நான் ஏன் ஒரு நாஸ்திகவாதி? ஆக்கம்: பகத் சிங்
குறிப்பு: இந்தக் கட்டுரை 5-6, அக்டோபர் 1930 வாக்கில் எழுதப்பட்டது. தழுவலான மொழிபெயர்ப்பு: எஸ். சங்கரன்.
எனது நண்பர்களுடன் நிகழ்த்திய விவாதங்களின் மூலம் அவர்களில்
சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
‘என்னுடைய நாஸ்திகக் கொள்கை ஒரு முட்டாள் தனமானது. அது என்னுடைய பகட்டு தற்பெருமையின் மூலம் எழுந்த ஒன்றாகும்’ என்று ஒரு வகையான அவசர முடிவிற்கு அவர்கள் வந்து விட்டனர்.
இருப்பினும், அது மிகவும் முக்கியமாக
கவனிக்கப்பட வேண்டிய ஒரு குற்றச் சாட்டாகும். மேற்குறிப்பிட்ட
மனித குறைபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நான் ஒரு போதும் பெருமை கொள்ள மாட்டேன்.
நானும் ஒரு சராசரியான சாதாரண மனிதன் தான். என்னிடமும்
ஒரு பலவீனம் இருக்கிறது. அது தான் எனது கர்வம்.
என்னுடைய நண்பர்கள் மத்தியில் நான் ஒரு சர்வாதிகாரியாகக்
கருதப்படுகிறேன். சில சமயங்களில், நான் தற்பெருமை கொள்பவன் என்றும் என்னை குறை கூறுவார்கள். ‘நான் அதிகாரம் செய்பவன்; என்னுடைய அபிப்பிராயங்களை பிறரிடம்
திணிப்பவன்’ என்றும் சிலர் எப்போதும் என்னைக் குறைகூறுவார்கள்.
ஆமாம், இது ஒரு வகையில் உண்மைதான். இந்தக் குற்றச் சாட்டை நான் மறுக்க வில்லை.
ஆனால், இதை ‘வீண் டம்பமான தற்பெருமை’ என்று பெயரிடலாம். நமது சமூகத்தில் புறையோடியுள்ள வெறுக்கத்தக்க, அழுகலான
நம்பிக்கைகளைப் பொறுத்த அளவில், நான் ஒரு தீவிர எதிர்ப்பாளன்.
நான் என்னுடைய கருத்துக்கள் - என்னுடைய எண்ணங்கள்
ஆகியாவைகளில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
இதை வெற்று கர்வம் என்று சொல்ல முடியாது.
கர்வம் அல்லது தற்பெருமை - இவைகள் இரண்டும் ஒருவனைப்
பற்றிய மிகைப்படுத்திய மதிப்பீடாகும்.
என்னுடைய நாஸ்திகத்திற்குக் காரணம் என்ன?
என்னுடைய வேண்டாத கர்வமா அல்லது தீர்க்கமாக நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்து
எடுத்த என் முடிவா? இதைப் பற்றி எனது கருத்தினை உங்கள் முன் வைக்க
ஆசைப்படுகிறேன். முதன் முதலில், நாம் கர்வம்
- தற்பெருமை - இரண்டிற்கும் உள்ள வேறுபட்டை அறிந்து
கொள்ள முயலுவோம்.
ஆதாரமில்லாத கர்வமோ அல்லது வெற்று தற்பெருமையோ
கடவுள் நம்பிக்கைக்கு தடைக்கற்களாக எவ்வாறு ஒரு மனிதனுக்கு இருக்க முடியும்? செயற்கரிய செயல்கள் செய்யாமல் புகழ் அடைந்தவர்கள் அல்லது பெரும்
புகழ் அடைய அவசியமான அமானுஷ்யமான மன உறுதி இல்லாமல் இருப்பவர்கள் - ஆகியவர்களை பெரிய நபராக ஏற்றுக் கொள்ளவதை நான் எதிர்க்கிறேன்.
ஒருவரின் தற்பெருமை மூலம் மட்டுமே எவ்வாறு கடவுள் நம்பிக்கை
கொண்ட ஒருவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக மாற முடியும்? இரண்டு வழிகள் தான் நிகழும்:
ஒரு மனிதன் கடவுள் அருள் பெற்றவனாகத் தன்னைக் கருத வேண்டும் அல்லது இன்னும்
ஒரு படி மேலே சென்று தன்னையே கடவுளாக அறிவிக்க வேண்டும். இந்த
இரண்டு வகையான மன நிலைகளில், அந்த மனிதன் ஒரு நாஸ்திக வாதியாக
இருக்க முடியாது.
முதல் மன நிலையில், கடவுள் நம்பிக்கையை
முற்றிலும் நிராகரிக்க வில்லை. அடுத்த மன நிலையில், உலகம் சுழல்வதில் ஒரு விதமான அதீதமான சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளான்.
மனிதன் தன்னையே கடவுளாக நினைத்தாலும் அல்லது அவனுக்கும் மேலான ஒரு உண்மையான
சக்தியை கடவுள் என்று கருதினாலும் - இவ்விரண்டு நிலையிலும் நமது
விவாவத்திற்கு இந்த நிலைகள் ஊறு விளைவிக்கப்போவதில்லை.
ஏனென்றால், இந்த இரண்டு நிலையிலும்,
அவன் ஒரு ஆஸ்திகன் என்பதை அறியவும். ஆனால்,
நான் இந்த இரண்டு நிலைக்கும் அப்பாற்பட்டுள்ளேன். எங்கும் நிறைந்துள்ள, அனைத்து சக்தியுள்ள, எல்லாம் தெரிந்த குணங்களுள்ளதாகச் சொல்லப்படும் கடவுளை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
எதனால் இப்படி? இந்தக் கட்டுரையின்
பிற்பகுதியில் இதைப் பற்றி நான் விளக்கமாகச் சொல்கிறேன்.
ஏதோ அகந்தைக்காகவோஅல்லது
ஆணவத்தாலோ அல்லது தற்பெருமைக்காகவோ நான் நாஸ்திகனாக இருக்க வில்லை என்பதை நான் அறிவுறுத்த
விரும்புகிறேன். இந்த தருணத்தில் ஒரு உண்மையை நான்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
டெல்லி
குண்டு வீச்சு மற்றும் லாகூர் சதி வழக்கு ஆகியவற்றிற்குப் பிறகு,
எனது புகழ் விண்ணளாவிய அளவிற்குச் சென்றதால், நான்
தலைக்கனம் கொண்டு அலைய ஆரம்பித்து விட்டேன் என்று என்னுடைய சிநேகிதர்கள் சொல்ல ஆரம்பித்து
விட்டார்கள். ஆனால் இந்த அவர்களின் குற்றச் சாட்டு ஏன் உண்மை
இல்லை என்பதை நாம் சிறிது ஆராய்வோம். நான் கடவுள் நம்பிக்கையை
இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு தான் விட்டுவிட்டேன் என்பது உண்மை இல்லை.
நான் வெளி உலகத்திற்குத் தெரியாத சாதாரண மனிதனாக இருக்கும் போதே,
நான் ஒரு நாஸ்திகவாதியாகத் தான் இருந்தேன்.
எனது கல்லூரி நாட்களில் நான் என்னுடைய நம்பிக்கைகளில்
முழு நாஸ்திகனாக இருந்தேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நான் எனது
அப்பாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன். எனது அப்பாவோ ஆர்ய சமாஜின்
தீவிர பக்தர். ஒரு ஆர்ய சமாஜி ஒரு போதும் நாஸ்திகவாதியாக இருக்க
முடியாது.
என்னுடைய ஆரம்பக் கல்விக்குப் பிறகு நான் லாகூரில் உள்ள
டி.ஏ.வி. கல்லூரியில்
சேர்ந்தேன். ஒரு வருடம் ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன்.
காலையிலும், மாலையிலும் பிரார்த்தனைகளும் அங்கு
உண்டு. நான் பல மணி நேரங்கள் உட்கார்ந்து கொண்டு பிரார்த்தனை
கீதங்கள் பாடி இருக்கிறேன். மந்திரங்களை உச்சரித்திருக்கிறேன்.
அந்த காலங்களில், நான் தீவிர கடவுள் நம்பிக்கை
கொண்டவனாகத் தான் இருந்தேன். இந்த ஒரு வருட ஹாஸ்டல் வாழ்க்கைகுப்
பிறகு, நான் அப்பாவுடன் தங்கினேன். என்
அப்பா மத விஷயங்களில் மிகவும் அனுசரித்துப் போகக் கூடியவர்.
