06 – 11 – 2023 - இன்றைய இனிய சிந்தனை – லட்சியம்

 


லட்சியம் இல்லா வாழ்வு சுவை இல்லா உணவிற்குச் சமம்.

லட்சியம் என்பது உணவுக்கு உப்பு போன்றது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே  – என்பது போல் லட்சியம் இல்லா வாழ்க்கை உப்பில்லா உணவு போல் குப்பையானதாகும்.

லட்சியம் என்பது உடல், உள்ளம், உயிர் ஆகியவைகளை விண்ணளவு உயர்த்தும் உயர்வானதாக இருக்க வேண்டும்.

உடலை லட்சியமாகத் தேர்வு செய்தால் விளையாட்டு வீரனாக மிளிர உழைக்க வேண்டும். அதற்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி, சத்துள்ள உணவு, சரியான ஓய்வு என்று உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதான் உலக விளையாட்டு அரங்கில் பல பதங்கங்களை வென்று தனிப்பட்ட முறையில் புகழும், தேசத்திற்கு உயர்வும் கிடைத்து லட்சியம் நிறைவேறி இனிதே வாழ்வைக் கழிக்கலாம்.

உடல் பேணி நாட்டைக் காக்கும் படை வீரனான வாழ்வையும் தேர்வு செய்து புகழ் பெற்று வாழலாம்.

உள்ளம் – மனசு ஆகியவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யும் லட்சியம் என்றால் அந்த லட்சியம் உடலின் மூளையுடன் சம்பந்தப்பட்டதாக அமைகிறது. இதன் மூலம், கல்வி கற்று,  பலவகையான புதிய கருவிகளை புதிதாக உருவாக்கி சிறந்த அறிவியல் உலகில் ஒரு பெரிய பிரம்மாவாக புகழ் பெற்று வெற்றிகரமான வாழ்வு வாழலாம்.

கரையில்லா கல்வியில் கரை கண்டு காவியம் ஆக்கி காளிதாசன் போல் இலக்கிய சிற்பியாகவும் வாழும் லட்சியத்தையும் மேற்கொள்ளலாம்.

உயிர் உய்ய வாழ வேண்டும் என்ற லட்சியத்தைத் தேர்வு செய்தால், தனம் தானம் செய்ய, உழைப்பு உதவி செய்ய, தொண்டு உறவுக்கும் ஊருக்கும் உதவி செய்ய என்ற நியதியில் வாழ்வைக் கழிக்க வேண்டும்.

ஒரு வரியில் இதையே சொல்லுவதானால் – தன்னலம் அழித்து பொது நலம் பேணும் பெருந்தகை வாழ்வை முழுமனதுடன் ஏற்று உயிர் வாழ்தல் என்ற லட்சியம் சாலச் சிறந்தது.

உயர்ந்த லட்சியத்துடன் வாழ – இரண்டு வழிகள் உண்டு.

ஒன்று தர்மமான தாம்பத்திய வாழ்க்கை. இன்னொன்று காவியுடை உடுத்தி சந்நியாச வாழ்க்கை.

இந்த இரண்டு லட்சியத்தில் எதை மேற்கொண்டு வாழும் வாழ்க்கையும் இலகுவானது அல்ல.

தூய தர்மமான தாம்பத்திய வாழ்க்கை வாழ பல இன்னல்கள் இடையூறுகள் இழப்புகள் என்று பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது தர்மத்தைக் கடைப்பிடிக்க இவ்வளவு இன்னல்களா?- என்ற வேதனைகளால் சில சமயங்களில் தடம் புரண்டு தவறு செய்யும் வாய்ப்பும் வரலாம்.

முழு வெற்றி என்பது மிகச் சிலருக்கே சாத்தியமாகும். இருப்பினும் தர்ம வாழ்க்கை வாழ்ந்த வரைக்கும் அதன் பலா பலன்கள் அந்த ஜீவன்களுக்குக் கிடைக்கும் என்பது திண்ணம்.

இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் அர்ஜுனன் எழிப்பிய கேள்விக்கு பதில் சொல்வதன் மூலம் விளக்குகிறான். 

அதன் விவரங்கள் இதோ:

அர்ஜுனன்: மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய் என்று சொல்கிறாய். ஆனால் மனம் ஒரு குரங்குபோல் அலைபாய்ந்து, தியானத்தில் ஈடுபட முடியாமல் தோல்வி அடைகிறது. இப்படிப்பட்ட தியானத்தில் தோல்வி அடையும் யோகிகளின் நிலை என்ன?

ஸ்ரீ கிருஷ்ணன்: நல்ல காரியங்களைச் செய்பவர்களுக்கு அவர்கள் செய்த நல்ல காரியங்களின் பலன்கள் நிச்சயம் உண்டு. முடிவுறாத அல்லது வெற்றி பெறாத நல்ல காரியங்கள் முழுப்பலன்களை அளிக்காது தான். ஆனாலும் செய்த வரைக்கும் அந்த நல்ல காரியங்களின் பலன்கள் அந்த காரியகர்த்தர்களுக்கு நிச்சயம் கிட்டும்.

