மத்திய அரசின் 3 விவசாய புதிய சட்டங்கள் – எதிர்த்துப் போராடும் பஞ்சாப் விவசாயிகள் – ஆக்கம்: பவித்திரன்

 கடந்த 50 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து தொய்வில்லாமல் அதே சமயத்தில் சாத்வீகமாக விவசாயிகள் சங்கத்தினர் போரட்டம் நடத்துகிறார்கள். விவசாயிகள் பலர் தங்கள் மனைவிமார்களுடன் போராட்டக் களத்தில் உள்ளார்கள். பலரின் குழந்தைகளும் போராட்டக் களத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடுகிறார்கள்.

‘மத்திய அரசே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்’ என்பது தான் தங்களது ஒரு வரிக் கோரிக்கை என்று போராடும் விவசாயிகள் சொல்கிறார்கள்.

‘போராடும் விவசாயிகளே! 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. அதில் உள்ள ஷரத்துகளில் காணும் குறைகளை நீக்க நாங்கள் தயார்’ என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

‘மத்திய அரசே! பேச்சு, பேச்சு, பேச்சு ! என்ன தான் இந்த 50 நாட்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ? ஏன் இதற்கு ஒரு முடிவு வரவில்லை ? நாங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட களம் இறங்குகிறோம். அதற்கு முதல் படியாக போராடும் விவசாயிகளின் நம்மிக்கையைப் பெற, உங்கள் 3 வேளாண் சட்டங்களையும் முடிவு காணும் வரை நிறுத்தி வைக்கிறோம். இது நாங்கள் துணிந்து எடுக்கும் மிகவும் அசாதாரணமான செயலாகும். வேளாண் சட்டங்களில் உள்ள குறைகளை எங்களுக்கு விளக்க 4 பேர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். அவர்களிடம் அனைவரும் உங்களது வேண்டுகோள்களைத் தெரிவித்து, அவைகளின் அடிப்படையில் நாங்கள் தீர்ப்பு வழங்கப்போகிறோம்’ என்று உச்சநீதி மன்றம் களத்தில் உள்ளது.

‘இந்த 3 வேளாண் சட்டங்கள் பயன்தருபவைகள் என்று ஒருவரும் எங்களிடம் மனு தாக்கல் செய்யவில்லையே!’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லுவதால், ‘இந்த 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்காத ஒன்று’ என்ற கருத்து தொனிக்கிறது.

ஆகையால் இந்த உச்ச நீதிமன்றத்தின் ‘3 வேளாண் சட்டங்களால் பயன் இல்லை’ என்பதில் உண்மை உள்ளதா? - என்பதை ஆராய்வது மட்டும் தான் இந்தப் பதிவின் நோக்கம்.

காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவைகளின் லோக் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை முறையே 51, 24, 1 என்ற அளவிலும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 302 என்ற அளவிலும் உள்ளது.

காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய முன்று கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அவைகளை நாங்கள் விவசாயிகளின் நன்மையைக் கருத்தில் கொண்டு ஆதரிக்கிறோம் என்று உறுதிமொழியை அந்த அறிக்கைகளில் குறித்துள்ளனர். அந்த மூன்று அம்சங்களும் மத்திய அரசின் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் அவைகளை போராடும் விவசாயிகள் எதிர்க்கின்றனர். இப்போது இந்த மூன்று கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் கொள்கையாக அறிவித்தவைகளுக்கு மாறாகச் செயல்படுகின்றன. அவைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. காங்கிரஸ் கட்சி:

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வேளாண் விளைபொருள் சந்தைப் படுத்தலைப் பற்றிய விவரங்கள்:

 கீழே உள்ளவைகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்:




மேலே உள்ள அறிக்கைகள் இரண்டும் 2019-ம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவைகள். அவைகள் மத்திய அரசு இப்போது இயற்றிய சட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள இவைகள்  ரீதியான விதிகள் மத்திய அரசு இப்போது இயற்றிய சட்டங்களீல் இடம்பெற்றுள்ளன. இவைகளைத் தான் காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்க்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறேன்.

