தேசிய கொடி செங்கோல் சுதந்திரம்
தலையங்கத்தின் தலைப்பு குழப்பத்தையும், தெளிவற்ற தன்மையையும் வெளிப்படுத்துவதாக வாசகர்கள் குற்றம் சாட்டுவதில் உண்மை உண்டு. ஆகையால் அதை முதலில் தீர்க்க வேண்டியது நமது கடமையாகும்.
நமக்கு 15-08-1947 அன்று பிரிட்டிஷ் அரசாங்கம் முழுச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. நமது அரசியல் சாசனச் சட்டம் அமலுக்கு வந்த நாளான 26-01-1950 அன்றிலிருந்து தான் நமது இந்தியா பூரண சுதந்திரம் பெற்ற குடியரசாக பிரகடணம் செய்யப்பட்டு, பிரிட்டிஷாரின் தளையிலிருந்து முற்றிலும் விடுபட்டு பூரண சுதந்திர நாடாக ஆகியது.
இதற்கு ஆதாரம் காந்திஜி நமது தேசியக் கொடியை முடிவு செய்யும் போது இரண்டு கருத்துக்களை முன் மொழிந்தார். ஆனால் அவரது இரண்டு கருத்துக்களையும் நேரு உட்பட ஒருவரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
ஒன்று: தேசியக் கொடியில் சர்க்காதான் இடம் பெற வேண்டும். அசோக சக்ரம் இடம் பெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது – என்று காந்திஜி தன் கருத்தை வெளியிட்டார். அத்துடன் காந்திஜி நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு ஒரு படி மேலே போய் ‘சர்க்கா இல்லா தேசியக் கொடிக்கு நான் வந்தனம் செய்ய மாட்டேன்’ என்ற அளவில் தமது கருத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இரண்டு: ‘நமது தேசியக் கொடியின் இடது புற ஓரத்தில் சிறிய அளவில் யுனியன் ஜாக் கொடி இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள டொமினியனாக இருக்கும் நிலையில் பிரிட்டிஷாரின் கொடி நமது தேசியக் கொடியில் சிறியதாக இடம் பெறுவதை ஆட்சேபிக்காமல் அனுமதிப்பது தான் பெருந்தன்மையாகும்’ – என்ற அளவில் காந்திஜி தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளார்.
நமது தேசியக் கொடியை முடிவு செய்வதில் இந்த வகையான கருத்துவேறு பாடுகளைத் தான் தர்க்கம் என்று குறிப்பிட்டுள்ளோம் தலையங்கத்தில்.
செங்கோல் பற்றிய செய்திகள் செக்குலர் என்ற அர்த்தமற்ற – இந்திராவின் அவசரகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லால் பாரத தேசத்தின் பாரம்பரிய கலாச்சார நேர்மையான ஆட்சிக்கு அச்சாரமாகத் திகழ்வதையும் திசை திருப்பி மக்களைக் குழப்பி குளிர் காய்கிறார்கள் எதிர்க்கட்சிகளில் பலர். அதற்கு தலைமை தாங்குகிறது காங்கிரஸ். அதைத் தான் தாக்கம் என்று சொல்கிறோம்.
சுதந்திரம் பாரத தேசத்திற்கு 15-ம் ஆகஸ்ட் 1947 அன்று கிட்டவில்லை என்பதும், அதை உறுதிப்படுத்தும் விதமாக யுனியன் ஜாக் கொடி நமது தேசியக் கொடி ஏற்றிய அன்று இறக்கப்பட வில்லை என்பதையும் குறிக்கும் விதமாக நேரு நடந்து கொண்டதைத் தான் தயக்கம் என்கிறோம்.
தர்க்கம், தாக்கம், தயக்கம் – என்ற நிலையை இன்னும் சற்று விரிவாக விளக்குவதான் இந்த தலையங்கத்தின் நோக்கம்.
நமது தேசியக் கொடியை உருவாக்க ஏன் மவுண்ட் பாட்டனை அனுமதிக்க வேண்டும் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. ஆகையால் அவர் உருவாக்கிய நம்து தேசியக் கொடியில் யுனியன் ஜாக் இடம் பெற்றதில் ஆச்சரியம் இல்லை. நல்ல வேளையாக பாரதமாதாவின் அருளால் அந்தக் கொடி – காந்திஜியால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் – மற்ற தலைவர்கள் அனைவரும் அதை நிராகரித்து இப்போதுள்ள நமது மூவர்ணக் கொடியை முடிவு செய்தார்கள்.
