பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்
முன்
குறிப்பு:
இந்திய
அரசியல் சட்டம் ஆர்டிகிள் 370 மூலம் ஜம்மூ – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், அதற்கு
தனி தன்னாட்சி சிறப்பு அந்தஸ்து நிலையை இந்த ஆர்டிகிள் 370 உண்டாக்கியது. இந்த ஷரத்து
இந்திய அரசியல் சாசனம் பகுதி 21-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 370 ஷரத்து தற்காலிகமானது,
இடைக்கால ஏற்பாடு, சிறப்பு அஸ்தஸ்து என்று குறிப்பிட்டிருந்தாலும், ஜம்மூ-காஷ்மீர்
அரசியல் சட்டசபை இந்த 370-யை ரத்து செய்யப் பரித்துரைக்காமல் கலைக்கப்பட்ட நிலையில்
அதுவே நிரந்தரமான சட்டமாகி விட்டது.
தனி
அந்தஸ்து என்றால் ஜம்மூ – காஷ்மீருக்கு தனியான அரசியல் சாசன சட்டம், தனிக் கொடி, இந்திய
அரசியல் சட்டத்திலிருந்து விலக்கு, மத்திய அரசு பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள், தகவல்
தொடர்புகள் ஆகியவைகளில் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம், மற்ற சட்டங்கள் மாநில அரசின்
ஒப்புதல் பெற்று செயல்படுத்தல், அர்டிகிள் 370-யை ரத்து செய்வது அல்லது சட்ட திருத்தம்
செய்ய ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாதன சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின் செயல்படுத்தும்
நிலை – ஆகியவைகள் அடக்கம். ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாசன சட்டசபை 31-10-1951 அன்று உருவாக்கப்பட்டு,
17-11-1956 அன்று கலைக்கப்பட்டு விட்டது.
இனி
ஆர்டிகிள் 35A –யைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இதற்கு
அப்போது பதவியில் இருந்த ஜம்மூ-காஷ்மீரின் பிரதமமந்திரி ஷேக் அப்துல்லா – பாரதப் பிரதமர்
ஜவஹர்லால் நேரு ஆகிய இருவரும் செய்து கொண்ட ‘1952 டெல்லி ஒப்பந்தம்’ காரணமாகும். இந்த
ஷரத்தின் மூலம் ‘நிரந்தர குடியுரிமை’ விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த விதிமுறை அப்போதைய
ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உத்தரவின் மூலம் 14-05-1954-ல் ஆர்டிகிள் 370-யின் கீழ்
ஜம்மூ-காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் 35A உருவாக்கப்பட்டு சட்டமாகியது.
ஆர்டிகிள்
35A – யின் அடிப்படையில், 17-11-1956 அன்று ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சட்டத்தில் நிரந்தர
குடிமக்கள் பற்றிய விதிகள் உருவாக்கப்பட்டு, சட்டமாகியது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
1.
ஜம்மூ-
காஷ்மீரத்தின் ‘நிரந்தர குடிமக்கள்’
அனைவருக்கும் இந்திய குடியுரிமை நீடிக்கப்படும். நிரந்தர குடியுரிமையை நிர்ணயம் செய்யும்
முழு உரிமையும் மாநில அரசாங்கத்திற்கு உண்டு.
2.
ஜம்மூ-காஷ்மீரத்தின்
‘நிரந்தர குடியுரிமை’யை அந்த மாநில அரசுதான் நிர்ணயிக்கும். நிரந்தர குடியுரிமை அற்றவர்களுக்கு
அரசாங்க வேலை இல்லை. அசையா சொத்துக்கள் வாங்க முடியாது. அவர்களுக்கு அரசாங்க சலுகைகளான
கல்வி கற்க உதவிப் பணம் மற்ற அரசாங்க உதவிகள் இல்லை.
3.
நிரந்தர
குடியுரிமை பெற்றவர்களே சட்டசபைத் தேர்தலில் நிற்க முடியும்.