எல்லாவற்றையும் விட என் அப்பா தேச பக்தி மிகுந்தவர்.
அவரது போதனைகளால் தான், நமது அடிமை தேசம் விடுதலை
அடைய என்னுடைய வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டும் என்ற அவா எழுந்தது. ஆனால், என் அப்பா நாஸ்திகவாதி அல்ல. அவர் நம்பும் கடவுள் எங்கும் நிறைந்தவர். ஒவ்வொரு நாளும்
தவறாது கடவுளுக்குப் பிரார்த்தனை செய்யுமாறு எனக்குப் போதிப்பார். இந்தச் சூழ்நிலையில் தான் நான் வளர்க்கப்பட்டேன். சுதந்திரப்போராட்டமான
ஒத்துழையாமை இயக்கம் பரவி இருந்த அந்த கால கட்டத்தில் தான் நான் நேஷனல் கல்லூரியில்
சேர்ந்தேன்.
அந்தக் கல்லூரி நாட்களில் தான் மதங்களைப் பற்றிய விவாதங்களில்
நான் ஈடுபட்டு சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது நான் கடவுள்
இருக்கிறார் என்ற நம்பிக்கையில் சந்தேகமும், அவநம்பிக்கையும்
கொள்ள ஆரம்பித்தேன். இருப்பினும், அப்போதும்
என்னுடைய கடவுள் நம்பிக்கை திடமாகவும், ஆழமாகவும் இருந்தது என்று
நான் சொல்ல முடியும். நான் கடவுள் - மத
நம்பிக்கையின் காரணமாக, சீக்கியர்களின் மதத்தின் படி நீண்ட முடியினையும்
நான் வளர்த்துக் கொண்டிருந்தேன். இந்த என் வெளிப்படையான காரியங்களால்,
சீக்கிய மதம் அல்லது வேறு பிற மதங்களின் கொள்கைகளின் முக்கியம் பற்றி
என்னால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. இருப்பினும், அந்த நாட்களில் கடவுள் நம்பிக்கை என்னிடம் அசைக்க முடியாது குடிகொண்டிருந்தது.
பிறகு நான் புரட்சிக் கட்சியில் சேர்ந்தேன்.
அதில் நான் சந்தித்த முதல் புரட்சித் தலைவர் கூட தம்மை ஒரு நாஸ்திகவாதியாக
பிரகடணம் செய்யும் துணிவு அற்றவராகவே இருந்தார். ஏனென்றால்,
அவரால் கடவுளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றி நான் கேள்வி கேட்கும் போதெல்லாம்,
அவர் சொல்வார்: ‘நீ எப்போது உன் மனத்தில் கடவுளைப்
பார்க்க விரும்புகிறாயோ, அப்போது கடவுள் நம்பிக்கை உனக்கு உண்டாகும்.’
இரண்டாவதான என் தலைவர் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது பெயர் காம்ரேட் சசின்தரா நாத் சன்யால். அவர் கராச்சி
சதித் திட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். அவர் எழுதிய ஒரே
புத்தகம்: ஜீவனின் அவதாரம். அதில் கடவுளின்
புகழை பாடல்களால் விவரிக்கிறார். ஒரு யோகியைப் போல் அவர் தமது
கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
சசிநன்தரா நாத் சன்யால் அவர்களின் அறிவார்ந்த கருத்துக்கள்
தான், கட்சியால் வெளியிடப்பட்ட ‘புரட்சி அறிக்கை’யில் இடம்பெற்றது. தலைவர்களின் சொந்தக் கருத்துக்கள்
தான் - அவைகள் மற்ற தொண்டர்களுடைய கருத்துக்களுடன் மாறுபட்டவைகளாக
இருப்பினும் - அவைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான
நிலை தான் நிகழ்கிறது.
அந்த அறிக்கையில், ஒரு முழு
பத்தியில் கடவுளைப் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இது அறிவுக்கு
ஏற்புடையது அல்ல. புரட்சிக் கட்சியினருக்கு கடவுள் மறுப்புக் கொள்கை அவசியம்
என்பது கூட எழவில்லை என்பதைத் தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
க்கோரி தியாகிகள் நான்கு பேர்களும்
தங்களது கடைசி நாட்களை பிரார்த்தனைகளில் தான் கழித்தார்கள். அவர்களில்
ராம் பார்ஷட் பிஸ்மல் ஒரு தீவிர ஆர்ய சமாஜி. மற்றொருவரான
ராஜன் லஹிரி என்பவர் சோசியலிசம் - கம்யூனிசம் ஆகிய சித்தாங்களைக் கரைத்துக் குடித்தவர்
தான். ஆனால் கடைசி நாட்களில் அவர் உபநிடதங்கள் மற்றும் கீதை
ஸ்லோகங்களை உச்சரிப்பதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனால் அவர்களுள் ஒருவன் மட்டும்
இந்தமாதிரியான பிரார்த்தனைகளில் ஈடுபடவில்லை. ‘மதம் என்பது மனிதனின் பலஹீனத்தின் வெளிப்பாடு
அல்லது மனித அறிவின் குறைபாடு’ என்று அவன் விளக்குவான்.
அவனும் தண்டனைக் கைதியாகத் தான் இருந்தான். ஆனால்,
அவனும் கடவுள் இருப்பதை ஒருபொழுதும் மறுக்க வில்லை.
அப்போதெல்லாம், நான் தலைவர்களைப்
பின்பற்றி நடக்கும் தொண்டனாகத் தான் இருந்தேன். பிறகு,
நானே தலைமைப் பொறுப்பை ஏற்கும் நேரம் வந்தது. அது
தான் என்னுடைய புரட்சிப் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அப்போது, மேலும் மேலும் படிக்கும்
தீராத ஆர்வம் என் மனத்தை ஆட்கொண்டது. அப்பொழுதுதான் எனது நண்பர்களின்
கடவுள் பற்றிய வாதங்களை எதிர்கொள்ள முடியும் என்று நினைத்தேன். ஆகையால், நான் மிகவும் மும்முரமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
படிக்கப்படிக்க என்னுடைய முந்தைய நம்பிக்கைகளும், கொள்கைகளும் முற்றிலும் மாறுபாடு அடைந்தது.
நமது மூதாதையர்களிடம் போராட்ட குணங்களே மேலோங்கி இருந்தது.
ஆனால், தற்போது, அவைகள் புதிய
சிந்தனைகளால் துரத்தப்பட்டன. சில தருணங்களில், தீவிர வாதச் செயல்களில் ஈடுபட நாம் தள்ளப்படுகிறோம். ஆனால், மக்கள் போராட்டத்தில், வன்முறை
எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நான் நமது செயல்பாடுகளைப் பற்றி அதிகம் சொல்லி விட்டேன்.
அதில் முக்கியமான ஒன்று நமது கொள்கையினைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தை
உருவாக்கி, ஒரு நீண்ட போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும்.
தற்போது தேர்தல் சமயமாக இல்லாது இருப்பதால், பலவகையான
எழுத்தாளர்களின் கருத்துக்களை படிக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. ஆகையால், பகுனின் என்ற போராட்டத் தலைவரின் நூலைப் படித்தேன்.
தங்கள் நாட்டில் வெற்றிகரமாகப் போராட்டம் நடத்திய லெனின், ட்ரோக்ஸ்கி போன்ற இன்னும் பலரைப் பற்றி படித்துத் தெரிந்து கொண்டேன்.
அவர்கள் அத்துனை பேர்களும் நாஸ்திகவாதிகள்.
பகுனின் என்பவரின் ‘கடவுளும்,
ராஜாங்கமும்’ என்ற நூலின் கருத்துக்கள் முடிவானதாக
இல்லாவிடினும், அது படிப்பதற்கு சுவாரஸ்யமானதாகும். ‘பொது அறிவு’ என்ற நிர்லாம்பா ஸ்வாமி எழுதிய நூலில் மாயையான
நாஸ்திகம் பற்றிய அவரது கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது.
1926- ஆண்டு இறுதியில், இந்த உலகத்தை உருவாக்கியும், வழி நடத்தியும்,
ஆட்சி செலுத்தியும் வரும் சர்வ வல்லமை பொருந்திய சக்தியை நம்புவது எந்தவித
சரியான அடிப்படையையும் கொண்டது அல்ல என்ற தீர்மானத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் தான் நான் என் நண்பர்களிடம் விவாதம் செய்து, என்னை ஒரு முழு நாஸ்திகவாதியாக பிரகடணம் செய்தேன்.
அதைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
1927-ஆம் ஆண்டு மே மாதம் லாகூரில் நான்
கைது செய்யப்பட்டேன். இந்த கைதானது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை
அளித்தது. நான் போலீசால் தேடப்பட்ட நபர் என்ற எண்ணம் ஒரு சிறிது
கூட எனக்கு இல்லை. நான் ஒரு தோட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தேன்.
திடீரென்று போலீஸ் என்னைச் சூழ்ந்து கொண்டது. ஆச்சரியப்படும்
விதத்தில், அந்த சமயத்தில் நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.
நான் என்னை முழுதும் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் போலீஸ் காவலில் வைக்கப்பட்டேன்.
அடுத்த நாள் என்னை ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் லாக்-அப்பில் ஒரு மாதம் அடைத்தார்கள். பல நாட்கள் போலீஸ் ஆட்கள்
நடத்திய சம்பாஷணை மூலம், காகோரி கட்சியுடன் என்னுடைய தொடர்பு
பற்றிய சில விவரங்கள் அவர்களுக்குத் தெரிய வந்ததாக நான் அனுமானிக்க முடிந்தது.
மேலும், என்னுடைய சில புரட்சி போராட்டங்கள் பற்றிய
ரகசிய அறிக்கைகள் அவர்களிடம் இருந்தன என்று நான் நினைத்தேன். காகோரி கட்சி விசாரணையின் போது நான் லக்னோவில் இருந்ததாகவும், ஆகையால் நான் குற்றவாளிகளை விடுவிக்கத் திட்டம் போட்டதாகவும் என் மேல் குற்றம்
சாட்டினார்கள். அதற்காக நான் குண்டுகளை சேகரித்து, அவைகளில் ஒரு குண்டை சோதனையாக 1926-ம் ஆண்டு தசரா ஊர்வலத்தில்
வீசியதாகவும் என் மேல் குற்றம் சாட்டினார்கள். ஆனால்,
புரட்சிக் கட்சியைப் பற்றிய விவரங்களை ஒரு அறிக்கையாக அளித்தால்,
என்னை விடுதலை செய்வதாகச் சொன்னார்கள்.
இதற்கு நான் ஒப்புக் கொண்டால்,
என்னை விடுதலை செய்வது மட்டுமன்றி, கோர்டில் என்னை
அப்ரூவராகக் கூட ஆஜர் படுத்த மாட்டோம் என்றும் சொன்னார்கள். அந்த
அவர்களுடைய வேண்டுகோள்களைக் கேட்டு, என்னால் சிரிக்காமல் இருக்க
முடியவில்லை. எங்களைப் போன்ற கருத்துள்ளவர்கள் தங்களது சொந்த
அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசமாட்டார்கள். ஒரு நாள்,
நியூமேன் என்ற மூத்த சி.ஐ.டி. சூப்பிரண்ட் என்னை பார்க்க வந்தார். வெகு நேரம் அக்கரையுடன் என்னுடன் பேசிய பிறகு, அவர் விரும்பியபடி
ஒப்புக்கொண்டு அறிக்கை கொடுக்காவிடில், காகோரி வழக்கில் தசரா
கூட்டத்தில் கொலை செய்ததான சதியில் என்னையும் சேர்த்து, தண்டனை
வழங்கி, நான் தூக்கிலப்படுவேன் என்றும் மிரட்டினார்.
நான் முற்றிலும் நிரபராதி.
ஆனால், போலீஸுக்கு என்னைத் தண்டிக்க வேண்டிய பலம்
இருக்கிறது என்பதை நான் அறிவேன். அன்றே, சில போலீஸ் அதிகாரிகள் கடவுளை காலையும்-மாலையும் பிரார்த்தனை
செய்யும் படி என்னைத் தூண்டினார்கள். ஆனால், நான் ஒரு நாஸ்திகவாதி. சந்தோஷம் மற்றும் சாந்தியான நாட்களில்
தான் நான் ஒரு நாஸ்திக வாதியாக என்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளவேண்டுமா அல்லது இந்த
கஷடமான காலத்திலும் என் நாஸ்திகவாதக் கொள்கையை விடாமல் கடைப்பிடிக்க வேண்டுமா?
நீண்ட நேர சுய விவாதத்திற்குப் பிறகு, நான் எந்த
ஒரு நிலையிலும் என் நாஸ்திகவாதக் கொள்கை யிலிருந்து மாறாமல், எந்தவிதமான பிராரத்தனைகளையும் நான் செய்யக் கூடாது என்பதில் நான் பிடிவாதமாக
இருந்தேன். ஆமாம், அந்த நேரத்திலிருந்து
நான் கடவுளிடம் ஒரு போதும் எந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்ததில்லை.
விசாரணை ஆரம்பித்த சமயம். நான் வெற்றியுடன்
விடுதலை அடைவேன் என்று நான் நினைத்தேன். இருப்பினும் எந்த ஒரு கால கட்டத்திலும், நான் என்னைக்
காப்பாற்றிக் கொள்ள விழைந்தது இல்லை. ஆகையால் நான் ஒரு உண்மையான நாஸ்திகவாதியாக அப்போது
இருந்தேன். இப்போதும், நான் ஒரு நாஸ்திகவாதியாகவே இருக்கிறேன். இருப்பினும், அந்த நிலையில்
இருப்பது என்பது சுலபமான காரியமில்லை. ஏனென்றால், நம்பிக்கைகள்
கொண்டிருப்பவர்களால் கஷ்டங்களை சுலபமாகத் தாங்கிக் கொள்ள முடியும். ஏன், அவைகளை சந்தோஷனமானவைகளாகக்
கூட ஆக்க முடியும். மனிதன் கடவுளிடம் ஒரு பலமான ஆதரவையும், கடவுளின்
பெயரில் உற்சாகமான மன நிம்மதியையும் பெறமுடியும். உனக்குக்
கடவுளிடம் நம்பிக்கை இல்லாவிடில், உனக்கு வேறு வழியில்லை - நீ உன்னை
மட்டும் தான் நம்பவேண்டும். புயலும், பெரும் காற்றும்
அடிக்கும் சூழ்நிலையில், நீ ஸ்தரமாக உன் கால்களை ஊன்றி நிற்பது என்பது அவ்வளவு
எளிதான காரியமில்லை.
கஷ்டமான நேரங்களில், தற்பெருமை இருப்பின்,
அது ஆவியாகக் காற்றோடு கலந்துவிடும். அதனால்,
மக்களால் மதிக்கப்படும் பொதுவான நம்பிக்கைகளை எதிர்க்கும் வீரத்தை மனிதன்
இழந்துவிடுகிறான். ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட
நம்பிக்கைகளை அவன் எதிர்த்தால், அது அந்த மனிதனின் வெறும் தற்பெருமை
என்று நாம் ஒரு முடிவிற்கு வரக்கூடாது. அந்த நிலைதான் இப்போது
முழுக்க முழுக்க என்னிடம் காணப்படுகிறது. முதலில், தீர்ப்பு எவ்வாறு அமையும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும். நான்
ஒரு கொள்கைக்காக என் உயிரைத் தியாகம் செய்யப்போகிறேன்.
இதைவிட மனச்சாந்தியை அளிக்கும் ஒன்று இருக்கப்போவதில்லை!
கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்து மீண்டும் இந்த உலகத்தில் ஒரு ராஜாவகப்
பிறக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஒரு முஸ்லீமோ அல்லது ஒரு
கிருஸ்துவனோ, தான் பெற்ற துன்பங்கள் - தியாகங்கள்
- ஆகியவைகளுக்குப் பரிசாக, ஆடம்பரபான வாழ்க்கையை
சொர்கத்தில் அனுபவிக்கலாம் என்று கனவு காண்பான். ஆனால்,
நான் எந்த மாதிரியான எண்ணங்களை என் மனத்தில் அனுமதிக்க முடியும்?
எனக்குத் தெரியும் - தூக்குக் கயிறு என் கழுத்தில்
மாட்டப்பட்டு, என் காலின் அடியில் உள்ள பலகை அகற்றப்படும் போது,
அது தான் என் முடிவாக இருக்கும். மதத்தின் அடிப்படையான
சொல்லைப் பயன்படுத்தினால், அது தான் முழுமையான அழிவாகும்.
என்னுடைய உயிர் பிரிந்து, ஒன்றுமில்லாமல் போய்விடும்.
