ஜகத் குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரின் 1233-ம் வருட ஜன்ம தினம் – 17 -05- 2021 – திங்கட் கிழமை.

 ஜகத் குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரின் 1233-ம் வருட ஜன்ம தினம் –   17 -05- 2021 – திங்கட் கிழமை.




ஹிந்து மதம் ஷீரணமாகி வலிவிழந்து இருக்கும் தருணம் கடவுளின் தேசம் என்று போற்றப்படும் கேரள மாநிலம் காலடியில் கி.பி. 788- வது வருடத்தில் சிவகுருஆர்யாம்பாள் தம்பதியருக்கு திருக்குமாரனாக சங்கரர் அவதரித்தார்.

அவர் வைசாக சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் பிறந்தவர். தமது எட்டாம் வயதிலேயே துறவறம் மேற்கொண்டார்.

இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் 

மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம்  அதாவது இரண்டற்றது (தத்துவமசி)  என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர். மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் பாஷ்யம் எழுதியுள்ளதாகவும் சொல்வார்கள். மேலும் ஹிந்து மத நூல்கள் பலவற்றிற்கு ஆதி சங்கரர் பல வியாக்யாணங்கள் எழுதி உள்ளார். அதன் மூலம் ஹிந்து மத்தத்தின் உன்னதத்தை உலகத்திற்கு உணர்ந்திப் பெரும் தொண்டு செய்துள்ளார்.

அவர் இயற்றிய நூல்களும், பக்தி மார்க்கத்தை வளர்க்க இயற்றிய ஸ்லோகங்களும் அனந்தம். அவைகள் ஆழ்ந்த அர்த்த புஷ்டியுள்ளவைகள். அத்வைதியான ஆதி சங்கரர் சாதாரண பிரஜைகளுக்கு பக்தி யோகத்தைப் பரப்புவதற்குத் தான் அத்தகைய ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். ஆதி சங்கரர் சுமார் 72 தத்துவ போதனைகள் மற்றும் பக்திப் பரவசமான ஸ்லோகங்களை இயற்றியதில், சவுந்தர்ய லஹரி, சிவானந்த லஹரி, நிர்வாண ஷால்கம், மநீஷ பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம்விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்றவைகள் மிகவும் பிரபலமானவைகள்

ஹிந்து மதத்தின் வேரான அத்வைத மதத்தை உயிர்ப்பித்த தத்துவ ஞானி. அவர் தமது பூத உடலை விட்டு கி.பி. 820-வது வருடமே கேதார்நாத்தில் இந்தப் பூவுலகத்தை விட்டு மறைந்து விட்டார். அவர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் தான். அதற்குள் அவர் ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது என்றால் மிகையாகாது.

ஆதி சங்கரர் பாரதம் முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், பூரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், 

பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார். காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

“ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும்”  என்பது மிகவும் சுருக்கமான சங்கரரின் அத்வைத ததுவமாகும்.

மனீஷா பஞ்சகம்

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுந்து பணிகிறார் என சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் 

மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு ஆத்ம ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த நிகழ்வு ஆகும்.

 இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

வாதங்கள்

கபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் டன் அவரது மனைவி சரஸவாணி 

முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மந்தன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மந்தன மிஸ்ரர், துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன், சங்கரரின் சீடரானார்.

 

நிர்வாணாஷ்டகம

 நிர்வாணாஷ்டகம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி

மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும்

ஆதிசங்கரர் கூறுகிறார்..

 

ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

பாடல்கள்

1.

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,

ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு

கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;

வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

2.

ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:

ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச:

ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;

எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;

கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

3.

ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,

மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:

ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;

சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;

அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

4.

ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!

ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;

மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;

உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

5.

ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா

ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;

தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;

உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

6.

அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்

நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;

எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;

தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

 




ஒரு கைப்பிடி அரிசி

சிருங்கேரியில் ஆதி சங்கரர் தங்கி இருக்கும் பொழுது, தன் தாயாரின் மரணம் நெருங்கி விட்டது என்று சொல்லி, உடனே தன் தபோ வலிமையால் காலடியில் வசிக்கும் தன் தாயாரின் பக்கத்தில் சென்றடைந்தார்.

