இன்றைய இனிய சிந்தனை - பயம் கொள்ளாதே மனமே !
பயம் என்பது ஒவ்வொருவருக்கும் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்புள்ள வஸ்து.
உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வஸ்துவை ஆளுமை கொண்டு ஆட்டிப் படைப்பது மனித மனம். மனித மூளை அந்த வஸ்துவுக்கு பின்னால் இருந்து மனிதனை செயல்பட வைக்கும் கருவியாக இருக்கிறது.
பயம் என்பது நல்லதா ? அல்லது கெட்டதா? – என்பதற்கு விடை பயம் இரண்டும் தான் என்பது.
இடம், பொருள், ஏவல் ஆகியவைகளைப் பொருத்து பயம் நல்லதா ? அல்லது கெட்டதா? – என்பதை ஒவ்வொருவரின் மனமும் மூளையுடன் சேர்ந்து தீர்மானிக்கும்.
ஆழமான குளத்திலே கரையை விட்டு அதிக தூரம் சென்று குளிப்பதற்கு பயம் ஒரு கேடயமாகப் பயன்படும். மனதும், அதனுடன் தொடர்புடைய மூளையும் ‘குளம் ஆழம். ஆகையால் ஆழமில்லா கரையின் அருகிலேயே குளித்து வெளியேறு’ என்று உறங்கிக் கொண்டிருக்கும் அந்த வஸ்து எச்சரிக்கும். அதை மதித்து நடப்பது தான் உத்தமம்.
இது நீச்சல் தெரியதவனுக்கு எச்சரிக்கையாகும்.
ஆனால் நீச்சல் தெரிந்தவனுக்கோ இந்த பயம் அவசியமில்லை. நீச்சல் என்ற பலம் ஆழமான குளத்தில் அதிக தூரம் நீந்திச் சென்று நன்றாக குளிப்பதில் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆகையால் நீச்சல் தெரிந்தவனுக்கு பயம் அவசியமற்றது. அவனது மனமும் மூளையும் அதன் படி பயமின்றி குளத்திலே குளித்து ஆனந்தமாக நீராடத் தூண்டும்.
பயம் என்ற சொல் பெயர்ச்சொல். வள்ளுவர் பயம் என்ற சொல்லிற்குப் பதில் அஞ்சுவது என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அஞ்சுவது என்பது வினைச் சொல். அஞ்சுவது – அஞ்சல் ஆகிய சொற்கள் வினைச் சொற்களாகி அது சக்தி வாய்ந்த சொல்லாக இருப்பதைக் கவனிக்கவும்.
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்” – என்ற திருவள்ளுவர் ரத்தினச் சுருக்கமாக பயம் பற்றி அறிவுரை வழங்குகிறார்.
எதற்குமே பயப்படாமல் வாழ்வது மூடத்தனம் – அதாவது பேதைமை – மூட்டாள் தனம் என்று மிகவும் ஆணித்தரமாகச் சொல்கிறார்.
இன்னும் மிகவும் தெளிவாக வள்ளுவர் – அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் அதை வீணாக எதிர்த்துப் போரிடுவது போல் ஒருவர் செயல்பட்டால் அவன் ஒரு முட்டாள் – மூடன் – வாழ்வில் தோல்வியைத் தழுவும் ஆசாமி என்று விளக்குகிறார். அந்தத் தோல்வியால் அவன் அறிவிலியாக வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான்.
ஆனால் எதிர் வரும் ஆபத்து நிச்சமாக அஞ்சப் படும் அளவில் சக்தி வாய்ந்ததாக இருக்குமானால், அதை எதிர்த்திப் போராடாமல் அஞ்சி விலகிச் செல்வதுதான் புத்திசாலித்தனம், அதாவது ஒரு அறிவுடையவரின் தொழில் – அதாவது அறிவார் செயல் என்று அழகாகப் பயத்தைப் பற்றி விளக்குகிறார் வள்ளுவர்.
வீராப்பு பயம் எவ்வளவு ஆபாத்தானதோ, அதைப் போல் நிஜமான பயத்தின் போது எதிர்க்காமல் விலகிச் செல்வது ஆரோக்கியமான அறிவாளியின் செயலாகும் என்பது தான் வள்ளுவரின் பயத்தைப் பற்றிய தத்துவம்.
பயம் பற்றிய நினைப்பு வந்து அதை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பாரதியின் தெய்வீக வாக்கு வேத வாக்காகும்.
