‘அச்சே தின்’ ரயில் - மத்திய பட்ஜெட்கள்



ரயில்வேயின் இன்றைய நிதி நிலையை ரயில்வே மந்திரி டி.வி.சதானந்த கெளடா தமது புதிய பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கு முன் இப்படி வர்ணிக்கிறார்: ‘ஒரு பிரயாணிக்கு ஏற்படும் நஷ்டம் ஒரு கிலோ மீட்டருக்கு 10 பைசா வீதமாக 2000-01-ல் இருந்தது. அது  2012-13-ல் 23 பைசாவாக நஷ்டம்  அதிகமாகி விட்டதுரயில்வேயின் மொத்த வருவாயில் 94% செலவாகிவிடுகிறது. 6% மட்டுமே மிஞ்சுகிறது. மேலும், இதுவரை அறிவித்து நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் திட்டங்களின் எண்ணிக்கை: 33. அதில் 4 திட்டங்கள் கடந்த 30 வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டும், இன்னும் முடிவு பெறாமல் இருக்கிறது. ஆகையால் புதிய திட்டங்களை அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட திட்டங்களைவிரைவில் முடிக்க உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவைகளுக்கே 5 லட்சம் கோடி வரை செலவாகும். அதாவது ஆண்டொன்றுக்கு ரூபாய் 50,000 கோடி வரை 10 வருடங்களுக்குத் தேவைப்படும். இதுவே ஒரு பெரிய சவாலான ஒன்றாகும்.’

இந்த நெருக்கடியான நிதி நிலையிலும், அந்நிய முதலீடு - பொதுமக்கள் தனியார் பங்களிப்பு மற்றும் மக்களின் ஆதரவு மூலம் (மோடியின் நான்கு பி-க்கள் - Public Private People Participation - என்ற புதிய மந்திரச் சொற்கள்) கிடைக்கும் நிதியினை பல திட்டங்களைச் செயல்படுத்த வழிவகுத்ததால், பயணக் கட்டண உயர்வு இல்லாமல் - (பட்ஜெட்டிற்கு முன் அதிகரிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்த்து) - ரயில்வேயை சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்களை சகல நவீன வசதிகளுடன் - வி-பை இண்டர் நெட், லிப்ட் - நகரும் நடைபாதைகள், தரமான உணவு விடுதிகள் ஆகியவைகளுடன், புல்லட் ரயில்கள் - அதிவேக வைர நாற்கர இணைப்பு ரயில்கள் ஆகியவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிர்வாகம் நிரந்தரமாக அனைத்து விதத்திலும் தொடர்ந்து மேம்பாடு அடைய ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்க முடிவாகி உள்ளது. 40% சுகாதாரத்திற்கும், 12% பாதுகாப்பிற்கும் பட்ஜெட்டில் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக இந்த ரயில்வே பட்ஜெட்டை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவே படுகிறது.

மத்திய அரசின் நிதி நிலை அவ்வளவாக சரியான நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ‘முந்தைய அரசாங்கம் பாக்கி வைத்துள்ள சப்சிடி என்ற உதவித் தொகையே ரூபாய் 1 லட்சம் கோடி என்ற அளவில் இருப்பதும், மேலும் அதிகரிக்கும் அந்த உதவித் தொகையைக் குறைக்க எந்த வழியும் ஏற்படுத்தாதது இந்தப் பட்ஜெட்டின் குறை என்று சில பொருளாதார வல்லுனர்கள் கணித்தாலும், இந்த பட்ஜெட் பொதுவாக அதிகமான குற்றச் சாட்டுகளை எதிர்கொள்ள வில்லை என்பது தான் உண்மை.

மக்களில் 60% பேர்கள் இந்த பட்ஜெட் சரியான பாதையில் இந்தியாவை வளர்ச்சியுறச் செய்யும் விதமாக அமைந்தது என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், பொருளாதார நிபுணர்களின் மதிப்பீட்டில் 10-க்கு 7 என்ற அளவில் இந்த பட்ஜெட் கணிக்கப்பட்டதால், இது மோடி-ஜெட்லிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

மாதச் சம்பளம் பெறுபவர்கள், பென்ஷன் பெறுபவர்கள் ஆகியவர்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த ரயில் சேவைகள், தேசிய அகாடமி - விளையாட்டு அகாடமி, இடம் பெயர்ந்த காஷ்மீர்களின் மறுவாழ்விற்கு ரூபாய் 500 கோடி, கங்கை சுத்தப்படுத்த ரூபாய் 2000 கோடி, நேரடி அந்நிய முதலீடு 26% லிருந்து 49% - பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளுக்காக உயர்த்தியது, வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த ரயில் சேவைகள், 100 ஸ்மார்ட் நகரங்கள், வல்லபாய் படேல் சிலைக்கு ருபாய் 200 கோடி, அனைவருக்கும் 2022-ஆண்டுக்குள் வீடுகள், ருர்பான் (RURBAN)- என்ற கிராமங்களுக்கு நகரத் தரத்திற்கு இணையாக கட்டமைப்பு வசதிகளை  அமைத்தல், 24 x 7 என்ற அளவில் எப்போதும் மின்சார வசதிகளை கிராமங்களில் அளித்தல், பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு சுமார் 83,000 கோடி நிதி ஒதிக்கீடு, பெண்கள் பொது சாலைகளில் பாதுகாப்பிற்காக ரூபாய் 50 கோடி, பெரிய நகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பிற்கு ரூபாய் 150 கோடி, இந்தியாவின் சாலை மேம்பாட்டிற்கு ரூபாய் 38,000 கோடி - இதில் உள் ஒதிக்கீட்டில் 3,000 கோடி வடகிழக்கு மாகாணங்களுக்கு மட்டும், செலவை கட்டுப் படுத்தவும் - சரிப்படுத்தவும் ஆணையம் அமைத்தல், விவசாயம் மற்றும் ராணுவத்திற்கு முதலிடம் என்பன போன்ற பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பிரதம மந்திரி மோடி சொல்கிறார்: “இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு புதிய நம்பிக்கை ஊட்டும் அளவில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவை வல்லமை பொருந்திய தொலை தொடர்பு சாதனங்களை மேம்படுத்தும் தரமான நவீன தொழில் நுட்பங்கங்கள் கொண்ட வளர்ந்த நாடுகளைப் போல் மேம்படுத்த பாதை அமைக்கும் பட்ஜெட்.”     