4.
நிரந்தர
குடியுரிமை பெறாதவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது.
5.
நிரந்தர
குடியுரிமை பெற்ற பெண்கள் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களைக் கல்யாணம் செய்து கொண்டால்,
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நிரந்த குடியுரிமை இல்லாதவர்களாகக் கருதப்பட்டு,
அரசு சலுகைகளோ, கல்வியோ மறுக்கப்படும்.
6.
பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்று பிறகு காஷ்மீரில் புகலிடம் பெற்றவர்களுக்கு நிரந்தர
குடியுரிமை பெறுவார்கள். ஆனால், மேற்கு பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வந்தவர்களுக்கு
நிர்ந்தர குடியுரிமை மறுக்கப்படுகிறது.
7.
நிரந்தர
குடியுரிமை பெற்றவர்கள் மாநிலத் தேர்தல்களிலும், லோக்சபா தேர்தல்களிலும் ஓட்டுப் போட
முடியும். ஆனால் நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் இந்திய குடியுரிமையால் லோக்சபாவில்
ஓட்டுப் போடும் உரிமை இருப்பினும், மாநிலத் தேர்தல்களில் ஓட்டுப் போடும் உரிமை மறுக்கபடுகிறது.
வாசகர்: இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்ற போது
அது பாகிஸ்தான் – இந்தியா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்று தான் சரித்திரப் படப்
புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் அது ஜம்மூ-காஷ்மீர் என்று மூன்றாகப்
பிரிப்பட்டதாகத் தான் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஷேக் அப்துல்லா – நேரு ஆகிய இருவர்களும்
இதற்கு முக்கிய காரணமாகும். பாகிஸ்தான் முஸ்லீம் தேசமாகப் பிரித்த பிறகு, ஜம்மூ-காஷ்மீரமும்
மற்ற சமஸ்தானங்களைப் போல் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு முஸ்லீம்கள்
பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் மதம்-முஸ்லீம் மக்கள் தொகை ஆகியவைகளைப் பாதுகாக்க
வேண்டும் என்ற கோரிக்கையை நேரு ஆதரித்துச் செயல்பட்டு, அதற்கு ஏற்ப, முஸ்லீம்களைத்
திருப்திப் படுத்தும் செயலில் இறங்கி தனி அரசியல் சாசனச் சட்டம், ஆர்டிகிள் 370
& ஆர்டிகிள் 35A என்று பல சட்டப் பாதுகாப்பு
ஷரத்துகளை ஏற்படுத்தி விட்டார். முஸ்லீம்களுக்கு தனியாக பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது,
ஜம்மூ-காஷ்மீரம் மற்ற மாநிலம் போல் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்படும், இதை விரும்பாதவர்கள்
பாகிஸ்தானுக்குச் செல்லலாம் என்று தீர்க்கமாக முடிவு எடுக்காமல் அப்போதைய காங்கிரஸ்
தலைவர்கள் தவறு இழைத்து விட்டார்கள். அதன் பலா பலன்களை இப்போது நாம் அனுபவிக்கிறோம்.
விமரிசகர்: ஆர்டிகிள் 370 என்பது தற்காலிகமானது என்று
குறிப்பிட்டதும் கேலிக்குறியாகி விட்டது. ஏனென்றால், அக்டோபர் 2015-ல், ஜம்மூ-காஷ்மீர்
உயர் நீதி மன்றம் தனது தீர்ப்பில் கூறியது: ‘தற்காலிகம்’ என்பது இப்போது செல்லாது.
