பரசுராமர் தன் தாய்க்கு இழைத்த பெரும் பிழை
பரசுராமர் என்பது பரசு + ராமர் என்ற இரண்டு பதங்களைக் கொண்டதாகும்.
பரசு என்றால் கோடலி. பரசுராமர் என்றால் கோடலி ஆயுதத்தை ஏந்திய ராமர் என்று பொருள் படும்.
பரசுராமர் திரேதா யுகத்தில் பாதி பிராமண குணமும், பாதி க்ஷத்திரிய குணமும் கொண்டு பத்து
அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். ஆகையால் பரசுராமர் பிராமணக்ஷத்திரியர்
என்றும் அழைக்கப்படுகிறார்.
பரசுராமர் சிரஞ்சீயாவார். பரசுராமர் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு
இதிகாசங்களிலும் வருகிறார். அவர் கலியுகத்தின் இறுதியில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான
கல்கி அவதாரத்தின் போது கல்கிக்குக் குருவாக வந்து சகல யுத்தக் கலைகளையும் கற்றுக்
கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன.
பரசுராமருக்கு குருவாக இருந்து அவருக்குச் சகல யுத்த வித்தைகளையும்
கற்றுக் கொடுத்தவர் மஹரிஷி விஸ்வாமித்திரர். விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய அரசராக இருந்து
தவம் செய்து பிராமணராக பிரம்மரிஷிப் பட்டம் பெற்றவர். சத்யவதியின் பேரன் தான் பரசுராமர்.
சத்யவதியின் தாய்க்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர். பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரிடம்
க்ஷத்திரியப்ராமணரான பரசுராமர் ஆயுதப் பயிற்சி பெற்றார். ஆனால் பரசுராமர் கர்ணன் தன்னைப்
பிராமணன் என்று சொல்லி யுத்தப் பயிற்சி பெற்றதைப் பிறகு அறிந்த பிறகு கர்ணனுக்கு தான்
கற்றுக் கொடுத்த வித்தை ஆயுதத்தைப் பிரயோகிக்கும் மிகவும் முக்கியமான தருணத்தில் கர்ணனுக்கு
மந்திரம் மறந்து போய் பயனற்றுப் போக வேண்டும் என்று சபித்து விட்டார். தானே முழுப்
பிராமணரல்லாத போது க்ஷத்திரிய கர்ணனுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது தவறாக நினைத்தது
ஒரு முரண்பாடு என்று கருதத் தோன்றுகிறது.
சிரஞ்சீவீக பரசுராமருடன் சேர்ந்து மொத்தம் ஏழு பேர்கள் சிரஞ்சீத்துவம் பெற்றவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. மற்ற ஆறு பேர்கள்: வியாச பகவான், ஹனுமான், விபீஷணன், பஹாபலி, அஸ்வத்தாமன், கிருபாச்சார்யா ஆகியவர்கள்.
பரசுராமர் தமது அவதாரத்தின் லட்சியம் துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்து
உலகத்தில் தர்மம் தழைக்கச் செய்வதாகும். அதை நிறைவேற்ற பகவான் சிவபிரானைக் குறித்துத்
தவம் இருந்து அவரது கருணையால் சிவனிடமிருந்து பல ஆயுதங்களைப் பெற்றவர் பரசுராமர். அவர்
பெற்ற ஆயுதங்களில் மிகவும் முக்கியமானதும், சக்தி வாய்ந்துதமான ஆயுதம் தான் பரசு என்று
குறிக்கப்படும் கோடலியாகும். இதை பரசுராமர் எப்போதும் தமது வலது கையில் வைத்திருப்பார்.
பரசுராமருக்கு பல நாமாக்கள் உண்டு. ராம ஜமதக்னி, ராம பார்க்கவா,
வீர ராமா, ராம பிருகுபதி என்பவைகள் முக்கியமானவைகள்.
v தேவி பாகவத புராணம்: பரசுராமர் தமது தாயின் துடையிலிருந்து ஒரு பெரும் சக்திவாய்ந்த
ஒளியாகத் தோன்றி, பிராமணர்களை அடக்கி, அடிமைகளாக்கி அதர்ம வாழ்க்கை வாழ்ந்த அனைத்து
க்ஷத்திரிய வீர்களையும் அந்த ஒளி குருடாக்கியது. அதனால் க்ஷத்திரியர்கள் தங்கள் தவறுகளை
உணர்ந்து திருந்தி தூய வாழ்வு வாழ்விற்குத் திரும்புவதாக உறுதி மொழி அளிக்க, அவர்களுக்கு
மீண்டும் கண்பார்வை அளித்து வரம் அளிக்கும் சக்தியை பிறந்த தருணத்திலேயே பெற்றவர் பரசுராமர்.
