அரசியல் தியாகி வாஞ்சிநாதன்


மோடி அரசு பதவி ஏற்றபின் தான், பல நாள் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்று முதன் முறையாக வாஞ்சியின் உருவப்படத்தை ரயில்நிலையத்தில் நிறுவி அஞ்சலி செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்பதை வாய்மை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. இதைச் சாத்தியப்படுத்திய மத்திய - மாநில அரசுகளை வாய்மை பாராட்டுகிறது. இனி இந்த அஞ்சலி அரசு விழாவாக நடைபெறும் என்பது வீரவாஞ்சியின் தியாகத்திற்குக் கிடைத்த மரியாதையாகும்.
வீர வாஞ்சிநாதனைப் பற்றிய சில முக்கிய செய்திகள்:
v மணியாச்சி ரயில்நிலையத்தில் அப்போதைய திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்த கழிப்பறைக்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன் என்ற வீர இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒரு செய்தியைச் சொல்லும்.
"மிலேச்ச இங்கிலீஷ்காரர்கள் நம் பாரத நாட்டைக் கைப்பற்றியதோடு, நம் இந்துக்களின் சநாதன தர்மத்தை அழிக்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி ஸ்வராஜ்யத்தையும், சநாதன தர்மத்தையும் நிலைநாட்ட முயன்று வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, அர்ஜுனன் முதலியோர் முன்பு தர்மம் வழுவாது எல்லா மதத்தினரும் போற்றும்படி இந்த நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது பசுமாட்டை அடித்து அதன் இறைச்சியைத் தின்னும் ஐந்தாம் ஜார்ஜ் என்ற மிலேச்சரை இந்தியாவின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் போகிறார்களாம். 3000 சென்னை ராஜதானியர்களை சேர்த்திருக்கிறோம். ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் அவரைக் கொல்ல சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களில் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைத் துணிந்து செய்து முடித்தேன். இதுவேதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவருடைய கடமையாகக் கருதவேண்டும்.
இப்படிக்கு, ஆர்.வாஞ்சி ஐயர்,செங்கோட்டை.
v வாஞ்சியின் வீட்டு வாசலில் பெரிய கொடிமரத்தின் கீழே பாரதமாதா படம் வைக்கப்பட்டு, கொடி மரத்தில் பாரதமாதா கொடி பறந்தது. உறுப்பினர்களிடையே வாஞ்சி இப்படிப் பேசினார்....
"சகோதரர்களே! இந்த பரந்த பாரத தேசத்தின் தென் கோடியிலுள்ள நமது செங்கோட்டையில் பறக்கும் பாரதமாதாவின் கொடியானது சீக்கிரத்திலேயே பாரத தேசமெங்கும் வெற்றிக் கொடியாகப் பறக்க வேண்டும். வடக்கே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் சத்தியமே ஜெயித்த அந்த குருக்ஷேத்திர பூமியில், இன்று ஆங்கிலேயர்கள் நம் பாரத மாதாவையும் நம்மையும் அடிமையாக்கி ஆட்சி புரிகின்றனர். அன்று அந்த யுத்த பூமியில் தர்ம யுத்தம் நடந்தது. அதில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைத்தது. அன்று அது நடந்தது உண்மையானால், இன்று செங்கோட்டையில் பறக்கும் இக்கொடி வருங்காலத்தில் அங்கேயும் பறக்க வேண்டும்! இது சத்தியம்" என உணர்ச்சி கரமாகப் பேச, உறுப்பினர்கள் அனைவரும் "வந்தேமாதரம்" என்று கோஷமிட்டனர்.
v வாஞ்சிநாதன் இறந்துபோன செய்தி அவருடைய மனைவி பொன்னம்மாளுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. அதனால் தன் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று எண்ணினார் பொன்னம்மாள்.

ஆனால் மாதங்கள் பல கடந்த பிறகு அவருக்கு செய்தி சொன்னபோது அவர் அதை நம்பவில்லை. காரணம், அவர் வாஞ்சியின் பூதவுடலைப் பார்க்கவில்லை, மேலும் வாஞ்சியின் இறுத்தச் சடங்கிற்கு, மனைவியின் கையால் பெற்றுச் செய்யவேண்டிய சடங்குகள் எதையும் செய்யவில்லை. அதனால் அவர் தாம் இறக்கும் வரையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டு, சுமங்கலியாகவே வாழ்ந்து முடித்தார். அதனால் எல்லோரும் அவரை சுமங்கலி மாமி என்றே அழைத்தனர்.
v  நாட்டுக்காக உயிர் துறந்த வாஞ்சியின் செயலில் மரியாதை கொண்டிருந்த வீரப் பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், தீபாவளிக்கு புடவை எடுத்து சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். வீரனின் மனைவியாக பொன்னம்மாளின் தியாக வாழ்வைப் போற்றியவர் பசும்பொன் திருமகனார்.

இன்னும் பல செய்திகளை தலைப்பைச் சொடுக்கி அறியவும்.
நாட்டிற்கு உயிர்த் தியாகம் செய்த தியாகி வாஞ்சி நாதனுக்கு வாய்மை சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017