மாசு போக்கும் மாசி மகம் – 27-02-2021 (சனிக்கிழமை)


 

மாசி மாதத்தில் மக நட்சத்திரம் வருவதை தமிழகத்தில் ஹிந்துப் பண்டிகையாக குறிப்பாக கும்பகோணத்தில் உள்ள மஹா மக தெப்பக்குளத்தில் புன்னிய ஸ்நானம் செய்து கொண்டாடுவார்கள். அந்த நாளில் பவுர்ணமியும் சில சமயங்களில் வரும்.

 

அந்த நன்நாளில் கோயிலிலுள்ள உற்சவ மூர்த்திகள் கோலாகலமாக பக்தர்கள் புடைசூழ குளம், ஏரி, கடல், ஆறு ஆகியவைகளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது பக்தர்களும் அந்த நீரில் புனித நீராடுவார்கள். அப்படி நீராடுவதால் அவர்களின் பாவங்கள் நீங்கி, புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். 

 

ஒவ்வொரு வருடமும் மாசிமகம் வந்தாலும், 12 வருடங்களுக்கு ஒரு முறை வரும் மாசி மகம் – மஹா மகமாக வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சென்ற மஹா மகம் 2016-ம் வருடம் பிப்ரவரி 13-ம் தேதி கொண்ட்டாடப் பட்டது. அடுத்த மஹா மகம் 2028-ல் வருகிறது. அந்த விழா கும்பகோணத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

 

மகர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது நம்பிக்கை. சூரியன் அரசனாகவும், சந்திரனை அரசியாகவும் சொல்வார்கள். சந்திர அரசி சிம்ம ராசிக்கு மாசி மாதத்தில் மாறுகிறாள்.

 

மாசி மகத்தின் மஹத்துவத்தைப் பற்றி ஒரு புராண வரலாறு உண்டு. நான்கு யுகங்கள் கழிந்த பிறகு, சிவபிரான் உலகத்தை முழுவதும் அழித்து புது உலகத்தைச் சிருஷ்டி செய்வதாக புராணம் சொல்கிறது. இதை அறிந்த படைக்கும் தொழில் செய்யும் பிரம்மா ‘சிவபிரானே! எல்லாம அழிந்து விட்டால், எந்த வழியில் என் படைப்புத் தொழிலைத் தொடங்க முடியும்?’ என்று கேட்கவும், பிரம்மாவை ஒரு கும்பத்தில் அமிர்தத்தை நிரப்பி, அதை மஹா மேரு மலையில் பாதுகாப்பாக வைக்கச் சொன்னார். பிரம்மாவும் சிவன் சொன்னபடி செய்தார். அப்போது சிவபிரானை அந்த அமிர்த கும்பத்தை கும்பகோணத்தில் மகா நட்சத்திரத்தில் வரவழைத்து புதிய உலகத்தைப் படைக்க வேண்டவும், ‘அப்படியே நடக்கும்’ என்று சிவன் அருள்பாலித்ததாகப் புராணம் விவரிக்கிறது. சிவபிரான் கும்பகோணத்தின் மஹாமகக் குளத்தில் தான் அமிர்த கலசத்தை வரவழைத்து சிருஷ்டியைத் தொடங்கினார் என்பது ஐதீகம். ஆகையால் அந்த மகாமகத்தில் கும்பகோணத்திலிருக்கும் மஹா மக தொப்பக்குளத்தில் குளிப்பது விசேஷம் என்பார்கள்.


அந்த நன் நாளில் தீர்த்தவாரி நடைபெறும் திருக்குளம், ஏரி, கடல், ஆறு ஆகியவைகளில் நீராடுபவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தலைமை ஆற்றல் பெருகி, திறமையாக முடிவுகள் எடுத்து தங்கள் வாழ்வையும், மற்றவர்கள் வாழ்வையும் சிறக்கச் செய்வார்கள்.

 

அந்த நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டில் நீராடும் போது சிவனை நினைத்து நீராடி சிவன் அருள் கிடைக்கப் பிரார்த்திக்க வேண்டும்.

 

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் சிவன் அருள் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.


மாசி மகத்தில் நமது உடல் – உள்ளம் மாசுக்கள் நீங்கி, நோயற்ற நீண்ட வாழ்வும், நிறை செல்வமும், மன நிறைவும் பெற சிவனை வேண்டுகிறோம்.

 

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017