தமிழ் நாட்டு புதிய அரசியல் கட்சிகளின் நிலைப் பாடு



திண்ணைக் கச்சேரி

பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

பொதுஜனம்: தமிழ் நாட்டில் இருக்கும் சுமார் 50 கட்சிகள் – இவைகளில் பல லெட்டர் பேடு கட்சிகள் - போறாதென்று, கமல் –  தினகரன் ஆகியவர்கள் புதிதாக கட்சிகள் ஆரம்பித்து விட்டார்கள். கமல் – மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டி கொடியையும் அறிமுகம் செய்து, களத்தில் இறங்கி விட்டார். தினகரன் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டி, கொடியையும் அறிமுகம் செய்து களத்தில் இறங்கி விட்டார். கமல் – தினகரன் இருவரும் மதுரை – மதுரைக்கு மிக அருகில் உள்ள மேலூர் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டி தங்கள் அரசியல் பயணங்களைத் தொடங்கி விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆன்மீக அரசியல் என்னுடையது என்று அறிவித்து, தனது கட்சி – கொடி – கொள்கை ஆகியவைகளை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க உள்ளார்.


நிருபர்: ‘அம்மா ஆட்சியை அளிப்போம். போலி அம்மா விஸ்வாசிகளை வேரோடு அழிப்போம்’. – என்பது தான் தினகரன் கொள்கையாகத் தெரிகிறது. அ.தி.மு.க.வும் ‘அம்மா ஆட்சியைத்தான் அளித்துக் கொண்டிருக்கிறோம். அம்மா ஒதுக்கித் தள்ளிய கூட்டத்தை ஆட்சிக்கட்டிலில் அமர விடமாட்டோம். சசிகலா கூட்டத்தை அம்மா ஆதரவாளர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்’ என்று இப்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கும் எடப்பாடி – பன்னீர் செல்வம் கோஷ்டிகள் சொல்கின்றனர். அம்மா அம்மா என்று பல குரல்கள் ஒலிக்கும் போது மக்கள் குழப்பித்தான் போகிறார்கள்.

விமரிசகர்: கமல் தமது கொள்கை எது என்பதில் ஒரு தெளிவு இருபதாகத் தெரிய வில்லை. நான் தலைவன் இல்லை; தொண்டன் – என்று கூறுபவர், மக்கள் சொல் தான் கொள்கை மந்திரம் என்று விளக்குகிறார். நான் விதை என்கிறார். விதை மணக்காது. அதை நிலத்தில் ஊன்றி விதைத்தால், பூ வரும். அது மணக்கும் – என்று சொல்கிறார். என் கட்சியில் சால்வை போர்த்தும் வழக்கம் கிடையாது. என்னையே போர்த்துவேன் – என்று கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் கமல். பெண் மக்கள் ஜாக்கிரதை என்று சிலர் கிசு – கிசுக்கிறார்கள். மக்கள் தான் காசு போட்டு, கட்சியை வளர்க்க வேண்டும் என்றும் கமல் அருளுரை வழங்குகிறார். ‘ஓட்டுக்குப் பைசா கொடுக்க மாட்டேன். இலவசம் என் கட்சி அறிவிக்காது, வழங்காது. வாங்கும் சக்தியை வழங்கும்’ என்றும் கூறியுள்ளார். 

பொதுஜனம்: என்னை மணக்கச் செய்வது, மலரச் செய்வது, கனியச் செய்வது எல்லாம் மக்களாகிய நீங்கள் தான் என்று கமல் விளக்குகிறார். விதையான என்னை மண்ணில் புதையுங்கள், தண்ணீர் விடுங்கள், உரம் போடுங்கள் – காத்திருங்கள், பலன் உண்டு – என்று சினிமா வசனம் பேசுகிறார். கட்சி ஆரம்பிக்கும் போதே, இவர் மண்ணில் புதையுண்டு விடுவாரோ? – என்று கமல் ரசிகர்களே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

வாசகர்: கமல் பேசுவது தமிழ் தான். ஆனால் தமிழ் மக்களுக்கு அது புரியாது என்று தான் படுகிறது. புரியக் கூடாது என்பது தான் கமலின் கருத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. எல்லாம் மக்கள் தான். நீங்கள் தான் எல்லாம். ஊழல் செய்வோர்கள் யாராக இருப்பினும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நான் ஊழல் செய்தாலும், நானே என்னைத் தண்டிப்பேன். – என்றெல்லாம் அவ்வப்போது மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்துகிறார். நான் பல வர்ணத்தான். வெள்ளை, கருப்பு, சிவப்பு எல்லாம் தான். என் கொடியில் இல்லாத பச்சையும் எனக்கு உடந்தை தான் என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தான் நம்பத் தோன்றுகிறது. விஸ்வரூப பயத்தினால் பச்சையைக் கொடியில் காட்ட வில்லையோ கமல் என்று சிலர் முனு முனுக்கின்றனர். ஆனால் காவிக் கலருக்கு நான் அன்னியன் என்று பகிரங்கமாக விளக்கம் அளிக்கும் கமல், வருங்காலத்தில் காவியுடன் கூட்டணி இருக்காது என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியாது என்றும் விளக்குகிறார்.

