கருப்புப் பண பூதத்தின் விஸ்வரூபம்


(இந்த கட்டுரை 2011 ஆண்டு மார்ச் மாதம் எழுதியது என்பதை வாசகர்கள் மனத்தில் கொண்டு படிக்க வேண்டுகிறேன். தற்போதையை மோடி அரசு இந்தக் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. அதில் வெற்றி அடைந்தால் இந்தியாவில் இருக்கும் கருப்பு முதலைகளுக்குப் பாடமாகவும், இனியும் கருப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு அச்சமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காலம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். - ஆசிரியர்)

சுவிட்சர்லாந்து வங்கிகள், லிக்டென்ஸ்டெயின் நாட்டு வங்கிகள், அண்டோரா நாட்டு வங்கிகள், மோனோக்கோ நாட்டு வங்கிகள் தான் நமது இந்தியாவின் கருப்புப் பணம் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய வங்கிகளாகும். மொரிசியஸ் மற்றும் சில ஆசியத் தீவிகளில் உள்ள மற்ற சில வங்கிகளும் உண்டு. இதில் சுவிட்ட்ர்லாந்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மட்டும் 1500 பில்லியன் டாலர். அப்படி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை அந்த வங்கி இந்திய அரசாங்கம் முறையாகக் கேட்டால், கொடுக்கத் தயார் என்று சொல்லியும் நமது மத்திய அரசாங்கம் மெளனம் சாதிக்கிறது.

1500 பில்லியன் டாலர் என்றால் அதன் பரிணாமத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அது 1500 என்ற எண்ணிற்குப் பிறகு 9 பூஜ்யம் கொண்ட எண்ணாகும். ஒரு டாலர் என்பது சுமார் 45 ரூபாய் மதிப்புக் கொண்டதாகும். அப்படி என்றால் அந்த டாலர் ரூபாயாக மாற்றப்படும் பொழுது 67500 பத்து கோடி ரூபாயாக இருக்கும். ஆதாவது, இது சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.  7 எண்ணுக்குப் பக்கத்தில் 12 பூஜ்யங்கள் போடவேண்டும். மேலும் அறிய கீழ்க்கண்ட புள்ளி விவரத்தைக் கொஞ்சம் கூர்ந்து படித்து உள்வாங்க உங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்:

·         $ 1500 பில்லியன் டாலர் என்ற இந்தத் தொகையானது நமது அந்நியக் கடனைவிட 13 பங்கு அதிகமாகும். அதாவது, நாம் அந்த அந்நியக் கடனை இந்தக் கருப்புப் பணத்தினால், உடனே அடைத்து, மிச்சம் இருக்கும் 12 பங்கு பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், அதில் கிடைக்கும் வட்டியிலேயே நமது மத்திய அரசின் முழுவதுமான பட்ஜட் வரிகளைப் பெற்று விடலாம். வரியில்லா பட்ஜெட் என்பது வருடா வருடம் கொண்டு வரலாம்.

·         12 பங்கு மூலதனப் பணத்தைக் கொண்டு, நமது நாட்டின் அனைத்து நதிகளையும் ஒருங்கிணைத்து விடலாம்.

ஏதோ இது இந்தியாவிற்கு ஏற்பட்ட பிரச்சனையா என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். மற்ற நாடுகளின் கருப்புப் பணத்தையும், நம் நாட்டு மக்களின் கருப்புப் பணத்தையும் ஒப்பிட்டால், கருப்புப் பணத்திற்கு ஒரு ஒலிம்பிக் போட்டி வைத்தால், அதில் தங்கம் வாங்கும் நாடு நமது நாடாகத்தான் இருக்கும்.

இதோ அதன் விவரம்:

இந்தியாவின் கருப்புப் பணம் - $ 1500 பில்லியன்
ரஷ்யாவின் கருப்புப் பணம்  -  $ 500 பில்லியன்
யு.கே.யின் கருப்புப் பணம்  -   $ 400 பில்லியன்
உக்ரைனின் கருப்புப் பணம் -  $ 100 பில்லியன்
சீனாவின் கருப்புப் பணம்  -    $ 100 பில்லியன்

(இது சுவிட்சர்லாந்து வங்கியில் போடப்பட்ட கருப்புப் பணம் மட்டுமே. அது அந்த வங்கியே வெளியிட்ட அறிக்கையாகும்.)

நம் நாட்டினர் தான் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களில் முன்னிலை வகிக்கிறார்கள். இந்தியர்கள் ரஷ்யர்களைவிட 3 பங்கு அதிக அளவில் கருப்புப் பணத்தை அந்நிய வங்கியில் முடக்கி வைத்திருக்கின்றனர்.
யார் இந்த இந்தியாவின் கருப்பு முதலைகள்? என்ற கேள்வி எழலாம். அந்தப் பேர்வழிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை என்று இந்தியாவின் வளர்ச்சியில் உண்மையான அக்கரை கொண்ட பொருளாதார வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். 80,000 பேர்கள் சுவிட்சர்லாந்துக்கு இந்தியாவிலிருந்து செல்லுகிறார்கள். அவர்களில் அடிக்கடி போகும் நபர்களைக் கண்காணித்தாலே போதும் என்று சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஏமாற்றும் தொழில் அதிபர்கள், ஊழல் அரசியல் வாதிகள், ஊழல் அரசாங்க ஊழியர்கள், சினிமா நடிகர்கள், பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடித் தொழில் செய்யும் நபர்கள் இப்படிப் பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இப்பொழுது அந்த வங்கியே பெயர் பட்டியலைக் கொடுக்கத் தயாராகி விட்டது. நமது அரசாங்கம் தான் இதைப் பயன்படுத்தி, அந்தக் கருப்புப் பணத்தை உடனே நம் நாட்டிற்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

இந்தக் கருப்புப் பணத்தைப் பற்றி, உச்ச நீதி மன்றம் அரசாங்கத்தைச் சாடியது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று கருதுகிறேன்: இந்தக் கருப்புப் பணத்தை ஏதோ வரி ஏய்ப்புப் பணமாகப் பார்க்காமல், ஏமாற்றி படுமோசம் செய்த குற்றமாகப் பாவிக்க வேண்டும். முழுப் பணத்தையும் அபரிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன், அந்தப் பேர்வழிகளுக்கும் தகுந்தபடி தண்டனை வழங்கப்படவேண்டும்.
உச்ச நீதிமன்றம் தான் நமது ஜனநாயகத்தைக் காப்பாற்ற குரல் கொடுக்கிறது. ‘அது எல்லை மீறிச் செயல்படுகிறது என்ற குற்றச் சாட்டு, அரசியல் வாதிகளிடையே எழுந்தால், அதை மக்கள் விழுப்புடன் இருந்து, அதை வன்மையாக எதிர்த்து, நாட்டின் நலனில் உள்ள நம் அக்கறையை உரக்க வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் கடமையாகும்.  

மக்கள் விழுப்புடன் செயல் படவேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அந்தக் கடமையை நாம் மறக்காமல் செய்து முடிவெடுப்போம்.
வீழ்த்த வேண்டியர்களை வீழ்த்துவதில் எந்த தயக்கமோ, கருணையோ காட்டக் கூடாது. அப்பொழுதான், நாட்டிற்கும் நமக்கும் விடியல் வரும்.


சத்தியமேவ ஜயதே! ஜெய் ஹிந்த்!

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017