‘வெகுமதி’ என்ற கோணத்தில்
வீரத்தினை நான் மதிப்பிட்டால், இந்த சிறிய எனது போராட்டமே
- அதனால் ஏற்பட்ட இந்த முடிவே- எனக்கு அளிக்கப்பட்ட
‘வெகுமதி’ என்று நான் கருதுகிறேன். அது ஒன்றே போதும். இந்த உலகத்திலோ அல்லது பரலோகத்திலோ
சுயநலமான எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பார்க்காமல், சுதந்திரப்
போராட்டத்தில் என் வாழ்வை எந்தவிதமான ஆசையும் இல்லாமல் நான் என் வாழ்வை அர்ப்பணித்தேன்.
வேறு விதமாக என்னால் செயல்படமுடியாது. மனித சமூகத்திற்கு
சேவை செய்வது, துன்பங்கள் மற்றும் அட்டூழியங்கள் ஆகியவைகளிலிருந்து
மனித சமூகத்தை விடுவிப்பது ஆகிய செயல்களில் ஆண்களும், பெண்களும்
பெரும் அளவில் வீரத்துடன் போராட - இந்தக் கொள்கைக்காக தங்கள்
வாழ்வையே அர்ப்பணிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கம் இல்லை என்ற உறுதியுடன் வெளிப்பட்டால்
தான், நம் நாட்டிற்கு புது யுகம் பிறக்கும்.
அப்படிப்பட்ட வீர்ர்கள் தான் அடக்குமுறைக்காரர்கள்,
கொடுங்கோலர்கள் அல்லது கொள்ளை அடிப்பவர்கள் ஆகியவர்களை எதிர்த்து போர்
செய்து, அப்படிப்பட்டவர்கள் நம்மை ஆளும் அரசர்களாகவோ அல்லது எந்தவிதமான
வெகுமதிகளை இந்த உலகத்திலோ அல்லது இறந்த பிறகு பரலோகத்திலோ அடையச் செய்பவர்களாகவோ உருவாகாமல்
நம்மைக் காத்து உதவுவார்கள்.
ஆனால், அடிமைத் தளையிலிருந்து
விடுவித்து, சுதந்திரத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு,
அந்த சுதேச வீர்ர்கள் மிகவும் ஆபத்தான - ஆனால்,
புகழப்படத்தக்க பாதைகளை கடக்க வேண்டியவர்களாகிறார்கள். இந்தப் பயணத்தில் பங்கு கொள்ளும் அவர்களது புனிதமான பணியில் ஈடுபடும் போது
ஏற்படும் கர்வத்தை வெறும் தற்பெருமை என்று எப்படிச் சொல்ல முடியும்? இதை அப்படிச் சொல்லும் அவசரக் குடுக்கை யார்? அந்த மனிதனுக்கு
நான் ஒன்று சொல்கிறேன்: அவன் ஒரு முட்டாளாகவோ அல்லது வஞ்சகனாகவோ
இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பிரகஸ்பதிகளை
- அதாவது மனத்திலிருந்து பொங்கி எழும் இந்த புனிதமான போராட்டத்தின் தன்மைகளின்
ஆழத்தை, எழுச்சிகளை, உணர்சிகளை,
உயர்ந்த லட்சியங்களை அறியமுடியாத ஜீவன்களை - புறம்
தள்ளுவோம். அவர்களின் இதயங்கள் செத்து விட்டன. அவர்கள் இதயங்கள் அனைத்தும் எந்தவிதமான உணர்ச்சிகள் இல்லாத வெறும் மாமிசப்
பிண்டங்கள். அவர்களின் முடிவுகள் முடமானவைகள், அவர்களது உணர்சிகள் மரத்துப் போனவைகள். அவர்களது சுயநலம்
தான் உண்மை நிலையைப் பார்க்கும் சக்தி அற்றவர்களாக அவர்களைச் செய்து விட்டது.
‘தற்பெருமை’ என்ற
சொல் நமது சரியான முடிவுகளில் நாம் நிலையாக உறுதியுடன் இருப்பதைச் சோதிக்க குறிபார்த்து
எறியப்படும் கற்களாகும். வெகு ஜனத்தின் அபிப்பிராயங்களுக்கு எதிராக
நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு ஹீரோ அல்லது பொதுவாக விமரிசனத்திற்கு
அப்பாற்பட்டவராக மதிக்கப்படும் ஒரு பெரியவரை நீங்கள் கண்டனம் செய்கிறீர்கள்.
என்ன நடக்கும்? உங்களது கண்டனங்களுக்கு அறிவுபூர்வமாகப்
பதில் அளிக்க மாட்டார்கள். உங்களை தூஷனையாளர்களாகவே நோக்குவார்கள்.
அதற்குக் காரணம், அவர்களது அறியாமையான மன நிலையாகும்.
புரட்சிக் கருத்துக்களுக்கு தீவிரமான பயமில்லாத விமரிசனங்களும்,
சுதந்திரமான சிந்தனைகளும் இரண்டு முக்கியமான தூண்கள் போன்றவைகளாகும்.
மஹாத்மாஜி மிகவும் உயர்ந்தவராக இருப்பதால்,
அவர் விமரிசன்ங்களுக்கு அப்பார்ப்பட்டவர். இதன்
காரணமாக, அரசியல், மதம், தர்மம் ஆகிய துறைகளைப் பற்றி அவர் சொன்ன அனைத்துக் கருத்துக்களும் சரியானவைகளாக
ஏற்கப்படுகின்றன. நீங்கள் அந்தக் கருத்துக்களுடன் ஒத்துப் போனாலும்,
போகாவிட்டாலும், அவைகளை நீங்கள் உண்மை என்று ஒப்புக்
கொள்ள வேண்டும். இது நேர்மையாக நீங்கள் சிந்திப்பதைக் குறிக்காது.
இந்த வகையில் நாம் முன்னேற அடி எடுத்து வைக்க வில்லை. பல அடிகள் பின்னோக்கி வைக்கிறோம்.
நமது முன்னோர்கள் கடவுளான எல்லாம் வல்ல சர்வசக்தியின்
மேல் நம்பிக்கை வைக்கச் சொன்னார்கள். ஆகையால், அந்த சக்தியிடம் கொண்ட நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி எழுப்பினாலோ அல்லது கடவுள்
இருப்பதை மறுத்தாலோ, அப்படிப்பட்டவனை மத நம்பிக்கை இல்லாதவன்
அல்லது மதத் துரோகி என்ற பட்டம் கட்டினார்கள். அப்படிப்பட்டவனின்
விவாதங்கள் பதில் சொல்ல முடியாத அளவில் சக்தி வாய்ந்ததாக இருந்து, அவனது ஆர்வம் கடவுளின் கோபத்திற்கும் மற்றும் பிறரின் எந்த வகையான சவால்களையும்
எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாலும், அவனை தலைக்கனம் கொண்டவன்
என்று ஒதிக்கிவிடுவார்கள். அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நமது நேரத்தை இந்த மாதிரியான
விவாதங்களில் செலவிடவேண்டும்? முதல் முதலாக இந்த கேள்வி மக்கள்
முன்னிலையில் வந்துள்ளதால், இதைப் பற்றி நீண்ட வகையில் சொல்வது
அவசியமாகவும், உபயோகமாகவும் உள்ளது.
நான் எழுப்பிய முதல் கேள்வியைப் பொருத்த அளவில்,
நான் நாஸ்திகனாக வீண் பகட்டு தற்பெருமையினால் மாறவில்லை என்பதை தெளிவாக்கி
விட்டேன் என்று நான் நினக்கிறேன். ஆகையால், என்னுடைய வாசகர்கள் தான் - நான் அல்ல - நான் எடுத்து வைத்த விவாதங்கள் நம்பிக்கையூட்டும் பலமுள்ளவைகளாக இருக்கின்றனவா
என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களாவார்கள். நான் கடவுள் நம்பிக்கை
உள்ளவனாக இருப்பின், எனது வாழ்க்கை சுலபமானதாக அமைந்திருக்கும்.
என் பளுவும் குறைவாக இருந்திருக்கும். என் கடவுள்
நம்பிக்கை இல்லாத கொள்கையினால் அனைத்து சூழ்நிலைகளும் என் வாழ்வைக் கடினமாக மாற்றிவிட்டன.
இந்த சூழ்நிலை இன்னும் மோசமாகவே என் வாழ்வை ஆக்கும். சிறிதாவது நான் யோகியைப் போல் மாறினால், என் சூழ்நிலையை
கவிதையாக உருவாக்கி மனம் மகிழலாம். ஆனால், என் முடிவைச் சந்திக்க இந்த மாதிரியான மனத்தை மயக்கும் போதை எனக்குத் தேவை
இல்லை.
