தாவோயிசம் - கன்பூஸியனிசம் – அலசுவோம் வாரீர்!
வோ சூ – கி.மு 571- 447 – 124 வருடங்கள் – கன்பூஷியஸ் – கி.மு. 557 – 479 – 78 வருடங்கள்
Michael Quesada என்பவரின்
ப்ளாக்கை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
மூலக்கட்டுரையை மேலே உள்ளதை சொடுக்கிப் படிக்கவும்.
தாவோயிசம், கன்பூசியனிசம் என்ற இரண்டும் கி.மு 6-வது நூற்றாண்டில்
உருவாகிய சீனத் தத்துவமாகும்.
தாவோயிசம் என்பது லாவோ சூ என்ற தத்துவ ஞானியாலும், கன்பூசியனிசம்
என்பது கோங்க் குய் என்று பிரபலமில்லாத பெயரில் அழைக்கப்படும் மிகவும்
பிரபலமான பெயர் கொண்ட கன்பூசியஸ் என்ற தத்துவ ஞானியாலும்
ஸ்தாபனம் செய்யப்பட்டது.
லாவோ சூவும், கன்பூசியஸும் சமகாலத்தவர்கள். லாவோ சூ கன்பூசியஸுக்கு 14 வயது மூத்தவர்.
முதலில் மூத்தவரான லாவோ சூவைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
லாவோ சூ என்ற பெயர் ‘வயதான குரு’ அல்லது ‘வயதான பையன்’ என்று
பொருள்படும். அவரது வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
ஏன், அவரே ஒரு கற்பனைப் புருஷர் என்று கூட சிலர் நம்புகிறார்கள்.
அவர் கி.மு. 571 ஆண்டு பிறக்கும் போதே வயதான கிழவராக நரை முடியுடன்
மிகுந்த ஞானம் கொண்டவராகப் பிறந்தார் என்று ஒரு கட்டுக்கதை உண்டு.
அவர் அரசாங்க ஏடுகள் பாதுகாப்பு நிலையத்தில் தலைமை நூலகராகப் பணி
புரிந்துள்ளார். ஆனால் சமூகத்தில் நல்லவர்கள் குறைவாக இருக்கும் நிலை கண்டு
அவர் மனம் கலங்கினார். ஆகையால்,தமது சொந்த ஊரான லுயோங்கை விட்டு,
ஒரு துறவியாக ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார்.
யாத்திரையின் இறுதிக்கட்டத்தை அவர் ஒரு நகரத்தின் நுழைவாயிலின் வழியாகச்
செல்லும் தருணத்தில் அந்த நகர நுழைவாயிலின் காவல்காரன் அவரை
வேண்டினான்: “லாவோ சூ அவர்களே! நீங்கள் கடைசியாகச் சொல்ல விழையும்
எண்ணங்களை எழுதிக் கொடுங்கள்’
லாவோ சூவும் மூன்று நாட்கள் ஒரு சிறிய புத்தகத்தில் தன்னுடைய
எண்ணங்களைப் பதிவு செய்து, அந்த காவல்காரனிடம் கொடுத்தார்.
அந்த அவரது புத்தகத்தின் என்ணங்கள் தான் “தாவோ தே சிங்” என்று மிகவும்
முக்கியமான தாவோயிசத்தின் நூலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு அவர் சமூகத்தை விட்டு விலகி, தனது கடைசிக் காலத்தை
திபெத்தில் கழித்ததாக நம்பப்படுகிறது.
லாவோ சூவின் பிரபலமான பொன் மொழி இதோ:
மற்றவர்களை வெல்வது பலம். ஆனால், உன்னையே வெல்வதோ உண்மையான
சக்தி.
லாவோ சூவின் வாழ்க்கை
வரலாறு மர்மமாக இருந்தாலும், கன்பூஷியஸின் வாழ்க்கை வரலாறு மிகவும் நன்கு தெரிந்த
ஒன்றாக இருக்கிறது. கன்பூஷியஸ் கி.மு. 557-ம் ஆண்டு அதாவது லாவோ சூ பிறந்து 14
ருடங்கள் கழிந்து பிறந்தவர். லு என்ற இப்பொழுது குஃபு என்று அழைக்கப்படும்
ஷான்டாங் மா நிலத்தில் அவர் பிறந்தார்.
