மங்களகரமாக பக்தி மகுடத்தைச் சூடும் மார்கழித் திங்கள்
மார்கழி மாதம் பக்தி மாதம். எல்லா மாதங்களிலும் பக்தியோடு பகவானைத் துதிக்கலாம்.
ஆனால், மார்கழி மாத பக்தியோ மிகவும் சிறப்பானது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மாதங்களில்
தனக்குப் பிடித்த மாதம் மார்கழி என்று பகவத் கீதையில் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறான்.
ஆகையால் மார்கழி கிருஷ்ணனின் மாதம் என்று சொல்லலாம்.
பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள பக்தியோகம் ஸ்லோகங்களை அந்த புனிதமான மார்கழியில்
ஓதி ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ் பாடி ஸ்ரீ கிருஷ்ணனின் பாதம் மனத்தில் பதிய துதிப்போர்க்கு
அனைத்து செளபாக்கியங்களும் கிட்டும்.
பகவத் கீதையில் பக்தி யோகம் 20 ஸ்லோகங்களைக் கொண்டு 12-வது அத்தியாயமாக
மிளிர்கிறது.
ஆன்மிகத்திற்கு பக்திதான் சிறந்த மார்க்கம் என்பது குருவிற்கெல்லாம் குருவாக
இருக்கும் பகவான் கிருஷ்ணனின் அமிர்த்த வாக்கியமாகும்.
“நான்கு வகையான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள்” என்று சொன்ன கிருஷ்ணன்
அதை பகவத் கீதை பக்திமார்க்கத்தில் இப்படி விளக்குகிறான்:
“ஆபத்தில் தத்தளிக்கும் மனிதன், அறிவைத் தேடி அலையும் மனிதன், செல்வத்தை
அடைய முயலும் மனிதன், ஞான மார்க்கத்தை தேர்வு செய்த மனிதன் – என்ற நான்கு வகையான மனிதர்களில்
ஞான மார்க்கத்தை தேர்வு செய்து பயணிக்கும் மனிதன் தான் எனக்கு மிகவும் பிரீதியானவன்.
“என்னைப் பக்தி செய்ய அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. என்னிடம் வைத்துள்ள
பக்திதான் முக்கியம்.
“பக்தியோடு ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம் அதுவும் வேண்டாம் வெறும் ஜலம் ஆகியவற்றில்
எதையேனும் ஒன்றை பக்தி சிரத்தையுடன் எனக்கு அர்ப்பணித்தால் அதுவே உன்னை என் பக்தனாக
ஆக்கிவிடும்.”
மார்கழியின் குளிரைப் பொருட்படுத்தாது, வைகரைத் துயிலெழுந்து பாசுரங்கள்
பல பாடி, பஜனைக் கோஷ்டியுடன் பக்திப் பாடல்களுடன் வீதி வலம் வந்து, ஊருக்கே பக்தியைப்
பரப்பும் கங்கர்யத்தைச் செய்யும் அந்த மார்க்கழி மாத பக்தர்கள் தான் பகவான் கிருஷ்ணன்
நேசிக்கும் உத்தம ஆத்மாக்கள்.
ஆண்டாள் திருப்பாவை – மாணிக்க வாசகரின் திருவெம்பாவை ஆகிய பாடல்களையும்
மனமுருகிப் பாடி திருமால் – சிவபிரான் ஆகியவர்களின் அருளுக்குப் பாத்திரமாகும் பக்திமான்களாக
அந்த ஒரு மாதம் இருந்தாலே அந்த ஆண்டு முழுவதும் மன அமைதியும், ஆனந்த பரவச நிலையும்
அடைவது திண்ணம்.
இதுவும் பக்தி யோகத்தின் ஒரு அங்கம் என்பதை மனத்தில் கொண்டு, கூட்டுப்
பிரார்த்தனையாக பக்தியோடு நாம சங்கீர்த்தனம் செய்து பகவான் அருள் பெருவோமாக.
வாய்மை அன்பர்களுக்கு அந்த அருள் கிட்டப் பிரார்த்திக்கிறேன்.
Comments