ஆருத்ரா தரிசனம் செவ்வாய்க்கிழமை டிசம்பர்-26, 2023 - (மார்கழி 10)
வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் அம்சமான நடராஜரை ஆருத்ரா நன் நாளில் வணங்குவது வாழ்வில் நலன்கள் பல பெற்று உன்னத நிலையை அடைவதற்குச் சிறந்த வழியாகும்.
ஆடி முதல்
மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி
பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம்
என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். மார்கழி மாத
திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில்
பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தமிழ்
மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில்
ஆருத்ரா என்று பெயர்.
இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.
அதுவும்
சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கிய ஆராதனை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பழமையான சிவன் கோயில்கள் நிறைய உள்ளன. அவற்றில் சமயக்குறவர்கள் என்று கூறப்படும் நால்வரால் பாடப்பட்ட 276 சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதாவது முதல் முதலில் பாடல் பெற்ற சிவாலயமாக இந்த உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் புகழப்படுகிறது. இதன் காரணமாக சிவபெருமான் இங்கு உண்பதற்கும், உறங்குவதற்கும் இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.
இயற்கையாகவே நவகிரகங்களில்
ஒன்றான பச்சை மரகதம் மென்மை தன்மை கொண்டது. அதாவது ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாத தன்மை கொண்டது. மேளம் முழங்கப்பட்டால்
மரகதம் உடைபடும், ஆகவே உத்தரகோசமங்கை
மங்களநாதசுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சிலை மரகதம் கற்களால் செய்யப்பட்டதால் ஒலி, ஒளி அதிர்வுகளிலில் இருந்து விக்ரகத்தை பாதுகாக்க சந்தனம்
பூசி பாதுகாப்பாக பராமரிக்கின்றனர்.
இதன் காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தகோடிகள் அங்குள்ள இறைவனை தரிசனம் செய்கின்றன. அதாவது அந்த சிவாலயத்தில் அன்று சாமி விக்ரகத்திற்கு சந்தனம் கலைக்கப்பட்டு அன்று இரவு மீண்டும் சந்தனம் பூசப்படுகிறது. அதாவது அன்று 32 வகையான அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின் மீண்டும் சாமி சிலைக்கு சந்தனம் பூசப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபட்டால் நம் வாழ்வில் நன்மை நடக்கும் என்று நம்பப்படுகிறது.
திருவாதிரை விரதம் என்பது
தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில்
திருவாதிரை விரதம் எடுத்து, சுமங்கலிகள் தங்கள் தாலியினை
மாற்றி சிவபெருமானை வழிபட்டால், தங்களின் கணவருக்கு தீர்க்க
ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விரதத்தை மாங்கல்யம் நோம்பு என்றும்
சொல்வார்கள்.
இந்த விரதத்தை பூர்த்தி செய்ய 18 வகையான காய்கறிகளில் சமைத்து, திருவாதிரை களி செய்து, பச்சரிசியில் அடை செய்தும் திருவாதிரையைக் கொண்டாடுவார்கள்.
சிவபெருமானின்
பஞ்ச சபைகளான திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி
தாமிர சபை, திருக்குற்றாலம்
சித்திர சபையாக போற்றப்படகிறது. இந்த ஐந்து சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.
நடராஜரின் புன்னிய தினமான ஆருத்ரா அன்று அவரது திருக்கோலத்தைச்
தரிசித்து சகல செளபாக்கியங்களும் பெற்று நீண்ட ஆயுள் – ஆரோக்கிய வாழ்வு அருள வேண்டுவோமாக.
வாய்மையின் சார்பாக வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் நடராஜரின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.
விஷ்ணு அருளும், சிவன் அருளும் கிட்டிய பிறகு ஒரு
குறையும் இனி கிடையாது.
Comments