நான் உண்மையை ஆராதிக்கும் ஒரு மனிதன்.
என்னிடம் எழும் மனத்தை மயக்கும் உணர்வுகளை அறிவு பூர்வமான காரணங்களின்
உதவு கொண்டு வெற்றி கொள்ளவே நான் விழைகிறேன். இருப்பினும்,
இந்த மாதிரியான முயற்சிகளில் நான் எப்போதும் வெற்றி அடையவில்லை.
ஆனால், அதற்கு முயல்வதும், செயல்படுவதும், ஒரு மனிதனின் கடமையாகும். வெற்றி என்னவோ சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பம் ஆகியவைகளைப் பொருத்ததாகும்.
இப்போது, நாம் என்னுடைய இரண்டாவது
கேள்விக்கு வருகிறோம்: ‘வீண் பகட்டு தற்பெருமை இல்லாவிடில்,
காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் கடவுள் நம்பிக்கையை கைவிடுவதற்கு சில
முக்கியமான காரணம் இருக்க வேண்டும்.’
ஆமாம், அந்தக் கேள்விக்கு
நான் வருகிறேன்.
கொஞ்சமாவது பகுத்தறியும் சக்தி உள்ள எந்த ஒரு மனிதனும்
எப்போதும் வாழ்வைப் பற்றியும், தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப்
பற்றியும் அறிய முயலுவான் என்று நான் நினைக்கிறேன். நேரடியான
தகுந்த சான்றுகள் இல்லாவிடில், மனத்தை மயக்கும் தத்துவம் நுழைகிறது.
என்னுடைய புரட்சி நண்பர்களில் ஒருவன் சொல்வதைத் தான் நான் இங்கு குறிப்பிட
விழைகிறேன்:”தத்துவம் என்பது மனிதனின் பலஹீனத்தின் வெளிப்பாடு.”
நமது முன்னோர்களுக்கு உலகத்தின் அதிசயங்கள்,
அதன் இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலம்
பற்றிய காரண - காரியங்கள் ஆகியவைகளைப் பற்றியவைகளை ஆராய அதிக
நேரம் இருந்தது. ஆனால், அதே சமயத்தில்,
நேடியான ஆதாரங்கள் கிடைக்காத போது, ஒவ்வொருவரும்
தம் தமக்குத் தோன்றியவைகளையே சான்றாகத் தெரிவித்தார்கள். ஆகையால்
தான், நாம் பல மதக் கொள்கைகளில் அடிப்படையான மாறுபட்ட வேற்றுமைகளைக்
காண்கிறோம். சில நேரங்களில், மிகவும் நேர்மாறமான
முற்றும் முரண்பட்ட கருத்துக்களை அந்த மதங்கள் போதிக்கின்றன.
கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் தத்துவங்கள் மாறுபட்டு
இருப்பதை நாம் காண்கிறோம். ஒரே தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பகுதியினருக்குள்ளும்,
பல வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. ஆசியாவில்,
முஸ்லிம் மதம் இந்து மத்த்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது.
இந்தியாவிற்குள், புத்தமதமும், ஜைனமதமும் பிராமண மதத்திலிருந்து வேறு பட்டதாக இருக்கிறது. பிராமண மதத்திற்குள்ளும், ஆர்ய சமாஜம், சநாதன தர்மம் ஆகிய பகுதிகள் இருக்கின்றன. சார்வாக் என்ற
மதக் கொள்கையினர் கடந்த காலத்தைப் பற்றிய சுதந்திரமான சிந்தனையாளர்களாக உள்ளனர். அந்த
மதத்தினர் கடவுளின் அதிகாரத்திற்கே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எல்லா மதக் கொள்கைகளும் பல அடிப்படையான கருத்துக்களில்
மாறுபட்டவைகளாக இருப்பினும், ஒவ்வொரு மதமும் தங்கள் தங்கள் மதம் தான்
உண்மையான மதம் என்று வாதிடுகிடுவது தான் மதத்தின் பால் படிந்துள்ள தீங்கின் மூல காரணமாகும்.
நமது ஆதிகால சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், சோதனைகளையும் மேம்படுத்த முயலாமல் - அதன் மூலம் வருங்காலத்தில்
எழும் கேள்விகளை எதிர்கொள்ளும் தகுந்த பலமான கருத்துக்களை ஆயுதங்களாக உருவாக்கி உதவாமல்
- சோம்பலான, வெறிகொண்டவர்களாக நாம் இருக்கும் இந்த
நிலையால், பழமையான மதக் கோட்பாடுகளையே நாம் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக, மனித விழிப்புணர்ச்சி
ஒரு தேங்கி நிற்கும் சாக்கடை போல் ஆகிவிட்டது.
முன்னேற்றத்தை விழையும் ஒவ்வொரு நபரும் நமது பழமையான ஒவ்வொரு
நம்பிக்கையையும் விமர்சிப்பது மிகவும் அவசியமாகும். நமது பழமையான நம்பிக்கையை
ஒவ்வொன்றாக எதிர்த்து அதன் அவசியத்தை அறியவேண்டும். அனைத்து முழு
விவரங்களையும் அறிந்து, ஆராய்ந்து, பகுத்தறிவுக்கு
ஏற்றவைகளை மட்டும் தத்துவமாக ஏற்க வேண்டும். பகுத்தறிவு மட்டுமே
ஒருவரது வாழ்வுக்கு வழிகாட்டியாக இருப்பதால், ஒருவனுடைய தத்துவ
விசாரணை தவறாக இருப்பினும், பிறகு அந்தத் தவறை திருத்திக் கொள்ளும்
வாய்ப்பு உண்டு. மூட நம்பிக்கை மிகவும் அபாயகரமானது. அது ஒரு மனிதனின் சிந்திக்கும் சக்தியை மழுங்கடித்து, அவனை புரட்சியாளனாக மாற்றிவிடுகிறது.
உண்மையை ஆராதிக்கும் எந்த நபரும் பழைய நம்பிக்கைகளை எதிர்த்து
அவைகளின் உண்மைத் தன்மைகளை அறியவேண்டும். அறிவுக்குப் பொருந்தாத
நம்பிக்கைகள் கீழே விழுந்துவிடும். ஒரு புதிய தத்துவத்திற்கான
ஆரம்பம் இதன் பிறகு தொடங்குகிறது. இது எதிர்மறையான பக்கம்.
இதன் பிறகு நேர்மறையான செயல் நிகழும். அதாவது பழைய
நம்பிக்கைக் கருத்துக்களில் சில, புதிய தத்துவத்தின் கட்டிடம்
கட்டுவதற்கு தூண்களாகப் பயன்படும்.
என்னைப் பொருத்த வரையில்,
இந்தத் துறையில் நான் அதிகம் படிக்க வில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
கீழ்திசை தத்துவத்தை படிக்க எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
ஆனால், அதற்குத் தகுந்த வாய்ப்போ அல்லது அவசியமான
நேரமோ எனக்குக் கிடைக்க வில்லை. பழைய நம்பிக்கைகளை நான் புறக்கணிக்கும்
போது, அந்த நம்பிக்கையை புதிய நம்பிக்கைக்கு மாற்றாகச் சொல்ல
வில்லை. பழைய நம்பிக்கைகளின் பலாபலன்களை தகுந்த ஆதாரங்களால் நான்
எதிர்ப்பது தான் என்னுடைய தத்துவம்.
ஒரு நாஸ்திகவாதியாக, ஆஸ்திக வாதிகளிடம்
நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்:
1. நீங்கள் நம்புவது போல் சர்வ வல்லமையுள்ள,
எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த கடவுள் இந்த பூமி
- பிரபஞ்சம் ஆகியவைகளை சிருஷ்டித்திருந்தால், கடவுள்
ஏன் இந்த உலகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்பதை முதலில் எனக்குப் புரியும் படி பதில்
சொல்லவும். ஏனென்றால், இந்த உலகம் அவலம்,
துக்கம், எண்ணிலடங்காத சோகங்கள் நிறைந்து,
ஒரு ஜீவன் கூட நிம்மதியாக வாழமுடியாது இருக்கிறது.
2. இதற்குப் பதிலாக, இது கடவுளின் சட்டம் என்று தயவு செய்து சொல்லாதீர்கள் என்று உங்களை பிரார்த்திக்கிறேன்.
கடவுள் சட்டத்திற்குக் கட்டுப் பட்டவராக இருப்பின், கடவுளை சர்வ
வல்லமை படைத்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? கடவுளின் திருவிடையாடல்
என்று சொல்லி தப்பிக்க வேண்டாம். நீரோ ரோமாபுரியை தீயிட்டான்.