v விஷ்ணு புராணம்: சத்யவதி காதி என்ற ராஜாவின் புத்திரி. அவள் மிகவும் அழகு
வாழ்ந்தவள். ஏழு சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு மஹரிஷியின் மகனான ரிச்சிகா
சத்யவதியின் அழகில் மயங்கி அவளை தனக்கு மணம் முடிக்க அவளது தந்தையை வேண்டினான்.
ஆனால் வீரமில்லா பிராமணனுக்கு தமது மகளை மணம் முடிக்க விரும்பாமல், ‘1000 வெள்ளைக்
குதிரைகள் – அதுவும் அவைகளின் காதுகளில் ஒன்று பச்சை நிறத்தில் இருக்கும் படியான குதிரைகளைக்
கொண்டு வந்தால் என் மகளைத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று மிகவும் கடினமான
நிபந்தனையைச் சொன்னான். ஆனால் ரிச்சிகாவோ வருணனின் அருளால் இந்த நிபந்தனையைப்
பூர்த்தி செய்து, சத்யவதியை மணம் செய்துகொண்டான். ஆனால் சத்யவதிக்கு குழந்தை
பிறக்க வில்லை. அதே போல் அவளது தாய்க்கும் ஆண் வாரிசு இல்லை. சத்யவதியோ தனக்கு
க்ஷத்திரிய – பிராமண குணங்கள் கொண்ட மகன் பிறக்க வேண்டும் என்றும், சத்யவதியின்
தாயோ தனக்கு பிராமண குணம் உடைய மகன் பிறக்க வேண்டும் என்றும் ரிச்சிகாவிடம் வேண்ட,
அந்த ரிஷியும் இரண்டு அன்னம் பால் ஆகியவைகளால் ஆன உருண்டைகளை உருவாக்கினார்.
ஆனால், தவறுதலாக சத்யவதி தனது அம்மாவிற்கு உருவாக்கிய உணவு உருண்டையை உண்ண
ஜமதக்னியைப் பெற்றேடுத்தார். இதனால் துயரம் கொண்ட சத்தியவதியைச் சமாதானம் செய்து,
அவளது மகன் ஜமதக்னிக்கு க்ஷத்திரிய – பிராமண குணவான் மகனாகப் பிறப்பான் என்று
உறுதி அளித்தார். இது ரேணுகா தேவி பரசுராமரைப்
பெற்றெடுத்ததின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இது சத்யவதியின் கணவர் சப்த ரிஷி பிருகு மஹரிஷியின் மகன் ரிச்சிகா முனிவரின்
விருப்பமாகும்.
v வாயு புராணம்: தீக்கு நிகரான கோபக் குணாளரான ருத்ரர் என்ற சிவபிரானுக்கு யாகத்தில்
ஆஹுதி செய்யும் பிரசாதம், சாந்தச் சொரூபனும்
உலகத்தை ரக்ஷிப்பவருவான விஷ்ணுவிற்கு யாகத்தில் ஆஹுதி செய்யும் பிரசாதம் – ஆகிய இரண்டையும்
ஒரு சேர பரசுராமரின் தாய் உட்கொண்டதால், பிராமண – க்ஷத்திரிய குணங்கள் பரசுராமரின்
பிறவிக் குணங்களாயின.
பரசுராமரின் உருவ அமைப்பைப் பற்றியும் பல வேறுபட்ட வர்ணனைகள் காணப்படுகின்றன.
பரசுராமர் சடாமுடியுடன் இரண்டு கைகள் கொண்டவராகவும், நான்கு கைகள்
கொண்டவராகவும் விவரிக்கப்படுகிறார். பரசு என்ற கோடலியுடன் வில்லையும் இரண்டு கைகளில்
ஏந்தியுள்ளார். நான்கு கைகள் கொண்ட பரசுராமரோ
தமது கைகளில் கோடலி, வில், அம்பு, கேடயம் ஆகியவைகளை ஏந்தியுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார்.