நாம் காந்திஜியின் அஹிம்சை வழி மூலம் தான் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம் என்பது முழு உண்மை இல்லை என்பது பலரது பலமான கருத்தாகும். அதில் பல ஹிம்சாவாதிகளான வடக்கே பஞ்சாப் பகவத் சிங்க், சுக்தேவ், ராஜகுரு, சுபாஷ் சந்திர போஸ் என்ற எண்ணற்ற தீவிர தேச பக்தர்களுடன் தெற்கே வாஞ்சி, சிவா, வவேசு ஐயர், பாரதி போன்ற பலரின் ஹிம்சைத் தாக்குதலால் திக்குண்ட பிரிட்டிஷ் அரசு தேசபக்தர்களின் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி உயிர்தியாகம் செய்ய முன் வந்ததால் இந்தியாவை இனி ஆள முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். சுபாஷின் படைகளைத் திரட்டி விடுதலைப் போருக்கு வித்திட்டது பிரிட்டிஷ் அரசின் கீழ் உள்ள பல இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் அரசின் உத்திரவினை உதாசீனம் செய்யும் நிலையும் உருவானதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க முடிவெடுத்ததாகச் சொல்வார்கள். அதற்காக காந்திஜியின் சத்தியாக்கிரஹத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது தான். ஹிம்சாவாதி தேசிய வாதிகளுக்கும் சுதந்திரத்தில் அவர்களுக்குள்ள மதிப்பையும், இடத்தையும் அளிக்க வேண்டியது அவசியமாகும். சாவார்கரின் இந்துத்துவா கொள்கையைக் காரணம் காட்டி அவரது தியாகத்தை கொச்சைப் படுத்தும் இன்றைய காங்கிரஸ் வாதிகளை பாரதத் தாய் மன்னிக்க மாட்டாள்.
அப்படிப்பட்ட மாசு உள்ளம் படைத்த இன்றைய சில அரசியல் கட்சிகள் மோடியின் செங்கோலை புதிய பாராளுமன்ற வளாகத்தில் லோக் சபா சபாநாயகர் இருக்கையின் வலது பக்கத்தில் நிறுவியதையும் கேலி செய்கிறார்கள்.
செங்கோல் கொடுக்கும் போது நேருவின் நெற்றியில் விபூதி அணிவித்து, தேவாரம் பாடி, நாதஸ்வரம் இசைத்து அந்த நிகழ்வை மங்களகரமான ஒன்றாக திருவாடுதுறை ஆதீனத்தார் செய்துள்ளனர். ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் ஒரு சடங்கு என்று தான் திருவாடுதுறை ஆதினத்தார் சொல்கிறார்கள்.
இந்த சம்பவத்தை காஞ்சி மடத்தின் மஹா பெரியவா என்று போற்றப்படும் சங்கராச்சாரியார் அவர்களும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
மோடி அரசு பலவிதமான தேடுதல்களுக்குப் பிறகு அந்த சம்பவம் உண்மை என்று உறுதியானவுடன் அந்தச் செங்கோலைத் தேடும் படலம் நடந்து, அது அலாஹாபாத் மியூசியத்தில் அந்தத் தங்கச் செங்கோல் நேருவின் கைத்தடி என்று தவறாக காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இது எவ்வளவு இழிவான செயல் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இது நேருவின் தவறா? ஏன் நேரு தனக்கு ஆட்சி மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும், தூய்மையான – நேர்மையான நல் ஆட்சி செய்ய நினைவூட்டும் சின்னமாக அளித்த செங்கோலை அன்றே உரிய மரியாதை அளித்து லோக் சபாவில் நிறுவவில்லை?
இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்பாமல் பெருந்தன்மையாக மோடி கடமையே கண்ணாயினார் என்பதற்கு இணங்க பல ஆதீனங்களை வரவழைத்து, செங்கோலை மீண்டும் அவர்களிடமிருந்து பெற்று, செங்கோலை சாஸ்டாங்கமாக வணங்கி, தேவாரம் நாதஸ்வரம் முழங்க லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா (என்ன ஆச்சரியம் ஓம் என்ற பெயருடையவரால் செங்கோல் மோடியுடன் நிறுவப்பட்டுள்ளது ஒரு நல்ல சகுனமே!) முன்னிலையில் மோடி அந்த புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் நிறுவியுள்ளார்.
அகில உலகமே நமது பாரதீய கலாச்சாரத்தையும், உன்னதமான சடங்குகளையும் பார்த்து வியந்து பாராட்ட, இங்குள்ள சில போலி மதச்சார்பின்மை முக்காட்டில் உலாவரும் அரசியல்வாதிகளும், இடதுசாரி அறிவு ஜீவிகளும் செங்கோலின் தாக்கத்தால் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த அற்புதமான விழாவினைப் புறக்கணித்து இந்திய மக்களை மதிக்காமல் இந்திய சுதந்திரத்தைக் காக்க உருவான வளாக திறப்பு விழாவிலும் பங்குகொள்ளாமல் இருந்த அவர்களின் செயல்களை வருங்காலம் சுட்டிக் காட்டும் என்பது திண்ணம்.