நீரோ தம் மக்கள் சிலரைத் தான் கொன்றான். நீரோ தனது
கொடூரமான மனத்தின் சந்தோஷத்திற்கு சில கொலைகளைச் செய்தான். ஆனால்,
சரித்திரம் நீரோவைப் பற்றி என்ன சொல்கிறது? அவனை
எப்படி நாம் வர்ணிக்கிறோம்? எல்லாம் அவனைத் தூற்றும் அவச் சொற்கள்.
சரித்திரத்தில் அவன் கொடுங்கோலன், இதயமற்றவன்,
துன்மார்க்கன் என்றெல்லாம் வசைபாடப்படுகிறான்.
அதேபோல் செங்கிஷ் கான் தன்னுடைய சந்தோஷத்திற்காக ஒரு ஆயிரம்
பேர்களைக் கொன்றான். நாம் அவன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறோம்.
இப்போது, ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நிமிடமும் மக்கள் கொல்லப்படுவதை விளையாட்டாகச் செய்யும் உங்களுடைய
சர்வ வல்லமை பொருந்திய எல்லையில்லாத உங்கள் நீரோ போன்ற கடவுளின் காரியங்களை எவ்வாறு நீங்கள் நியாயப்படுத்தப் போகிறீர்கள்?
உங்கள் கடவுளின் இந்த மக்களின் மேல் ஏவப்பட்ட துன்பங்கள், கொடூரங்கள் - அவைகள் செங்கிஸ் கானின் செயல்களை விடக்
கொடூரமனவைகளாக இருக்கும் போது - ஆஸ்திகர்களாகிய நீங்கள் எவ்வாறு
அவைகளை ஆதரிக்கப் போகிறீர்கள்?
‘ஒரு வாழும் நரமாக - தீராத நிரந்தர கலக பூமியாக மட்டுமே இருக்கும் இந்த உலகத்தை சர்வ வல்லமை பெற்ற
கடவுள் ஏன் படைத்தார்?’ என்று நான் கேட்க ஆசைப்படுகிறேன்.
அப்படிப்பட்ட பூமியில் கடவுள் ஏன் மனிதனைப் படைத்தார் - படைக்காமல் இருக்கும் சக்தி அவரிடம் இருக்கும் போது? இந்த என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இறந்த பிறகு இந்த உலகத்தில் கஷ்டப்படுவர்களுக்கு பரிசைக் கொடுக்கவும்,
துஷ்டர்களை தண்டிப்பதற்கும் என்று நீங்கள் பதில் சொல்லலாம்.
அப்படி என்றால், ஒருவன் முதலில் உங்கள்
உடம்பில் காயங்களை ஏற்படுத்தி விட்டுப் பிறகு அந்த மனிதனே உங்கள் காயங்களுக்கு மருந்து
போடுகிறான் என்றால் நீங்கள் அப்படிப்பட்டவனின் செயல்களை எவ்வளவு தூரம் நியாயப்படுத்த
முடியும்? பட்டினி போடப்பட்ட சிங்கத்தின் முன்னால் மனிதர்களைத்
தள்ளி, அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள சண்டை போடும் காட்சிகளை
விளையாட்டுப் போல் ரசித்து, ஆதரிக்கும் மக்களை - அந்த மனிதர்கள் இந்த கோர மரணத்திலிருந்து தப்பித்தால், அவர்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து, ஆதரிக்கும் அந்த
மக்களின் செயல்களை எவ்வளவு தூரம் நியாயபடுத்த முடியும்? ஆகையால்
தான் நான் கேட்கிறேன்: மனிதனைக் கடவுள் சிருஷ்டித்தது இந்த மாதிரியான
சந்தோஷத்தை அவன் அடைவதற்காகவா?
ஆஸ்திகர்களே! நீங்கள் உங்கள் கண்களை
நன்கு திறந்து பாருங்கள். சிறைச்சாலைகளின் இருண்ட மோசமான அறைகளைவிட
அழுக்கான சேரிகளிலும், குடிசைகளிலும் மில்லியன் மக்கள் பட்டினியால்
செத்து மடிவதைப் பாருங்கள். பணம் படைத்த பிசாசுகள் உழைப்பாளின் ரத்தத்தைக் குடிக்க, அந்த ஏழைகள் மவுனமாகத் துன்பப்படுவதைப்
பாருங்கள். மனித உழைப்பை
விரயம் செய்யும் காரியங்களைச் சிறிது சிந்திந்துப் பாருங்கள் - சிறிதளவேனும் பொது அறிவு உள்ள எந்த மனிதனையும் அந்தக் காரியங்கள் பீதி அடையச்
செய்யும். பணக்கார நாடுகள் அதிகமாக உற்பத்தியான பொருட்களை
- ஏழை எளிய மக்களுக்கு உபயோகப்படும் படி அளிக்காமல் - சமுத்திரத்தில் கொட்டுவதைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள். மனித எலும்புகளை அஸ்திவாரமாக வைத்து அவைகளின் மேல் எழுப்பப்பட்ட பல அரசர்களின்
அரண்மனைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.
ஆஸ்திகர்களே! இவைகளை எல்லாம் நீங்கள்
பாருங்கள்.
‘கடவுளின் ராஜ்யத்தில் அனைத்தும் நல்லபடியாகவே
இருக்கிறது’ என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள். ஏனென்றால், என் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது. சரி.
இனி, நான் எனது அடுத்த கருத்தினைப் பற்றிச் சொல்கிறேன்.
3. ஹிந்துக்களாகிய நீங்கள் சொல்லலாம்:
‘இந்த உலக வாழ்வில் துன்பம் அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும்,
அவர்கள் தங்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்களாவர்.’
“இப்போது கொடுங்கோல் ஆட்சி செய்பவர்கள்
முற்பிறவில் கடவுள் அம்சமாக இருந்தவர்கள். அந்தக் காரணத்திற்காகவே,
அவர்களின் கைகளில் ஆட்சி உள்ளது” என்று நீங்கள்
சொல்வது போல் இருக்கிறது. இதற்கு நான் உங்களுக்கு நேரிடையாகவே
ஒன்று சொல்கிறேன்: ‘உங்கள் மூதாதையர்கள் மிகவும் புத்திசாலி மனிதர்கள்.
அவர்கள் மக்களை மலிவான ஏமாற்றுக் கருத்துக்களைத் தேடி மக்களின் மேல்
திணித்து, அந்த மக்களின் சிந்திக்கும் திறனை அழித்து விட்டார்கள்.’
இந்த என்னுடைய கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்பதை இப்போது ஆராய்ந்து
பார்ப்போம்.
சட்டஇயல் தத்துவ நிபுணர்கள் தண்டனையின் நோக்கம் மூன்று
காரணங்களின் அடிப்படையில் அமைந்ததாகச் சொல்வார்கள்.
அவைகள்: பழி வாங்குதல்,
சீர்திருத்தல், அச்சுறுத்தல். ‘பழிக்குப் பழி கொள்கை’ என்பது இப்போது அனைத்து சிந்தனையாளர்களாலும்
கண்டனம் செய்யப்படுகிறது. தண்டனையைக் கடுமையாக்கிப் பயமுறுத்தும்
கொள்கை அதிலுள்ள குறைகளினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் ஆராயப்படும் நிலையில் தான் உள்ளது.
சீர்திருத்தக் கொள்கை தான் தற்போது அதிகமான பேர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு,
மனித முன்னேற்றத்திற்கு அந்தக் கொள்கைதான் அவசியம் என்று கருதப்படுகிறது.
அது தான் குற்றவாளியை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டு, அவனை அமைதியை நேசிக்கும் குடிமகனாக மாற்ற உதவுகிறது.
ஆனால், உண்மையிலேயே ஒரு மனிதன்
சில தீங்குகளை மற்றவர்களுக்கு இழைத்தால், இதில் தீங்கு இழைத்த
மனிதனுக்கு கடவுள் அளிக்கும் தண்டனையின் அடிப்படை சாராம்சம் என்ன? நமது விவாதத்திற்காக, அந்த தீங்கிழைத்த மனிதன் தனது முற்பிறவியில் சில குற்றங்கள்
செய்தவன் என்றும், கடவுள் அந்த மனிதனை ஒரு பசு, மரம் அல்லது வேறு ஒரு மிருகமாக உருமாற்றினார் என்றும் நாம் ஒப்புக் கொள்வோம்.