பரசுராமர் தமக்கு
பரசு ஆயுதத்தை அளித்த சிவபிரான் கூடவும், விநாயகக் கடவுளுடனும், ஆயுதக் கலைகளைக்
கற்பித்த தமது சிஷ்யரான பீஷ்மப் பிதாமகருடனும் சண்டையிட்டுள்ளார். மேலும்
பரசுராமரின் அடுத்த ஏழாவது அவதாரமான ராமபிரானுடன் வாக்கு வாதம், எட்டாவது அவதாரமான
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் சகோதர பாவம் – என்று பரசுராமர் பிரலாபம் நீண்டுள்ளது.
1.
சிவபிரான் தமது சிஷ்யன் பரசுராமரின் ஆயுதவித்தை கற்றதைச் சோதிக்க 21
நாட்கள் சண்டை இட்டார். அந்த சமயத்தில் சிவபிரான் தமது திரிசூல ஆயுதத்தை
பரசுராமரின் மேல் பிரயோகிக்க அதைத் தடுக்கும் விதமாக பரசுராமரும் சிவபிரானால்
அளிக்கப்பட்ட கோடலியை சிவபிரானை நோக்கி வீச அது திரிசூலத்தைத் தடுத்து, சிவனின்
இடது நெற்றியில் பட்டு ஒரு தழும்பை ஏற்படுத்தியது. தனது சிஷ்யனின் யுத்தத் திறமையை
மெச்சும் விதமாக அந்தத் தழும்பை தமது நெற்றியில் ஏற்றுக் கொண்டு சிவபிரான் – கண்ட
பரசு – என்று புகழப்படுகிறார். இதன் மூலம் பரசுராமரின் பராக்கிரமத்தை சிவனே அங்கீகாரம்
செய்ததற்கு அடையாளமாகிறது.
- பரசுராமர் பரமசிவனைத் தரிசிக்க கைலாசம் சென்றார்.
அவர் சென்ற தருணம் பரமசிவனும் – பார்வதி தேவியும் ஓய்வில் இருந்ததால் காவலில்
இருந்த விக்னேஷ்வரர் பரசுராமரைத் தடுத்து நிறுத்த, அதனால் கோபம் கொண்டு தமது
கோடலி ஆயுத்ததைப் பிரயோகிக்க, அந்த ஆயுதம் தமது தந்தை அளித்தது என்பதை
அறிந்து, கோடலியை தமது இடது புறம் உள்ள தந்தத்தால் தடுத்தார். இதன் மூலம்
விநாயகர் ஒரு தந்தத்தை இழந்தார். இதனால் விநாயகர் ஏக தந்தர் – ஒரு தந்தம்
கொண்டவர் என்ற நாமகரணம் பெற்றார்.
- மஹாபாரத பாத்திரங்களான பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியவர்கள்
பரசுராமரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன்
என்று பொய் சொல்லி பரசுராமரிடம் பயிற்சி பெற்றதை அறிந்த பரசுராமர் ‘மிகவும்
ஆபத்தான யுத்த நேரத்தில் ஆயுதப் பிரயோகம் செய்யும் ஞானத்தை மறப்பாய்’ என்று
சாபம் கொடுத்தார். பீஷ்மரை அம்பா என்ற இளவரசியைக் கல்யாணம் செய்ய பரசுராமர்
வற்புறுத்தினார். ஆனால் பீஷ்மர் தமது பிர்ம்மச்சரிய பிரதிக்ஞையை
ஞாபகப்படுத்தியும், அதை பரசுராமர் ஏற்காமல் தமது சிஷ்யரிடம் சினம் கொண்டு
சண்டை செய்தார். ஆனால் அதில் ஒருவருக்கும் வெற்றி தோல்வி இன்றி சண்டை
சமாதானத்தில் முடிந்தது. பீஷ்மரை அம்பா மன்னிக்கும் படி பரசுராமர் சொல்லியும்
கேட்காமல் தானே தன் தவவலிமையால் பீஷ்மரைப் பழிவாங்குவேன் என்று அம்பா சபதமிட்டு
காட்டிற்கு தவம் செய்யப் புறப்பட்டுப் போய்விட்டாள்.
- சிவ தனுசை முறித்து ராமர் சீதையை மணம் முடித்ததை
அறிந்த பரசுராமர், ராமர் சீதையுடன் அயோத்திக்கு வந்தவுடன் அங்கே சாரங்கா என்ற
தமது தந்தை ஜமதக்னி அளித்த வில்லை நாணேற்றச் சொன்னார். சாரங்கா என்பது விஷ்ணு
தனுசாகும். ஆகையால் அந்த சாரங்கா வில் ராமர் கைபட்டவுடனேயே தானாகவே நாண் ஏற்றப்பட்டுவிட்டது.
