உச்சநீதி மன்றத்தின் உச்ச கட்ட தலையீடு
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.போப்டே
கோர்ட்டில் கோபமாக உதிர்த்த வாசகங்கள் மற்றும் பார்லிமெண்டின் இரு சபைகளில் நிறைவேற்றப்பட்ட
மூன்று வேளாண் புதிய சட்டங்கள் செயல் படாமல் நிறுத்தி வைத்த உத்திரவு ஆகியவைகள் சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகும் என்று தான் கருதுகிறோம்.
தலைமை நீதிபதி, மத்திய அரசு, போராடும்
விவசாயிகள் சங்கங்கள் ஆகியவைகளின் கருத்துக்களைத் தொகுத்துள்ளோம். இறுதியாக நீதிதேவதையின்
அறைகூவலோடு தலயங்கம் முடிகிறது. வாய்மை வாசகர்கள் இவைகளைப் பற்றிச் சிந்திக்கவே இந்த
தலையங்கம்.
- ஆசிரியர்.
உச்சமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே:
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை போதுமான ஆலோசனைகள் செய்யாமல் நிறைவேற்றியதால்
அதை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள். பல மாநிலங்கள் மத்திய அரசை எதிர்த்து பொங்கி
எழுந்துள்ளனர். இது தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
போராட்டம் மாதக்கணக்காகியும் முடிவுக்கு வரவில்லை. மத்திய அரசு போராடும்
விவசாய சங்கங்களுடன் பேசுகிறேன் என்கிறது. என்ன பேசுகிறது? என்ன தான் நடக்கிறது?
மத்திய அரசு பிரச்சனைக்கு முடிவு கட்ட முயலுகிறதா? அல்லது மத்திய அரசே
பிரச்சனையா?
கோர்ட்டை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதில் அவரசம் காட்டவேண்டாம் என்று
சொல்லும் அரசு வக்கீல் எங்களுக்கு பொறுமையாக இருக்கும் படி பாடம் நடத்த வேண்டாம்.
விவசாயிகள் போராடட்டும். அது அவர்கள் உரிமை. அமைதியான முறையில் போராட்டம்
இருக்க வேண்டும். இரு தரப்பினரும் எங்கள் கைகளில் போராட்டம் போர்களமாகி எங்கள் கைகளில்
ரத்தக்கரை படியாமல் செயல்பட வேண்டும்.
மத்திய அரசு தன் கடமையைச் செய்யாததால், நாங்கள் இன்றே – இப்போதே ஒரு முடிவு
எடுக்கப்போகிறோம். ஒரு பெட்டிஷன் கூட ‘இந்த வேளாண் சட்டங்கள் நன்மை பயக்கும்’ என்று
எங்களுக்கு வரவில்லையே!
ஆமாம். மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நிறுத்தி
வைக்கிறோம். இதன் மூலம் விவசாயிகளின் புண்பட்ட மனத்திற்கு ஆறுதல் அளித்து, அவர்களை
ஒரு புதிய நம்பிக்கையுடன் பேச்சு வார்த்தைக்கு வர ஒரு வழிவகுக்கும். இந்த எங்களது செயல்
ஒரு அசாதாரணமான ஒன்று. ஆகையால் இந்த செயலை போராடும் விவசாயிகள் தங்களது சாத்வீகப் போராட்டத்திற்குக்
கிடைத்த வெற்றியாகக் கருதி, போராட்டத்தைக் கைவிட்டு, அவரவர்கள் வீட்டிற்குச் செல்ல
வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். போராடுபவர்களிடம்
‘இது உச்சநீதி மன்றத்தின் விருப்பம் என்றும், உங்களுக்கு எங்களிடம் நம்பிக்கை இருக்கிறதோ
இல்லையோ, உச்சநீதி மன்றமான நாங்கள் எங்கள் கடமையைச் செய்வோம்’ என்றும் சொல்லவும்.
