தலைசுற்றும் தமிழக அரசியல்
‘காமராஜர் ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச்செய்வோம்’ என்ற தமிழ் நாடு காங்கிரசின் சூளுரை, கொள்கையாக உருவெடுக்காமல், வெறும் வெற்றுக் கோஷமாகி, ஒலி மங்கி, இப்போது அந்த ஒலி எழுவே இல்லை. இதில் சோககீதம் எதுவென்றால், காமராஜரை இந்திரா இழித்துரைத்தார். திமுக வசைபாடியது. மத்தியில் காங்கிரஸ் பதவியில் இருக்க, இந்திரா காங்கிரஸ் அதன் பிறகு அவரது மகன் ராஜிவ் காந்தி ஆகியவர்கள் திமுக – அதிமுக என்ற இரண்டு கட்சிகளையும் அரவணைத்து அதன் காரணமாக தமிழ் மக்களிடம் ஒரு அகில இந்திய அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்து நிலைகுலைந்து தேர்தலின் போது கட்சி வேட்பாளர்களுக்குக் கெஞ்சும் நிலைக்குத் தரம் தாழ்ந்து விட்டதை அரசியல் தற்கொலை என்று தான் கணிக்கத் தோன்றுகிறது.
இதன் காரணமாக காமராஜர் ஆட்சியில் இருந்த நேர்மை, தொழில் வளர்ச்சி, கல்வியில் முன்னிலை ஆகியவைகளுடன் திராவிட மாயையால் ஆன்மீகம் அழிந்து, ஊழல் மலிந்து, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வாக்குப் படி அராஜகம் தலைதூக்கி தமிழ் நாடு ஏனோ தானோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. மக்களை மயக்கும் இலவசங்களை அளித்து – அவைகள் விளையில்லாதவைகள் என்று பெயர் மாற்றம் செய்து அரசியலில் ஓட்டு வங்கியை உருவாக்கி அதன் காரணமாக ‘டாஸ்மாக்’ என்ற சாராய வியாபாரத்தை அரசாங்கமே நடத்தும் அவலமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சாராயத்தைப் படிப்படியாக ஒழிப்போம் – கடைகளை மூடுவோம் – என்ற தேர்தல் அறிக்கைகள் கண்துடைப்பு வேலைகள் என்பதும் தமிழ் ஓட்டர்களுக்குத் தெரியும்.
காமராஜருக்குப் பிறகு, அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி – எம்ஜிஆர் – ஜெயலலிதா – ஆகிய முப்பெரும் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் தூண்களாக தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு, பெரிய தலைவர்கள் இல்லாமல் இப்போது தமிழ் நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
களத்தில் திமுகவில் எம்.கே. ஸ்டாலின் (வயது – 68), அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி (வயது 66) & ஓ பன்னீர்செல்வம் (வயது 70) ஆகியவர்கள் முக்கியமானவர்கள். இதில் காங்கிர்ஸ் கட்சியின் பங்கு வலுவிழந்து காணப்படுகிறது. அகில இந்திய கட்சியான காங்கிரஸ் தேர்தலில் போட்டி இட திமுகவிடமிருந்து அதிக இடங்களைப் பெற, குழந்தைக் கட்சியான கமலின் மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டு என்ற துருப்புச் சீட்டைக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் சென்ற தேர்தல்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாத பிஜேபி இப்போது தமிழ் நாட்டில் முருகன் (வயது 44) – அண்ணாமலை (வயது 37) என்று புதிய இளைய தலைவர்களை களம் இறக்கி அதிமுகவின் தேர்தல் வியூகத்தையே நிர்ணயம் செய்யும் நிலைக்கு வந்துள்ளனர்.
உயிர்ப்போடு பிஜேபியின் தலைவர்களும், தொண்டர்களும் ஆண்டாள் அவதூறை எதிர்த்துப் போராடியும், கருப்பர் கூட்டத்தின் ஹிந்துக் கடவுள்களை அவமதிப்பை நேரிடையாக எதிர்கொண்டு வீதிதோரும் கந்த சஷ்டி கவசபாராயணம் – வேல்/காவடி யாத்திரை என்று தமிழ் நாட்டு ஹிந்து மக்களிடம் திராவிட கடவுள் நிந்தனையிலிருந்து விடுபட்டு, ஆன்மீக எழுட்சியை ஏற்படுத்தி அதில் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
சுடலை ஸ்டாலின் அவரது மகன் யுவராஜா உதயநிதி ஸ்டாலின் (வயது 43) ஆகியவர்களை வேல் பிடிக்கவும், திராவிடக் கூட்டங்களை ஹிந்து மத சடங்கின் அடையாளமான குத்துவிளக்கு ஏற்றித் தொடங்குவதும், கோயில் பிரசாதங்களை ஏற்றும், ‘நாங்களும் ஹிந்துக்கள் தான். கோயிலுக்குச் செல்பவர்கள் தான்’ என்று வெளிப்படையாகச் சொல்லும் நிலைக்குத் தள்ளியதற்கு – தற்போதையை பிஜேபி முருகன் – அண்ணாமலை தலைமையைத் தான் பாராட்ட வேண்டும்.