நேரு சுதந்திரம் பெற்ற போது பலவிதமான தயக்கத்தில் இருந்தார் என்பதாகத் தெரிகிறது.
அதற்குக் காரணம் ‘நமக்கு சுதந்திரம் அளித்த அன்னியரான பிரிட்டிஷாரை மனம் புண்படும் படி நடக்கக் கூடாது. அவர்களின் துணையும், வழிகாட்டுதலும் நமக்கு அவசியம்.. மேலும் நாம் பெற்றது டொமினியன் ஸ்டேடஸ் தான் என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்’ என்ற நினைவோட்டத்தில் நேரு இருந்தார் என்பது பல சம்பவங்கள் உறுதிப் படுத்துகின்றன.
ஏன் பூரண சுதந்திரத்தை 15 – 08 – 1947 அன்றே பெற விழையவில்லை?- என்பது விடை காணமுடியாத கேள்வியாக இன்றளவும் உள்ளது. கீழே உள்ளது இதை விளக்கும்.
நேரு 26 - 01 – 1950 அன்று இந்திய அரசியல் சட்டத்தில் கை எழுத்திட்டு இந்தியாவின் பரிபூர்ண சுதந்திரத்தை உலகத்திற்குத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 2 ½ வருடங்கள் டொமினியன் ஸ்டேடஸ் என்ற நிலை அவசியமா? – என்ற கேள்வி எழத்தான் செய்யும். டொமினியன் ஸ்டேடஸ் என்றால் பிரிட்டிஷ் மன்னர் ஆட்சியின் கீழ் இயங்கும் சுயாட்சி என்று அர்த்தம்.
பிரிட்டிஷ் அரசு பூர்ண சுதந்திரத்தை நேரிடையாக ஸ்ரீலங்கை, பர்மா ஆகிய சிறிய நாடுகளுக்கு அளிக்கும் போது ஏன் இந்தியாவிற்கு முதலிலேயே அதே போல் பூர்ண சுதந்திரம் அளிக்க முன் வரவில்லை என்பதும் புரியாத புதிர் தான்.
நேருவின் தயக்கம் – பிரிட்டிஷ் அரசிடம் காட்டிய காருண்யம் ஆகியவைகள் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமந்திரி என்ற அந்தஸ்திற்கு ஏற்புடையதில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
நேரு நமது இந்தியப் படைக்கு ஒரு பிரிட்டிஷாரை தற்காலிகமாக நியமிக்க விரும்பினார். ஏனென்றால் நம்மிடையே அந்தப் பதவிக்குத் தகுந்த வீரர் இல்லை என்று தம் கருத்தை வெளிப்படுத்தினார்.
இதைச் செவியுற்ற ஒரு பெரிய உயர் படைத்தளபதி ‘ஒரு சந்தேகம்.. அதே போல் ஒரு பிரிட்ஷாரை தற்காலிக பிரதம மந்திரியாக ஏன் நியமனம் செய்யக் கூடாது?’ என்று மிகவும் பணிவாக ஒரு கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட பிறகு தான் நேரு தமது பிரிட்டிஷ் அபிமானக் கொள்கையைக் கைவிட்டார்.
அது மட்டும் அல்ல. நேரு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவிற்குத் தலைமை தாங்க ஒரு பிரிட்டிஷாரை நியமிக்க நினைத்து, அதற்கு காந்திஜியின் ஒப்புதலைப் பெற அவரை அணுகினார். அதைக் கேட்ட காந்திஜி ‘ஏன் பிரிட்டிஷாரை நியமிக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அம்பேத்கரே அந்தப் பதவிக்கு ஏற்றவர்’ என்று சொல்லி விட்டார்.
சுதந்திரம் பெற்ற தருணத்தில் நேருவின் தயக்கம் நல்ல வேலையாக தவறான முடிவிற்கு வித்திடாமல் பாரதம் தப்பிப் பிழைத்தது.
மோடி என்ற பாரதத் தாயின் தவப் புதல்வரின் ஆட்சியில் இத்தகைய தர்க்கம் (விவாதம்), தாக்கம், தயக்கம் – ஆகியவைகள் இல்லாமல் ஒரு தெளிவான சிந்தனையுடன் தொலை நோக்குக் கொள்கையுடன் அனைவருக்கும் நீதி என்ற உன்னதமான கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறார்.
144 கோடி இந்துக்களின் ஆசி மோடிக்கு அருள எல்லாம் வல்ல பாரதத் தாயை வணங்கி வேண்டுகிறோம்.
மீண்டும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சி மலர பகவானை வேண்டுகிறோம்.
வாழ்க பாரதம்
Comments