ஏனென்றால், ஆர்டிகிள் 370 – தற்காலிக ஏற்பாடு – என்ற தலைப்பில் இருந்தாலும், அது இந்திய
அரசியல் சாசனத்தின் நிரந்தரமான ஒன்றாகி விட்டது. ஆர்டிகிள் 370 – உபபகுதி 3 –ன் படி
இந்த ஆர்டிகிளை குறைக்கைவோ அல்லது ரத்து செய்யவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியாத நிலை
உருவாகி விட்டது. ஏனெறால், காஷ்மீர் அரசியல் சாசனத்தை உருவாக்கிய அசம்பிளி கலைக்கப்பட்டு
விட்டது. அந்த அசம்பளிக்குத் தான் ஆர்டிகிள் 370-யை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ அதிகாரம்
உண்டு.
பொதுஜனம்: ஜம்மூ-காஷ்மீர் உயர் நீதி மன்றத்தின் இந்தத்
தீர்ப்பு உண்மையிலேயே நகைப்புக்கு இடம் தரும். தற்காலிகம் என்பது ஒருபோதும் நிரந்தரம்
என்ற நிலையை அடைய முடியாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியின் பொருள் தான் ஏற்புடையதாக
இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்டவரின் ஆசைக்கு ஏற்ப – அவர் உயர்மன்ற நீதிபதியாக இருப்பினும்
– பொருள் கொண்டால், அகராதியையே அவமதித்ததாகும். ஜம்மூ-காஷ்மீர் பிரச்சனை வெறும் சட்டம்
சார்ந்தது மட்டும் அல்ல. அது அரசியல் பின்னணியில் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகி
உள்ளது. இந்தியாவுடன் ஜம்மூ-காஷ்மீர் முழுவதும் இணைய வில்லை என்பதற்கு ஆர்டிகள்
370 –யைச் சுட்டிக்காட்டி காஷ்மீர் திவிர வாதிகளும், ‘காஷ்மீர் ஆசாதி – காஷ்மீர் சுதந்திரம்
வேண்டும்’ என்ற பிரிவினை முஸ்லீம் அமைப்புகளும் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட வண்ணம்
இருக்கின்றனர். காஷ்மீரத்தில் காலம் காலமாக குடியிருந்த காஷ்மீர் பண்டிட்கள் அங்குள்ள
முஸ்லீம் அமைப்புகளால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும், சுறையாடப்பட்டும்,
கற்பழிக்கப்பட்டும் அங்கிருந்து அகதிகளாக ஜம்மூ – டெல்லி என்று குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த இனப்படுகொலை அது முஸ்லீம் அமைப்புகளால் உண்டாக்கப்பட்டதால், அது ஊடகங்கள் – பத்திரிகைகள்
– டி.வி. ஆகியவைகளில் இடம்பெற்று, இந்த மஹா பாதகச் செயல்கள் வெளியுலகத்திற்கு முறையாகத்
தெரியப்படுத்தப்படவில்லை. இதற்கு விமேசனமும், அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இடது சாரிகள் – அறிவு ஜீவிகள் – பகுத்தறிவுவாதிகள் – சிக்குலர் மேதாவிகள் – அனைவரும்
மவுனம் காத்து, தங்கள் மனச் சாட்சியை தொலைத்து, தங்களது மேலான சகிப்புத் தன்மையை வெளிச்சம்
போட்டுக் காட்டினர்.
நிருபர்: நிரந்தர குடியுரிமைச் சான்றிதழ் அளிக்கும்
அதிகாரம் ஜம்மூ-காஷ்மீர் அரசாங்கத்திற்குத் தான் உண்டு. சான்றிதழ் அளிப்பதில் உள்ள
குறைகளை எங்கும் முறையிட்டு தீர்வு காண முடியாது. அரசாங்கத்தின் முடிவே முடிவானதாகும்.
வால்மீகி என்ற கீழ் ஜாதியினர் துப்புரவு தொழிலாளர்களாக 1957 ஆண்டில் காஷ்மீரத்திற்கு
கொண்டு வரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கும் போது – அவர்களும்
அவர்களின் பிற்கால சந்ததியினர் அனைவரும் துப்புரவு தொழிலாளர்களாகவே இருந்தால் தான்
அவர்களுக்கு நிரந்தர குடியுரி உண்டு என்று ஆர்டிகிள் 35A மூலம் வழங்கியுள்ளது. இது
எவ்வளவு பெரிய அநியாயம்? இந்த அவல நிலையைப் பற்றி எவ்வளவு பேர்களுக்குத் தெரியும்?
