பாரதம் ஒளி - அருள் ஆகியவைகளால் திகழும் நவம்பர் மாதம்


12.11.2023 தீபாவளிப் பண்டிகை

 

13.11.2023 கந்தசஷ்டி ஆரம்பம்

 

18.11.2023 கந்தசஷ்டி, சூரஸம்ஹாரம்

 

25.11.2023 பரணி தீபம்

 

26.11.2023 திருக்கார்த்திகை தீபம்

 

27.11.2023 ஸ்ரீ பஞ்சராத்திர தீபம்

 

-    என்று வரிசையாக இந்துப் பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. இதற்கு சற்று சில நாட்களுக்கு முன்பு தான் குதூகலமான நவராத்திரிப் பண்டிகைகள் – புகழ் பெற்ற தாண்டியா நடனங்கள், காளி பூஜைகள் என்று பாரதம் முழுவதும் ஒரே கோலாகலமாக ஹிந்து மதத்தின் சிறப்பு உலகரிய அறியச் செய்துள்ளன.

அதனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

 

தீபாவளி வரலாறு

 

14 ஆண்டுகள் தனது தகப்பனாரின் வாக்கை நிறைவேற்ற அயோத்தியைத் துறந்து, காட்டில் கழித்த பிறகு ராமர் தமது பத்தினி சீதாதேவி – இணைபிரியா அன்புத் தம்பி லக்ஷ்மணனுடன் அயோத்திக்கு வந்த நாள் திபாவளித் திருநாளாக அயோத்தி மாநகரமே தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமச்சந்திர மூர்த்தியைக் கொண்டாடும் தீபத் திருவிழாவாகும்.

மகிஷா என்ற அரக்கனை துர்கா தேவி அழித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

சீக்கியர்கள் தங்கள் ஆறாவது குருவான ஹர்கோபிந்த் சிங் 1619 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடுகிறார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், சீக்கியர்களுக்கான புனிதமான இடமான அமிர்தசரஸ் பொற்கோயிலின் அடிக்கல் 1577 இல் தீபாவளி அன்று பதிக்கப்பட்டது.

ஜைனர்களுக்கு, ஜைன மதம் என்று அழைக்கப்படும் அவர்களின் மதத்தை நிறுவிய மகாவீரர், தீபாவளியின் போது நிர்வாணம் அல்லது மோட்ச நிலையை அடைந்தார்.

 13.11.2023 கந்தசஷ்டி ஆரம்பம்  -  18.11.2023

கந்தசஷ்டி 6-ம் நாள் விரத முடிவில்  சூரஸம்ஹாரம்



கந்தசஷ்டி விழா இந்துக் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கந்தசஷ்டி 2023 தேதிகள் நவம்பர் 13 முதல் ஆறு நாள் விரதத்துடன் தொடங்கி நவம்பர் 18, 2023 அன்று சூரசம்ஹாரத்துடன் முடிவடைகிறது. நவம்பர் 19 அன்று முருகன் திருகல்யாணம். கந்தஷ்டி அசுரன் சூரபத்மனை கந்தன் வென்றதைக் கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், குறிப்பாக முருக பக்தர்கள், திருவிழாவை முன்னிட்டு ஆறு நாட்கள் விரதம் அனுசரிக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் இது ஒரு முக்கிய திருவிழாவாகும்.இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கந்த ச ஷ்டி விழாவினை வெகு ஆர்வமாகவும், விமரிசையாகவும், பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகிறார்கள்.

அரக்கன் சூரபத்மனுடன் ஆறு நாள் போர் நடந்தது,  ஆறாம் நாள் முருகன்  சூரபத்மனை 'வேல்' கொண்டு ம்ஹாரம் செய்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை பாரத பூமியில் நிலை நாட்டினான்.

துறவி வசிஷ்டரால் ஸ்கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தென்னிந்திதாவின் அரசனான முச்சுகுந்தாவுக்கு விவரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

விரதத்தைக் கடைப்பிடித்த பிறகு, முச்சுகுந்த மன்னன் சக்திவாய்ந்தவராகவும்

பிரபலமாகவும் ஆனார், மேலும் அவரது ராஜ்யத்தின் புகழ் மூன்று உலகங்களிலும் 

பரவியது

25.11.2023 பரணி தீபம்  -   26.11.2023 திருக்கார்த்திகை தீபம்



சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவதுண்டு. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று தொடங்கி நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 26ஆம் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. 2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி அளித்த பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அந்த விளக்கு ஒளி தென்பட்ட மகாதீபம் அப்போது தமிழகம் முழுவதும் வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றி அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டு வணங்குவார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி தின திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவமாக சிவன் காட்சி தந்ததாக கூறி வழிபடுகிறோம். இந்த நாளில் சிவ வழிபாடு செய்து, விரதம் இருந்து சிவ தரிசனம் செய்வது முக்தியை தரும் அளவிற்கு புண்ணியம் வாய்ந்தது.