பட்ஜெட்டை தமிழ் நாட்டு இன்னாள் - முன்னாள் முதல் அமைச்சர்கள் பாராட்டினாலும், காங்கிரஸ், நேஷனல் காங்கிரஸ், ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் கம்யூனிட்டுகளும் குறைகண்டுள்ளனர். கம்யூனிட்டு கட்சி,’மோடியின் கட்சி பெரும் முதலாளிகளிடம் பணம் பெற்றதை திருப்பிக் கொடுக்கச் சலுகைகளை அள்ளி வழங்கும் பட்ஜெட்என்று அதன் அந்நிய நேரடி முதலீடு, பிபிபிபி முறை ஆகியவைகளைச் சுட்டிக் காட்டி குறைகூறி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி - இது ஜெட்லி வாயால் காங்கிரஸ் கட்சி சிதம்பரத்தின் சித்தாந்தைத்தை சித்தரிக்கும் பட்ஜெட் - என்று ஒரே அடியாக தூஷித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்து ஆங்கில நாளிதழ் தன் தலையங்கத் தலைப்பை -மாற்றத்தை விட அதிகமான காங்கிரஸ் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடுக்கும் பட்ஜெட் - என்று சொன்னாலும், அதிலுள்ள வாசகங்கள் பட்ஜெட்டில் அதிகமாகக் குறைகாணவில்லை.

எம்.எஸ். சுவாமிநாதன், அப்துல் கலாம், பல பெரிய - சிறிய தொழில் அதிபர்கள் - இது குழந்தை எடுத்து வைக்கும் முதல் அடி என்றாலும், கடக்கும் தூரம் அதிகம் - என்ற அளவில் பட்ஜெட்டை முழுமனதுடன் இல்லாவிடினும், அரை மனதுடனாவது ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முன்னாள் ரிசர்வ் பாங்கின் கவர்னர் எம்.கே. நாராயணன் - சில மைல்கற்களை அங்கங்கே ஊன்றினாலும், பாதை அமைப்பை ஆரம்பிக்காமலும், அதில் தெளிவான நோக்கம் இல்லாமலும் இருக்கும் பட்ஜெட் என்று தமக்கே உரித்தான தொனியில் விமர்சித்தாலும், அந்தச் செய்தியின் உள்ளடக்கம் பட்ஜெட்டை வரவேற்பதாகவே படுகிறது.

ஒரு சிலர் குறிப்பிட்டுக் குறை சொன்னது: ‘ பட்டேல் சிலைக்கு ரூபாய் 200 கோடியை ஒதுக்கியது வீண் செலவு. இதைத் தவிர்த்து இருக்க வேண்டும்.’

இது 2500 கோடி செலவில் அமையவிருக்கும் பட்டேலுக்கு கட்டும் நினைவகத்திற்கு மத்திய அரசு தன் பங்கிற்கு ஒதிக்கிய நிதியாகும். அதில் அவரது பிரம்மாண்டமான சிலையுடன், வேறு பல உபயோகமான கல்விக் கூடங்கள், வேலை வாய்ப்பு அம்சங்கள் உருவாக இருக்கின்றன. அதை ஒரு சுற்றுலாத் தளமாக அமைத்து வருவாய் ஈட்டும் அளவில் அமைக்க இருக்கிறது. மேலும், காங்கிரஸ் அரசு நேரு, இந்திரா, ராஜிவ், சஞ்சய் ஆகியவர்களின் நினைவுச் சின்னங்களுக்குக் கோடிக்கணக்கில் செலவழித்ததை இங்கு குறிப்பிட வேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் நினைவகம் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டபோது அதை எதிர்கட்சிகள் குறைகூறவில்லை. மேலும், வல்லபாய் பட்டேல் இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஒன்று சேர்த்து, ஒருங்கிணைந்த இந்தியாவை ஏற்படுத்தியது இமாலயச் சாதனையாகும். அதைச் சரித்திர ஏடுகள் சரியாக பதியவில்லை என்ற ஒரு கருத்து நிலவுவதை மறப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ இல்லை. அதை ஓரளவுக்கு சரிசெய்யும் விதமாக, ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் பட்டேலின் சிலை அமைப்பின் மொத்த திட்டமான 2500 கோடியில், 200 கோடியை மத்திய அரசாங்கம் ஏற்பதை இந்திய மக்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று தான் நாம் கருதுகிறோம்.

ஏழு வாரங்களுக்குள்ளேயே இரண்டு பட்ஜெட்களைத் தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும், மோடி அரசு எடுத்து வைத்த அடிகள் சரியான பாதையை நோக்கியதே என்றும், வரும் நாட்கள் நல்லநாட்களாகவே அமையும் என்றும் மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவே படுகிறது.


அந்த நம்பிக்கைக்கு எந்தவிதமான குந்தகமும் வராமல் மோடி அரசு செயல்பட ஆண்டனைப் பிரார்த்திப்போமாக

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017