குருகுலக் கிளர்ச்சி




ஆசிரியர் குறிப்பு:

பிராமணத் துவேஷம் எந்த அளவுக்கு ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற கொள்கையை எவ்வளவு மோசமாக திராவிட இயக்கத் தலைவர் ஈ.வே.ரா. என்ற பெரியார் நடந்து கொண்டார் என்பதை இந்தப் பதிவிவைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.

திராவிட இயக்கம் தமிழ் நாட்டை இந்தியாவுடன் பிரித்து இயங்கவும், ஆங்கிலேயர்களுக்குத் துதிபாடியும் சுதந்திர இயக்கத்தின் ஐந்தாம் படையாக துரோகம் செய்தார்கள் என்பதையும் அவர்களின் ‘வெறுப்பு ஜாதி அரசியலால்’ வெளிச்சத்திற்கு வராமல் மக்களை ஏமாற்றினார்கள் என்பது ஒரு ஆணித்தரமான சரித்திர உண்மையாகும்.

பெருமாள் இஸம் – பெரியாழ்வார் இஸம் – என்ற பக்தி மார்க்கத்தையும், தமிழ் மொழியை வளர்த்த பலரின் உன்னதமான தமிழ்ச் சேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று தமிழுக்குப் பட்டம் சூட்டிய பெரியாரிசம் என்று தமிழ் நாட்டிலிருந்து ஒழிக்கப்படுகிறதோ அப்போது தான் தமிழ் நாடும் – தமிழும் நேர்படும்.
மக்கள் இப்போது விழித்துக் கொண்டு விட்டார்கள். தமிழும் – தமிழ் நாடும் இனி தன் இனிய பயணத்தைத் தொடரும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

வீழ்க பெரியாரிசம். வீழ்க நாத்திகம். வீழ்க திராவிட மாயை.

வாழ்க தமிழகம். வாழ்க பாரதம். வாழ்க ஆன்மீகம்.

இனி குருகுலக் கிளர்ச்சி பற்றிய பதிவைப் படிக்கவும். படித்துத் தெளிவு பெறவும்.
-    எஸ். சங்கர்ன். ஆசிரியர்: வாய்மை
    
   குருகுலக் கிளர்ச்சி
  
  பிராமணத்துவேஷம் ஒரு நல்ல காரியத்தை வேரோடு பிடுங்கி எறியப் பயன்பட்டது என்பது தான் வ.வே.சு.ஐயரின் குருகுலம் சீர்குலைந்தற்குக் காரணம். அதுவும், தான் பிராமணராகப் பிறந்தாலும், ஜாதியை ஒழிக்கவே குருகுலத்தை ஆரம்பித்து, அதில் எல்லா ஜாதியினரையும் சேர்த்து ஒரு உன்னதமான தூய வாழ்க்கைக்கு வழிகாட்ட விழைந்தார். ஆனால், ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று முயன்று பாடுபட்ட பெரியார் என்று பாராட்டப்படும் திரு.ஈ.வி.ராமசாமி நாயக்கர், டாக்டர் பி. வரதராஜூலு நாயுடு, தமிழ்த் தென்றல் என்று போற்றப்படும் திரு.வி.க. ஆகியோர்கள் குருகுலம் செயல்படாமல் இருக்க அனைத்து முட்டுக் கட்டைகளையும் போட்டனர். அதுவும் குறிப்பாக அப்போதைய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி அக்கிராசனர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு இறுதிவரை மும்முரமாக குருகுலத்திற்கு எதிராக செயல்பட்டார். எல்லோராலும் பெரிதும் மதிக்கத்தக்க மஹாத்மா காந்தியின் அறிவுரையும் நாயுடுவால் ஏற்கப்படவில்லை என்பதும் ஒரு வருத்தமான செய்தி. ஒருவேளை 'காந்தியும் ஒரு பிராமணர் தானே!' என்ற குறிகிய நோக்கம் நாயுடுக்கு ஏற்பட்டிருக்கலாம். 

இறுதியில் ஒரு வழியாக ஒரு சமரசம் ஏற்பட்டும், அதை அமல் செய்வதற்குள், ஐயர் குற்றால அருவியில் தன் மகளுடன் மடிந்தார். ஐயர் அவரை எதிர்த்த அந்த மூன்று பேர்களையும் விட பல மடங்கு தேசத்திற்காகத் தியாகம் செய்தவர் என்பது சரித்திர உண்மை.
அந்தக் கிளர்ச்சியை திரு. ரா.அ.பத்மநாபன் விரிவாக தம் நூலில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் கீழே பிரசுரமாகி உள்ளது.