லாவோ சூ கி.மு. 447
ஆண்டு தமது 124-வது வயதில் இறக்க, 32 ஆண்டுகளுக்கு முன்பே கி.மு. 479-ம் ஆண்டு கன்பூஷியஸ்
தமது 78-வது வயதில் காலமானார்.
கன்பூஷியஸ் ஒரு பெரிய
மதிக்கப்பட்ட ஆசியராகப் பணி ஆற்றி உள்ளார். பல கலைகளையும், பாடல் புனையும்
திறமையையும், கணிதத்தில் புலமையும், சரித்திரத்தில் பாண்டித்தியமும் பெற்றவர்.
ஒரு அரசு அலுவலராகப்
பணி புரிந்து, சவு வம்சம் அரசாளுபவர்களுக்கு ஆலோசனை கூறும் அரசியல் குருவாக
உயர்ந்தார். ஆனால், இந்த அரசியல் வாழ்வை விட்டு, மீண்டும் ஒரு சிறிய குழுக்கொண்ட
மாணவர்களுக்கு தார்மீக நெறிமுறைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்.
அவர் மாணவர்களுக்குக்
கற்பித்தவைகளை எல்லாம் அந்த மாணவர்கள் ஒன்றாகத் திரட்டியதால் தான் இன்று அவரின்
கருத்துக்கள் கன்பூஷியனிசம் என்ற தத்துவமாக கொண்டாடப்படுகிறது.
லன்-ய அல்லது அனலெக்ட்ஸ் என்ற நூல்தான் மாணவர்கள் திரட்டிய
கன்பூஷியஸின் கருத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கன்பூஷியஸின் மிகவும் பிரபலமான பொன்மொழி:
“எளிதில் கற்றுக் கொள்ளும் திறனுடையவனுக்கு கற்பிப்ப்பது வீண்; கற்பிக்க
முடியாதவனுக்கு கற்பிப்பதால், கற்பிக்கும் வார்த்தைகள் வீண். ஆனால்,
விவேகமுள்ளவன் கற்பிக்க வேண்டியவர்களையும், கற்றுக்கொள்ளும்
வார்த்தைகளையும் இழக்கமாட்டான்.”
லாவோ சூவும்
கன்பூஷியஸும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அவர்கள் அரசாங்க இலக்கிய
கருவூலங்களைப் பற்றி உரையாடினதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது கன்பூஷியஸின்
நேர்த்தியான உடை லாவோவை வசீகரிக்க வில்லை. மேலும், கடந்த கால உரைகளை மீண்டும்
உரைப்பதை லாவோ ஆதரிக்கவில்லை.
‘உன்னுடைய போலி
பவ்வியமான பாவனைகளையும், ஆடம்பர ஆடைகளை வெளிப்படையாக விளம்பரம் செய்வதையும் தவிர்.
அறிவாளியாக இருப்பவன் தெரியாதவர்களிடம் தனது செல்வங்களை காட்ட மாட்டான். பழைமையான
நூல்களிலிருந்து அவன் நியாயத்தை கற்க முடியாது.’
ஆனால் இதற்கு
நேர்மாறாக, கன்பூஷியஸ் லாவோ சூவினால் ஈர்க்கப்பட்டார். ஆகையால் தான் லாவோ சூவை
இப்படிப் புகழ்ந்துள்ளார்:
“ஓரு ட்ராகன்
ஆகாயத்தில் காற்றிலும், மேகத்திலும் பயணிக்கிறது.”
தாவோயிசம், கன்பூசியனிசம் – இரண்டும் சம காலத்தில் சுமார் 2600 வருடங்களுக்கு
முன்னால் சீனாவில் முக்கிய தத்துவமாகவும், மதமாகவும் கோலோச்சி உள்ளது.
அவைகள் இரண்டும் வாழ்வின் வழிமுறைகளை மக்களுக்கு கற்பிக்கின்றன. சமூகம், சொர்க்கம்,
பிரபஞ்சம் ஆகியவைகளைப் பற்றிய பல தகவல்களை இந்த இரண்டு தத்துவங்களும் விளக்குகின்றன.
