தீரர் ஆர்ய கே. பாஷ்யம்
சைமன் கமிஷனை எதிர்த்துப்
போராடியதால் ஆர்ய பாஷ்யம் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தேச விடுதலைக்காகப்
பல முறை சிறைசென்றவர். சென்னை கவர்னரைக் கொல்ல முயன்றதற்காகவும் தண்டிக்கப்பட்டவர்.
அன்னியத் துணிகளை எரிக்கும் போராட்டத்திலும் முன்னின்று செயல்பட்டவர்.
ஜாலியன் வாலாபாத்
படுகொலை அவரை மிகவும் பாதித்தது. 25 வயதே ஆன பாஷ்யம் 26-ம் தேதி ஜனவரி, 1932 அன்று
காலை 2 மணிக்கு தானே உருவாக்கிய மூவர்ணக் கொடியை இடுப்பிலே கட்டிக்கொண்டு, 148 அடி
உயரமுள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏறினார். அந்தக் கம்பத்தின்
உச்சியில் தமது இடுப்பில் கட்டியிருந்த மூவர்ணக் கொடியினை ஏற்றினார். அவரைப் போலீஸ்
பிடித்துத் தண்டித்தனர்.
நாடு சுதந்திரம்
அடைந்த பிறகு தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகையைப்
பெற மறுத்து விட்டார். அவர் சிற்பியும், ஓவியரருமாவார். அவர் தீட்டிய மஹாகவி பாரதியின்
ஓவியம் தான் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மஹாத்மா கந்தியின் ஓவியத்தையும் அவர் வரைந்துள்ளார்.
சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள சத்திய மூர்த்தியின் சிலை பாஷ்யம் உருவாக்கியதாகும்.
அவர் 1999-ம் ஆண்டு தமது 93-வது வயதில் காலமானார்.
பாஷ்யத்தின் உறவினர்கள்
பிரிட்டிஷ் அரசில் முக்கிய பதவி வகித்தவர்கள். அவரது மாமா சர் என். கோபாலஸ்வாமி அய்யங்கார்
சென்னை சிவில் செர்விஸ் அதிகாரி. பிறகு காஷ்மீர் திவானாகவும், பிறகு, இந்தியா சுதந்திரம்
அடைந்த பிறகு, ரயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தவர். அவரது அண்ணா சடகோபன் இந்திய
ரயில்வேயில் மூத்த அதிகரியாகப் பணியில் இருந்தார். இவர்கள் பாஷ்யத்தை எவ்வளவோ முறை
அறிவுரைகள் வழங்கியும், சுதந்திர போராட்ட வீரராகவே தியாகம் செய்ய முடிவெடுத்ததை நாம்
பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த 72-வது சுதந்திர
விழாவில் கொடியோற்றும் போது – ஏன், ஒவ்வொரு முறை கொடியேற்றும் போதும் – பாஷ்யத்தின்
தீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து, அவருக்கு வந்தனம் செய்து, வணங்குவோமாக.
ஆர்யா பாஷ்யம்
கொடியேற்றப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் அப்போதைய தேக்கு மர கொடிக் கம்பம்.
Comments