முருகன் பிறந்த தினமான வைகாசி விசாகம் - 09 - 06 - 2025 - திங்கட் கிழமை
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள்.
தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிராச்சாரியரால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இருப்பினும், காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.
காசிபரிரன் பிள்ளகளான சூரபத்மன் ஆகியவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன் விளக்க, சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான்.
இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
சூரர்கள் வீரமகேந்திரபுரம் என்ற நகரத்தை ஸ்தாபித்து அசுரத்தனமாக அரசாட்சி செய்தனர்.
சூரகளின் ஆட்சியில் தேவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பலவிதமான அன்னல்களை அடைந்தனர். அதற்கு விமோசனம் உண்டாக சிவனின் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்ற, அந்த தீப்பொறிகளை வாயு கங்கையில் சேர்க்க, அதன் வெப்பத்தால் கங்கை நீரும் பாதிக்கப்பட அந்த ஆறு தீப்பொறிகளும் சரவணப் பொய்கையில் உள்ள ஆறு தாமரை மலர்களில் ஆறு ஆண் குழந்தையாகி, அந்த ஆறு அழகான குழந்தைகளும் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட, பிறகு பார்வதி தேவியால் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு முகங்களுடன் முருகன் ஆறுமுக நாயனாராகத் துதிக்கப்பட்டார். முருகன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்ற திரு நாமத்தாலும் துதிக்கப்படுகிறார்.
தாய் பார்வதி தேவி அளித்த சக்தி பெற்ற வேல் ஆயுத்துடன், தகப்பனார் சிவன் தன் சக்தியை பதினொரு உருத்திர்களாக உருவாக்கி, அந்த சக்திகளை படைக்கள ஆயுதங்களாக உருமாற்றி அந்த ஆயுதங்களையும் கொண்டு முருகன் சூரனனை வெற்றி கொண்டார்.
விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தைத், சூரனின் தம்பி தாராகாசுரன் ஆண்டு வருகிறான். அவன் கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், தாரகன்; வீரபாகுவையும், முருகனின் சேனையையும், மாயையால் மலைக்குள் அழுத்தி விடுகிறான். முருகனின் கூர் வேல் மலையைப் பிளக்க, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரனையும் ஆறாம் நாள் திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்கிறார் முருகன்.
இருப்பினும் சூரன் முருகனிடமிருந்து தப்பிக்க மரமாக உருமாற, முருகன் தன் வேலால் மரத்தைப் பிளந்து ஒரு பாகம் சேவலாகவும், மறுபாகம் மயிலாகவும் உருவாகி, சேவலைத் தம் கொடியாகவும், மயிலை தம் வாகனமாகவும் ஆக்கி, சூரனுக்கு அருள் பாலித்தார்.
சூரனின் ஆணவம் திருச்செந்தூர் சமுத்திரத்தில் மறைந்து, அவன் முருகன் அருள் பெற்றதால், திருச்செந்தூர் சமுத்திரத்தில் நீராடினால் பக்தர்களின் ஆணவமும் நீங்கி, முருகன் அருள் பெறுவர் என்பது ஐதீகம்.
கௌமாரம் என்பது முருகனை முழு முதற் கடவுளாகக் கொண்ட இந்து சமயப் பிரிவாகும். கௌ என்னும் சொல்லுக்கு மயில் என்ற பொருளையும் மாரம் என்ற சொல்லுக்கு சூரசம்ஹாரம் நடந்த திருச்செந்தூரில், மரமாக நின்ற சூரனை மயிலாக கொண்டதால் கௌ+மாரம் என்று வழங்கி மயில்வாகனனை கௌமாரம் எனும் வழிபாட்டு முறையை ஷண்மதங்களில் ஒன்றாக ஆதிசங்கரர் அருளினார்.
முருகன் என்ற சொல்லில் உள்ள 'முருகு' என்றதற்கு அழகு, இளமை என்று பொருள். அந்த முருகு என்ற சொல்லில் மெல்லின, இடையின, வல்லின மெய்யெழுத்துக்களுடன் உ என்னும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடன் சேர்ந்து முருகு என்ற சொல் வருகிறது. முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.
இந்து இலக்கியங்களின்படி அவருக்கு 108 பெயர்கள் இருந்தாலும், அவர் கீழ்க்கண்ட பெயர்களால் அதிகமாக அறியப்படுகிறார்.
முருகன் (அழகானவர்), குமரன் (இளமையானவர்), சுப்ரமணியன் (வெளிப்படையானவர்), செந்தில் (வெற்றி பெற்றவர்), வேலன் (வேல் வீரர்), சுவாமிநாதன் (கடவுள்களின் ஆட்சியாளர்), சரவணபவன் (சரவண பொய்கையில் பிறந்தவர்), ஆறுமுகன் அல்லது சண்முகன் (ஆறு முகங்கள் கொண்டவர்), தண்டபாணி (தண்டை வைத்திருப்பவர்), சேயோன் (குழந்தையாகக் காட்சி அளிப்பவர்), அயிலவன் (வேற்படை உடையவர்), குகன் (குகையில் எழுந்தருளியிருப்பவர்), காங்கேயன் (கங்கையால் தாங்கப்பட்டவர்), கதிர்காமன் (கதிரும் காமனும் சேர்த்தவர்), மயில்வாகனன் (மயிலை வாகனமாகக் கொண்டவர்), சோமாசுகந்தன் (சோமன் மகன்), சேந்தன் (சேர்த்து வைப்பவர்), விசாகன் (விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்), சிவகுமரன் (சிவபெருமாளின் திருமகன்), வேலாயுதன் (வேல் ஆயுதமாகக் கொண்டவர்), ஆண்டியப்பன் (ஆண்டியாக நின்றவர்), கந்தன் (தாமரை கந்தகத்திலிருந்து பிறந்தவர்), நீல மயிலின் மீது அமர்ந்திருக்கும் சிவப்புக் கடவுள்.
முருகன் தனக்கு இடதுபுறத்தில் சேவல், வலது கையில் வேல் என்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது வாகனம் மயில், பரவாணி என அழைக்கப்படுகிறது.
முருகனின் முக்கிய தலங்கள் ஆறுபடை வீடுகளாகும். அவைகளின் விளக்கம் இதோ:
• திருப்பரங்குன்றம் -
சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
• திருச்செந்தூர் - அசுரன்
சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று, வெற்றி வாகையைச் சூடிய திருத்தலமிது.
• பழநி - மாங்கனிக்காகத்
தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற
திருத்தலமிது.
• சுவாமிமலை - தன் தந்தை
சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி, தகப்பன்சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலமிது.
• திருத்தணி - சூரனை வதம்
செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
• பழமுதிர்சோலை - ஔவைக்குப் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
முருகன் குறித்த பழமொழிகள்:
• வேலை வணங்குவதே வேலை.
• சுக்குக்கு மிஞ்சிய
வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
• காசுக்குக் கம்பன்
கருணைக்கு அருணகிரி.
• சட்டியில் இருந்தால்
அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
• கந்தபுராணத்தில்
இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
• செந்தில் நமக்கிருக்கச்
சொந்தம் நமக்கெதற்கு?
• திருத்தணி முருகன்
வழித்துணை வருவான்
• வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமானின் அருள் வாய்மை அன்பர்கள் - அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கிட்ட வாய்மை முருகனை மனமாற வேண்டுகிறது.
வேலும் மயிலும் துணை.
Comments