கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 16, 2025 - சனிக்கிழமை
ஆகஸ்ட் 16, 2025 அன்று கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணரின் 5252வது பிறந்த தினமாகும்.
கிருஷ்ண அவதாரம் மகாவிஷ்ணுவின் 9வது அவதாரமாகும். பவான் கிருஷ்ணர், துவாபர யுகத்தில் பூமியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
அதர்மத்தை அழிப்பதற்காகவும், மனிதகுலத்தை நேர்வழிப்படுத்தி, துன்பங்களில் இருந்து விடுவிப்பதற்காகவுமே கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
வசுதேவர்-தேவகியின் எட்டாவது குழந்தையாக அவதரித்த கிருஷ்ணர், அதே இரவில் கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நந்தகோபர் மற்றும் யசோதனையின் மகனாக மறைத்து வைத்து வளர்க்கப்பட்டார்.
சிறு குழந்தையாக இருந்த போதே கோகுலத்தில் பல மாய வேலைகள் செய்து, தன்னை கொல்ல வந்த அரக்கர்களை கொன்று, ஆயர்பாடியில் இருந்தவர்களை காத்தார்.
இறுதியாக தனது தாய்மாமனான கம்சனையும் வதம் செய்தார். கம்ச வதம் மட்டும் கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் கிடையாது. பாரத போரில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டியதுடன், மனிதகுலத்தை துன்பத்தில் இருந்து மீட்டு, மோட்சத்திற்கான வழியை காட்டும் பகவத்கீதையை அருளுவதற்காகவே அவரின் அவதாரம் நிகழ்ந்தது.
கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, அஷ்டமி ரோகிணி, ஸ்ரீ ஜெயந்தி என பல பெயர்களாலும் கிருஷ்ணரின் அவதார தினம் அழைக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், ஸ்ரவண மாதம் எனப்படும் ஆவணி மாதம், தேய்பிறையில் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணரின் பாத தடங்களை வரைந்து, அவருக்கு விருப்பமான வெண்ணை மற்றும் பலகாரங்கள் செய்து படைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்வார்கள். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஒருவர் மீது ஒருவர் பிரமிடு அமைத்து ஏறி உறி உடைக்கும் நிகழ்வுகள் மிக கோலாகலமாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் வேண்டிக்கையான, மகிழ்ச்சிக்குரிய பல விஷயங்களை செய்து கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து மகிழ்வது வழக்கம்.
இஸ்கான் என்ற ஹரே கிருஷ்ணா இயக்கம் கிருஷ்ண பக்தியை மக்களிடையே பிரபலமாக்க 1966 ஆம் ஆண்டில் ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது, இது 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கௌடிய வைஷ்ணவ மரபை அடிப்படையாகக் கொண்டது. இந்த இயக்கம் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு, கிருஷ்ணரை உயர்ந்த தெய்வமாக வணங்கி, பக்தி (பக்தி யோகா) மற்றும் தெய்வீகத்துடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழிமுறையாக "ஹரே கிருஷ்ணா" மந்திரத்தை உச்சரிப்பது போன்ற நடைமுறைகளை மையமாகக் கொண்டுள்ளது. இது இப்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி கிருஷ்ண பக்தியை உலகம் அறியச் செய்துள்ளது.
கிருஷ்ணனின் பக்தியில் வாய்மை வாசகர்கள் அனைவரும் செல்வம், கீர்த்தி, நீண்ட ஆயுள், நிறைந்த ஆனந்தம், மழலை இன்பம் அனைத்தும் கிட்ட வாய்மை பிரார்த்திக்கிறது.
Comments