வைகுண்ட ஏகாதசி – 23 டிசம்பர் 2023 – சனிக்கிழமை
சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த சிறப்பு தினமாகும். அந்த
நாளில் இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி வருவது சிறப்பு அம்சமாகும். ஆகையால் அந்த
பெருமாள் தினமான வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாள் ஸ்தோத்திரங்களைப்
பாடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்து, சொர்கவாசல் வழியாக
வருவது அந்த வருடம் பூராவிலும் நமது க்ஷேமத்திற்கு உத்திரவாதம் பெருமாளிடம்
பெற்றதற்குச் சமம்.
ஒரு வருடத்தில் ஏகாதசி 24 முறை வருகிறது. அதாவது ஒவ்வொரு
மாதத்திலும் இரண்டு ஏகாதாசிகள் வருகின்றன. அந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பது, பகவான்
விஷ்ணுவை நினைத்து மேற்கொள்ளப்படும் உபவாசமாகக் கருதப்படும்.
ஏகாதசி என்றால் ஏக் + தசம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது ஒன்று + பத்து என்ற பொருளில் ஏகாதசி குறிப்பிடப்படுகிறது. 11 நாட்களுக்கு
ஒரு முறை ஏகாதசி வருவதை இது குறிக்கிறது.
24 ஏகாதசிகள் இருப்பினும், நான்கு ஏகாதசிகள் முக்கிய விரத
நாட்ககளாக் கருதப்படுகின்றன.
நிர்ஜலா ஏகாதசி – தண்ணீர் கூடப் பருகாமல் விரதம் இருத்தல்
சஜாலா ஏகாதசி – தண்ணீர் - பழங்கள்,ஆகியவைகளை உட்கொண்டு
விரதம் இருத்தல்.
ஃபராலி ஏகாதசி – தண்ணீர், பழங்கள், பால் ஆகியவைகளை
உட்கொண்டு விரதம் இருத்தல்.
வைகுண்ட ஏகாதசி – நிர்ஜலா ஏகாதசி போல் தண்ணீர் மட்டும்
அருந்தி விரதம் இருப்பது சிறப்பு.
நிர்ஜலா ஏகாதசியை
பாண்டவா பீமா ஏகாதசி என்றும் போற்றுகிறார்கள். ஏனென்றால் மஹாபாரத பீமன் நீரே
அருந்தாமல் ஏகாதசி விரதம் இருந்து அதன் மூலம் 24 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன்களை
இந்த ஒரே நீர்ஜலா ஏகாதசி விரதம் இருந்து பெற்றதாக வியாச முனிவரின் பிரம்ம வைவர்த்த
புராணம் விவரிக்கிறது.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியா
விட்டாலும், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது
விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் இந்த
ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களையும் நீக்கக் கூடியது.
ஏகாதசி என்பவர் விஷ்ணுவின் உடலிருந்து தோன்றிய பெண் சக்தித் தெய்வமாவார்.
தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் துன்புறுத்தி
வந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன்
விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது
முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அந்த
சக்தி தேவதை முரனுடன் போரிட்டு வென்றாள்.
முரன் என்ற அசுரனை வென்ற அந்த
சக்தி தெய்வத்திற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டி, அந்த அசுரன்
அழிந்த நாளையும் ஏகாதசி என்று அழைத்து, அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்றாகி, அந்த ஏகாதசிதியை தம்
அம்சமாக்கி மஹா விஷ்ணு அருள்பாளித்தார்.
அத்துடன் அந்த ஏகாதசியில் விஷ்ணு தமது பக்தர்களுக்கு
மட்டுமின்றி, தம்மை எதிர்த்துப் போரிட்ட அசுரர்களுக்கும் சேர்த்து சொர்க்கம் அளிப்பதற்காக
தமது வைகுண்டத்தின் சொர்க்கலோகக் கதவுகளைத் திறந்து அதன் வழியாக அவர்கள் அனைவருக்கும்
அவர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருப்பினும் அவைகளைப் போக்கி முக்கி அளித்த பெருமாளாவார்.
அதைத் தான் சொர்க்க வாசல் திறப்பு என்று பெருமாள் கோயில்களில் அந்த வைகுண்ட ஏகாதசி
நாளில் மிகவும் முக்கியமான சடங்காக அனுசரிக்கப்படுகிறது.
ஆகையால் அந்த ஏகாதசி தினத்தில்
விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும்.
இந்த நேரத்தில் உத்தான ஏகாதசியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது
நலம். ஆஷாட சுக்ல ஏகாதசி அல்லது தேவஷயானி ஏகாதசி பிறந்தவுடன் பாற்கடலில் பகவான் விஷ்ணு
நான்கு மாதங்கள் தூங்குவதாக ஐதீகம். பகவான் விஷ்ணு ஆஷாட சுத்த ஏகாதசியன்று (ஜூலை - ஆகஸ்ட்) ஆரம்பித்த நான்கு மாத உறக்கத்திற்குப் பிறகு விழித்த
நாளைத் தான் உத்தான ஏகாதசி என்று அழைக்கிறார்கள்.
விஷ்ணு பகவான் ஜூன் 29-ம் தேதியிலிருந்து பாற்கடலில் உறங்கி பிறகு
முழித்த நாள் இந்த வருடத்தில் வரும் நவம்பர் 23-ம் தேதியைத் தான் உத்தான ஏகாதசி என்று
கொண்டாடுகிறார்கள்.
அந்த நான்கு மாத காலத்தை சாதுர்மாஸ்ய காலம் என்று அழைக்கிறார்கள்.
அந்த நான்கு மாதங்களில் வேறு எந்த சுப காரியங்களையும் மேற்கொள்ளாமல் விஷ்ணு ஸ்மரணையில்
காலம் கழிப்பார்கள்.
விஷ்ணு பகவான் விழித்து வரும் ஏகாதசிதான் வைகுண்ட
ஏகாதசியாகும். இதிலிருந்தே அதன் சிறப்பை அறியலாம்.
விஷ்ணுவின் மலரடி போற்றுவோம் – விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கி
புண்ணியாத்மாக்களாக வாழ்வில் மகிழ்வோம்.
வாய்மை அனைவருக்கும் விஷ்ணுவின் அருள் கிட்ட வேண்டுகிறோம்.
Comments