ஸ்டாலின் மனைவி துர்க்காவை ஒரு கோயிலில் வயதான அய்யங்கார் மாமியிடம் ஐயங்கார் ஒருவர் ‘இவர் தான் ஸ்டாலின் மனைவி துர்க்கா?’ என்றவுடன், ‘உன்னைப் போல் ஸ்டாலின் கோயிலுக்கு வருவாரா? கடவுள் நம்பிக்கை உண்டா அவருக்கு?’ என்று கேட்டதற்கு, துர்கா ‘கடவுள் நம்மிக்கை உண்டு. கோயிலுக்கும் வருவார்’ என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர்.
ஆன்மீகம் தமிழ் நாட்டை அரசாளும் நாளும் வந்துவிடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு ஒரு முக அழகிரி (வயது 70) என்றால், இபிஎஸ். – ஒபிஎஸ் ஆகியவர்களுக்கு சசிகலா (வயது 66) உருவில் முள்ளாய் உள்ளனர். அத்துடன் டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி – சசிகலாவை முன் வைத்து, அம்மா ஜெயலலிதாவின் உண்மைக் கட்சி என்ற அளவில் – முளைத்த முள்ளை அவர்கள் இருவரும் எதிர் கொள்ள வேண்டும். இருப்பினும் தினகரன் இந்தத் தேர்தலில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் தம் கட்சி போட்டி போடும் என்பது அந்த இருவருக்கும் ஒரு ஆறுதல் தரும் செய்தி. ஆனால் ஸ்டாலுக்கு முக அழகிரி – ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது. ஸ்டாலின் போஸ்டர் முதல்வராக எப்போதும் இருப்பார் – என்று தேர்தல் ஜுரத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு தான் தெரியும்.
இபிஎஸ். – ஓபிஎஸ் இருவருக்கும் மாம்பழம் – முரசு கட்சிகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதே போல் சுடலைக்கு காங்கிரஸ் – விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகள் திமுக கொடுக்கும் இடங்களைப் பெற்று தேர்தலைச் சந்திக்குமா என்பதிலும் ஒரு தெளிவு இல்லை.
தமிழ் நாட்டுத் தேர்தல் களம் இரு திராவிட கட்சிகளின் ஆளுமையில் தான் இன்றும் இருக்கிறது. தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர் இபிஎஸ் மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து, சில நேரடியாக உடனே பலன் தரக்கூடிய பொங்கல் காசு – பொங்கல் பை என்று நின்று விடாமல் பல நல்ல தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.
“ரேஷன் கார்டுகாரர்களுக்கு பொங்கல் காசாக ரூபாய் 2500 கொடுத்துள்ளோம். இது கொரோனா காலத்தில் பொங்கலைக் கொண்டாட மிகவும் உதவும். இதற்போதைய தமிழ் நாட்டு பட்ஜெட்டில் விவசாயக் கடன்களை ரத்து, அரசுப் பள்ளியில் படிக்கும் 7.5% மாணவர்களுக்கு மெடிக்கல் கல்லூரியில் இடம் – உதவித் தொகை, வேலை வாய்ப்புக்காக முதல் கட்ட அந்நிய முதலீடு ரூபாய் 8,800 – அதன் மூலம் நேரடி வேலை வாய்ப்பு 35,000 பேர்கள் என்பது 2019-ல் நடந்த உலக முதலீட்டு மகாநாட்டில் ரூபாய் 3.50 லட்சம் கோடி – 10.5 லட்சம் பேர்களுக்கு வேலை – என்ற அளவில் இந்த அரசு செயல்படுகிறது. ஆகையால் இவைகள் தொடர்ந்து நடக்க, தமிழக மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு அளித்து, அம்மா ஆட்சியை மீண்டும் மூன்றாவது முறையாக தேர்வு செய்வார்கள்’ என்று தற்போதைய முதல்வர் இபிஎஸ் முழு நம்பிக்கையோடு இருக்கிறார்.
வாய்மையும் இருக்கும் நிலவரத்தைச் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, இபிஎஸ் அரசே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறது.
ஆன்மீகம் அரசாண்டால் தான் அரசு தூய்மையுடன் செயல்படும். பண்டைய அரசர்கள் தெய்வத்தை முன்னிலைப் படுத்தித் தான் நீதியுடன் அரசாண்டதாக வரலாறு இருக்கிறது.
Comments