முழுமையாக யோகத்தில் வெற்றி பெற்ற யோகிகள் சொர்க்கம் அடைவார்கள். மற்ற தோல்வியுற்ற யோகிகளோ அவர்களின் செயல்களின் தன்மைகளைப் பொறுத்து அவர்கள் தர்மம் – சாத்வீகம் மற்றும் அதிக தனம் கொண்ட வீடுகளில் ஜெனிப்பார்கள். அப்படிச் ஜெனித்த ஜீவன்கள் பூர்வ ஜென்ம வாசனைகளால் இந்தப் பிறவில் யோகத்தில் முதிர்ச்சி அடைந்து முழு வெற்றி அடைந்து ஜீவன் முக்தி அடைவார்கள். ஆகையால் செய்த எந்த நல்ல கர்மாவும் – முழுமையாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்காவிடினும், செய்த வரைக்கும் உள்ள பலன்கள் அந்த ஜீவன்முக்தர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆகையால் நல்ல செயல்களை அதன் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப் படாமல் செய்யவேண்டும்.”

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளுரைப்படி லட்சிய வாழ்வை - வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படாமல் தேர்வு செய்து முடிந்த மட்டும் முயற்சி செய்து - வாழ வேண்டும் என்பதாகும்.

அனைவரும் லட்சியத்தை தங்கள் வாழ்க்கையின் கொள்கையாகக் கொள்ள முடியாது. அது ஒரு பிரமிடு போல் கீழே பலருக்கும் இடம் கொடுத்து, உயர உயரச் செல்லும் போது ஒரு சிலர் தான் அதில் இடம் கிடைத்து உயர முடியும். அதிலும் பிரமிட்டின் உச்சிக்கு ஒன்று அல்லது இரண்டு பேர்கள் தான் சென்று வெற்றிக் கனியைச் சுவைக்க முடியும்.

லட்சியத்தை வெற்றிகரமாகச் சென்றடைய பல சுமைகளைச் சுமந்து உடல் – உள்ளம் – உயிர் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து ஒரே சீராக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு அதிஷ்டம் என்ற ஆண்டவனின் அருள் அவசியம் வேண்டும்.

தீர்க்கமான புத்தி இல்லா லட்சியம் சிறகில்லா பறவைக்குச் சமம் என்ற வால்டர் எச். கோடிங்காமின் பொன் மொழி லட்சிய இலக்கை அடைய புத்திசாலித்தனம் மிகவும் அவசியம் என்பதை உணர்த்துகிறது.

ஆகையால், லட்சியத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அதை அடைய பயிற்சி – முயற்சி செய்வதிலிருந்து புத்தியை மிகவும் கவனமாகவும், தீர்க்கமாகவும், திடமாகவும் உபயோகிக்க வேண்டும்.

லட்சியப் பாதையில் செல்ல பல சுமைகளை சுமந்து வெகுதூரம் செல்ல வேண்டும். அந்தச் சுமைகளைச் சுமக்க வேண்டுமே என்று மனம் தளாராமல் லட்சியப் பயணம் எந்தவிதமான தடைகளையும் தகர்த்துச் செல்ல வேண்டும்.

‘உன் சுமை எம்மாத்திரம். உலகத்தைச் சுமக்கும் பூமா தேவியே உன் காலடியில் என்ற எண்ணம் சுமையால் நீ துவண்டு விழாமல் தடுக்கும் சக்தியைக் கொடுக்கும்” – என்ற விவேகானந்தரின் அருள் மொழி உன் லட்சியப் பயணத்திற்கு உந்துகோலாகும்.

கோடியில் ஒருவர் தான் லட்சியப் பயணத்தில் வெற்றி அடைய முடியும். மற்ற ஜீவன்கள் – பிறந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் – என்ற நிலையில் தான் உலகில் காலம் தள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.

இந்த பெரும்பான்மை மக்களின் நிலையைத் தான் பாரதி – “நான் வேடிக்கை மனிதரைப் போல் வீழ மாட்டேன் – நான் மஹா கவி – சாகா வரம் பெற்ற வர கவி” – என்று மிகவும் ஆணித்தரமாகச் சொல்கிறான்:

தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”

பெரிய லட்சியக் கனவுகள் இல்லாவிடினும், தன் உடல் – உள்ளம் – உயிர் ஆகியவைகளின் நிலை அறிந்து சின்னச் சின்ன லட்சியங்களை தேர்வு செய்தும் அதனால் அடையும் சிறிய சிறிய வெற்றியைக் கொண்டாடியும் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி நிம்மதி பெறலாம்.

 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே. – என்ற அவ்வையின் அருள் மொழியை இத்தருணம் நினவு கூற வேண்டும்.

எந்த ஊனமும் இல்லா ஆரோக்கியமான மனித உடல் பெறுவதை நாம் செய்த தவத்தால் என்று கூறும் அவ்வையின் அமுத மொழியை மனத்தில் கொண்டு, சிறியதோ – பெரியதோ – ஏதோ நம் பலத்திற்கும் மனத்திற்கும் ஏற்ற லட்சியத்தை தேர்வு செய்து அதில் முழு பலம் – மனம் ஆகியவைகளுடன் ஈடுபட்டு வாழ்வதும் உத்தம் என்பதையும் உணரவேண்டும். 

இதைத் தான் பாட்டிமார்கள் – ஏழைக்கு ஏற்ற எள்ளுரண்டை – என்ற பழமொழியைச் சொல்வார்கள். லட்சியத்தைத் தேர்வு செய்ய ஏழ்மை ஒரு தடை அல்ல என்பதை இந்தப் பழமொழி வலுயுறுத்துகிறது. 

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னது போல் – நேர்மையான முயற்சிக்கு அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தான் செய்யும். ஆகையால் ஏதோ ஒரு லட்சியப் பாதையை தேர்வு செய்து அதை அடைய முயற்சி செய். 

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017