தாவோயிசத்தின் மூல எழுத்து தாவோ (道 Tao) என்பதாகும். அந்த எழுத்திற்கு – இயற்கை, பிரபஞ்சம் அல்லது கடவுள் வழி என்று
அர்த்தம். அது தான் தாவோ வழியாகும். தாவோ வழி என்றால் – எதையும் மீறாதே, எதையும் ஊக்குவிக்காதே
என்பதாகும். தாவோ ‘சரி – தவறு’ என்பதற்கு அளவுகோலுக்கான தரநிலையை நிர்ணயிக்கிறது. இயற்க்கையை
ஆராதித்து, அந்த வாழ்க்கை மூலமாக தன்னைச் சுற்றியுள்ளவைகளின் மதிப்பை மதித்து, உள்
ஒளியைப் பெருக்கி வாழ ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தான் தாவோஸ்டுகளின் குறிக்கோளாகும்.
இதே போல் கன்பூசியனிசம்
தத்துவத்தின் முக்கிய மந்திரச் சொல் ‘லி” (礼 Li) என்பதாகும். அந்தச் சொல்லின் அர்த்தம் இது
தான்: “நன் நடத்தையை மக்கள் சரியான வேளைகளில், சரியான தருணங்களில், சரியான இடங்களில்
கடைப்பிடிப்பது.”
ஆகையால் கன்பூசியனிசத்தின்
முக்கியமான கொள்கையாக மனிதர்-சமூகம் இரண்டுக்குள்ள உறவைப் பற்றியது என்று கணிக்கலாம்.
நேர்மையான சமூக நீதிகளை நாட்டினில் ஏற்படுத்துவது கன்பூசியசத்தின் முக்கிய அம்சமாகும்.
அரசு – மக்கள், கணவன்
– மனைவி, வயதானவர் – இளையவர்கள், நண்பன் – நண்பர்கள், அப்பா – மகன் ஆகியவர்களிடையே
சிறந்த நல் உணர்வுகளைப் பேணி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதின் அவசியத்தை
கன்பூசியனிசம் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், தாவோயிசத்தில் இந்த அறவுரை சொல்லப்படவில்லை.
தாவோயிசத்தில் பெண்கள்
– ஆண்கள் என்ற பேதம் இல்லாமல் அவர்களை சரிசமமாக சமூகத்தில் பார்க்கபடுபவர்களாகச்
சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் கன்பூசியத்தில் பெண்கள் ஆண்களை விட தாழ்வாகவே
சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சியாவோ மா என்ற சீன அறிஞர் கன்பூசியத்தில் பெண்களின் நிலையை
இப்படி வர்ணிக்கிறார்: “கன்பூசியர்களின் இருள் சூழ்ந்த நிழலிலிருந்து
வெளியே வரும் வழிக்காகப் பெண்கள் எப்போதும் போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.”
தாவோயிசம் இயற்கையுடன் நல்லிணக்கம் கொள்ள விழைகிறது.
கன்பூசியனிசம் சமூகத்துடன் நல்லிணக்கம் கொள்ள விழைகிறது.
தாவோயிசம் தனி மனிதனையும், கன்பூசியனிசம் சமூகத்திலுள்ள
மனிதர்களையும் குறித்துச் செயல்படுகிறது.
தாவோயிசத்தின் மூன்று ஆதார போதனைகள் –
கருணை,
சமநிலை, பணிவு.
கன்பூசியத்தின் மூன்று ஆதார போதனைகள்:
கல்வி, நன்
நடத்தை, மனிதாபிமானம்.
தாவோயிசத்தில் கோவிலுக்குச் செல்லல், சடங்குகளைக்
கடைப்பிடித்தல், பேய்-பிசாசுகளை நம்புதல் ஆகியவைகளுடன், ‘சி’ (Chi) என்ற அனைத்து
ஜீவன்களுக்கும் சக்தியைக் கொடுக்கும் இந்த சி யை உடம்பில் நிலை நிறுத்த தாய் சி ( Tai Chi ) என்ற தற்காப்புப்
பயிற்சி மூலம் உடல் – மனம் ஆகிய இரண்டையும் பலப்படுத்தவேண்டும் என்று அறிவுருத்துகிறது.