- ஆசிரியர்.

குருகுலக் கிளர்ச்சிக்கு முக்கிய காரணம் இரண்டு பிராம்மணச் சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களின் கோரிக்கையினால் தனியாக உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது தான்.

அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் குருகுலத்திற்கு பண உதவி செய்தவர்கள்.

ஆரம்பத்தில் குருகுலத்தில் சமபந்தி போஜன முறைதான் இருந்தது. நடுவில் தான் இரண்டு பேர்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டது. இருப்பினும், மற்றவர்கள் அனைவரும் ஐயர் உட்பட சமபந்தியில் தான் உணவு உட்கொண்டனர்.

இது 1922 வருடம் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

1922 வருடத்தில் சமபந்தி போஜனத்தின் நிலை என்ன?

அப்பொழுது தமிழகத்தில் இருந்த அரசியல், சமூகச் சூழ்நிலையில், எல்லாப் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளிலும் உணவு ஏற்பாடு பிராம்மணருக்குத் தனியாகவும், மற்றவர்களுக்குத் தனியாகவுமே இருந்து வந்தது. அரசாங்கக் கல்விக் கூடங்களிலும் சரி, தனியார் கல்விக் கூடங்களிலும் சரி, எங்கும் இதே நிலை. சில தேசீய ஸ்தாபனங்களில் மட்டும் ஜாதி பேதமற்ற சமபந்தி உணவு முறை அமுல் செய்ய முயற்சி நடந்தது.

ஆனால், இந்த இரு சிறுவர்களுக்கு விலக்களித்ததை சமூசச் சீர்திருத்தவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. 'சமபந்தி போஜனம் என்ற முன்னேற்றத்திலிருந்து நழுவி விட்ட பிற்போக்கான ஏற்பாடு இது' என்று அவர்கள் கருதினார்கள்.

குருகுலத்தில் சமபந்தி போஜனமுறை என்று ஐயர் சொல்ல வில்லை. 'மாணவர்களின் பெற்றோர் விரும்பினால் தனியாக உணவு பரிமாற வசதி செய்து தருவதே குருகுலத்தின்விதி' என்ற ஐயரின் விளக்கம், சீர்திருத்தவாதிகளுக்கு ஒரு அபாயகரமான போக்காத் தோன்றியது.

'இன்று இரண்டு பிராம்மணச் சிறுவர்களுக்கு விதிவிலக்குத் தந்தால், இதே போல் நாள்தோறும் மற்றவர்களுக்கு விதி விலக்குத் தரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?' என்று அவர்கள் பொருமினார்கள்.

'எனக்குப் பந்திப் பிரிவினையில் நம்பிக்கை இல்லை. என்றாலும், இந்த வழக்கத்தைப் பிறர் மீது கட்டாயமாகத் திணிப்பது கூடாது. விதிவிலக்குப் பெற்றவர்கள் கூட காலப் போக்கில், நான் பின்பற்றும் முன்னுதாரணத்தினால், சமபந்திக்கு வந்து விடுவார்கள்' என்பது ஐயர் கருத்து.

ஆனால், சீர்திருத்த வாதிகள் இந்த விஷயத்தைப் பெரிது படுத்தி இது ஒரு பத்திரிகை விவாதமாகப் போய் விட்டது. அப்போதைய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி அக்கிராசனர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு, காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் இருவரில் ஒருவரான திரு.ஈ.வே.ராமசாமி நாய்க்கர் (பெரியார்) - இவர்கள் இருவரும் மூர்க்கமாக எதிர்த்தனர். 'சமூகச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் நிர்ப்பந்தம் தவறில்லை, அவசியமும் கூட' என்ற கருத்துடையவர் பெரியார்.

டாக்டர் நாயுடு தமது 'தமிழ் நாடு' பத்திரிகையில் 'குருகுலத்தில் பிராம்மணர் அல்லாதார் மீது வேற்றுமை பாராட்டுகிறார்கள்' என்று குற்றம் சாட்டினார். 

ஐயர் அதற்கு மறுப்பு விட்டார்.

