியம்’ என்பதை ஒரு மிகச் சிறந்த ராஜ தந்திரியாகச் சுட்டிக் காட்டி உள்ளார்.

தீன தயாள் உபாத்தியாயா நடத்தி வந்த ராஷ்ட்ர தர்மா என்ற ஹிந்தி மாதப் பத்திரிக்கை, பஞ்சன்யா என்ற ஹிந்தி வார இதழ், ஸ்வதேஷ் & வீர் அர்ஜுன் என்ற தினசரிப் பத்திரிகைகள் என்று பலவற்றில் பணி ஆற்றி உள்ளார்.

அடல்ஜிக்கு மோடி அரசு 2015-ம் வருடம் பாரத ரத்னா விருது வழங்கியது. பதவி ஏற்ற 2014 ஆண்டே, மோடி அரசு வாஜ்பாய் பிறந்த நாளான 25 டிசம்பரை ‘நல்ல நிர்வாக தினம்’ என்று இந்தியா முழுவதும் கொண்டாட உத்திரவு பிறப்பித்தது.

இந்த ஆற்றல் மிக்க தலைவர் மறைவிற்கு அரசியல் கட்சி பேதமின்றி ‘இந்திய அரசியலில் ஒரு சகாப்தம் முடிந்தது’ என்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட 31-10-1984 பிறகு அதே ஆண்டில் நடந்த தேர்தலில் ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி 404 இடங்களை (மொத்த இடங்கள் – 533) பெற்றது. அந்தத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. கட்சி பெற்ற இடங்கள் இரண்டே இரண்டு தான். அதனால் தமது பதவியை ராஜினாமா செய்ய விழைந்தும், கட்சி அதை நிராகரித்தது.

பா.ஜ.க. குறைவான இடங்களில் வெற்றி பெற்றதைப் பற்றி, ஒரு முறை பார்லிமெண்டில் அடல்ஜி கர்ஜித்தார்:’நான் இங்கு சொல்வதை அனைவரும் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் எங்களைக் குறைவான எம்.பி./எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி என்று கேலியாகச் சிரிக்கிறீர்கள். ஆனால் அதிக எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சியாக இந்தியா முழுவதும் ஆட்சி செய்யும் நாள் வந்தே தீரும். அப்போது இந்திய மக்கள் உங்களைப் பார்த்துச் சிரித்து, கேலி செய்வார்கள்!’

ஆமாம், அடல்ஜியின் வார்த்தை இப்போது பலித்து விட்டது. அவர் ஒரு தீர்க்க தரிசி. இப்போது பி.ஜே.பி.273 – காங்கிரஸ் – 48 என்ற அளவில் பி.ஜே.பி. ஆட்சி மத்தியிலும், மாநிலத்தில் 20 இடங்களிலும் (மொத்த மாநிலங்கள் – 29) இந்தியாவில் பரவலாக ஆட்சியில் உள்ளது. 

அடல்ஜியின் பூத உடல் எந்தவிதமான சிக்கலும் இன்றி, ராஜ்காட் அருகில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தால் என்ற தலைவர்கள் சமாதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எரியூட்டப்பட்டது.

அடல்ஜியின் ஆத்மா சாந்தி அடையப் பிராத்திப்போமாக.

அடல்ஜி பற்றி துக்கடாக்கள்:
தவறான மரத்தில் காய்த்த சரியான பழம் என்று வாஜ்பாய் அவர்களை கருணாநிதி விமர்சித்திருந்தார். பதிலுக்கு வாஜ்பாய் “நல்ல மரத்தில்தான் நல்ல பழம் பழுக்கும்; தீய மரத்தில் ஒரு போதும் நல்ல பழம் பழுக்க முடியாது” என பதில் அளித்தார்.




எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை  நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி
 அனுப்பு: கே. ஷங்கர்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர். இந்திய பிரதமராக நரசிம்மராவ் செயல்பட்டபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.  அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில் ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.  அப்போது "காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற மசோதாவை" ஐநாவில் வல்லரசுநாடான அமெரிக்கா பாக்கிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது! 

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர்! ஆனால் இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால், அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும்  என்னும் தகவல் . இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப் பட்டது!

இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும், பிரதமர் ரசிம்மராவும் ஆலோசித்தனர். ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர் - என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று, குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை தனி விமானத்தில் ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்!

வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனா மசோதாவிற்கு ஆதரவு. ரஷ்யா மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு.  பிரான்சும் பிரிட்டனும் முடிவெடுக்காத நிலை.

இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதிய பல பத்திரிகை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம் அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன.

வாஜ்பாயி - "எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு. அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால், இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்"- என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

பத்திரிகைகள் - "எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா?” -என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்.

வாஜ்பாயி - "நான் எதிர்கட்சித் தலைவராக இங்குவரவில்லை. இந்தியாவின் தலைமைப் பிரதிநிதியாக வந்துள்ளேன். ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப் பட்டவர்கள். எனது முடிவே இந்தியாவின் முடிவு" - என்று கூறினார்.  

வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி வெளியான சில மணி நேரங்களில்  பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின. காரணம் அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது. அடுத்த நாள் இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்றதை உணர்ந்த அமெரிக்கா அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.
மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை வழக்கத்திற்கு மாறாக விமான நியைத்திற்கு சென்று இந்திய ஜனாதிபதி வரவேற்றார்.
இந்த வரலாற்று நாயகனுக்கு... கண்ணீர் அஞ்சலி...



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017