தலித் மக்களுக்கு இந்த நிலையை ஹிந்து சமூகம் செய்திருந்தால், அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும்
மூர்க்கமாக விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், காஷ்மீர் முஸ்லீம்களால் இது உண்டாக்கப்பட்டிருப்பதால்,
மவுனம் காக்கிறார்கள்.
வாசகர்:
ஷேகஅப்துல்லா – நேரு 1952 ஒப்பந்தம் தான் ஹிமாலத் தவறு – அது தான் காஷ்மீரத்தை
இந்தியாவுடன் முழுதும் இணைக்கத் தடைக்கற்களாகி அங்கு வசிக்கும் முஸ்லீம் சமூகத்தினருக்கு
ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று இந்திய அரசியல் சாசனத்தின் பல பிரிவுகளின்
விதிகளை மீறுவதாக உள்ளது. ஆர்டிகள் 14 (சமத்துவம்), அர்டிகள் 15 (மதம், ஜாதி,பிறந்த
இடம் ஆகியவைகள் அடிப்படையில் வேற்றுமை பாராட்டுதலை தடைசெய்தல்), ஆர்டிகள் 16 (பொது
வேலை மற்றும் இட ஒதுக்கீட்டில் சமமான வாய்ப்புகள்), ஆர்டிகள் 19 (அடிப்படை உரிமைகள்),
ஆர்டிகள் 21 (சுதந்திரமாக பேசும் உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை) ஆகியவைகள் அனைத்தும்
ஜம்மூ-காஷ்மீரத்தில் வாழும் மக்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருப்பினும், காஷ்மீர்
அரசாங்கத்தால் நிரந்தரக் குடியுரிமை பெறாவிடில் இந்திய அரசியல் சாசனத்தின் மேற்கண்ட
ஆர்டிகளில் குறிப்பிடப்பட்ட அனைத்து பாதுகாப்பும் அந்த நிரந்தர குடியுரிமை மறுக்கப்படட
மக்களுக்கு கிடையாது.
பொதுஜனம்: டெல்லி ஒப்பந்தம் கையெழுத்து போட்டதன் பின்னணியைப்
பற்றி லோக்சபாவில் நேரு பேசியது, அவரது முஸ்லீம்களுக்கு சலுகைகளை – அது காஷ்மீரில்
வாழும் பிற மதமக்களைப் பாதித்தாலும் – அளிக்க முன் வந்த மனநிலையைப் படம் பிடித்துக்
காட்டுகிறது. அவர் பேசியதின் சாராம்சம்: ‘காஷ்மீரில் வாழும் அனைத்து மக்களுக்கும்
– முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதார் – முழு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு,
காஷ்மீர் முஸ்லீம் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். காஷ்மீரை ஆண்ட மஹாராஜா
காலத்திருந்தே குடியுரிமை, சொத்து வாங்கும் உரிமையில் தடைகள் இருக்கின்றன. வெளியிலிருந்து
குடியேறியவர்களுக்கு காஷ்மீரில் குடியுரிமையோ, சொத்து வாங்கும் உரிமையோ கிடையாது. அதே
நிலையைத் தான் தற்போதைய காஷ்மீர் அரசு கடைப்பிடிக்க விரும்புகிறது. ஏனென்றால், வெளியாட்கள்
தங்கள் பண பலத்தால் காஷ்மீரத்தில் சொத்துக்களை வாங்கி, அங்கு வாழும் முஸ்லீம் இனத்தவர்களுக்கு
அநீதி இழைப்பார்கள். ஆகையால் காஷ்மீர் அரசு, நிலம் வாங்குதல், அரசு அலுவல்கள், கல்விச்
சலுகைகள் போன்றவைகளில் சில சலுகைகளை அங்கு வாழும் மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்த, நிரந்தர குடியுரிமை பெற்றவர்களின் உரிமைகள், சலுகைகள் ஆகியவைகளை
காஷ்மீர் அரசு முடிவு செய்யும்.’