'குருகுலத்தைப் பொறுத்த மட்டில், பெற்றோர்கள் விருப்பப்படி சமபந்தியோ, தனிப் பந்தியோ அளிக்கப் படுகிறது. சீக்கியர்போல் ஜாதியற்ற ஒரு சமூகம் தோற்றுவிக்க விரும்புகிறேன். ஒரு நிலையான தீர்வு காண காவ்ய கண்ட கணபதி சாஸ்திரியை வடக்கே காசியிலிருந்து தெற்கே வரவழைத் திருக்கிறேன்' என்று விளக்கினார். ஆனால், ஐயரது இந்த முயற்சி 'புதிய ஆபத்து' என்று டாக்டர் நாயுடுவும், பெரியாரும் விவரித்தார்கள்.

1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இது குறித்து விசாரித்து ஒரு அறிக்கை வெளியிட ஒரு மூவர் குழுவை நியமித்தது. காய்வ கண்ட கணபதி சாஸ்திரி, வி. தியாகராஜ செட்டியார், கே.எம். தங்கப் பெருமாள் பிள்ளை ஆகியவர்கள் தான்
அந்த குழுவின் அங்கத்தினர்கள். ஆனால், இந்தக் குழுவாலும் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியவில்ல.

காங்கிரஸ் முதலில் இந்தக் குருகுலத்திற்கு சிறிது பொருளுதவி செய்திருந்தது. மேலும் நன்கொடைகள் குருகுலத்திற்கு வராமல் தடைசெய்தனர். முக்கியமாக ஏற்கனவே மலேயாவில்
வாக்களிக்கப்பட்ட ரூபாய் 20,000 நன்கொடை ஐயருக்கு வந்து சேராமல் தடுக்க வழி செய்தார்கள். அத்துடன் குருகுலத்திற்கு நிதி உதவி செய்தவர்களின் கூட்டம் ஒன்றையும் டாக்டர் நாயுடு கூட்டினார். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற முக்கியமான பிராம்மண நன்கொடையாளைகள் அழைக்கப் படவில்லை. அந்தக் கூட்டத்தில், இரு பிராம்மணச் சிறுவர்களுக்கு தனி உணவு அளிக்கப் படுவதை உடனே நிறுத்தாவிடில், சத்தியாக்கிரகம் நடத்தி, குருகுலம் கைப்பற்றப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டன.

அந்தச் சமயத்தில் வைக்கப் போராட்டத்திற்காக வந்திருந்த காந்தியை டாக்டர் நாயுடு, பெரியார், ஐயர் சந்தித்துப் பேசினர். மீண்டும் சென்னையில் காந்தியை, டாக்டர் நாயுடுவும், ஐயரும் சந்தித்தார்கள். அப்போது, காந்தி நான்கு வரிகள் எழுதி அதன் அசலை டாக்டர் நாயுடுவிடமும், பிரதியை ஐயரிடமும் தந்தார். இந்த நான்கு வரிகளில் காந்தி என்ன சொன்னார் என்பதைப் பற்றியும் விவாதம் இருந்தது. இந்த நான்கு வரிகள் 'அதிகார பூர்வமாக' வெளியிடப்படவில்லை.

காந்தியின் விருப்பத்துக்கு இணங்க ஐயர், குருகுலத்தில் இனிமேல் யாருக்கும் சமபந்தி போஜனத்திலிருந்து விலக்களிப்பதில்லை என்று அறிவித்தார்.

'சமபந்தி போஜனமே பொது விதி. இனி ஏதும் விதிவிலக்கு இராது' என்று தீர்மானமாகி விட்டதால், டாக்டர் நாயுடுவும், பெரியாரும் திருப்தி யடைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் திருப்தி அடையவில்லை.

தத்தம் கட்சிக்கே காந்தி ஆதரவளித்ததாக இரு தரப்பினரும் சொல்லிக் கொண்டார்கள்.

சமபந்தி போஜனம் பற்றிக் காந்தியின் கொள்கைதான் என்ன?

தமது யங் இந்தியா வாரப் பத்திரிகையில் 1925 ஏப்ரல் 15-ஆம் தேதி விளக்கினார்.

