அப்துல் கலாமின் எழுச்சி தீபங்கள்


“வறுமை தான் நமது பகைவன்” என்று எனது கேள்வியான ‘நமது பகைவன் யார்?’ என்பதற்குப் பதில் அளித்த குஜராத் மாநிலம் ஆனந்த் நகர ஆனந்தாலயா உயர்நிலைப் பள்ளிச் சிறுமி சினேகாவிற்கு இந்த ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் – என்று அதன் ஆசிரியரான நமது மதிப்புக்குரிய அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து சில செய்திகள் உங்கள் பார்வைக்கு.  -  ஆசிரியர்.

*      ‘மகாபாரதத்தில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் யார்?’ என்று கேட்ட குழந்தைக்கு கலாம் அளித்த பதில்: ‘நல்லது கெட்டது என்ற மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் பிரதிபலிக்கும் பன்முகப் பரிமாணம் கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்தது அந்தக் காவியம். என்னைக் கவர்ந்த கதாபத்திரம், ‘விதுரர்’. அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைக்கும் போது, துணிச்சலாக எதிர்த்தவர் விதுரர். அதர்ம ஆட்சி செய்த கொடுங்கோலன் முன்னே எல்லோருமே மண்டியிட்ட போது, தனித்து நின்று மாற்றுக் கருத்தைத் தைரியமாக எடுத்துரைத்த அஞ்சா நெஞ்சர் விதுரர்.

*      பூமத்திய ரேகைப் பகுதியில் விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான பொருத்தமான இடத்தை டாக்டர் சாராபாயும், டாக்டர் பாபாவும் தேடிக்கொண்டிருந்தர்கள். 1962ல் இந்தத் தேடல் தொடர்ந்தது. கேரளாவில் உள்ள தும்பா, பூமியின் காந்த சக்தி கொண்ட பூமத்திய ரேகைக்கு (Magnetic Equator) அருகில் இருப்பதால் பூமியிலிருந்து மிக அதிக உயரத்தில் உள்ள காற்று மண்டலப் பகுதி பற்றிய ஆராய்ச்சிக்கு மிகவும் பொருத்தமான இடம் என்று முடிவு செய்தார்கள். ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வந்த கிராமம் இது. இங்கு அழகும், அருளும் பொங்கும் தூய மாரியன்னை மெக்டலின் தேவாலமும், பிஷப் வசிக்கும் வீடும் அமைந்திருந்தன. பொருத்தமான இடம் இது தான் என்று முடிவு செய்திருந்தாலும்,, அதைக் கையலகப்படுத்துவதற்கான வேலையைத் தொடர முடியாத நிலவரம். இந்தச் சூழ நிலையில் பிஷப் ரெவரெண்ட் டாக்டர் பீட்டர் பெர்னார்ட் பெரைராவை ஒரு சனிக்கிழமையன்று சந்தித்தார் டாக்டர் விக்ரம் சாராயாய். அந்த தேவாலயத்தையும் அதைச் சேர்ந்த இடத்தையும் தங்கள் திட்டத்திற்காக மாற்றித் தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்டுப் புன்னகைத்த பிஷப், மறுநாள் தம்மை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாள் காலை ஞாயிறு ஜெப ஆராதனைக்காக அங்கு
கூடியிருந்தவர்களைடம்  பிஷப் பின்வருமாறு சொன்னார்: ‘எனது குழந்தைகளே! புகழ்பெற்ற ஒரு விஞ்ஞானி இங்கு வந்திருக்கிறார். நமது தேவாலயத்தையும் எனது வசிப்பிடத்தையும் விண்வெளி விஞ்ஞான ஆராய்ச்சிக்காகத் தரும்படி கேட்டார். மனித வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும் சாத்தியத்தைத்தான் விஞ்ஞானம் நாடுகிறது. ஆன்மிகம் என்பது மதத்தின் மிக உயர்ந்த நிலை. மனித மனங்களில், அமைதியைத் தழுவச் செய்வதற்காக இறைவனின் உதவியை நாடுகிறார்கள் ஆன்மீக போதகர்கள் .. சுருக்கமாகச் சொல்லப்போனால் நானும் விக்ரமும் ஒரே வேலையைத் தான் செய்து வருகிறோம். அறிவியல், ஆன்மீகம் – இரண்டுமே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மனித இனம் செழித்து, சிறப்பதற்காக இறைவனின் ஆசிகளை வேண்டுகின்றன. குழந்தைகளே! அறிவியல் இலட்சியத் திட்டத்திற்கான இறைவனின் உறைவிடத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்கலாமா?’

