தேசிய பத்திரிகை நாள் – 16-11-2017
துக்ளப் பத்திரிகையில்
அதன் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி – ‘பத்திரிகை உலகில் நடுநிலை, சுதந்திரம், துணிச்சல்
– எது முக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியதைப் படித்ததின் தாக்கத்தில் இந்த
கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஒரு பத்திரிகைக்கு
சுதந்திரமான சிந்தனை அவசியம். அந்த சிந்தனை கட்டுரையாக வெளியிடுவதற்கு துணிச்சல் அதைவிட
அவசியம். இதை விடுத்து, நடுநிலை என்று முடிவெடுத்து பிரச்சனையிலிருந்து ஒதுங்கி இருப்பது
மிகவும் கேவலமாகும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிகையின் அதிபர் ராம்நாத் கோயங்கா காங்கிரஸ் அபிமானியாக இருந்த சமயம். இருப்பினும்,
அவர் சுதந்திரமான சிந்தனையுடன், துணிச்சலாக தம் கருத்தை எந்த உயர் பதவியில் இருப்பவர்களிடம்
நேரடியாக எந்தவிதமான தயக்கமோ, ஒளிவு மறைவோ இல்லாமல் வெளியிடும் தீரமும் கொண்டவர்.
1969-ல் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தி உடைத்த போது, அவரைச் சந்தித்து, ‘நீங்கள்
செய்தது மாபெரும் தவறு’ என்று கோயங்கா கூறியதற்கு, இந்திரா காந்தி அவரிடம் ‘நீங்கள்
என்னுடைய நண்பரா, எதிரியா?’ என்றதற்கு, ‘அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று
பதில் உரைத்துள்ளார். இது தான் சுதந்திரமான சிந்தனைக்கும், துணிச்சலுக்கும் உதாரணமாகும்.
அந்த நேரத்தில் கோயங்கா ‘நமகேன் வம்பு. நமது பத்திரிகை நடத்துவதில் சிரமம் ஏற்படும்,
ஆகையால் நடுநிலைமையை ஏற்போம்’ என்று கோழையாகச் செயல்படவில்லை. அது தான் உண்மையான பத்திரிகை
தர்மம் என்பதை உலக்த்திற்கு எடுத்துக்காட்டி வாழ்ந்த உத்தமர் என்றால் மிகையாகாது.
பத்திரிகை உலகில்
சுதந்திரம், துணிச்சல் ஆகியவைகள் எவ்வளவு அவசியமோ அதை விட ஒரு படி மேல் உச்ச நீதிமன்றத்திற்கு
இருக்க வேண்டும். ஆனால், இந்திரா காந்தியின் எமர்ஜென்சியின் போது உச்ச நீதிமன்றம் இந்தியாவே
தலைகுனியும் அளவில் நடந்து கொண்டது உச்ச கட்ட வேதனை தரும் வெட்கப்படத் தக்க செயலாகும்.
தேசிய கீதம் பாடல்
பற்றிய உச்ச நீதிமன்றத்தின் மாறுபட்ட கருத்துக்களைக் கூறும் நீதிபதி சந்திரசூட்டின்
அப்பா சந்திரசூட் தான், ‘எமெர்ஜென்ஸி காலத்தில் மக்கள் உரிமை பறிக்கப்பட்டு அநியாயங்கள்
நடக்கிறது என்று கூறுவதே தவறு. அது போல் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை’ என்று கூறி,
‘அப்படிப் பேசுகிறவர்களுக்கும் நம் நாட்டு வைரம் போன்ற எதிர்காலம் இருக்கிறது’ என்று
உறுதியளித்து,
‘ஆயிரக்கணக்கானவர்களை காரணம் இன்றிச் சிறையில் அடைத்தது அரசியல் சாசனப்படி
சரி’ என்றும், ‘சரியல்ல என்று 14 உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பு தான் சரியில்லை’
என்றும் மேலும் நான்கு நீதிபதிகளுடன் சேர்ந்து தீர்ப்பளித்தார். அதை எதிர்த்த ஒரே உச்சமன்ற
நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா ஆவார். இந்தத் தீர்ப்பு தவறு என்று இப்போது 40 ஆண்டுகளுக்குப்
பிறகு, அவர் மகனான இப்போதையை நீதிபதி சந்திரசூட் மற்ற 10 நீதிபதிகளுடன் சேர்ந்து,
‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானது அல்ல’ என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்தச் செயல் நீதியின்
நேர்மையையும், சுதந்திரமான சிந்தனையையும், துணிவையும் சந்தேகிக்க வைத்து, நீதிபதிகள்
அப்போதைய அரசாங்க அரசியல் வாதிகளின் பொம்மைகள் போல் இருந்திருக்கிறார்கள் என்ற அவல
நிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
எமர்ஜென்ஸியின்
போது அரசாங்கத்திற்குப் பயந்து, சுதந்திரத்தை இழந்து, துணிச்சலை மூட்டை கட்டி வைத்து,
உச்சமன்ற நீதி மன்றம் இந்தியாவின் நேர்மையை குழிதோண்டிப் புதைத்ததை சரித்திரத்தின்
கருப்புப் பக்கங்களாகவே கருத வேண்டும். இனியும் அந்த கருப்புக்கள் தலைகாட்டாமல் இருக்க,
உச்சநீதிமன்றம் சுதந்திரத்துடனும், துணிச்சலுடனும், நேர்மையுடனும், அரசியல் சாசனத்தின்
தூய வாசகங்களில் மாசுபடியாமல், மக்களுக்குத் துணை நின்று, சத்தியத்தையும், தர்மத்தையும்
காக்க வேண்டும்.
சத்தியமேவ ஜெயதே
என்பது தான் நீதியின் இதய ஒலியாகத் திகழவேண்டும்.
Comments