 

1. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 11-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்:

வேளாண் விற்பனை வாரியம் (APMC – Agricultural Produce Marketing Council) சட்டத்தை ரத்து செய்து விட்டு, விளைபொருள்கள் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிப்போம்.

2. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 21-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்:

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 என்பது கண்ட்ரோல் (கட்டுப்பாடுகள்) கோலோட்சிய காலத்தைச் சேர்ந்தது. ஆகையால் இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறிதி அளிக்கிறோம். அதை நீக்கி அவசர காலத்தில் மட்டும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பொருந்தும் அளவில் சட்டம் கொண்டு வருவோம்.

3. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை 9-வது எண்ணில் தெரிவிக்கப்பட்ட வாசகம்:

விவசாயிகள் உற்பத்திக் கம்பனிகள்/நிர்வாகங்கள் ஆகியவைகளை  காங்கிரஸ் உருவாக்க உதவி செய்து, அவைகளின் வாயிலாக விவசாய          இடுபொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சந்தைப் படுத்தல்             ஆகியவைகளை  ஊக்குவிக்கும்.  (அதாவது ராஹுல் பாணியில் சொல்வதானால் – கார்பரேட் அதானி – அம்பானி போன்றேரை விவசாயச் சந்தையில் ஈடுபடவைக்கும்.)

மேலும் ஒரு முக்கிய விவரத்தை இங்கு வாசகர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். 2010-ம் ஆண்டிலேயே மன்மோஹன் சிங் ஆட்சியில் ஒரு வழிகாட்டு மந்திரிசபைக் குழுவும் மோடி இப்போது கொண்டு வந்துள்ள சட்டங்களைப் போல் விவசாய சீர்திருத்தங்களை அமல் படுத்தப் பரிந்துரை செய்துள்ளது.

மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போது காங்கிரஸ் ‘மோடி எங்களது பரிந்துரைகளைக் காப்பி அடித்து சட்டங்கள் இயற்றுகிறார். அவருக்கு சுய புத்தியே கிடையாது’ என்று சொல்லி வந்தவர்கள், இப்போது சரியான பதில் சொல்ல முடியாமல் ‘சட்டத்தைக் கிழிப்பேன், ஆட்சிக்கு வந்து சட்டத்தை ரத்து செய்வேன்’ என்று ஒலமிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.

மோடி கொண்டு வந்த விவசாயச் சட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்ன இந்த மூன்றையும் செயல்படுத்தவும் புதிய சட்டங்கள் வழிவகுக்கின்றன. இந்த மூன்றையும் தான் இப்போது போராடும் விவசாயிகளுடன் சேர்ந்து மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

 

வாசகர்களே! கீழே உள்ள வாசகங்களையும் கொஞ்சம் வாசித்து, மனத்தில் இடம்பெறச் செய்து, சிந்திக்கவும்:

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி, அன்றைய பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்கள், அதிக லாபம் தரக்கூடிய வேலையை விவசாயிகள் செய்ய வேண்டும் என்றும், தன்னுடைய வருமானத்தைக் கூட்ட, விவசாயம் சாராத தொழிலை செய்து, தங்களுடைய பொருளாதாரத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

அதாவது ‘என்னால் உங்களுக்கு உதவ முடியாது, வேறு தொழிலுக்குச் செல்லுங்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார். இது ‘ராஹுல் நாம் சட்டம் இயற்றினால், கிழித்துப் போடுவாரோ?’ என்று மன்மோஹன் சிங்கின் பயத்தினால் விளைந்த உபதேசமாக இருக்கலாம்!

ராஹுல் காந்தி தங்கள் கட்சி லோக் சபா தேர்தல் அறிக்கை – அதுவும் வேளாண் விற்பனை வாரியத்தையே – APMC – மூடுவோம் என்ற கொள்கை அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், காங்கிரஸ் இப்போது போராட்டம் நடத்தும் விவசாயிகளினால் தன் தேர்தல் அறிக்கையையே செல்லாக்காசாக்கி விட்டது. உண்மையில் இப்போதைய மத்திய வேளாண் சட்டம் – APMC – யை மூடாமல், முறைப்படுத்தவே வழிவகுக்கிறது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.  