தன் தாயாரின் தகனக் கிரிகைகள் முடிந்தவுடன் தாயாரின் மரணத்தை நினைவு கூர்ந்து, ஐந்து ஸ்லோகங்கள் இயற்றினார்.

இந்த ஐந்து பாக்களில் மட்டும் தான் கடவுளைப் பற்றியோ, தன் வேதாந்தக் கருத்துக்களையோ சொல்ல வில்லை என்பது இதன் சிறப்பாகும்.

ஸ்ந்நியாசம் வாங்கியதால், மகனாகத் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாது போய்விட்டதையும், தன் மனச்சாட்சி உறுத்துவதையும் தன் ஐந்து பாக்களிலும் மிக அருமையாக வர்ணித்திருக்கிறார்.

கடைசி வரியில் சொன்ன அவர் வாக்கியம் எவர் மனத்தையும் உருக்கும் என்பது திண்ணம்:

மகனாகப் பிறந்த நான் என் தாய்க்குச் செய்ததெல்லாம் மரணத்தின் போது அவளது வாய்க்கு இட்ட ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே!

ஐந்து பாக்களின் மொழி பெயர்ப்பு - தழுவலான மொழி பெயர்ப்பு - கீழே தரப்பட்டிருகிறது.

இந்த ஐந்து பாக்கள் - மாத்ரு பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதி சங்கரால் இயற்றப்பட்டதாகும்.

 

1.


அன்னை நீ! என்னைப் பெற்றவள் நீ!
பெற பெரு வலி பொறுத்தவள் நீ!
ஒன்பது மாதம் சுமந்தவள் நீ!
உடம்பு இளைத்தவள் நீ!
படுக்கையை நாற்றமடித்தவன் நான்!
பாச மழையால் நணைய வைத்தவள் நீ!
என் புகழ், என் பெயர் அத்தனையும்
உன் வலி, உன் அன்பு எதற்கும்
ஈடாகாது, ஈடாகாது, என்றுமே!

2.

காஷாயம் உடுத்த மகனாய் கண்டாய் கனவில் அன்று!
கண்ணீர் விட்டாய், கதறி அழுதாய் அன்று!
கனவு பலித்துக் காஷாயம் பூண்டேன் இன்று!
கட்டித் தழுவி, துயரம் தீரா அன்னை நீ இன்று!
ஆசிரம ஆசிரியர்கள், அன்புத் தோழர்கள்,
அனைவரும் அழுதார்கள் உன்னோடு!
அன்னையே! வெறென் செய்வேன் நான்!
உன் பாதம் வணங்குகிறேன், போற்றுகிறேன் நான்!

 3.


பிரசவ வலியால் துடித்த அன்னையே!
பிரார்த்தனையால் வலியை மறந்தனையோ?
சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, ஹரி, முகுந்தா ..
நாமத்தை நம்பினாய் நீ அன்னையே!
நானும் ஜனித்தேன் உன் வலி தீர, அன்னையே!
உன் பாதம் வணங்குகிறேன், அன்னையே!
அதுதான் என் கைமாறு, என் அன்னையே!

4.

மரணத்தில் உன் மரணதாகம் தீர்க்க வில்லை நான்!
மகனாக உன்னைக் காக்கவில்லை நான்!
மரணத்தின் மடியிலே இருக்கையில், அன்னையே!
ராம நாமத்தை உன் காதுகளில் ஓதவில்லை நான்!
நேரம் கடந்து வந்தவன் நான், எதையும் செய்யாதவன் நான்!
பிழைகள் எத்தனையோ செய்தவன் நான்!
அத்தனையையும், ஒப்பற்ற அன்னையே!
அமுதமான அன்பால் மன்னிக்க வேண்டுகிறேன் நான்!

5.

அன்னையே! ஆராதிக்கிறேன் உன்னையே நான்!
பவளம் நீ! பளபளக்கும் ஆபரணம் நீ!கண்மணி நீ!
அன்புத் தெய்வம் நீ!ஆத்மாவின் ஆத்மாவான அந்தராத்மா நீ! -
புகழ்கிறேன் உன்னையே அன்னையே நான்!
அன்னையாய் நீ செய்ததற்கெல்லாம் கைமாறாக
நான் செய்ததெல்லாம்உன் வாய்க்கு
நான் இட்டதெல்லாம்அன்னையே! அன்னையே!
ஒரு கைப்பிடி அரிசியே!





Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017