விமரிசகர்: ஆர்டிகள் 35A ஜனாதிபதியின் உத்திரவின் பேரில்
இந்திய அரசியல் சாசதனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசியல் சாசன ஷரத்துக்களில்
திருத்தம் செய்ததாகும். இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஆர்டிகள் 368(i) வாசகம்
‘அரசியல் சாசன திருத்தம் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு’ என்பதாகும்.
ஆகையால் ஆர்டிகள் 35A- என்ற திருத்தம் பாராளுமன்றத்தினால் ஒப்புதல் பெறப்படாததால்,
இது செல்லுபடியாகாது என்ற வாதமும் எழுகின்றது. மார்ச் மாதம் 1961 – சுப்ரீம் கோர்ட்,
‘ஜனாதிபதிக்கு ஆர்டிகள் 370 மூலம் அரசியல் சாசனத்தைத் திருத்தும் அதிகாரம் உண்டு’ என்று
கருத்துத் தெரிவித்தாலும், பார்லிமெண்டிற்கு அந்த திருத்தம் கொண்டு செல்லப் படவேண்டுமா?
என்பதில் மவுனம் காத்து, இந்தக் கேள்விக்கு விடை சொல்லாமல் இன்னும் நிலுவையில் தான்
இருக்கிறது.
நிருபர்: ஏன் இந்த மிகவும் சிக்கலான அரசியல் – சட்ட
அம்சங்கள் இப்போது மக்கள் மன்றத்தில் வந்துள்ளது? என்ற கேள்வி எழும். We Citizens
– என்ற அரசுசாரா அமைப்பு 2014 ஆண்டில் சுப்ரீம் கோர்டில் ‘ஆர்டிகள் 370 & ஆர்டிகள்
35A – இரண்டும் செல்லுபடியாகாது. அது இந்திய அரசியல் சாசனத்தில் மட்டும் தான் இடம்
பெற்றுள்ளது. ஆனால், காஷ்மீர் அரசியல் சாசனத்தில் இந்த தனித் தன்மை இடம் பெறவில்லை.
மேலும், ஆர்டிகள் 370 தற்காலிகமானது என்று சொன்னதுடன், அது காஷ்மீரில் சகஜ நிலைமையும்,
ஜனநாயகத்தை பலப்படுத்துவதையும் ஏற்படுத்த வேண்டும் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆகையால் மிகவும் நிரந்தரமான மாற்றங்களை ஆர்டிகள் 370 மூலம் கொண்டுவருவதை இந்திய அரசியல்
சாசனத்தை உருவாக்கியவர்கள் விரும்பவில்லை. இதன் மூலம் ஆர்டிகள் 35A – நிரந்தரமான மாற்றமாக
இருப்பதால், இது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்க்ளின் நோக்கத்திற்கு எதிரானது. இது
இந்திய பிரஜைகளை பிரித்து, ஒரே இந்தியா என்ற உயர்ந்த நோக்கத்தையே சிதைக்கும் அளவில்
உள்ளது. காஷ்மீரில் உள்ளவர்கள் – காஷ்மீரி நிரந்தர குடியுரிமையுடம், இந்திய குடியுரிமையும்
பெற்றவர்களாக இருக்கும் போது, அங்கு வாழும் முஸ்லீம் அல்லாதோர் இந்திய குடியுரிமை மட்டும்
பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இன்னொரு மனுவும்
சாரு வாலி கன்னா என்ற காஷ்மீர பண்டிட் பெண் – சுப்ரீம் கோர்ட் லாயர் – சுப்ரீம் கோர்டில்
தாக்கல் செய்துள்ளார். அவர் நேரடியாக ஆர்டிகள் 35A-யால் பாதிக்கப்பட்டவர். அவர் நிரந்தர
குடியுரிமை பெறாதவரைக் கல்யாணம் செய்துள்ளார். ஆகையால், அவரது குழந்தைகளுக்கு நிரந்தர
குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஆர்டிகள் 15-யை மீறுவதாகும்
என்று வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன் மூலம், ஆண்-பெண் பேதத்தை உண்டாக்கி, இது ஆர்டிகள்
14-யை மதிக்காமல் செயல்படும் காஷ்மீர் அரசின் உத்திரவு என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
இதை கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.