 27.11.2023 ஸ்ரீ பஞ்சராத்திர தீபம்


மகா விஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி, உலகத்தை காத்த தினத்தை விஷ்ணு கார்த்திகை என வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் ஏற்றப்படும் தீபத்திற்கு ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் என்று பெயர். கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் பரணி தீபமும், இரண்டாம் நாள் திருக்கார்த்திகை நாளில் மகா தீபமும், மூன்றாம் நாள் பெளர்ணமி திதியில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்ராத்திர தீபமும் ஏற்றப்படுவது வழக்கம். சில ஆண்டுகள் திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்றே பெளர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் சமயத்தில் பாஞ்சராத்திர தீபமும் ஏற்றப்படும்.

சைவர்கள் திருகார்த்திகை கொண்டாடுவதை போல், வைணவர்களும் தீப வழிபாட்டினை மேற்கொள்கிறார்கள். இதற்கு தனிக்கதையும் சொல்லப்படுகிறது. ஒருமுறை பிரம்ம தேவர், சரஸ்வதி தேவிக்கு தெரியாமல் யாகம் ஒன்றை நடத்தினார். இதை அறிந்து கோபமடைந்த சரஸ்வதி தேவி, அரக்கன் ஒருவனை ஏவி, யாகத்தை தடுக்க முயற்சி செய்தாள். அரக்கனும் யாகத்திற்கு இடையூறு செய்ய, உலகம் முழுவதும் இருளாக்கினான். இதனால் கலக்கமடைந்த பிரம்ம தேவர், மகா விஷ்ணுவிடம் சரணடைந்தார். மகாவிஷ்ணு ஜோதி வடிவாக தோன்றி உலகின் இருளை போக்கியதுடன், அந்த அரக்கனையும் வதம் செய்தார்.

 

மகா விஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி, உலகத்தை காத்த தினத்தை விஷ்ணு கார்த்திகை என வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் ஏற்றப்படும் தீபத்திற்கு ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் என்று பெயர். கார்த்திகை மாதம் பெளர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் பரணி தீபமும், இரண்டாம் நாள் திருக்கார்த்திகை நாளில் மகா தீபமும், மூன்றாம் நாள் பெளர்ணமி திதியில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்ராத்திர தீபமும் ஏற்றப்படுவது வழக்கம். சில ஆண்டுகள் திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்றே பெளர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் சமயத்தில் பாஞ்சராத்திர தீபமும் ஏற்றப்படும்.

இந்த ஆண்டு 2023 – ல் பாஞ்சராத்தி ர தீபம் நவம்பர் 27- ம் தேதி பெருமாள் கோவில்களில் ஏற்றப்பட உள்ளது. இந்த நாளில் விளக்கேற்றி வழிபட்டால் மன நிம்மதியும், செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாஞ்சராத்திர தீபத் திருநாளன்று மாலை 6 மணிக்கு இந்த தீபம் ஏற்றப்படுகிறது. வழக்கமாக வீட்டில் ஏற்றப்படும் தீபத்துடன், 5 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். இது சிவ, விஷ்ணு இருவருக்கும் உரிய வழிபாடாக கருதப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்றும், திருமாலின் திவ்ய தேச தலங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களில் இது வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து உயிர்களும் தீபம் ஏற்றி வழிபட முடியாது என்பதால், அனைத்து உயிர்களும் இறையருள் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை தீபத் திருநாளன்று தொடர்ந்து 3 நாட்கள் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு எழுந்தருள்வார். இரவு 8.30 மணியளவில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே சொக்கப்பனை ஏற்றப்படும். அதன் பிறகு தாயார் சன்னதிக்கு செல்லும் நம்பெருமாளுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வும் நடக்கும்.

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் அத்துனை ஹிந்து மத பண்டிகைகளின் மூல தெய்வங்களின் அருள் முழுவதும் கிட்டப் பிரார்த்திக்கிறேன்.

தெய்வ ஒளி உங்கள் வீட்டிலும், உங்கள் உள்ளத்திலும் பிராகாசித்து, அருள் வழியில் வீரு நடை போட்டு, வாழ்வினை கடவுளின் கருணையால் நடத்தி வெற்றி காண்பீர்.

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி, கந்தசஷ்டி, காரத்திகை தீபம், ஸ்ரீ பஞ்சராத்திர தீபம் ஆகிய புண்ணிய பண்டிகைகளின்  வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017