மோடியின் 72-வது சுதந்திர தின செங்கோட்டை எழுச்சி உரை
மோடி தமது 5-வது
சுதந்திர உரையை சுமார் 80 நிமிடங்கள் தமது அரசின் பல சாதனைகளைப் பட்டியல் இட்டுக் காட்டி
உள்ளார். அந்த உரை தமது அரசு நிகழ்த்திய சாதனைகளை சுட்டிக் காட்டி மக்களிடம் சமர்ப்பிக்கும்
ஓரு அறிக்கையாகவே உள்ளது.
முன்பு இந்தியா
தூங்கும் யானையாக இருந்ததை, ஓடும் யானையாக மாற்றி அமைத்ததை மோடி பல தகவல்கள் மூலமாக
நிரூபித்து உரை நிகழ்த்தி உள்ளார். அந்த உரையில் தமிழ் நாட்டில் பிறந்த மஹாகவி பாரதியின்
கூற்றையும் மேற்கோள் காட்டி உள்ளார்: ‘அனைத்து விதமான அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை
பெறுவதற்கான முறையை இந்தியா உலகத்திற்கே அளிக்கும்.’
மோடியின் உரையின்
முக்கிய பகுதிகள்:
காஷ்மீர் பிரச்சனைக்கு
தீர்வு, மக்களை அறவணைத்துச் செல்ல வேண்டுமே அல்லாது ‘கோலியாலும், காலியாலும்’ (Goli
and Gaali) (குண்டுகளாலும்,
திட்டுவதாலும்) தீர்க்க முடியாது. அதற்கு வாஜ்பாய் வகுத்த பாதையில் பயணிக்க
வேண்டும். இன்சானியத் (மனித நேயம்), ஜம் ஹூரியத் (ஜனநாயகம்), காஷ்மீரியட்
(காஷ்மீரத்தின் கலாச்சாரம்) – (Insaniyat, Jamhuriyat, Kashmiriyat) – ஆகிய மூன்றும் தான் அடித்தளமாக அமைய
வேண்டும். லாடக்காக இருப்பினும், ஜம்முவாக இருப்பினும், ஸ்ரீநகராக இருப்பினும், அனைத்தையும் முன்னேற்றுவது தான்
எங்களின் குறிக்கோள். குண்டுகளும், வசைபாடுகளும், ஆகியவைகளைத் தவிர்த்து, தேசபக்தி
கொண்ட அனைத்து காஷ்மீர மக்கள் எல்லோரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகவே நாங்கள்
விழைகிறோம்.
இந்தியா முன்பு
மிகவும் வலுவிழந்த பொருளாதார நாடாக உலக நாடுகள் இகழும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த
நிலை மாறி, இப்போது அவர்களே இந்தியாவில் தொழில் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இந்தியா
இப்போது உலகத்தின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக கணிக்கப்படுகிறது. இந்தியாவின் வட-கிழக்கு
எல்லை நாடுகளில் விளையாட்டு யுனிவர்சிட்டி அமைய இருக்கிறது.
2022 ஆண்டு இந்தியா
தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும். அப்போது, விண்ணில் நமது இளைய ஆண், பெண் ஆகியவர்களை
அனுப்பி, நமது மூவர்ணக் கொடியினைப் பறக்க விட வேண்டும். அது தான் என் கனவு. நமது விஞ்ஞானிகளின்
கனவும் கூட. இது அதற்கு முன்பு கூட கைகூடலாம். இதன் மூலம் இந்தியா ஒரு வெற்றிகரமான
மனித விண்வெளி முயற்சியில் நான்காவது நாடாக உலக அரங்கில் பாராட்டைப் பெரும்.
மீன் வளர்ப்பில்
இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்தியா முதல்
இடத்திற்கு முந்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தேன் ஏற்றுமதி
இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளின் எத்தனால் என்ற ஆயில் உற்பத்தி
மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் இறக்குமதி வெகுவாகக் குறைந்து டாலர்
செலவும் குறையும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு
கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்கச் செய்ய உறுதிபூண்டுள்ளோம். பல்வேறு பயிர்களுக்கு,
அவற்றின் இடுபொருள் செலவை விட 1.5 மடங்கு அளவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
காதி என்பது காந்திஜியின்
பெயருடன் இணைந்துள்ளது. அதன் விற்பனை இருமடங்காகப் பெருகி உள்ளதால், அதனால் வேலை வாய்ப்பும்
– அதிலும் ஏழைகளுக்கு – அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக
பல திட்டங்களை ஏழைகளின் வாழ்வு உயர வகுத்து,
செயல்படுத்தி உள்ளோம். உலக நிருவனம் ஒன்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடி மக்கள்
வறுமைக் கோட்டைத் தாண்டி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
பொய்யான அரசுப்
பயனாளிகள் சுமார் 6 கோடிப் பேர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் தவறான அரசாங்க உதவிகள்
தடுக்கப்பட்டுள்ளன. மேலும் கறுப்பு முதலைகளின் பணம் ரூபாய் 90,000 கோடி அளவில் தடுக்கப்பட்டு,
அரசாங்கப் பணம் காப்பாற்றப்பட்டுள்ளது.
2013 ஆண்டு வரை
– அதாவது கடந்த 70 வருடங்களில், நேர் முக வரி செலுத்துவோர் வெறும் 4 கோடிப் பேர்கள்.
ஆனால் இப்போது அது 6.75 கோடியாக உயர்ந்துள்ளது. இது எதைக் காட்டுகிறது? நமது நாடு நேர்மையை
நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது என்பதைத் தான்.