இதைப் பார்த்த பரசுராமர் ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதை உணர்ந்தார்.
விஷ்ணுவை வலம் வந்த பரசுராமர் ‘நான் மகேந்திர மலைக்குத் தவம்
செய்யப்போகிறேன். அனுக்கிரஹிக்க வேண்டும்’ என்று ராமரை வணங்கினார் என்று
புராணங்கள் விவரிக்கின்றன.
- சாண்டிபானி ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் போது, பரசுராமரும் அங்கு வந்திருந்தார். பரசுராமருக்கு கிருஷ்ணர் பணிவிடை செய்தார். அதனால் மிகவும் திருப்தி அடைந்த பரசுராமர் கிருஷ்ணருக்கு சுதர்சன சக்கர ஆயுதத்தை அளித்தார்.
பரசுராமரின் மனைவி பெயர் தாரணி. ஆனால் அவரைப் பற்றிய விவரம் அதிகம் சொல்லப்படவில்லை. பரசுராமர் ஒரு கட்டப் பிரம்மசாரி என்று தான் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகிறது. விஷ்ணு புராணத்தில் தான் பரசுராமரின் மனைவி தாரணி என்ற குறிப்பு உள்ளது.
ஏன் பரசுராமருக்கு க்ஷத்திரிய
வம்சத்து அரசர்களின் மேல் இவ்வளவு கொலை வெறி எண்ணங்கள் என்ற கேள்வி எழலாம்.
அதற்குக் காரணம் கார்த்தவிராய அர்ஜுன் என்ற நர்மதா நதி ஓடும் மஹிஷ்மதியைத்
தலைநகராகக் கொண்ட ஹைஹயாஸ் ராஜ்யத்தை ஆளும் அரசன் பரசுராமரின் தந்தை ஜமதக்னியைக்
கொலை செய்தது தான் முக்கிய காரணம்.
கார்த்தவிராய அர்ஜுனன் தமது பரிவாரங்களுடன்
ஜமதக்னி ஆஸ்ரமத்திற்கு வந்தான். அவர்கள் அனைவருக்கும் உணவளித்து உபசரித்தார். ‘இது
எப்படி சாத்தியமானது?’ என்று அரசன் வினவ அதற்கு ஜமதக்னி தமது ஆசிரமத்தில்
இருக்கும் காமதேனு பசுவின் மகளான சுரபி (நந்தினி) பசு தான் காரணம் என்று
விளக்கினார்.
உடனே அரசன் அந்தப் பசுவை தனக்கு
கொடுக்கும் படி வற்புறுத்த, அதற்கு ஜமதக்னி மறுக்க, ஜமதக்னியை கொலை செய்து, சுரபி
என்ற தெய்வாம்சம் கொண்ட பசுவைப் கவர்ந்து சென்றான்.
ஜமதக்னியை 21 முறை வாளால் வெட்டினான் என்றும், ஜமதக்னியின் தர்ம பத்தினி 21 முறை துக்கம் தாங்காமல் தன் மார்பில் அடித்துக் கொண்டாள் என்றும் சொல்லப்படுகிறது. பரசுராமர் இந்த கொடூரமான கொலையை அறிந்தவுடன் ‘இந்த மண்ணுலகில் இருக்கும் க்ஷத்திரியர்களை 21 முறை படையெடுத்து க்ஷத்திரிய வம்சத்தையே ஒழிப்பேன்’ என்று சபதமேற்றார்.
கார்த்தவீராய அர்ஜுனனுடன்
ஹைஹாயாஸ் க்ஷத்திரிய அரச வம்சத்தினர்கள் அனைவரையும் தமது கோடலியால் கொலை செய்து,
தமது தந்தையின் கொலைக்கு பிராயச் சித்தம் தேடினார்.
க்ஷத்திரியர்கள்
சிங்கத்தைக்கண்டு பயப்படும் யானைகள் போல், கருடனைக் கண்டு கலங்கும் பாம்புகள்
போல், பரசுராமரின் கோடலையைக் கண்டு அஞ்சினர். ராமபிரானின் மனு வம்சம், இஸ்வாகு
வம்சம் ஆகிய வம்சத்து க்ஷத்திர்யர்கள் தான் பரசுராமரின் கோடலிக்குத் தப்பிய
க்ஷத்திரிய வம்சத்தினர்களாவர்.
