*சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி, மஞ்சள்தூள் வைத்து பூஜை*
*சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி, மஞ்சள்தூள் வைத்து பூஜை*
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.
சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன் மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.
உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். அடுத்த பொருள் வேறு பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் இந்த பொருள் வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா சென்னிமலை பகுதியைச்சேர்ந்த நாகேஸ்வரி (வயது 31) என்ற பக்தரின் கனவில் உத்தரவான வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய பொருட்கள் இப்போது ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
வில்வம் சிவனையும், வேப்பிலை மாரியம்மனையும், துளசி பெருமாளையும், அருகம்புல் விநாயகரையும், விபூதி முருகனையும் குறிக்கிறது. இதை தவிர மஞ்சள் தூள் கிருமி நாசினியாகவும், மங்களகரமானது என்பதையும் குறிக்கிறது.
Comments