திண்ணைக் கச்சேரி - பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்



பல மாதங்களாக திண்ணைக் கச்சேரி நடக்க வில்லை. நாட்டில் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், தேர்தல்கள், விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும் வாய்மையின் திண்ணைக் கச்சேரியின் நபர்கள் சந்திக்காமலேயே இருந்து விட்டார்கள். ஆனால், சமீபத்தில் பதவிக் காலம் முடித்த துணை ஜனாதிபதி மொஹமத் ஹமித் அன்சாரி பெங்களூர் தேசிய இந்திய சட்டக் கல்லூரியின் 25-வது வருட விழா பேச்சிலும்,கரன் தாபர் ராஜ்ய சபா டி.வி.க்கு எடுத்த பேட்டியிலும், ’ஹிந்துக்களிடம் சகிப்புத் தன்மை இல்லாமையால் முஸ்லீம்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மதச் சார்பின்மை மதிக்கப்படவில்லை. சட்டங்கள் எங்கு மதிக்கப்படவில்லையோ, அங்கே கொடுங்கோல் அரசு கோலோச்சும். இது அரசியல் சாதனத்திற்கு எதிரானது’ என்ற கருத்துக்கள் விவாதப்பொருளாகி விட்டன. அத்துடன் ஆர்டிக்கிள் 35A பற்றியும் விவாதங்கள் நடக்கின்றன. ஆகையால் திண்ணைக் கச்சேரியிலும் இவைகள் பற்றிய சூடான கருத்துக்கள் வெளியிடப்பட உள்ளன.

1.   பங்களூரு சட்டக் கல்லூரியில் 7-8-2017 அன்று பேச்சின் முழு உரைக்கான தொடர்பு:  (மிகவும் நீண்ட சொற்பொழிவு – படிப்பதற்கு நிதானம் வேண்டும்.)

2.   ராஜ்ய சபா டி.வி.க்காக கரன் தாபர் அன்சாரியைப் பேட்டி கண்ட மின் வலைத் தொடர்பு. இந்தப் பேட்டி ராஜ்ய சபா டி.வி.யில் 10-08-2017 அன்று இரவு 8 மணிக்கு ஒலிபரப்பப்பட்டுள்ளது. : (மிகவும் நீண்ட பேட்டி)






வாசகர்: பங்களூர் சட்டக் கல்லூரியில் மொஹமத் ஹமித் அன்சாரி கல்லூரியின் பட்டமளிப்பு விழா உடையில் இருந்தாலும், அவரது பேச்சு ஏதோ ஒரு முல்லா முஸ்லீம் குல்லா அணிந்து உரை ஆற்றுவதாகத் தான் அமைந்தது. ‘நான் முதலில் முஸ்லீம். இடையில் முஸ்லீம். இறுதிலும் முஸ்லீம். நான் எனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தால், இந்தியா சகிப்புத் தன்மையையும், பல் நோக்கு கலாச்சார நிலையுடன் மதச் சார்பின்னை நோக்கத்தையும் இழந்து விட்டது’ என்ற பாணியில் உரை நிகழ்த்தி உள்ளார். நீண்ட உரை – முஸ்லீம் மக்களுக்காக வாதாடும் ஒரு வக்கீலாகவே – துணை ஜனாதிபதியாக பதவி இழக்கும் ஒரு சில நாட்கள் இருக்கும் வேளையில் தாம் வகித்த பதவிக்கே களங்கம் விளைவித்துள்ளார் என்பது தான் என் தீர்மானமான கருத்து.

விமரிசகர்: அன்சாரியின் உரை துணை ஜனாதிபதி பதவிக்குள்ள மதிப்பை நிலை குலையச் செய்யவதாகவே இருந்தது. உண்மையில் அடுத்த சில தினங்களில் அவர் அளிக்க உள்ள கரன் தாபர் பேட்டிக்கு அடித்தளம் அமைக்கும் உரையாகவே எனக்குப் பட்டது. கரன் தாபர் தமது பேட்டியின் ஆரம்பத்தில் ‘நீங்கள் 1937-ம் ஆண்டு ஏப்ரல் முட்டாள் தினத்தில் பிறந்தது தான் உங்கள் வெற்றியின் ரகசியமா?’ என்று கேட்டார். ‘நான் என் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடமல் இதனால் தவிர்த்துள்ளேன். ஆனால், நான் துணை ஜனாதிபதியானவுடன் பிரதமந்திரி மன்மோஹன் சிங் மனைவியுடன் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க விரும்பிய போது அதை என்னால் ஏற்காமல் இருக்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். ஆரம்பக் கேள்வியே சரியாகப் படவில்லை.

