இலக்கியம் - ஆக்கியோன்: ஜயந்திநாதன்

'சிருஷ்டிக்கப் பட்டதெல்லாம் அழியும்.'

'சிருஷ்டிக்கப் பட்ட பல அழிகின்றதினால், எல்லாமே அழியும் என்பது அறிவாகாது, உண்மையுமன்று.'

'பின், சிருஷ்டிக்கப்பட்டதில் அழியாத ஒன்றையாவது சொல், பார்க்கலாம்!'

'இலக்கியம்!'

'மனிதனுக்கே அழிவிருக்கும் பொழுது, அவனால்-அவனது அழியும் கைகளினால் படைக்கப் பட்ட இலக்கியமும் அழியாமல் எப்படி நிலைத்திருக்க முடியும்?'

'இலக்கியம் மனிதனுடைய கைகளினால் படைக்கப்பட்டதல்ல, என்னருமை நண்பனே! அது அவர்களின் அழியாத ஊற்றாகிய உள்ளத்திலிருந்து பிறந்த அழியாக் கருவூலங்கள்!'

'தானே அழியப்போகிறவன், அழியாப் பொருளைப் படைக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை!'

'சரி. உனக்குப் புரிவதாற்காக ஒரு உதாரணம் காட்டுகிறேன். ஒரு பெரும் தோட்டம். ஒருவன் களைத்து வருகிறான். சிறிது தூரத்திலே ஒரு மாமரம் தெரிகிறது. மிகுந்த ஏக்கத்துடனும், ஆர்வத்துடனும் அதை நாடி ஓடிச் செல்கிறான். மரம் அவனுக்கு தஞ்சமளிக்கிறது. மரத்தின் நிழல் அவனைத் தழுவிக்கொள்கிறது. தென்றல் காற்று குளுமையை அள்ளி வீசுகிறது.
அவன் மரத்தை அன்னாந்து பார்க்கிறான். ஒரு பழுத்த மாம்பழம் அவன் கண்களுக்குப் புலப்படுகிறது.

அவன் மெதுவாக மரத்தின்மீது ஏறி அப்பழத்தைப் பறிக்கிறான். பிறகு சாய்ந்து உட்காருவதற்கு வசதியான மரக்கிளையில் அமர்ந்து, அம்மாம்பழத்தைச் சாப்பிடுகிறான். 'ஆஹா! என்ன ருசி!' என்று உள்ளம் உருகுகிறான். பிறகு பழக்கொட்டையை எறிந்து விட்டுத் தன் பாதை வழியே செல்கிறான்.

அம்மாம்பழத்தின் ருசி அவன் உள்ளத்திலே ஆழப்பதிந்து விட்டது. வயிற்றுப் பசியை மாத்திரம் அப்பழம் நிரப்பவில்லை; அவன் உள்ளப்பசியையும் தணித்தது.

அம்மாம்பழம் அழிந்து போயிற்று. ஆனால் அம்மனிதனிடம் தன் அற்புதமான 'ருசி'யை அழியாத படி அவன் உள்ளத்துடன் கலக்கச் செய்து விட்டது.

ஆகையால் நண்பனே! அழியும் மாம்பழமும் அழியாத ருசியைப் படைக்க வல்லது.'

'ஆனால், அந்த ருசியும் அவன் உயிர் வாழும் வரைக்கும் தானே!'

'இல்லை. இல்லவே, இல்லை! வயிற்றுப் பசியை மட்டும் தணிக்கும் தன்மை பெற்றவைகள் அவன் உடலழியும் பொழுது அழிந்து விடுகின்றன. ஆனால், ருசியைப் படைக்கும் தன்மை வாய்ந்தவைகள் உள்ளத்துடன் கலந்து விடுகின்றன. உள்ளம் அழிவற்றது!'

'சரி. நீ சொல்வது உண்மை யென்றே வைத்துக் கொண்டாலும், மனிதர்கள் யாவரும் அழிந்து போகும் பொழுது இலக்கியமும் அழிந்துதானே ஆகவேண்டும்?'

'அது அழிவல்ல, மறைவு. மனிதர்களால் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டதுதானே இலக்கியம். ஆகையால், மனிதர்கள் இல்லாத இடத்தில் இலக்கியம் மறைந்து விடுகின்றது.'

'இலக்கியத்தின் அமரத்துவநிலையை இலக்கிய கர்த்தா அடையமுடியாதா?'

'அடையமுடியும். ஆனால், அது அவன் படைத்த இலக்கியத்தின் மூலமாகத்தான் இயலும். இலக்கியம் தான் மக்களுக்கு முக்கியம். என்றோ பிறந்த இலக்கியம் இன்றும் என்றும் நிலைத்து நிற்பதால் தான் இலக்கியம் அமரத்துவமானது! அழிவில்லாதது!' 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017