‘ஏ, காலனே ! இங்கே வாடா ! உன்னை என் காலால் சற்று உதைக்கிறேன்’ என்று காலனேயே உதைக்கும் வீரம் பாரதியிடம் காணலாம்.
‘உச்சி மீது வீழு கின்ற போதிலும், அச்ச மில்லை, அச்ச மில்லை அச்சமென்பதில்லையே !’ என்று உலகத்திற்கே முரசு கொட்டி உரக்கச் சொன்னவன் பாரதி.
எந்தக் காரியமானாலும், சிதையா நெஞ்சு கொண்டு, தெளிந்து சொல்லி, துணிந்து செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறும் பாரதி தீயோர்க்கு அஞ்சாது எதிர்கொள்ள நம்மை தயார் நிலையில் இருக்கச் சொல்கிறான் பாரதி. அப்படி நடந்தால் பயத்தால் வரும் துன்பம் பறந்து விடும் என்று ஆணித்தரமாக அறிவுருத்துகிறான் பாரதி.
“பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !” – என்ற பாரதி பயமற்ற மனது வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உபாயமும் சொல்கிறான்.
தெய்வம் துணை நின்றால், ஒரு தீங்கும் வாரா – என்று சொன்ன பாரதி, அந்த அன்பு மிகுந்த தெய்வம் துன்பம் அத்தனையும் போக்கிவிடும் என்று சொல்லி விட்டு,
“உயிர்களிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா !” – என்று வாழ்க்கைக்கு வயிரமுடைய நெஞ்சுடன் பயம் என்ற சத்துருவை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும் என்று அறிவுருத்துகிறார் பாரதி.
இதையே தான் அவ்வையார் ரத்தனச் சுருக்கமாக பயம் என்ற அபாயம் போக்க ஒரு மருந்து உண்டு. அது தான் சிவாய நம – என்ற மந்திரம். அதைச் சிந்தித்து தியானித்தால் அபாயம் ஒரு நாளும் இல்லை என்கிறார் அவ்வைப் பாட்டி.
அபாயம் மட்டுமா இந்த சிவாய நம மந்திரம் போக்கும். இல்லை. உன் தீதான விதியையே மாற்றி விடும் மதியான மந்திரம் இது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் அவ்வை.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
இதை இன்னும் விஸ்தாரமாக அருள்மிகு அருணகிரி நாதர் ஒரு செய்யுளில் முருகனைத் தினமும் தியானித்தால், நாள் – கோள் – கூற்றுவன் எல்லாம் ஒன்றும் செய்யாமல் ஓடிவிடும் என்று நம்பிக்கை தருகிறார்:
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
இன்னும் சிறிது விஸ்தாரமாக இன்னொரு செய்யுளில் அருணகிரிநாதர், உனக்கு நல்லவைகளைக் காட்டும் விழியாகவும், உன் நாக்கு வெளியிடும் நன் மொழிக்கு துணையாகவும், முன்பு செய்த பழியை முழுவதும் அழித்து பயமற்ற வழியில் பயணிக்கவும் முருகன் நாமங்களை மனதார உச்சரிக்கவும் என்று சொல்கிறார்:
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
இதிலிருந்து பயம் போக வேண்டுமானால் தெய்வத்தின் துணை அவசியம் வேண்டும் என்பது தெளிவு.
தெய்வ சிந்தனை தான் பயம் போக்கும் செயல் என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டியது அவசியமாகிறது.
பயம் ஆரோக்கியத்தின் சத்துரு – அதாவது அச்சமின்மையே ஆரோக்கியம் என்பதை உணரவேண்டும்.
இதற்கு ஒரு கதையை உதாரணமாகச் சொல்லலாம்.
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்!
அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!”
பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.
மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப் படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்! – என்று பீர்பால் முழங்கினார்.
ஆகையால் மனதை நிம்மதியாக, அமைதியாக வையுங்கள். அதற்கு தெய்வ சிந்தனை அவசியம். தியானம் செய்து மனதை சக்தியுள்ளதாக உருவாக்குங்கள்.
கவலைப் படுவதே கடு நரகம் – என்பார்கள். ஆகையால் கவலையை கனவிலும் படாமல், உடலையும் உள்ளத்தையும் எஃகுப் போல் உறுதியாக வைத்தால் காலனால் ஏற்படும் பயமும் காணாமல் போய்விடும்.
சக்தி தெய்வத்தின் அருள் இருக்கும் போது இருளான பயம் மனத்திலிருந்து முற்றிலும் மறைந்துவிடும் என்பது திண்ணம்.
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா. – பாரதி.
Comments