தர்பையும், தர்மமும்
பல வருடங்களுக்கு முன் நடந்தது. திராவிடக் கழகத்தின் பிராமணத்துவேஷம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம்.
சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் நாங்கள் நான்கு நண்பர்களும் இணைபிரியாது இருந்தோம். அதில் எனது நண்பன் ஒருவன் தான் கட்டுக்குடுமியுடன் இருந்தான். அவனுக்கே தன் குடுமியின் பேரில் ஒரு வெறுப்பு. ஆனால் அவன் அப்பா ரொம்பவும் வைதிகம். குடுமியை எடுக்க அவர் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
ஒரு நாள் நாங்கள் பைக்கிராப்ஸ் ரோடில் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது கருப்புச் சட்டை போட்ட தி.க. கட்சியினர் இருவர், 'ஏய்! குடுமி! இங்க வாடா!' என்று என் நண்பனைக் கூப்பிட்டார்கள். நாங்கள் அனைவரும் பயந்து போய் நின்று விட்டோம். ஒருவன் என் நண்பனின் கட்டுக்குடுமியை கத்தரித்தான். மற்றவன் அவனது பூணூலை வெட்டினான். வெட்டிய பூணூலால் வெட்டிய குடுமியை ஒரு கட்டுப்போட்டு என் நண்பனின் கையில் திணித்தான். 'பாப்பாரப் பயல்களே! போங்கடா!' என்று விரட்டினான்.
அங்கிருந்து நாங்கள் நால்வரும் ஒடி என் நண்பனின் வீட்டில்தான் நின்றோம்.
நடந்ததை அறிந்த என் நண்பனின் அப்பா,'நாவிதன் கூலி மிச்சம். இனி குடுமியும் வேண்டாம்!' என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொன்னார்.
என் நண்பனோ, 'நான் குடுமி வைச்சுக்கறேன், அப்பா!' என்று மனதாரச் சொன்னான். ஆனால் அதற்கு அவன் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை.
'தர்ப்பயை வைத்துக் கொண்டு, அதர்மத்தை எதிர்கொள்ள முடியாது! வேண்டாம் குடுமி உனக்கு இனிமேல் அப்பு' என்று அப்புவின் அப்பா சொல்லிவிட்டார்.
எப்போதோ நடந்தது. ஆனால், இப்போதும் நெஞ்சில் வலிக்கிறது
Comments