இந்த முட்டாள் தனமான செயல் - அது தண்டனை என்ற பெயரால்
அளிக்கப்பட்டது என்ற போது, அதில் மனிதனை சீர்திருத்தும் நோக்கம்
எதாவது உண்டா என்ற என கேள்விக்குப் பதில் என்ன? முற்பிறவி செய்த
பாவத்தால் கழுதைகளாகப் பிறந்த எத்தனை ஜீவன்களை நீங்கள் சந்திந்துள்ளீர்கள்?
இந்தக் கருத்துக்கள் எல்லாம் புராணத்தின் புரட்டுக் கட்டுக் கதைகள்.
ஆகையால், இந்தக் குப்பைக் கருத்துக்களை விவாதப்
பொருளாக ஆக்குவதில் எனக்கு உடந்தை இல்லை.
ஏழ்மை தான் இந்த உலகத்திலேயே மிகவும் மோசமான சபிக்கப்பட்ட
பாவமாகும் என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிவீர்களா? ஆமாம், ஏழ்மை ஒரு பாவம் - அது ஒரு தண்டனை. ஆகையால், இந்த ஏழ்மை என்ற பாவக் குழியில் மனிதனைத் தண்டனைக்காகத்
தள்ளுவதை ஆதரிக்கும் கொள்கைவாதி, ஜூரி அல்லது சட்டசபை அங்கத்தினர்
ஆகியவர்கள் சபிக்கப்பட வேண்டியவர்கள். இந்த சாதாரண விஷயம் உங்களது
எல்லாம் அறிந்த கடவுளுக்குத் தோன்ற வில்லையா அல்லது பல மில்லியன் பேர்கள் சொல்லொனாத
துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்த பிறகு தான் இந்த உண்மை
உங்கள் கடவுளுக்குத் தெரிய வந்ததா?
ஆஸ்திகர்களே! ஒரு பாவமும் செய்யாத
ஒருவன் கீழ் சாதிக் குடும்பத்தில் பிறந்தால், உங்கள் கொள்கைப்
படி அவனின் நிலை என்ன? அவன் ஏழை-ஆகையால் அவன் பள்ளிக் கூடம் போக முடியாது.
மேல் சாதியில் பிறந்தவர்களால் ஒதுக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு
இருக்கும் நிலை அவனின் தலைவிதி. அவனது அறியாமை, அவனது ஏழ்மை மற்றும் மற்றவர்களால் தூஷிக்கப்படுவது ஆகியவைகள் சமூகத்தின் மேல்
அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தி, அவனது உள்ளத்தைக் கல்லாக்கி விடுகின்றன.
அந்த ஏழை ஒரு பாவம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அதன் பலாபலன்களை யார் ஏற்பார்கள்? கடவுளா அல்லது
அவனா அல்லது அந்த சமூகத்தில்
படித்த பண்டிதர்களா? சுயநலம் மற்றும் கர்வம் கொண்ட பிராமணர்கள்
வேண்டு மென்றே அறிவிலிகளாக இருக்கச் செய்த அப்படிப்பட்ட ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட
தண்டனையைப் பற்றி உங்களது கருத்து என்ன? தற்செயலாக இந்த ஏழை அப்பாவி
ஜந்துக்கள் உங்களது வேதம் போன்ற புனித நூல்களில் சொல்லப்பட்ட ஒரு சில வார்த்தகளை கேட்டு
விட்டால், இந்தப் பிராமணர்கள் காய்ச்சின ஈயத்தை அவர்களின் காதுகளில்
ஊற்றுகிறார்கள். இந்த பிராமணர்கள் பாவம் செய்தால், இந்த உக்கிரமான காரியத்திற்கு யார் பொறுப்பு?
என் அன்பான நண்பர்களே! இந்தக் கொள்கைகளெல்லாம்
உயர்குடிப் பிறந்தோர்கள் உண்டாக்கியது. தாங்கள் கைப்பற்றிய அதிகாரத்தை
நிலை நாட்டவும், திருடிய செல்வத்தைக் காப்பாற்றவும் இந்த மாதிரியான
கொள்கைகளை சரியானதாக வாதாடுகிறார்கள். இந்த சமயத்தில் அப்டோன்
சிங்க்லைர் எழுதிய - மதத்தின் லாபங்கள் - என்ற அறிக்கையின் கீழ்க்கண்ட வாசகங்களை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்:”ஒரு மனிதனை ஆத்மாவின் சாகாத தன்மையை ஆணித்தரமாக நம்பவைக்க வேண்டும்.
பிறகு, அந்த மனிதனின் அனைத்துத் சொத்துக்களையும்
கவர வேண்டும். அப்படிப்பட்ட வழியில், அந்த
மனிதன் மனப்பூர்வமாகவே உனக்கு அவனது சொத்துக்களை அடைய உதவுவான்.”
4. நான் உங்களை ஒன்று கேட்கிறேன்:
‘உங்களது சர்வ வல்லமை பொருந்திய கடவுள் பாவம் அல்லது தவறான செயல் செய்யப்
போகும் போது, ஏன் அவனைத் தடுத்து நிறுத்துவதில்லை?’ இது கடவுளுக்கு மிகவும் எளிதான வேலை. யுத்த வெறியர்களை
ஏன் அந்தக் கடவுள் கொல்வதில்லை? அப்படிப்பட்ட கொலைவெறி எண்ணங்களை
ஏன் அவர்கள் மனத்திலிருந்து அழிப்பதில்லை? அப்படி நடந்தால்,
அந்தக் கடவுள் உலகத்தில் நடக்கும் பல அநியாயங்களையும், கொடூரங்களிலிருந்து மனித சமூகத்தைக் காப்பாற்றி இருக்கலாமே!
பிரிட்டிஷாரின் மனங்களில் மனிதாபிமான எண்ணங்களை உருவாக்கி, அவர்களாகவே இந்தியாவை விட்டுச் செல்ல ஏன் அந்தக் கடவுள் செய்ய வில்லை? சுயநலமற்ற மனிதாபிமானக் கருத்துக்களை எல்லா முதலாளி வர்க்கத்தினர்களின் இதயங்களில் நிறப்பி, அதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் மேல் தனிப்பட்ட சொந்தம் கொண்டாடாமல், உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரையும் பணத்தின் பிடியிலிருந்து விடுதலை செய்து ஆதரிக்கும் நிலையை ஏன் உங்கள் கடவுள் செய்ய வில்லை என்று நான் கேட்கிறேன். நீங்கள் இந்த சோஷியலிசக் கொள்கையை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி விவாதிக்க விழைகிறீர்கள். ஆனால், உங்கள் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் இதைச் செயல்படுத்துவதற்கு நான் அவரிடமே விட்டு விடுகிறேன்.
பொதுமக்கள் இந்த சோசியலிசக் கொள்கையின் நன்மைகளை
- அது பொது நன்மை அளிக்கும் என்ற அளவில் - நன்கு
தெரிந்து கொண்டுள்ளனர். அது செயல்படுத்த முடியாது என்பதாலாலேயே
அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். இதில் கடவுள் தலையிட்டு,
அதைச் சரியாகச் செயலபடுத்தட்டுமே. இனி இப்படி தத்துவ
விசாரனை செய்வதால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை. நமது தேசம்
பிரிட்டிஷ்ப் பிடியில் இருப்பது கடவுளின் விருப்பத்தின் பேரில் இல்லை. அதற்குக் காரணம் நாம் வீரமில்லாமலும், உறுதி இல்லாமல்
இருப்பதே. பிரிட்டிஷார் நம்மை கடவுளின் ஒப்புதலுடன் நம்மை அடிமையாக
வைத்திருக்க வில்லை. அதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும்
- துப்பாக்கிகள், குண்டுகள், போலீஸ்ப் படைகள், ராணுவப் படைகள். இதை எல்லாம் விட, ஒரு தேசம் இன்னொரு தேசத்தைக் கொள்ளை
அடிப்பதைப் பார்த்துக் கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருக்கும் நமது
மன்னிக்க முடியாத குற்றத்தால், அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட
வைப்பதுதான்.
இந்த அநியாயம் நடக்கும் நிலையில்,
எங்கே இருக்கிறார் கடவுள்? அந்தக் கடவுள் என்ன
செய்து கொண்டிருக்கிறார்? அந்தக் கடவுள் நமது கஷ்டங்களைப் பார்த்து
ஒரு வெறுக்கத்தக்க சந்தோஷத்தை அடைகிறாரா? அப்படிப்பட்ட கடவுள்
- ஒரு நிரோவாகவோ அல்லது ஒரு செங்கிஸ் கானாகவோ தான் இருக்க முடியும்.
