24 / 7 – மணி நேர மோடி எதிர்ப்பாளர்கள்

24/7 மணி நேர மோடி எதிர்ப்பாளர்களின் மனம் கொஞ்சம் சந்தோஷப்பட வைத்துள்ளது தற்போது உ.பி. மற்றும் பீஹார் மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள். இதில் உ.பி.யில் இரண்டு எம்.பி. தொகுதிகளான கோரக்பூர் – புல்பூர் ஆகிவற்றுடன், பிஹார் ஆராரியா எம்.பி. தொகுதி என மூன்று தொகுதிகளிலும், ஜெகனாபாட் என்ற பீஹார் மாநில எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் பி.ஜே.பி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. பி.ஜே.பி. பிஹார் எம்.எல்.ஏ. தொகுதியான பாபுவாவில் மட்டும் தான் வென்றுள்ளது. ஐந்தில் ஒன்று என்ற அளவில் பி.ஜே.பி.யின் நான்கு தொகுதிகளின் தோல்வி பி.ஜே.பி.க்கு பின்னடைவு தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

இதில் உ.பி. கோரக்பூர் எம்.பி. தொகுதி யோகி ஆதித்யநாத் 1998-லிருந்து 2017-வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்று தக்க வைத்துள்ள தொகுதியாகும். புல்பூர் தொகுதியில் தற்போதைய ஆதித்யநாத் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுர்யா முன்பு அந்தத் தொகுதியில் ஜெயித்துள்ளார். அந்த இரண்டு தொகுதியிலும் சமஜ்வாதி கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

கோரக்பூரில் 22,000 வாக்கு வித்தியாசத்திலும், புல்பூரில் 60,000 வாக்கு வித்தியாசத்திலும் வென்றுள்ளது சாதாரண வெற்றி அல்ல. மாயாவதி கட்சி சமஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. குறைந்த ஓட்டுப் பதிவும் மேலும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காரணம் எதுவாக இருப்பினும், இது பி.ஜே.பி.க்கு – அதிலும் குறிப்பாக யோகி ஆதித்யநாத்திற்கு ஒரு பெரும் அதிர்ச்சித் தோல்வி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டதைப் பற்றி அந்தக் கட்சி கவலைப் படாமல், ‘பி.ஜே,.பி. தோல்வி எங்களின் வெற்றி’ என்ற மன நிலையில் இருப்பதாகவே படுகிறது.

சமீபத்தில் முன்பு நடந்த மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. காங்கிரசிடம் தோற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முங்கோலி மற்றும் கோலாரஸ் – ராஜஸ்தானில் ஆஜ்மீர், ஆல்வார் மற்றும் மண்டல்கார் ஆகிய 5 எம்.எல்.ஏ.தொகுதிகளில் தோல்வியை பி.ஜே.பி. தழுவி உள்ளது. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் ஜெயிக்கும் என்ற பொதுவான கருத்திற்கும் இது மாறாக அமைந்து விட்டது கவலை அளிக்கும் செய்தியாகும்.

மேலும், பிஹார் தேர்தல் முடிவுகளினால், நிதிஷ் குமார் நிலை தடுமாறாமல் இருப்பின் அது வருகின்ற 2019 லோக் சபா தேர்தலுக்கு பி.ஜே.பி.க்கு அனுகூலமாக இருக்கும். நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக மாட்டார் என்று தான் படுகிறது.

தற்போது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது. மேலும் Federal Front -  என்ற புதிய மஹா கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர் பல எதிர்க் கட்சித் தலைவர்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் சந்திரபாபு நாயுடு, மம்தா, அகிலேஷ், சந்திரசேகர் ராவ், உத்தவ் பால் கேசவ் தாக்கரே ஆகியவர்களாகும். ஆனால் காங்கிரஸை பலரும் ஓரம் கட்டி தங்களுடன் சேர்த்துக் கொண்டு மோடியை எதிர்க்க இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரத் தயங்குவதாகவே படுகிறது.

சமீபத்தில் நடந்த மூன்று சட்டசபைகளான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய தேர்தல்களில் பி.ஜே.பி. சரித்திரம் படைத்ததை இந்த 24/7 – கூட்டங்கள் மறந்து இந்த இடைத்தேர்தலில் பி.ஜே.பி.யின் தோல்வியைக் கொண்டாடு கின்றனர். புதிய கூட்டணி அமைக்கும் யூகங்களும், பேச்சு வார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பி.ஜே.பி. தன் காய்களையும் மிகவும் ஜாக்கிரதையாக நகர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மோடி பிரதம மந்திரி வேட்பாளராக அறிவித்த நாளிலிருந்தே இந்த 24/7 படைகள், மோடி பிரதம மந்திரியாக முடியவே முடியாது. அப்படியே அவர் பிரதமரானால், நாங்கள் இந்தியாவில் இருக்க மாட்டோம் என்று சொல்லியவர்கள் தான். பிறகு, மோடியை ஐந்து ஆண்டுகள் ஆள விட மாட்டோம் என்று தங்களால் முடிந்த மட்டும் அவதூறு பரப்பினார்கள். ஆனால் மக்களின் மோடி நம்பிக்கையை அந்த ‘துக்கடே துக்கடே’ கூட்டங்கள் தகர்க்க முடியவில்லை. இப்போது, ‘மோடியை 2019 தேர்தலில் தோற்கடிப்போம். பி.ஜே.பி.யை பெரும்பான்மை பெற விட மாட்டோம்’ என்று புதிய புதிய கூட்டணிக்கு கூடிப் பேசுகிறார்கள்.