காந்தியின் பொதுவான கொள்கை விளக்கமாக அமைந்த 'சமபந்தி போஜனம்' என்ற கட்டுரை வருமாறு:

“'ஒரு உணவு விடுதியில் வசிப்பவர்களில் பல ஜாதிச் சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரே அறையில் சமபந்தியாகச் சாப்பிடச் செய்ய வேண்டுமா?' என்று ஒரு அன்பர் கேட்கிறார்.
கேள்வி சரியாகக் கேட்கப் படவில்லை. ஆனால், கேட்கப் பட்டிருக்கும் கேள்விக்குப் பதில், அந்தக் குழந்தைகளைச் சமபந்தியில் உணவருந்தச் செய்யலாகாது என்பதேயாகும்.

“ஆனால், கேள்வி கேட்பவர், அந்த உணவு விடுதியில் சேருபவர்கள் சமபந்தியில் சாப்பிட்டாக வேண்டும் என்று விதி செய்ய விடுதிக்காரருக்கு உரிமை இல்லை என்று வாதிப்பாரானால், அது சமபந்தி பற்றிய நிபந்தனையின்றிச் சேர்க்கப் பட்ட, சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பிற
ஜாதியாருடன் உணவருந்தத் செய்வதாகும். ஆகையால் விதி ஏதும் முன்கூட்டியே அறிவிக்கப் படாத சந்தர்ப்பத்தில், வழக்கமான தனிப் பந்தி முறையே சரியாகும்.

“இந்தச் சமபந்திப் பிரச்சனை தொல்லை பிடித்தது. இது பற்றிக் கண்டிப்பான விதிகள் ஏதும் செய்ய முடியாது என்பது என் கருத்து. இது அவசியமான சீர்திருத்தம் தானா என்று கூட என்னால் சொல்ல முடியாது. அதே சமயம், இந்த பேதத்தை முற்றிலும் தகர்த்தெறிய விருப்பம் பெருகுவதை நான் உணருகிறேன். சமபந்திப் பாகுபாட்டுக்கு ஆதரவாகவும் சரி, எதிராகவும் சரி நான் காரணங்களை கூற முடியும். இதில் வேகம் கூட்டுவதற்காக நான் வலுக்கட்டாயத்தை உபயோகிக்க மாட்டேன். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பது பாவம் எனக் கருதமாட்டேன்; சமபந்தி போஜனம் செய்வது பாவம் என்பதையும் ஏற்க மாட்டேன். ஆனால் பிறரது உணர்சிகளை மதிக்காமல் தனிப் பந்தி முறையை மாற்ற முயலும் எல்லா முயற்சிகளையும் நான் உறுதியாக எதிர்ப்பேன். மாறாக, பிறரது உணர்ச்சிகளைப் புறக்கணிக்காமல், அவர்களது உணர்ச்சிகளை மதித்து நடப்பேன்.”

மகாத்மாஜி தம் கருத்தைத் தெரிவித்து விட்டார். சமபந்தி போஜனத்தை வலுக்கட்டாயமாக, நிர்ப்பந்தமாக அமலாக்கக் கூடாது என்பதை அவர் ஐயமறக் கூறிவிட்டார். இவை, ஐயரது நிலையே சரியானது என்று சொன்னதற்கொப்பாகும்.

ஆனால், யங் இந்தியாவில் இந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன்பே டாக்டர் நாயுடு, காந்தியின் யோசனகளை ஐயர் புறக்கணித்து விட்டார் என்று குற்றம் சாட்டினார். சமபந்தி போஜனம் என்ற தமது பழைய கோரிக்கையுடன், கொடையாளர்களது நன்கொடைகளைத் திருப்பித் தருவது பற்றிய ஒரு புதுக் கோரிக்கையையும் டாக்டர் நாயுடு கிளப்பினார். இந்தக் கோரிக்கைக்கு, தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் ஆதரவு அளித்தது தான் ஆச்சரியம். 

ஏனென்றால், ஐயரை நன்கு அறிந்தவர் திரு.வி.க. என்பதால்தான்.