பொதுஜனம்: A.G.Noorani என்ற அரசியல் சாசனச் சட்ட நிபுணர் ‘ஆர்டிகள்
370 & 35A பற்றிய விவாதம் அனைத்தும் ‘மதவாத மனம் கொண்ட பெரும்பான்மையினரிசம்’ என்று
சாடுகிறார். இந்தச் சிறப்புச் சலுகைகள் நாகாலாந்து (Article 371 A), மிசோராம்
(Article 371 G) – ஆகிய மாநிலங்களிலும் உண்டு. ஆர்டிகள் 370 என்பது 26-11-1949 அன்று இந்திய அரசியல் சாசனத்தின்
அம்சமாக இந்திய அரசியல் சாசன அசெம்பிளியால் – அது ஒரு இறையாண்மை அமைப்பு – உருவாக்கப்பட்டது.
ஆர்டிகள் 35 A என்பது அதன் அடிப்படையில் உருவானதாகும். இந்த ஆர்டிகள் எடுக்கப்பட்டாலோ
அல்லது மாற்றப்பட்டாலோ, காஷ்மீரின் அனைத்து அரசியல் விதிகளையும் கேள்வி கேட்கும் நிலைக்கு
இது கொண்டு வந்து விடும்.
வாசகர்: தற்போதைய முதல் மந்திரி மெஹ்பூபா முஃப்தி,
‘ஆர்டிகள் 370 & ஆர்டிகள் 35A ஆகியவைகளில்
மாற்றம் செய்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியக் கொடியைத் தோளில் சுமக்க ஒருவர்க்
கூட வரமாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பி.க்கு இந்த இரண்டு ஆர்டிகளும்
ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் குறிக்கோள். இருப்பினும், அரசியல் சாணக்கியம்
காரணமாக, இது குறித்து அவிடவிட் கோர்டில் தாக்கல் செய்ய முன் வரவில்லை. கோர்ட் தீர்ப்பிற்கே
இதை விட்டு விட்டது. ஆர்டிகள் 370 & அர்டிகள் 35A இரண்டும் ‘இந்திய அரசியல் சாசனத்திற்கு
எதிரானது. காஷ்மீரின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் தடை’ என்பது பி.ஜே.பி.யின் கருத்து.
நிருபர்: 370 & 35A – ஆகியவைகளைப் பற்றி விவாதம்
செய்ய முயன்றால், காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்த சட்டங்களும் விவாதப்பொருளாகும், ஏனென்றால்,
இவைகள் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் – என்று உமர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
அத்துடன், இதில் மாற்றம் கொண்டு வந்தால், காஷ்மீரத்தில் மிகப் பெரும் கலவரம் வெடிக்கும்
என்றும் அவர் சொல்லி உள்ளார்.
பொது
ஜனம்: கோர்ட் தீர்ப்பு
எப்படி இருப்பினும் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வருமா? என்பது ஒரு பெரிய கேள்விக்
குறியாகும். தர்மம் சில சமயங்களில் கலவர சக்திகளுக்கு அடிபணிய வேண்டி இருக்கும். காலம்
தான் இதற்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தி, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.
Comments