அப்படிப்பட்ட கடவுள் ஒழியட்டும்.
5. இப்போது இன்னொரு கருத்தைச் சொல்கிறேன்!
இந்த உலகம் மற்றும் மனிதன் பிறந்த கொள்கையை நான் எப்படி விளக்கப் போகிறேன்
என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். சார்லஸ் டார்வின் இந்த விஷயம்
பற்றி சிறுது விளக்கி உள்ளான். அவனது நூலைப் படிக்கவும்.
அத்துடன், சோஹான் ஸ்வாமியின் ‘பொது அறிவு’ என்ற நூலைப் பார்க்கவும். பிறகு இந்தப் பொருள் பற்றிய ஒரு நம்பிக்கையான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த தலைப்பு உயிரியல் மற்றும் இயற்கைச் சரித்திரம் ஆகியவைகளைப் பற்றியது.
இது இயற்கையின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியது.
நெபுலா வடிவமுள்ள பலவிதமான பொருட்கள் தற்செயலாக இணைவதால்
தான் இந்த பூமி உருவானது. எப்போது? அதற்கு
அறிவியலைப் படிக்கவும். இதைப் போல் தான் மற்ற மிருகங்கள்,
பிறகு மனிதர்கள் பிறந்தார்கள். இதற்கு டார்வினின்
‘உயிர்களின் பிறப்பின் ஆரம்பம்’ என்ற நூலைப் படிக்கவும்.
பிற்பாடு நடந்த அனைத்து சம்பவங்களும், மனிதன் இயற்கையோடு
அந்த இயற்கைச் செல்வங்களை தனது சொந்த ஆதாயத்திற்குப் பயன்பட தொடர்ந்து போராடிய போராட்டமாகும்.
இது தான் சுருக்கமான பரிணாம வளர்ச்சியாகும்.
6. உன்னுடைய அடுத்த கேள்வி - “ஏன் ஒரு குழந்தை - அது முற்பிறவியில் எந்த பாவமும் செய்யாமல்
இருப்பினும் - குருடாகவோ அல்லது முடமாகவோ பிறக்க வேண்டும் ?”
- என்பதாக இருக்கும். இது ஒரு உயிரியல் நிகழ்வு
என்று தகுந்த சான்றுகளுடன் உயிரியல் வல்லுனர்கள் விளக்கி உள்ளார்கள். இது அந்த குழந்தையின் பெற்றோர்களின் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தவறுகளால்
நிகழ்ந்ததாகும்.
7. நீங்கள் இன்னும் ஒரு கேள்வியை என்மேல்
திணிக்கலாம். அந்தக் கேள்வி: ‘கடவுள் உண்மையிலேயே
இல்லாவிடில், மக்கள் ஏன் அவரை இருப்பதாக நம்ம வேண்டும்?’
இந்தக் கேள்விக்கு எனது சுருக்கமான - ஆனால் தெளிவான
பதில் இதோ: பிசாசுகள் மற்றும் தீய சக்திகள் இருப்பதாக எப்படி
அவர்கள் நம்புகிறார்களோ, அதே போல் தான் இந்தக் கடவுள் நம்பிக்கையும்
மக்கள் தங்களிடம் வளர்த்துக் கொண்டுள்ளனர். அனைத்து மதங்களும்,
நம்பிக்கைகளும், கொள்கைகளும் - அவைகளைப் பரப்பும் நிறுவனங்களும் கொடுங்கோலமான கொள்கைகளையும், மனிதர்களை ஏமாற்றும் கொள்கைகளையும் ஆதரிப்பவர்களாகவே செயல்படுகிறார்கள் என்பது
தான் என்னுடைய முக்கியமான குற்றச்சாட்டாகும். எந்த ராஜாவை எதிர்த்துப்
போரிட்டாலும் அது ஒரு பாவ காரியமாகவே ஒவ்வொரு மதமும் அதைக் கணிக்கிறது.
8. மனிதன் தனது பலஹீனங்கள், பலமின்மை, குறைகள் ஆகியவைகளை உணர்ந்த போது, கடவுளை மனிதன் தனது கற்பனையில் உருவாக்கினான் என்பது தான் என் கருத்து.
இதன் மூலம், வாழ்க்கையில் எதிர்படும் அனைத்து ஆபத்துக்களையும்,
கடினமான சம்பவங்களையும் வீரத்துடன் எதிர்கொள்ள, மனிதன் கடவுள் நம்பிக்கை மூலம் வீரம் பெற்றான் என்ற கொள்கை பரப்பப் பட்டது.
அத்துடன், மனிதனின் செல்வம் மற்றும் சொத்து ஆகியவைகளை
அவன் அளவுக்கு அதிகமாகச் சேர்க்காமல் அவனை தடுக்கவும் கடவுள் செயல்பட்டார் என்று போதிக்கப்பட்ட்து.
கடவுளின் கோர உருவங்கள், தண்டிக்கும் பண்புகள்
ஆகியவைகள் மனிதனை சமூக விரோதியாக உருவாகாமல் பயமுறுத்தினதாகப் பரப்பப் பட்டன.
ஆபத்தில் இருக்கும் மனிதனை காப்பாற்ற தந்தையாக, தாயாக, அக்காவாக, அண்ணாவாக,
நண்பனாக கடவுள் உருவெடுத்து வந்ததாகவும் நம்ப வைத்தார்கள்.
9. சமூகம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை
எதிர்த்துப் போராட வேண்டும். அந்தப் போராட்டம், உருவ வழிபாடு மற்றும் பிற குறுகிய மதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதைப்
போல் அமைய வேண்டும். இந்த வழியில், மனிதனைச்
தன் சொந்தக் காலில் நிற்கச் செய்ய முயலவேண்டும். உண்மையாகச் சொல்ல
வேண்டு மென்றால், மனிதன் கடவுள் நம்பிக்கையைத் தூக்கி எறிந்து,
தனது தைரியம் மற்றும் வீரம் ஆகியவைகளை மட்டும் நம்பி அனைத்து எதிர்ப்பு
சக்திகளை எதிர்கொண்டு செயல்பட வேண்டும். அது தான் என் மனத்தின்
நிலையாகும்.
என் நண்பர்களே! இந்த எனது கருத்துக்கள்
எனது பகட்டு தற்பெருமை இல்லை. அது என்னை நாஸ்திகனாக உருவாக்கிய
என்னுடன் கூடப் பிறந்த சிந்தனைக் குணம். கடவுள் நம்பிக்கை மற்றும்
ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு பிரார்த்தனை ஆகியவைகளால் என்னுடைய நிலையில் முன்னேற்றத்தை
நான் கொண்டு வர முடியும் அல்லது அது இல்லாவிடில் நான் இன்னும் மோசமாகி விடுவேன் என்ற
எண்ணம் எனக்கு இல்லை. பல நாஸ்திகவாதிகள் அவர்கள் சந்தித்த அத்தனை
துன்பங்களையும் தைரியமாக எதிர்கொண்டதைப் பற்றி நான் படித்துள்ளேன். ஆகையால், நான் இறுதி வரை தலை நிமிர்ந்து - தூக்குத் தண்டனையைக் கூட - வீரனாக இருந்து எதிர்கொள்ள
முயல்கிறேன்.
நான் எவ்வளவு உறுதியுடன் இருகிறேன் என்பதை அறியவும்.
என் நண்பன் ஒருவன் என்னைப் பிரார்த்தனை செய்யச் சொன்னான். நான் என் கொள்கையான நாஸ்திகம் பற்றிச் சொன்னவுடன், அவன்
சொன்னான்: ‘உன் இறுதி நாட்கள் வரும் போது, நீ கடவுள் நம்பிக்கை கொள்வாய்.’ அதற்கு நான் சொன்னேன்:
‘இல்லை, என் நண்பனே! ஒருபோதும்
அது நடக்காது. ஏனென்றால், அப்படி நடந்தால்,
அதை நான் ஒரு கீழ்த்தரமான, அநீதியான செயலாகவே கருதுவேன்.
அந்த மாதிரியான சிறுமையான சுயநலன்களுக்க நான் ஒரு போதும் பிரார்த்தனை
செய்ய மாட்டேன்.’
வாசகர்களே, என் நண்பர்களே!
இது என் தற்பெருமை என்றா கருதுகிறீர்கள்? அப்படி
என்றால், அதையே நான் விரும்பி ஆதரிக்கிறேன்.
Comments