காந்தி நடத்திய ரகசியப் பேச்சுக்களின் போது, குருகுலத்துக்கு நன்கொடை அளித்தவர்களின் உணர்ச்சியை ஐயர் மதிக்க வேண்டும் என்றும், அப்படி யின்றித் தம் சுயேச்சைப்படி ஐயர் நடக்க விரும்பினால், நன் கொடைகளைத் திருப்பித் தந்து விட வேண்டும் என்றும் காந்தி சொன்னதாக டாக்டர் நாயுடுவும், திரு.வி.க.வும் கூறினார்கள். ரகசியப் பேச்சுக்களில் அவர்கள் சொன்னபடிதான் காந்தி சொன்னாரா என்று அறிய வழியில்லாமல் போயிற்று. ஆனால், காந்தியின் யோசனைப் படியே நடப்பதாக ஒப்புக் கொண்ட சீர்த்திருத்தவாதிகளும், காந்தி யங் இந்தியாவில் தெரிவித்த கருத்துக்களுக்கு விரோதமாகத் தங்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

'குருகுலச் சொத்துக்கள் என்னுடையதல்ல. என்னிடம் ஒப்படைக்கப் பட்ட சொத்துக்கள். அவைகளுக்காக விரைவில் ஒரு தர்மகர்த்தா குழு அமைக்கப்படும். குருகுலச் சொத்துக்கள் என்னுடையதாக இருந்தால், நன்கொடைகளை உடனே திருப்பித்தர, நான் கணமும் தயங்கமாட்டேன். தர்மகர்த்தா என்ற என் நிலையால், நான் என் இஷ்டப்படி கையாள இயலாது' என்ற ஐயரின் பதில் யங் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

ஆனால், இதெல்லாம் டாக்டர் நாயுடு போன்றோர்களுக்கு எந்த விதத்திலும் திருப்தி அளிக்க வில்லை. அவர்களது நோக்கம், குருகுலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற நிலையில் இருப்பது தெளிவாகி விட்டது.

குருகுலத்தைக் காப்பாற்ற 1925 ஏப்ரல் 21-ஆம் தேதி ஐயர் குருகுலத்திலிருந்து ராஜீநாமாவைச் சமர்ப்பித்து, குருகுல ஆசிரியர்களும், ஊழியர்களும் தாங்களே ஒரு புது ஆசாரியரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொண்டார்.

'எதிரிகள் குறிப்பாக என் மீது பகைமை பாராட்டுவதால், அவர்களுடன் சமரசம் செய்வது எளிதாகும்படி நான் விலகுகிறேன்' என்றார் ஐயர்.

இதுவும் டாக்டர் நாயுடுவைத் திருப்திப்படுத்தவில்லை. 'குருகுலத்தைச் சண்டைக்காரர்கள் கையில் ஒப்படைக்க இது ஒரு சூழ்ச்சி' என்பது டாக்டரின் குற்றச் சாட்டு. அத்துடன் நில்லாது, நன்கொடையாளர்களை சேரமாதேவிக்கு வரச் சொல்லி குருகுலச் சொத்தை காப்பாற்ற அறைகூவல் விடுக்கப் பட்டது.

டாக்டரின் அறிக்கையை படிக்கவும்: “குருகுலக் கிளர்ச்சியில் எனக்குத் தீவிர உதவி புரியும் எல்லா வகுப்பினரையும் 1925 - ஏப்ரல் 29, 30 தேதிகளில், திருச்சி, பிரசன்ன வெங்கடேசுவர ராவ் சத்திரத்தில் என்னச் சந்திக்கும்படி வேண்டுகிறேன். பயணச் செலவுக்குத் தேவைப்படுபவர்களுக்குத் தொகை உதவப்படும்!”

பிரச்சனை எப்படியெப்படி மாறிவிட்டது! சமரசமாகவோ கட்டாயமாகவோ சமபந்தி போஜன முறையை அமல் செய்வதென்பது போய், இப்போது, 'சொத்தைக் காப்பது”, தொகை வேண்டுவோருக்கு, 'பயணத் தொகை கிடைக்கும்' என்று ஆகிவிட்டது.

ஐயரும் தம் மகளுடன் அகால மரணடைந்து விட்டார். ஆகையால், குருகுலம் மேலும் நடத்தமுடியாமல், மூடப்பட்டது.

குருகுலக் கிளர்ச்சி முடிந்ததென்றாலும், இதன் விளைவாகத் தலைவிரித்தாடிய பிராம்மணர், அல்லாதார் பகைமை எளிதில் மறைய வில்லை. வெகுகாலத்துக்குத் தமிழ் நாட்டின் பொது வாழ்வை இந்தப் புண்ணோய் கெடுத்து வந்துள்ளது.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017