இரும்புச் சங்கிலியால் யானைபடும் ரண அவஸ்தைகள்



முழுவிவரங்களுக்கு சொடுக்கவும் இணைப்பை



மார்கரெட்  ஒயிட்டேக்கர் என்பவர் மிருகங்களின் நடவடிக்கைகளை அறிந்து செயல்படும் முறைகளை பயிற்சியாக யானைப் பாகன்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வல்லுனர். யானைகளை இரும்புச் சங்கிலிகளால் கட்டித் துன்புறுத்துவதை அடியோடு தவிர்த்து, யானைகளை கையாளும் வழிமுறைகளை அவர் பயிற்சிமூலம் யானைப் பாகன்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக பங்களூரில் உள்ள பென்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளார். அதன் காரணமாக, கூடிய சீக்கிரமே 50 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள யானைச் சரணாலயத்தில், அனைத்து யானைகளும் இரும்புச் சங்கிலியிலிருந்து முற்றிலும் விடுபட்டு, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப் படப்போவதை அறியும் போது, யானையை விநாயகரின் அம்சமாகக் கும்பிடும் அனைத்து ஹிந்து மக்களுக்கும் ஒரு உவப்பான செய்தியாகும்.

மேலே உள்ள படத்தில் உள்ள யானையின் பெயர் சுந்தர். அந்த யானை முன்பு மஹாராஷ்டராவின் கொல்ஹாபூர் நகரத்திலுள்ள வாராநகர் கோயிலில் மிகவும் கொடூரமாக துன்பப்படுத்தப்பட்டதை அறிந்த ஒரு அன்பர் மும்பை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அதன் காரணமாக இந்த சுந்தர் யானை, பங்களூரின் பென்னர்கட்டா  யானைச் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டு, சிகிட்சை அளிக்கப்பட்டு, முழுமையாக குணமாகி உள்ளது. இந்த வழக்கில் அமிதாப் பச்சன், மாதுரி தீட்ஷித், பமேலா ஆண்டர்சன் ஆகிய பிரபலங்கள் ஆதரவு அளித்தது சுந்தரின் வழக்கில் மக்கள் மனத்தைச் செலுத்தி, வெற்றியடைய வழிவகுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். அந்தச் சரணாலயத்தில் உள்ள 15 யானைகளுக்கும் இந்த இரும்புச் சங்கலியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


இந்தத் தருணத்தில், இரும்புச் சங்கிலிகளால் கட்டுண்டு அவதிப்படும் இந்தியாவின் கோவில் யானைகளை நினைக்காமல் இருக்க முடியாது. அதைப் பற்றிய ஒரு கட்டுரையை ஃரெண்ட் லைன் என்ற ஆங்கிலப் பத்திரைகையில் நான் படிக்க நேரிட்டது. அதில் குறிப்பிட்டுள்ள செய்திகள் - படங்களுடன் பிரசுரமாகி இருந்தன. அவைகள் என் மனத்தை வெகுவாகப் பாதித்தது. அதில் உள்ள விவரங்களில் முக்கியமானவைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.





இந்த யானை பீஹாரிலிருந்து கேரளாவில் உள்ள திருசூர் நகரத்தின் தெச்சுக்கோட்டுக் காவு பெரமாங்களத்து தேவஸ்தானத்தின் முயற்சியால் அது 18 வயது இருக்கும் போதே கொண்டு வரப்பட்டது. அந்த யானைக்கு பீஹாரில் பேசப்படும் பேஜ்பூரி மொழி ஆணைகள் தான் பழக்கம். இருப்பினும், கேரளா மாவுத்தனின் ஆணைகளைச் சீக்கிரமே கற்றுக் கொண்டு விட்டதுபிஹாரில் அதன் பெயர் மோட்டி பிரசாத். கேரளாவில் தெச்சிக்கோட்டுக் காவு ராமச்சந்திரன் என்பது அதன் திருநாமம். அதன் உயரம், எடை (315 செ.மீ. உயரம் - 6.5 டன் எடை), கம்பீரம் ஆகியவைகளால், அதுசூப்பர் ஸ்டார்அந்தஸ்தில் வெகு சீக்கிரமாகவே ஆகியது. ஆனால், அதை அடக்கும் விதமாக அதன் மாவுத்தர்கள் அங்குசத்தால் அதன் உடம்பைக் குத்தி, தாங்கமுடியாத வேதனையை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டதுகோயில் விழாக்களில் அந்த யானையின் தங்க முகப்படாம், மற்றும் படபடோப அலங்காரங்களைத் தான் மக்கள் பார்த்து ரசித்தார்களே தவிர, யானையின் கால்களையும், உடம்பையும் ரணமாக்கும் துருப்பிடித்த நீண்ட சங்கிலிகள் மக்களின் கண்களில் படுவதில்லை. இந்த சூப்பர் ஸ்டார் யானையை அங்குசத்தால் அடக்கும் போது, அதன் இடது கண்ணில் பட்டு, அது குருடாகி விட்டது. இருப்பினும், அந்த யானையை கோயில் திருவிழாக்களில் பங்கு கொள்வதிலிருந்து விலக்கு அளிக்க வில்லை.