க்ஷத்திரியர்கள் மற்ற
குலத்தினர்களை – குறிப்பாக பிராமணர்கள் நித்திய கர்மா, யாகம் செய்ய முடியாமல்
தடுக்கும் வண்ணம் – கொடுமைப் படுத்தி வந்தனர். இதைத் தடுக்கவே விஷ்ணு பகவான்
ஆறாவது அவதாரமாக பரசுராமர் அவதாரம் எடுத்து உலகத்தின் தர்மத்தை நிலை நாட்டினார்.
அதற்கு பரசுராமருக்கு உருதுணையாக இருந்தது சிவ பிரான் அளித்த அவரது கோடலி ஆகும்.
அந்தக் கோடலி தம் அன்புத்
தாயையும் கொலை செய்யும் படி அமையும் என்று பரசுராமர் நினைத்திருக்கமாட்டார். ஆனால்
தமது தந்தையும், மஹா ஞானியுமான ஜமதக்னியின் ஆணையால் இந்தக் கொடூர செய்கையை
பரசுராமர் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அப்படி என்ன தான் பரசுராமரின்
தாய் ரேணுகா தேவி செய்து விட்டாள்?
ஒரு சிறிய மனச் சஞ்சலம்
பட்டதற்கு ஜமதக்னி தமது தர்ம பத்தினி உயிரை விட வேண்டும் என்று விரும்பியது
மிகவும் கொடூரமான தண்டனை என்று தான் சாதாரணமாக நினைக்கத் தோன்றும். நித்திய
கர்மாக்கள் செய்யக் கொண்டுவரும் நீர் அதைக் கொண்டுவருபவரின் மனநிலையால்
பாதிக்கப்பட்டு, கர்மாவும் குறைபடும் என்பதையும் நினைத்துப் பார்க்க
வேண்டியதாகிறது.
ரேணுகா தேவி தினமும் தமது
பர்த்தாவின் கர்மாவிற்கு தூய நீரை ஒவ்வொரு நாளும் புதிதாகக் களிமண்ணில் குடம்
செய்து, பாம்பைக் கயிறாக மாற்றி கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி களிமண்
குடம் செய்யும் போது நதி நீரில் ஒரு கந்தர்வன் தேரில் ஆகாய மார்க்கமாகச் செல்வதைப்
பார்த்து ‘எவ்வளவு அழகான வாலிபன்?’ என்று ஒரு நிமிட நேரம் மனம் பேதலித்தாள்.
அதனால் ரேணுகா தேவியால் களிமண் பானை செய்ய முடியாமல் தவித்தாள். இதை தமது ஞான
திருஷ்டியால் அறிந்த ஜமதக்னி தமது நான்கு பிள்ளைகளை ஒவ்வொருவராக ரேணுகாவின் தலையை
வெட்ட உத்திரவிட்டார். அப்போது பரசுராமர் இல்லை. நான்கு பிள்ளைகளும் தந்தையின்
கட்டளையை நிறைவேற்ற மறுத்து விட்டனர். அவர்களைக் கல்லாக சபித்துச் சாபமிட
அவர்களும் கல்லாகி விட்டனர்.
அப்போது வந்த பரசுராமரிடம் ‘உன்
தாயின் தலையைக் கொய்து, கொலை செய்’ என்று சொன்னவுடன் ‘தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை’ என்ற கொள்கைப் படி நதிக்கரையில் பயந்து இருந்த தன் தாயின் தலையை தமது
கோடலியால் வெட்டிக் கொலை செய்து விட்டார்.
தமது மகன் தன் சொல்லைத்
தட்டாமல் செய்ததற்குப் பரிசாக இரண்டு வரங்களைக் கேட்கச் சொன்னார்.
தமது தாய் அவருக்கு நடந்தது
ஒன்றும் தெரியாமல் மறந்த நிலையில் உயிருடன் வரவேண்டும் என்று ஒரு வரமும், தமது நான்கு தம்பிகளும் உயிருடன் பழையது
ஒன்றும் நினைவு வராமல் பிழைத்து வர வேண்டும்
என்று இன்னொரு வரமும் கேட்க அவைகளை அளித்தார் ஜமதக்னி.
அவர்கள் அனைவரும் உயிருடன்
பிழைத்து எழுந்தனர்.
பரசுராமருக்கு அன்னையைக் கொன்ற
நினைவு மனத்தை வாட்டியது.