மோடி அப்படி என்ன தான் தவறு செய்து விட்டார்? – என்பதற்கு அந்த தேச விரோத சக்திகளிடம் எந்தவிதமான விளக்கமும் இல்லை. அனைத்தும் தூஷணைகளாகவே இருக்கிறது.

உலக நாடுகள் மோடியைப் பாராட்டுகின்றன. பல பொருளாதார அறிக்கைகள் மோடியின் சாதனையை ஏற்றுக் கொண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டால், அவைகள் நம்மைப் பெருமைப் படவைக்கும்.

இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் மோடியின் ஆட்சி இருந்தால், இந்தியா முன்னேறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம், பி.ஜே.பி. பெரும்பான்மை பெறக்கூடாது என்றே கூறுகிறார்கள். ஏனென்றால், அவர்களின் எந்த ஒரு கட்சியும் அகில இந்திய அளவில் எம்.பி.க்களை நிறுத்தி, வெற்றி பெறச் செய்ய முடியாத நிலைதான் இப்போது உள்ளது. ஆகையால், அவர்கள் – மத்திய ஆட்சியில் குழப்பம் வந்தாலும் பரவாயில்லை. மோடி மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது – என்ற கொள்கையை உடையவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால், மோடி தன்னை ஒரு ஹிந்துவாகவும், ஒரு தேசிய வாதியாகவும், ஒரு இந்தியனாகவும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதை இந்த சிக்குலர் – மனவியாதியால் அவதிப்படும் இவர்கள் – அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ விரும்பவில்லை. அதை மூர்க்கமாக எதிர்க்க முடிவெடுத்துள்ளார்கள். இதனால், நாட்டிற்கு நல்லதில்லை என்றாலும், அதை ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.

மோடியின் தற்போதைய வடகிழக்கு மாநில வெற்றி – திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய தேர்தல் வெற்றிகளைப் பற்றி சந்திரபாபு நாயுடு ‘திரவிட நாட்டின் வரிப்பணத்தை வளர்ச்சி என்ற போர்வையில் வாரியிறைத்து மோடி வெற்றி பெற்றது, நமக்குச் செய்யும் துரோகம்’ என்ற அளவில், இந்தியாவிலிருந்து தென் மாநிலங்கள் பிரிந்து செல்லும் விஷ விதையினை விதைப்பதாகத் தான் தெரிகிறது. திராவிட நாட்டுப் பிரிவினைக் கோஷம் தலைதூக்கினால், அது இந்தியாவிற்கு இழுக்கு என்பதுடன் அதனால் வேண்டாத அரசியல் போராட்டங்களும், இந்திய வளர்ச்சிக்குத் தடங்கலும் வர வாய்ப்புள்ளது. 

சமீபத்தில் கர்நாடகாவின் முதல் மந்திரி சித்தராமையா தனிக்கொடியை அறிமுகம் செய்து, தென் இந்தியாவில் ஒரு காஷ்மீரத்தை உருவாக்க முயற்சிக்கிறார். தேர்தலில் ஜெயிப்பதற்கு – பி.ஜே.பி.யைத் தோற்கடிப்பதற்கு தேச விரோதச் செயல் செய்வதற்கும் காங்கிரஸ் கட்சி துணிந்து விட்டதாகவே படுகிறது.

அதற்கு தென் இந்திய மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது. தேசியக் கட்சியான காங்கிரஸே இதில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.  

நடக்க இருக்கும் மாநிலைத் தேர்தல்களான - கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகியவைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். ஏனென்றால், இந்த மாநிலங்களில் பி.ஜே.பி. காங்கிரசுடன் நேரடியாக மோதவிருக்கிறது.

இதில் அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி. வென்றால் தான் 2019 எம்.பி. தேர்தல்களை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஆகையால் மோடி – அமித்ஷா இருவரும் 24/7 என்ற அளவில் உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

புதிய கூட்டணைகளையும், புதிய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும். அத்துடன் வளர்ச்சித் திட்டங்களையும், வேலை வாய்ப்புத் தரும் முதலீடுகளையும், ஏழை எளியோருக்கு உதவும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

இந்திய வாக்காளர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்பது தான் நமது நம்பிக்கை.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017