பொதுஜனம்: இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால், கமல் தம்மை முழுநேர அரசியல் வாதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், பத்திரிகைச் செய்தி ஒன்று ‘கமல் நயன்தாரா நடிகையுடன் ஒரு சினிமாவில் நடிக்கப் போகிறார்’ என்று சொல்கிறது. ரஜினியும் இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

நிருபர்: ரஜினி காவிக்கு நண்பன். ஆன்மீக வாதி. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வெளிப்படையாகக் கூறுபவர். ஆனால் கமல் தான் காவி-கமண்டலத்திற்கு எதிரி. நாஸ்திகன். கருப்புத் திராவிடன் – சிவப்பு கம்யூனிஸ்ட் – பச்சைக்கு நண்பன் - வெள்ளையான நாளை ஆட்சி நமதே – என்று கமல் சொல்வதுடன், மாணவர்கள் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். அவர்களுக்கான களம் தான் – மக்கள் நீதி மய்யம் – என்று விளக்கம் தருகிறார். கொடி களவாடிய கொடி, மய்யம் இலக்கணத் தவறு – என்று ஒரு பக்கத்தில் கமலுக்கு எதிர்ப்பு வந்தாலும், எல்லாம் மக்கள் மன்றம் தீர்க்கும் என்று கமல் மார்தட்டுகிறார். தமிழ் நாட்டின் இரண்டு நடிகர்கள் இப்படி எதிரும் புதிருமாக கட்சியை நடத்த களம் காண்கிறார்கள். அவர்களை தமிழ் மக்கள் எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்பது தேர்தலின் போது தான் தெரியவரும்.

விமரிசகர்: கமல் எம்.ஜி.அர். போல் சிவப்பு. ரஜினி காமராஜ் போல் கருப்பு. கமல் மய்யம் என்று சொல்லி, திராவிடம் – கம்யூனிசம் – பெரியாரிசம் ஆகியவைகளின் கொள்கைகளின் மய்யம் தான் தன் கட்சி என்று சொல்வதாகப் படுகிறது. ஆனால் தமிழ் தான் – தமிழ் மக்கள் தான் தன் கட்சியின் முக்கிய பங்குதாரர்கள் என்று சொல்வதால் திராவிடம் அடி பட்டுப் போகிறது. கம்யூனிசம் கேரளாவை நீக்கி, மற்ற மாநிலத்தில் அதனால் காலூன்ற முடியவில்லை. பெரியாரிசம் தமிழ் நாட்டில் பெயரளவுக்கு இருந்தாலும், பக்கத்து மாநிலங்களில் அம்பேத்கர் அந்த இடத்தை எப்போதோ பிடித்து விட்டார். சினிமா வசனம் – வார்த்தை ஜாலங்கள் இந்த 21-வது நூற்றாண்டில் செல்லுபடியாகாது என்பதை கமல் சீக்கிரம் உணர்வார் என்று தான் படுகிறது.

பொதுஜனம்: மக்கள் மக்கள் என்று தான் தேர்தலின் போது கட்சிகள் சொல்லும். ஆனால், உண்மையில் அதில் பதவி ஆசையும், புகழ் ஆசையும் தான் நிரம்பி இருக்கும். இதில் ரஜினியை நம்பலாம் என்று தான் படுகிறது. அவருக்கும் ரசிகர் கூட்டம் அதிகம் இருக்கிறது. தமிழ் நாட்டின் இந்தக் குழப்பமான சூழ்நிலையில் – தினகரனின் தில்லு முல்லுகளுக்கு முட்டுக் கட்டை போடும் – துணிவு ரஜினிக்குத்தான் அதிகம் உண்டு. ஏனென்றால், ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக - ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போட்டால், தமிழ் நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது – என்று குரல் கொடுத்து தோற்கடித்தவர். அப்படிப்பட்ட ஒரு தைரியசாலியைத் தேர்வு செய்து, ரஜினியின் ஆட்சி எப்படி என்பதை அறிந்து கொள்ள முயலுவதில் தவறில்லை என்று தான் படுகிறது.

நிருபர்: ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் நாட்டு மக்கள் பல முறை ஏமாந்து உள்ளார்கள். இலவசம், காசு வாங்கி ஓட்டு, ஜாதி மனப்பான்மை, இடஒதிக்கீடு முறை ஆகியவைகள் அனைத்தும் நேர்மையான ஆட்சி அமைய தடங்கலாக இருக்கின்றன. இதையும் மீறி ரஜினி ஜெயித்து ஆட்சிக்கு வந்தால், அது நல்லாட்சியாக – கருப்பு கமராஜர் ஆட்சியாக இருப்பின், அதுவே தமிழகத்தில் விடிவெள்ளி என்றே கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017