உடனே பரசுராமர் காட்டிற்கு
அன்னையைக் கொன்ற பாவம் நீங்க தவம் செய்யச் சென்று விட்டார். பல வருடங்கள் காட்டில்
தவம் செய்த பிறகே ஆஸ்ரமத்திற்கு வந்தார்.
பரசுராமரின் கோடலியில் அவரது
தாயின் ரத்தம் அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டது. அந்த ரத்தக் கறையைப் போக்க பல
ஆறுகளின் நீரில் முக்கினாலும் முழுவதும் ரத்தக் கறையைப் போக்க முடியவில்லை.
கடைசியாக கர்நாடகாவில் உள்ள ஷிமோகா நகரத்தில் தீர்த்தஹலி என்ற கிராமத்தில் ஓடும்
துங்கா நதியின் நீரினால் கோடலியின் முழு ரத்தக் கறையும் நீங்கியது. அதன்
ஞாபகார்த்தமாக பரசுராமர் சிவனுக்கு ஒரு கோயில் அமைத்து, பூஜை செய்து வழிபட்டார். அந்த
இடம் ராமகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோடலியால் 21 க்ஷத்திரிய
வம்சத்தினர்களை கொன்ற ரத்தம் ஐந்து குட்டைகளாக உருவாகியது. அவைகள் அனைத்தையும்
ஒன்று சேர சமந்த பஞ்சகா என்று பவித்திரமான குட்டைகளாக கருதப்படுகின்றன. இந்த
சமந்தா பஞ்சகா குருஷேத்திரத்தில் உள்ளது. குருஷேத்திர யுத்தம் நடப்பதற்கு முன்
பஞ்ச பாண்டவர்கள் இந்த ரத்தக் குட்டைகளுக்கு மதச் சடங்குகள் செய்தார்கள் என்று
சொல்லப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் அனுக்கிரகமானிகா பர்வா- சங்கரஹ பர்வா
ஆகிய புராணங்களில் உள்ளன.
இதில் என்ன ஆச்சரியம் என்றால்
பரசுராமரின் தந்தையும் ‘பரசுராமா! க்ஷத்திரிய வம்சம் அனைத்தையும் பூண்டோடு
ஒழித்தது தர்ம்மல்ல. பாவமாகும். அதைப் போக்குவதற்கு காட்டிற்குச் சென்று தவம்
செய்’ என்று அறிவுரை கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் தமது ஆயுதமான கோடரி
மூலம் செயல்பட்ட பரசுராமர் கொலை செய்த பாவம் நீங்க நீண்ட காலம் தவம் செய்ய
காட்டிற்குச் சென்று விட்டார்.
தமது கோடலியை மேற்குத்
தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடலில் எறிந்தார். அவர் எறிந்த நிலம் முக்கியமாக
கேரளமாநிலம் உருவாகக் காரணமாகியது. ஆகையால் தான் கேரளாவை பரசுராம க்ஷேத்திரம்
என்று சொல்கிறார்கள்.
பரசுராமர் தம் தாயைக் கொன்றதை
அவரே சரி என்று சாதிக்க வில்லை. தவறு என்றும், பாவம் என்றும் அந்த அவரது செயலை
அவரே மதிப்பிடுகிறார்.
தந்தை செய்கை தவறு என்று
பரசுராமர் சொல்லவில்லை. ஏனென்றால் அவரது தந்தையான ஜமதக்னி அவருக்கு குருவுமாக
இருந்துள்ளார். தந்தை – குரு என்ற இரு ஸ்தானங்களை வகிக்கும் ஜமதக்னியை தராசில்
வைத்து எடை போட பரசுராமருக்கு விருப்பமில்லை என்று தான் கணிக்க வேண்டும்.
‘ஜமதக்னியே தமது தர்ம
பத்தினியைத் தண்டிக்க வேண்டியது தானே!’ என்ற கருத்தும் எழ வாய்ப்புண்டு. ஆனால்
இதற்குப் பதில் தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏன் ? – அதற்கு அவசியமும் இல்லை
என்று கூட ஒதிக்கி விடலாம்.
எப்படி இருப்பினும், பரசுராமர்
தமது தூய தாயை தமது கோடலியால் வெட்டியது ஒரு பிரம்மாண்டப் பிழை என்று முடிவு
கட்டுவது தான் நியாயமான தீர்ப்பாகும்.
கேரளாவில் உள்ள பரசுராமரின் கோயில்
Comments