இப்படிப் பிஷப் கேட்டதும், சிறிது நேரம் அங்கு நிலவிய மவுனத்தை அடுத்து இதயபூர்வமான ‘ஆமென்’ ஒலித்தது. அங்குக் கூடியிருந்தோரின் இந்தச் சம்மதக் குரல் அந்தத் தேவாலயமெங்கும் எதிரொலித்தது.

*      பூர்த்தியடையாத ஒரு கனவு (An Unfinished Dream)  என்ற ஒரு புத்தகத்தை நான் சமீபத்தில் படித்தேன். இந்தியாவின் ‘பால்காரர்’ டாக்டர் வர்கீஸ் குரியன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ‘நான் ஒரு பால்பண்ணை மனிதனாக மாறியது, ஒரு எதேச்சையான திருப்பம்’ என்று இந்தப் புத்தகத்தில் அவர் சொல்கிறார். ‘லண்டனில் ஓடும் கழிவு நீர், பம்பாயின் பாலைவிட பாக்டீரியா ரீதியில் மேன்மையானது’ என்று ஒரு பிரிட்டிஷ் நிபுணரின் இகழ்ச்சிப் பேச்சு இளம் குரியனுக்கு ஒரு சவாலாகத் தோன்றியது. அந்தச் சவால்தான் பால் பண்ணைத் தொழிலில் பல்லாண்டு காலம் பாடுபட்டு, படிப்படியாக அதற்குப் பலம் சேர்த்து, இன்று இந்தியாவை பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஒரு நாடாக உயர்த்தி உள்ளது.

*      ஏவுகணைச் சோதனைக்கு ஒரிசா மாநிலத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வீலர் தீவுகள் தான் பொருத்தமானது என்று நிர்ணயமான பிறகு, அதற்கு ஒப்புதல் வாங்க அப்போதைய ஒரிசா முதல் அமைச்சர் பிஜூ பட்நாயக்கை கலாம் சந்திக்கச் சென்ற போது, அவர் ‘கலாம் .. என் நண்பரே! டாக்டர் சாராபாய் காலத்திருந்தே இன்று வர உங்களுடைய பணிகளைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் என்ன கேட்டாலும், நான் தருவேன்’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அந்த நான்கு தீவுகளையும் டி.ஆர்.டி.ஓ.க்குக் கொடுக்கும் ஒரிசா அரசின் ஒப்புதல் அறிவிப்பில் என் முன்னினையில் கையெழுத்திட்டார்.

*      சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, அசாத்திய நெஞ்சுரம் கொண்ட புஜூபட்நாயக் தனது கலிங்கா ஏர்வேஸ் விமானத்தைத் தானே ஓட்டுக் கொண்டு ஜகர்த்தாவுக்குப் பறந்தார். தன் நண்பர் இத்தோனேஷியப் பிரதமர் சுகர்னோ முதல் முறையாக அப்பாவான அந்த சந்தோஷத்தை நேரில் சென்று வாழ்த்தவே இந்த அவரது பயணம்.

சுகர்னோவின் மனைவி ஒரு பெண் குழந்தையப் பெற்றெடுத்திருந்தார். பிஜூ பட்நாயக், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த சமயத்தில், அந்த மழலைச் செல்வத்திற்கு என்ன பெயர் சூட்டுவது என்று சுகர்னோவின் குடும்பம் முழுமூச்சாக ஆராய்ந்து கொண்டிருந்தது.

தங்களுடைய பிரச்சனையைத் தமது இந்திய நண்பரிடம் எடுத்துச் சொன்னார் சுகர்னோ. குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் மேகங்களைக் குறிக்கும் பதத்தைப் பெயராகச் சூட்டலாம் என்று அபிப்பிராயம் சொன்னார். அதன்படியே சுகர்னோவின் பெண் குழந்தைக்கு மேகவதி என்று பெயர் சூட்டினார்கள். உலகத்தின் மிகப் பெரிய முஸ்லீம் தேசத்தின் தலைவர் தனது குழந்தைக்கு இந்துப் பெயரைச் சூட்டியதன் பின்னணி இது தான்.


உயர்ந்த மனிதர்களுக்கு மதம் என்பது நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் ஒரு வழிமுறை. அற்பத்தனமானவர்களுக்கு மதம் என்பது சண்டை போட்டுக் கொள்வதற்கான ஒரு ஆயுதம். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017