மேலும், கடந்த
70 வருடங்களாக, 70 லட்சம் நிருவனங்கள் மட்டுமே நேரடி வரி கட்டி வந்துள்ளனர். ஆனால்,
ஜி.எஸ்.டி. அறிமுகத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் 1 கோடியே 16 லட்சம் நிருவனங்கள்
வரி கட்ட ஆரம்பித்துள்ளனர். ஆகையால், இந்திய மக்கள் நேர்மை, வெளிப்படைத் தன்மை ஆகியவைகளை
கொண்டாடி வருகின்றனர். ஆகையால், ஒருபோதும் கருப்பும் பணம், ஊழல் ஆகியவைகளை நாட்டில்
அனுமதிக்க மாட்டோம்.
இடது பயங்கர வாதிகள்,
மாவோயிஸ்டுகள் ஆகியவர்கள் இந்த நாட்டை ரத்த பூமியாக ஆக்கி உள்ளார்கள். அவர்கள் கடும்
தாக்குதல் நடத்திவிட்டு, காட்டிற்குள் சென்று பதுங்கி, மீண்டும் தொடர் தாக்குதல் அன்றாட
நிகழ்ச்சியாக முன்பு இருந்தது. ஆனால், அவர்களின் கொட்டம் வெகுவாக அடங்கி விட்டது. முன்பு
126 மாவட்டங்களில் தாக்குதல் நடத்தியது, நமது பாதுகாப்புப் படையினர்களின் தீவிரமான
நடவடிக்கைகளால், அது 90 மாவட்டங்கள் என்று குறைந்துள்ளது. அதற்கும் ஒரு முடிவான தீர்வு
ஏற்படும்.
சமையல் எரிவாய்வு
ஏழைகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். தொலை தொடர்பும் கிராமங்களுக்கும் கிடைக்க
வழி செய்துள்ளோம். மின்சார வசதி இல்லாத ஊரே இல்லாத நிலையை எட்டி உள்ளோம். அனைத்துப்
பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய ஐ.ஐ.எம்., புதிய ஐ.ஐ.டி., புதிய
ஏ.ஐ.ஐ.எம்.எஸ். ஆகியவைகள் நாடு முழுவதும் நிறுவப்படுகின்றன. திறமைகளை வளர்ப்பதற்கு
ஸ்கில் டெவலெப்மெண்ட் மிஷன் சிறிய நகரங்களிலும் நிறுவப்படுகின்றன.
13 கோடி முத்ரா
கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 4 கோடிப் பேர்கள் புதியவர்கள். இதன் மூலம் சுய வேலை
நிறுவனங்கள் அமைவதுடன், அதன் மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும். டிஜிடல் இந்தியா, பல
பொது சேவை மையங்கள் ஆகியவைகளை சுமார் 3 லட்சம் கிராமத்து இளம் பெண்கள் - ஆண்கள் நிர்வகிக்கும்
நிலை உருவாகி உள்ளது.
தூய்மை இந்தியா
திட்டத்தை – முதலில் பலரும் கிண்டல் செய்துள்ளனர் – இப்போது உலக சுகாதார மையம் பாராட்டி
உள்ளது.
முஸ்லீம் பெண்கள்
முத்தலாக் மூலம் பல யுகங்களாக இன்னல்களை அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களின்
துன்பங்களை களைய முத்தலாக் முறையை தடை செய்ய சில எதிர் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டாலும்,
முத்தலாக் நிச்சயமாக தடை செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
இந்த அரசு மிகப்
பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை பண்டிட் தீன தயாள் உபாத்தியாயாவின் பிறந்த தினமான
25-09-2018 அன்று இந்திய நாடு முழுதும் உள்ள அனைத்து ஏழை மக்களுக்குப் பயன்படும் விதமாக
செயல்படுத்த உள்ளது. அனைத்து ஏழையும் மருத்துவ உதவி பெற வைக்கச் செய்யும் செயல் திட்டம்
தான் இது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் 5 லட்சம் காப்பீட்டு தொகை பெறுவர்.
இதில் இரண்டு திட்டங்கள்:
1. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான் 2. ஆயுஷ்மான் பாரத் யோஜனா.
இதன் மூலம் 10
கோடி குடும்பங்கள் பயன் பெறுவர். ஒரு குடும்பத்தில் சுமார் 5 பேர்கள் வீதம், இதன் மூலம்
பயன்பெருபவரின் எண்ணிக்கை: 50 கோடியாகும். இந்த திட்டம் மின் வழித் திட்டம் என்பதால்,
இதில் இடைத் தரகர்கள் இருக்க மாட்டார்கள். இதில் எந்தவிதமான ஊழலுக்கும் வழி விடாமல்,
செயல்பட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின்
முழு அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 50 கோடி மக்கள் பயன் அடையும் திட்டம் என்றால்
அதன் பரிணாமம் என்ன? அமெரிக்கா, கன்னடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் ஜனத் தொகைக்கு
ஈடு தான் இந்த திட்டத்தின் பயனாளிகள். அதேபோல், ஐரோப்பாவின் மொத்த ஜனத்தொகைக்கும் இந்த
பயனாளிகளின் எண்ணிக்கை சமமாகும்.
அனைவருக்கும் வீடு,
அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் காஸ் அடுப்பு, அனைவருக்கும் குடிநீர், அனைவருக்கும்
சுகாதாரம், அனைவருக்கும் தொழில் திறன், அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை, அனைவருக்கும்
தொடர்பு கருவி – ஆகியவைகள் தான் அரசின் நோக்கமாகும்.
இந்தியா முன்னேற
வேண்டும். ஊட்டச் சத்தின்மையை போக்க வேண்டும். நோயற்ற சிறந்த வாழ்வை இந்திய மக்கள்
அடைய வேண்டும். நான் இவைகளை எல்லாம் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என்று துடிக்கிறேன்.
ஜெய் ஹிந்த்! பாரத
மாதாக்கி ஜே! வந்தே மாதரம்!
Comments