மத்திய அரசு:
நாங்கள் எங்களால் முடிந்த மட்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் மனத்தில் உள்ள பயம், தவறான புரிதல் ஆகியவைகளைக் களைய முயன்றோம். எங்களது முயற்சிகளில் எந்தவிதமான தொய்வோ, காலதாமதமோ இல்லை. ஆனால் அவர்கள் ‘மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறவேண்டும்’ என்ற கோரிக்கை எங்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்தப் புதிய சட்டங்களின் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களை மாநிலம் தோறும் விற்க வகை செய்துள்ளோம். வேளாண் விளைபொருள் சந்தைக் குழு என்பது விவசாயிகள் தங்கள் பொருட்களை ஒரு குறைவான எண்ணிக்கை கொண்ட லைசன்ஸ் பெற்ற வியாபாரிகளிடம் – அதுவும் விளையும் மாநில மண்டியில் மட்டும் தான் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் நீக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு நன்மையே பயக்கும்.
இந்த விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் ஒரு பகுதி விவசாயிகள் என்ற அளவில் குறுகியதாகத் தான் உள்ளது. இது இந்தியாவின் மற்றப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மத்திய அரசின் புதிய சட்டங்களை சந்தோஷமாக வரவேற்றுள்ளார்கள். இந்த சட்டங்கள் அவசரமாக எந்தவிதமான ஆலோசனைகளும் இன்றி நிறைவேற்றப்பட்டதாகச் சொல்வது தவறாகும். இந்தச் சட்டம் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு, அனுபவமிக்க விவசாய நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, உருவாக்கப்பட்டவைகள் தான் இந்த மூன்று சட்டங்களும். மேலும் மாநிலங்களின் கருத்துக்களையும் விரிவாகக் கேட்டு அதன் அடிப்படையில் தான் சட்டங்கள் முழுமை வடிவம் பெற்று இரு சபைகளில் விவாதத்திற்குப் பிறகு தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM):
வேளாண் சட்டத்தை நிறுத்திவைத்ததற்கு உச்சநீதி மன்றத்திற்கு நன்றி. ஆனால்,
நாங்கள் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலும் ரத்தானால் தான் எங்கள்
போராட்டம் முடிவு பெறும். அது தான் முதலிருந்தே எங்களது கோரிக்கை. உச்ச நீதிமன்றம்
நியமித்த நான்கு பேர்கள் கொண்ட குழுவை நாங்கள் புறக்கணிக்கிறோம். அந்த நான்கு பேர்களும்
வேளாண் சட்டத்தை ஆதரித்தவர்கள். மேலும் இந்தக் குழு ஒரு ‘சர்க்காரி குழு’. இது தீர்வு
ஏற்படாமல் காலம் தாழ்த்தி, எங்களது போராட்டம் வலுவிழக்கச் செய்யும் சூட்சி.
நீதி தேவதையின் அறைகூவல்:
நடுநிலைமை, நியாயம், தீரம், தீர்க்கம் – ஆகியவைகளைக் கடைப் பிடிக்காமல் அவசர கோலத்தில் களம் இறங்கி, நீதி மன்ற சரித்திரத்தில் பல கருப்புப் பக்கங்களை உருவாக்கி, நான் கண்கலங்க வைத்து விட்டீர்களே! மத்திய அரசை போராடும் விவசாயிகளுக்காக தூற்றியும், போராடும் விவசாயிகளைப் புகழ்ந்தும் பேசிய உரைகள் நடுநிலைமையைப் பாதித்து, இப்போது ‘3 விவசாய சட்டம் நிறுத்தி வைப்பு அசாதாரணமான செயல், எங்களை நம்பி, ஒத்துழைப்புத் தாருங்கள்’ என்று போராடும் விவசாயிகளைக் கெஞ்சுவது நீதி வழங்குதலில் ஒரு சறுக்கல் இல்லையா? ‘அரசுடன் நேரிடையாகப் பேசுவோம். உச்சநீதிமன்றக் குழுவிடம் பேசமாட்டோம்’ என்று போராடும் விவசாயிகள் சொல்லி, அரசுடன் மீண்டும் பேசுவது, நீதிமன்றத்தை மதிக்காமல் புறக்கணிப்பு போல் உங்களுக்குப் படவில்லையா?
Comments