வெள்ளத்தை வெல்ல முடியாமல் தவிக்கும் ஸ்டாலின் அரசு

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ள பல துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கத் தவறினால் அதனால் தவிர்க்கக் கூடிய பேரிழைப்புகள் – மனித உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள் – அதிக அளவில் ஏற்படும். மேலும் கழுவு நீர்க் கால்வாய்களைத் தூர் எடுத்து மழை நீர் எந்த தடைகளும் இன்றி எப்போதும் செல்லும் படி வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். மேலும் இருக்கும் குளம், ஏரி, ஆறு ஆகியவைகள் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும்.

இவைகளை ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால், கிராம – நகர வளர்ச்சித் திட்டங்கள் இந்த நீர் வேளாண்மைகளை முன்னிலைப் படுத்தி செயல்படுத்த வேண்டும். சென்னை நகரத்தில் பல நீர்த் தேக்கங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள், நினைவாலயங்கள் என்று தவறான வழிமுறைகளை தமிழக அரசுகள் கடைப்பிடித்து வந்துள்ளன. உதாரணாத்திற்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீர் தேக்கம் இருந்த இடமாகும். அதைப் போல் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து அல்லது அவர்களையும் பணத்திற்கு அடிமையாக்கி நகரத்தையே நரகமாக்கும் இழி செயலில் ஈடுபட்டவர்கள் தான் அரசின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களாக மாறிய பின் இயற்கைப் பேரிடர்கள் வரும் போது அவைகளை எதிர்கொள்ளும் திறமையும், நேர்மையும், தீரமும் இல்லாத அரசியல்வாதிகளாகத் தான் தமிழக அரசில் கோலோட்ச்சி இருக்கிறார்கள்.

இரண்டு பெரிய நாட்டையே கெடுக்கும் செயல்களான – ஒன்று இலவசங்கள், இரண்டு டாஸ்மாக்கை அரசே விற்பனை செய்து பணம் பண்ணுவது – ஆகியவைகள் மக்களை நல் வழிப்படுத்தாமல் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருக்கும் அரசாக அமைய வழிவகுக்கிறது.

இந்த இயற்கையின் வெள்ளப் பெருக்கு உண்மையிலேயே மிகவும் உக்கிரமான ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அரசு இயந்திரம் அதை எதிர்கொள்ளும் அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தவறு செய்து விட்டது என்பது நிதரிசன உண்மை.

எப்போதும் ஓட்டு, தேர்தல் வெற்றி, குற்றம் சொல்லல் – என்ற மன நிலையில் தான் ஸ்டாலின் விடியல் அரசு செயல்படுவதாகத் தெரிகிறது.

ஸ்டாலின் அரசு 6000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னாலும் அதை நேரடியாக அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கும் வழி இருந்தாலும், அதை விடுத்து நேரிடையாக மக்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது எதற்காக என்று தெரியவில்லை. இதை வைத்து அரசியல் விளம்பரம் தேடுவதாகத் தான் தெரிகிறது.

அத்துடன் இந்த இக்கட்டான இயற்கைப் பேரிடரைச் சமாளிக்கும் தருணத்தில் ஸ்டாலினும், அவரது இளவல் உதயநிதியும் மத்திய அரசையும், மத்திய அரசின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் நிந்தித்தும் பகைத்தும் மீடியா மூலம் அறிக்கைகள் விடுவது ஒரு நல்ல அரசிற்கு அழகல்ல.

‘நிதி மந்திரி அவர்களே ! நீங்கள் தமிழக அரசுக்கு இந்த இயற்கைச் சீற்றத்தின் போது குறைவாகக் கொடுக்கிறீர்கள். இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ..’ என்ற தோரணையில் பொதுவெளியில் குற்றம் சாட்டி உள்ளார்.

அப்படிப் பேசுவது தவறு என்று சுட்டிக் காட்டிய பிறகும், இளவல் உதிர்த்த வார்த்தைகள்: ‘நான் பெரியார் பாஷை பேசுவேன். அண்ணா பாஷை பேசுவேன். தாத்தா பாஷை பேசுவேன். அப்பன் வீட்டுப் பணமா என்பது ஒன்றும் கெட்ட வார்த்தைகளில்லையே ! இது சூடான பெரியார் பாஷையாக இருக்கலாம்..’

இந்தப் பேச்சுக்களால் மக்களுக்குத் தான் கஷ்டம். இளவல் அரசியலை ஒரு சினிமா போல் நினைத்துச் செயல்பட்டால் அதனால் வரும் இழப்பை அவரால் சரிசெய்ய முடியாது அரசியலில் தோல்வி அடையும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த இயற்ச்கைச் சீற்றத்தால் பெரும் சேதம் கன்யாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் என்று தென் மாவட்டங்களில் அதிகம்.

இந்த இழப்புகளைச் சரி செய்ய பல மாதங்கள் ஆகலாம். இனியாவது தமிழக அரசு வளர்ச்சித் திட்டங்களில் முனைப்பாக இருந்து செயல்பட வேண்டும். இயற்கை வளங்களையும் முறைப்படி பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.

எதையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி, அதில் எந்தவிதமான குறைகளும், ஊழல்களும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

நாடு என்பது நிர்ந்தரம். அரசு என்பது மக்கள் விரும்பும் இயந்திரம். மக்களை நேர்மையாக வாழ வழிக்கும் திட்டங்களையே செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து, நேர்மையாக உழைத்து முன்னேறும் உள்ளம் கொண்டவர்களாக உருவாக்கும் அரசியல் தலைவர்களாக தேர்வாக வேண்டும்.

இப்போது கோலோட்சும் அரசியல் தலைவர்கள் அந்த அளவுகோல்களுக்கு முற்றிலும் நேர்எதிரிடையாகத் தான் செயல்படுகிறார்கள். மக்கள் செய்த தவறால் மக்களே பல இழப்புகளால் இன்னல் படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இனியாவது மக்கள் விழிப்புடன் இருந்து தூய அரசியலுக்கு ஆதரவு தரவேண்டும்.

ஜாதி பாராமல் நேர்மையானவர்களைத் தேர்வு செய்து தமிழ் நாட்டை  செழிப்பான வளர்ச்சியான நிலைக்குக் கொண்டு வர அனைவரும் பாடுபடுவோமாக.

 



 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017