இந்த பொறுக்க முடியாத வேதனையால், இந்த சுப்பர் ஸ்டார் யானையும் தன் பொறுமையை இழந்து, 10 பேர்களை - அதில் 5 மாவுத்தர்களும் அடங்கும் - பழிவாங்கி உள்ளது. சமீபத்தில் 27-01-2013 அன்று, 3 பெண்கள் அந்த யானையின் கோபத்திற்குப் பலியாகிவிட்டனர். மீண்டும், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி, இன்னொரு மாவுத்தனையும் கொன்று விட்டது இந்த யானை. இதற்குக் காரணம் அந்த யானையின் கால்களில் உள்ள புண்களில், அந்த மாவுத்தன் அங்குசத்தால் குத்தி துன்புறுத்தியது தெரியவந்தது. இதனால், யானையின் மற்ற மாவுத்தனை காட்டிலாகா கைது செய்து வழக்கு தொடங்கி உள்ளது. அப்படிப்பட்ட யானகளை உடனே யானைகள் சரணாலயங்களில் கொண்டு, காடுகளில் சுதந்திரமாகத் திரிய விடுவது அவசர அவசியமாகும். ஆனால், பணம் பண்ணுவதையே பிரதானமாகக் கருதும் கோயில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானங்கள் யானைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்பது மிகவும் வேதனையான செய்தியாகும்.

சட்டங்கள் பல இருப்பினும், அவைகள் எல்லாம் செயல்படுத்தப்படாமல் பல்லில்லாத ஷரத்துக்களாக சட்டப் புத்தகங்களில் மட்டும் தான் அவ்வப்போதுமேற்கோள் காட்ட மட்டும் பயன்படுகின்றன. 




 இந்தயானைகளின் அணிவகுப்பில் முன்பக்கம் அவைகள் அழகாக தங்க முகப்படாங்களுடனும், பலவித அலங்காரங்களுடன் இருப்பினும் அவைகளின் பின்னங்கால்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் நிற்க  வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவதுடன், வெடிச் சத்தங்கள் - மேள தாளங்கள் ஆகியவைகளால் வெளிப்படும் சப்தங்களையும் அந்த யானைகள் தாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெடி சப்தங்கள் யானைகளைப் பயமுறுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்த யானையின் கால்களில் உள்ள வெள்ளை நிறங்கள் அதன் கால்களின் தோல்கள் கட்டப்பட்ட சங்கிலிகளால் உரிந்து ரணமாவைதைக் காட்டு கின்றன. அதற்கு மருந்து போடாமல் இருப்பதுடன்- அப்படியே மருத்து போட்டாலும், மாவுத்தர்களே கரியைப் பொடி செய்து அப்பி விடுவதால் மேலும் வலி ஏற்படுவதுடன், அந்த தோல்கள் உரிந்த இடங்களிலேயே இருப்புச் சங்கிலிகளைக் கட்டுவதால், யானைக்கு மிகுந்த வேதனை தரும் என்பதை யாரும் உணருவதில்லை. இதனால் இருக்கும் ரணம் குணமாவது தடைப்படுவதுடன், புதிய ரணங்கள் இந்தச் சங்கிலிகள் ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் ஒருவரும் கவலைப் படுவதில்லை. அத்துடன் சங்கிலிகள் துருப்பிடித்து இருப்பதால், காலின் ரணங்கள் இன்னும் அதிகமாகி, தீராத வலிக்கும் வழிவகுக்கும்.


யானையின் பாதங்கள் மிகவும் மென்மை யானவைகள்அவைகளை சூடான தார்சாலைகளில் நடத்திச் செல்வதாலும், கருங்கல் தரைகளில் யானைகளை நிற்க வைப்பதாலும்அதன் மென்மையான பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவைகள் மூலம் பல வியாதிகள் வர வழிவகுத்து விடுகின்றன. பல கோயில்களில் யானைகளை கருக்கற்களில் நிற்க வைத்து, அவைகளை பக்தர்களின் தலைகளில் தும்பிக்கையால் ஆசீர்வதிக்கும் அவலம்  நடக்கின்றன. இது யானைகளுக்கு மிகுந்த மன அழுத்தங்களைக் கொடுக்கும்.


மேலே உள்ள இரண்டாவது படத்தைப் பார்க்கவும். தகிக்கும் வெய்யிலில் யானையை நிற்க வைத்திருக்கும் மாவுத்தன், தரையின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால், தனக்கு மட்டும் பேப்பரைக் கால்களுக்கு அடியில் போட்டு அதன் மேலே நிற்கிறான். ஆனால், மிகவும் மிருதுவான பாதங்களை உடைய யானையோ அந்த வெய்யிலில் காய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறது.

இந்த நிலை ஒழிய வேண்டு மென்றால், கோயில்களில் யானையை வைத்துப் பராமரிப்பதை ஒரே யடியாக தடுத்து நிறுத்த வேண்டும். சர்க்கஸ் போன்றவற்றில் யானைகளை வைத்து வேடிக்கை காட்டுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அரசாங்கங்கள் இந்த யானைகளின் துயரத்தை நீக்கவும் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்.

இதற்கு மடாதிபதிகளும் ஆவன செய்ய வேண்டும்

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017