முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்

 முழுப் பழமொழியால் அரசியல் முகமூடி கழலும் அவலம்




புகழ்பெற்ற பழமொழி ஒன்றை கூறி நண்பர் ஒருவர் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். இந்த பழமொழியின் முதல் இரண்டு வரியை மட்டுமே அறிந்திருந்த அந்த நண்பர் இதற்கு மேலும் இரண்டு வரிகள் உண்டு என்று கூறியதும் வியப்புற்றார். அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் அடுத்த வரிகளை கூறினால் திருவள்ளுவர் சனாதனி ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தில் நாசுக்காக அந்த குறிளின் முதல் வரியை வைத்து எவ்வாறு அரசியல் செய்தனரோ அதுபோல கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற முதல் வரியை தூக்கிக்கொண்டு உலா வரும் போராளிகள் அடுத்த வரிகளை கூறுவதில்லை!

 இதுபோன்று மறைக்கப்பட்ட திருமாலுக்கு அடிமை செய் என்ற முத்தமிழ் மூதாட்டியின் ஆத்திச்சூடியின் வரிகள் வரை இன்று நம்மிடம் மறைக்கப்பட்டு வருகின்றன.

 அவ்வகையில் இந்த நண்பர் என்னிடம் விளக்கம் கேட்ட பழமொழியானது "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற இரு வரிகளுக்கும் தான் விளக்கம் கேட்டார். ஆனால் இந்த பழமொழிக்கு மொத்தம் நான்கு வரிகள் உண்டு. ஆனால் மக்களிடம் நடைமுறையில் உள்ளது இரண்டு வரிகள் மட்டும்தான். முதலில் முழு பழமொழியை பார்த்துவிட்டு அதன் விளக்கங்களை பார்க்கலாம்!

 "ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

பாலும் தேனும் உடலுக்குறுதி

வேலும் மயிலும் உயிருக்குறுதி"

(வேலும் மயிலும் வருவதாலோ என்னவோ நாசுக்காக மறைத்து விட்டனர்)

 இந்த பழமொழியின் முதல் வரிக்கு விளக்கமே தேவை இல்லை எனலாம். அதாவது எளிமையாக பார்த்தோமேயானால் ஆலமரத்தின் சாறும் வேல மரத்தினுடைய சாறும் நம்முடைய வாய்க்கும் ஈறுகளுக்கும் உறுதியை கொடுக்கும் என்பதுதான் முதல் வரி. இதில் இரண்டாவது வரிதான்  சர்ச்சைகளுக்குரியது. அதாவது "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி". பொதுவாக இந்த வரிகளுக்கு 'நாலும்' என்றால் நாலடியார் என்பதும், இரண்டும் என்றால் திருக்குறள் என்பதாகவும் இவ்விரு இலக்கியங்களும் சொல்லுக்கு உறுதியைத் தரும் என்பதாகத்தான் நாம் அறிந்திருப்போம்!

 ஆனால் நாலும் என்பது நான்கு வேதங்களையும், இரண்டும் என்பது பாரதத்தின் மிகப்பழமையான இரு இதிகாசங்களாகவும் ஏன் இருக்க கூடாது என்பதுதான் எனது கேள்வி.

 ஏனெனில் நம் முன்னோர்கள் வாழ்க்கை தத்துவத்திற்கு திருக்குறள் நாலடியாரை விட மிக அதிகமாக மேற்கோளிடுவது வேதங்களையும், இதிகாசங்களையும்தான்.

மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால் ஒரு தாயின் சொல்லை எவ்வாறு மதிக்க வேண்டும்? சகோதரர்களின் சொல்லாடல்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்? குருவின் சொற்களை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆரம்பித்து இறைவனின் சொல்லை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதுமுதல் வாழ்க்கைத் தத்துவங்கள் ஏராளம்!

 இதுபோல் இராமாயணத்தை எடுத்துக்கொண்டாலும் தசரதன் கைகேயிக்கு கொடுத்த வாக்கு தானமும்,  இராமன் சீதைக்கு அளித்த வாக்குதானமும் மிக மிக இன்றியமையாததாகும். இதை விட முக்கியமாக நமது தமிழ் சமூகமானது நாலடியாரையும் திருக்குறளையும் தனது வாழ்வில் உதாரணமாக மேற்கோள் காட்டியதை விட அதிகமாக வேதங்களையும், இதிகாசங்களையும் முன்மொழிவதால் "நாலும் இரண்டும்" என்பது நான்கு வேதங்களையும் இரண்டு இதிகாசங்களையும் தான் குறித்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்...!