இதில் என்ன வேடிக்கை என்றால், 2019-ம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த சட்டத்தில் உள்ள மூன்று மிக முக்கியமான கொள்கை ரீதியான விதிகள் இடம்பெற்றுள்ளன.

உண்மை இப்படி இருக்க, ‘நாங்கள் மத்தியில் பதவிக்கு வந்ததும் முதல் முதலாக இந்த மூன்று சட்டங்களையும் கிழித்து, குப்பைத்தொட்டியில் தூக்கி எறிவோம்’ என்று பொதுமேடையில் மீடியா மூலமாகத் தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் ராஹுல் காங்கிரசின் தேர்தல் வாக்குறிதி அடங்கிய அறிக்கையும் சேர்த்து கிழித்தெறிய வேண்டும். ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ என்ற சொல்லாடை தான் நினைவுக்கு வருகிறது.






ஒரு கொசுறுச் செய்தியையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்:

‘மோடியின் மத்திய அரசு இப்போது கொண்டு வந்துள்ள சட்டங்களை ‘கருப்புச் சட்டங்கள் – புதுவகையான ஜமீன்தாரி முறையைக் கொண்டு வந்து, ‘புதிய இந்தியாவில் ஜமின்தாரிகளை உருவாக்கி, அவர்களின் நண்பர்களாக மோடி செயல்படுகிறார்’ என்ற குற்றச் சாட்டினை நேற்று வரை நம்பிக்கைக்குப் பாத்திரமாக முன்னால் காங்கிரஸ் தலைவர் சஞ்ஜை ஜா காங்கிரசின் இரட்டை வேஷத்தைத் தோலிருத்திக் காட்டுகிறார்.

 

2. திராவிட முன்னேற்றக் கட்சி:


பப்பு ராஹுல் தான் இப்படி என்றால், நம் ஊர் பப்புவான சுடலை ஸ்டானின் கட்சியான தி.மு.க.வும் இதே தவறைச் செய்துள்ளது.

திமுகவின் 15-வது சட்டபேரவைத் தேர்தல் 2016 அறிக்கை எண் 24-ல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறிதிகள்:

1. தமிழக வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துதல்.

2. வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சந்தை விலைக்கு விற்று பயன் பெரும் வகையில் உற்பத்தியாளரையும், வாங்குபவர்களையும் இணைத்தல். அதற்கு ‘வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு – Agriculture Produce Marketing Exchange உருவாக்கப்பட்டு – அன்றாட சந்தை விலை அறிவிக்கப்படும்.




தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தமிழக விவசாயிகள் தமிழக எல்லை தாண்டி, இந்தியாவின் மாநில எல்லைகளையும் தாண்டி, உலகத்தின் எந்த நாட்டிலும் தன் விளைபொருள்களை சந்தைப்படுத்த வாக்குறிதி அளித்துள்ளது. அத்துடன் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மண்டி சந்தையை ஒழிக்கவும் பரிந்துரை செய்துள்ளது சுடலை கட்சி.  

 வேளாண் பாதுகாப்புக்கு மத்திய அரசை சட்டம் இயற்ற பரிந்துரைத்துவிட்டு, இப்போது ‘வேளாண்மை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. ஆகையால் மத்திய அரசுக்கு வேளாண்மைச் சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது’ என்று தன் தலைவரும், அப்பாவுமான கருணாநிதியின் 2016 தேர்தல் அறிக்கையின் வாக்குறிதியையே மறந்து அப்பாவின் கனவை கானல் நீராக்கி விடுகிறார் சுடலை.

 ‘வேடிக்கை பார்க்கவும் முடியாது; ஏற்கவும் முடியாது’ என்று தீர்மானம்  போட்டு திமுக மோடியின் இந்த 3 சட்டங்களையும் எந்த வாதங்களையும் முன் வைக்காமல், அரசியல் செய்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

போராடும் விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அண்டை மாநிலத்தில் கூட கொண்டு சென்று விற்க தடை கோரும் போது, திராவிட முன்னேற்றக் கழகம் நாடு விட்டு நாடு சென்று ஏற்றுமதியும் செய்ய வழி வகுக்க வேண்டும் என்று அவர்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது.