ஆனால்,
கன்பூசியத்தில் கோவிலுக்குச் செல்வதை ஒரு சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் செயலாகப் பார்ப்பதுடன்,
சுவர்க்கக் கடவுளான தியான் (Tien) தரிசனத்துடன், இறந்த மூதாதையர்களை வணங்குவதை முக்கிய
சடங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். ‘ஜிங் ஜூயோ – Jing Zuo – என்ற தியான முறையையும் அவர்கள்
பயிலுகிறார்கள்.
இறுதியாக அனலெக்ட்ஸ்
(Analects) - என்ற கன்பூசியஸின் சீடர்கள் தொகுத்த
நூலில் கன்பூசியஸைப் பற்றிய சுயசரிதையாக ஒரு சிறிய குறிப்பு காணப்படுகிறது.
அதில் கன்பூசியஸ்
தன்னைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்:
“எனது 15-வது வயதில்
என் மனத்தை கற்பதில் ஈடுபடுத்தினேன்; 30-வது வயதில், என் வாழ்க்கைக் குறிக்கோளைத் தீர்மானித்தேன்;
40-வது வயதில், என் மாயத் தோன்றங்கள் மறைந்தன; 50-வது வயதில், சொர்க்கத்தை அறிந்தேன்;
60-வது வயதில், என் காதுகளை கேட்கப்பட வேண்டியவைகளுக்காக மட்டும் செப்பனிட்டேன்;
70-வது வயதில், எல்லையை மீறாமல் என் மனத்தின் விருப்பத்தை அறிந்து நான் பின்பற்றினேன்.”
தன் சீடர் ஒருவர்
தன்னை வர்ணிப்பதில் சங்கடப்படும் போது,
கன்பூஷியசே தன்னைப் பற்றிச் சொல்வது வேடிக்கையாக
உள்ளது.
“சீடனே! ஏன் என்னைப் பற்றி இப்படிச் சொல்லலாமே?
– இவர் கற்பதில் மும்முரமாக இருக்கும் போது, சாப்பிட மறப்பவர்; மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கி, கவலைகளை மறப்பவர்; தனக்கு வயதாகிறது என்பதை ஒரு போதும் நினைக்காதவர்.”
கன்பூசியசின் சின்னம்
– கன்பூசியஸ், சீன எழுத்துக்களான நீர் - அறிஞன், யின்-யாங்க் ஆகிய நான்கு சின்னங்களாக உள்ளது.
கன்பூசியஸ் என்ற
சீன தத்துவ ஞானியே தன் தத்துவத்திற்குச் சின்னமாக விளங்குகிறார். அவர் தமது தத்துவத்தில்
சமூகத்தில் மக்களின் நன்நடத்தைகளுக்கு முக்கிய இடம் அளித்துள்ளார். சமூக நேர்மை, நாணயம்,
நல்லிணக்கம் ஆகியவைகள் தான் கன்பூசியஸ் உருவச் சின்னம் சுட்டிக் காட்டுகிறது.
அடுத்து உள்ள நீர்
சின்னம் அமைதியைக் குறிக்கும். மேலும் நீர் என்பது குளிர்காலத்துடன் சம்பந்தப்பட்டது.
மேலும் நீர் தான் மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மூன்றாவது சின்னமான
அறிஞர், சீன சமூகத்தின் குணத்தைக் குறிப்பிடுகிறது. அதற்கு ஞானம், சுய விழிப்புணர்வு
ஆகியவைகள் அவசியமாகும். அதீதமான படிப்பு சீன கலாச்சாரத்திற்கு அவசியமாகும் என்பதையும்
இந்தச் சின்னம் சுட்டிக் காட்டுகிறது.
இறுதியாக உள்ள
நான்காவது சின்னமான யின்-யாங்க் – வேறு பட்ட பலவகையான குணங்கள் சமூகத்தில் ஒரு சரிசமமான
அளவில் இருக்க மனிதர்கள் பாடுபட்டு, வாழ்க்கையை சிறப்பிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
Comments