 வாய்மை ஆசிரியர் குறிப்பு:

மேலே உள்ள கட்டுரையில் ஆசிரியர் குறள் பா ஒன்றையும், கணியன் பூங்குன்றனாரின் பாடல் ஒன்றையும் கருணாநிதிக்கு எதிராக மேற்கோள் காட்டுகிறார். அதில் குறள் பா ஒரளவுக்கு கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கு ஒத்துப்போனாலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாட்டு எவ்வாறு கருணாநிதியின் கருத்துக்கு மாறானது என்பது விளங்க வில்லை. அதனை விளக்கவே இது.

*      குறள் எண்: 972:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

கருத்து: எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் இயல்பு ஒரே தன்மையானது. வேறுபாடு இல்லை தான். ஆனால், பெருமைசிறுமை என்ற வேறு பாடுடைய இயல்புகள் அவரவர் செய்யும் தொழில்களால் ஏற்படுத்துகின்றன.

 இதற்கு பரிமேழலகர் விளக்கம்:

 நல்லனதீயன என்ற வேறு பாடுகள், நல்லனதீயன என்ற கலப்படமான இயல்புகள், நல்லனதீயன என்ற இந்த இரண்டும் இல்லா வினையால் கிட்டிய இயல்புகள் பஞ்சபூதமாகிய உடலைப் பெற்று அதற்குரிய பயனை அனுபவித்தல் என்பது எல்லா வருணத்தார்க்கும் பொதுவானதாகும்வேற்றுமை கிடையாது. இதை பிறப்பு ஒக்கும் என்கிறார் வள்ளுவர்.

 அப்படி என்றால் வேற்றுமைதொழிலில் நல்லவைதீயவை என்ற பாகுபாடு எப்படி வருகிறது? என்ற கேள்விக்கு வள்ளுவர் சொல்லும் பதில்: செய்யும் தொழிலால் வேற்றுமை உண்டாகிறது. பிறந்த குலத்தினால் அல்லஎன்று வள்ளுவர் தெளிவு படுத்துகிறார். அதைசிறப்பு ஒவ்வா’ – சிறப்பிலே ஒவ்வாமைஅதாவது வேற்றுமை அல்லது மாறுபட்ட தன்மை ஒருவன் செய்யும் தொழிலால் உண்டாகிறது என்பதை இந்த சொற்பிரயோகத்தில் விளக்குகிறார்.

 ‘பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் நிகழ்வதில்லை. செய்யும் தொழிலால் ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கின்றன’ என்பதால் – தொழில் என்பது பொதுவான ஒன்று என்பது தான் வள்ளுவர் கருத்தாக வெளிப்படுகிறது.

 *      அடுத்து கட்டுரையில் கணியன் பூங்குன்றனாரின் “யாது ஊரே யாவரும் கேளிர்” என்ற பாட்டு முழுவதும் கீழே பிரசுரமாகி உள்ளது.

இதில் துதி பாடுதல் – பெரியோரை வியத்தல் – கூடாது என்பதை கருணாநிதி சொல்வதில்லை என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.  

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


முனிவு = வெறுப்பு, கோபம்; தண்துளி = குளிர்ந்த துளி; மல்லல் = மிகுதி, வலிமை, பொலிவு; புணை = தெப்பம், மிதவை, மூங்கில்;


பொருள்:

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மையும் தீமையும் அடுத்தவரால் வருவதில்லை
அது போல துன்பமும் அதற்கு மருந்தான ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை
சாதல் மற்ற பிறத்தல் அது போல
 ; வாழ்தல்
இன்பம் எல்லாம் மகிழ்ச்சி இல்லை எப்பொழுதுமே
இரவுக்கு முன் வரும் இனிமையான தென்றலும் கூட மகிழ்ச்சி இல்லை
வானத்தில் மின்னலுடன் வருகின்ற சிறுத்துளி மழைநீர் ஒன்றுசேர்ந்து பெரிய கல்லை கூட பேராற்று நீர்வழி ஓடி பள்ளத்தில் தள்ளுகிறது அது போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
என்பது போல சான்றோர் பார்வையில் தெளிந்த வண்ணம் ஆகும்
ஆதலினால், பெருமையில் பெரியோரை வியந்து போற்றுவதும் தவறு அதைவிட
சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் மிகவும் தவறு.


யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினை யால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோ ராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகியவுண்மை களைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது.

ஆகையால் கருணாநிதியிடம் குறைகாணும் கருத்தை கட்டுரை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பது தான் எம் விமரிசனம்.






Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017