ஒட்டும் போடும் மக்களை முட்டாளாகக் கருதி, அவர்களை வேடிக்கை மனிதர்களாக ஏமாற்றி விட்டார்கள் இந்த திமுகவினர். உயிரினும் மேலான உடன்பிறப்புகள், ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் – ஆகியவர்கள் ‘இவைகளை எல்லாம் மறக்காமலும் மன்னிக்காமலும்’ இருந்தால் தான் தர்மம் தமிழ் நாட்டில் தலைதூக்கும்.  

3. ஆம் ஆத்மி கட்சி:

ஓரே ஒரு லோக் சபா உறுப்பினரைக் கொண்ட கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ராஹுலைப் போன்று 3 வேளாண் சட்ட நகல்களை டெல்லி சட்டசபையிலேயே கிழித்தெறிந்துள்ளார்.  


டெல்லி முதல் மந்திரி அர்விந் கெஜ்ரிவால் சென்ற சில மாதத்திற்கு முன் இந்த வேளாண் சட்டத்தை ஒப்புக் கொண்டு, கெஸட் அறிவிப்பு செய்துள்ளார். ஆனால் அதற்கு முரணாக அந்த மூன்று சட்டங்களையும் டெல்லி சட்ட சபையில் கிழித்து எரிந்துள்ளார். மேலும் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி யின் 2017 தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க பெரிய உணவு பதனிடும் கம்பனிகளுக்கு விற்க வழிவகை செய்யப்படும். சிறந்த விலை கிடைக்க Agricultural Produce Market Committee Act – விவசாயிகள் தங்கள் இஷ்டம் போல் மாநிலம் தாண்டியும் விற்க வாக்குறிதி உள்ளது. 




உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு:




கனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே! இந்த கட்சிகள் அனைத்தும் தங்களது தேர்தல் அறிக்கைகளின் மூலம் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததாகத்தானே கொள்ள வேண்டும்? இன்னும் இதுவரை அந்தக் கட்சிகள் ‘எங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னவைகளை நாங்கள் இப்போது வாபஸ் வாங்குகிறோம்’ என்று வெளிப்படுத்த வேண்டாமா? உச்சநீதிமன்றமே தன்னிட்சையாக இந்தக் கட்சிகளை தங்கள் நிலைகளை அறிக்கைகள் மூலம் தாக்கல் செய்யச் சொல்லாமே! ‘பேச்சு, பேச்சு என்று பேசுகிறீர்களே! ஏன் ஒரு முடிவு எட்டவில்லை?’ என்று கோபிக்கும் நீங்கள், ‘எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஆதரித்த அம்சங்களைக் கொண்ட 3 வேளாண் சட்டங்களை இப்போது எதிர்ப்பது ஏன்?’ என்று கேள்வியினைக் கேட்கலாமே?

ஆகையால் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு இல்லை என்று உச்சநீதி மன்றம் கணிப்பது நீதியாகாது அல்லவா? மேலும் இந்த சட்டங்களின் பலன்கள் நடைமுறைப்படுத்திய இரண்டு – மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் தெரியவரும் என்பதை கனம் கோர்டார்கள் அவர்கள் கவனிக்கத் தவறியது ஏனோ?

இடைத் தரகர்களால் தான் விவசாயிகளுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை என்பதும், விளைபொருட்களை விற்கும் விவசாயிகளிடம் செஸ் வரிகள், மண்டி வரிகள், மேம்பாட்டு வரிகள் என்று கழித்துப் பணம் கொடுக்கும் தரகர்களால் தான் இந்த போராட்டம் முடிவிற்கு வராமல் தடைபடுகிறது என்பதும் விசாரிக்க வேண்டிய பிரச்சனையாக இருப்பதையும் கனம் கோர்ட்டார் அவர்கள் கவனிக்கத் தவறியது ஏனோ?

அனைவருக்கும் நீதி என்ற கொள்கையை உச்சநீதிமன்றத்திடம் எதிர்ப்பார்த்து அனைத்து இந்திய தேசமே காத்திருக்கிறது.

சத்தியமேவ ஜெயதே !







Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017