நிருபர்: பங்களூரு சட்டக் கல்லூரிப் பேச்சுத் தொடக்கத்திலும், அன்சாரி இதே பாணியில் மேற்கோள் காட்டி தமது உரையைத் தொடங்கி உள்ளார். மம்பில் என்ற அறிஞரின் மிகவும் பிரபலமான வாக்கான – சட்டம் ஒரு கழுதை – என்பதோ, ஷேக்ஸ்பியரின் ஹென்ரி 6 – என்ற நாடகத்தில் வரும் – அனைத்து வக்கீல்களையும் கொல்ல வேண்டும் என்ற ஆரம்ப வார்த்தைகளும் எனக்குச் சரியாகப் படவில்லை. என் அறிவு அவைகளைக் குறிப்பிடவேண்டாம் என்று அச்சுறுத்துவதால், நான் அவைகளைக் குறிப்பிடத் துணிய வில்லை என்று கூறியவர் அவைகளைக் குறிப்பிட்டுள்ளார். சில அரசியல் சாதனக் கொள்கைகள், சட்ட முடிவுகள், நீதித் தீர்ப்புகள் ஆகியவைகள் பிரஜைகளின் வாழ்வுகளை எப்படிப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய என் முயற்சியாக இந்தப் பேச்சு அமையும் என்று அங்கலாய்த்துள்ளார். அவர் கூடியிருக்கும் சபையோரை முட்டாளாகக் கருதவில்லை என்றாலும், இந்தியாவில் உள்ள மற்ற பெரும்பான்மைச் சமூகத்தினர்கள் ‘முட்டாள்கள் போல் செயல்படுகிறார்கள்’ என்று பிறகு சொல்லும் கருத்துக்கும் அடித்தளம் அமைக்கிறார் என்று தான் எனக்குப் படுகிறது.
பொதுஜனம்: இது எல்லாம் அபாண்டமான குற்றச் சாட்டுக்கள். ஜான் லோக் அவர்களின் கூற்றை அன்சாரி குறிப்பிட்டதை இங்கு சொல்ல வேண்டும். ‘எப்போது சட்டம் சாகிறதோ, அப்போதே கொடுங்கோல் ஆட்சி தொடங்குகிறது. சமூக நிறுவனங்களின் முதல் நற்பண்பு எது என்றால் நீதி என்று தான் குறிப்பிட வேண்டும். நேர்மையான சமூகம், அனைத்து குடிமக்களுக்கும் சமமான சுதந்திரம் ஆகியவைகள் அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது சமூகத்தின் பலன்களைக் கருத்தில் கொண்டோ எந்த விதத்திலும் மாற்றக்கூடாது’ என்று அன்சாரி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

விமரிசகர்: மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் தவறு காண முடியாது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படை உரிமைகளைக் குறிப்பிட்டு அன்சாரி சொன்ன கருத்துக்களைப் பார்த்தால் அன்சாரியின் குரல் அவரைச் சார்ந்த முஸ்லீம்களுக்கு மட்டும் தான் என்பது தெரியவரும். அவர் சொல்கிறார்: ‘நமது ஜனத்தொகையில் 1.3 பில்லியன் மக்களில் 4635 வகையான சமூதாய இனங்கள் உண்டு. அதில் 78% மொழி மற்றும் கலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் இணைந்தவர்கள். அதில் முஸ்லீம் சிறுபான்பையினர் 19.4%. ஒரு நாட்டின் குடிமகன் ஒரு அடிப்படை நபராகக் கருதப்படவேண்டும். அவனது தேசிய-இனத்தை விட தேசிய-குடிமை நிலையைப் பாதுகாக்க வேண்டும். இந்தக் கோணத்தில் தான் இந்தியத் தன்மை – என்பதை எடை போட வேண்டும். அதாவது சிறுபான்பையினரின் உரிமைதான் முக்கியம் அவர்கள் கடமைகளை அரசாங்கம் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ கூடாது என்று அன்சாரி சொல்லாமல் சொல்வதாகவே படுகிறது.

பொதுஜனம்: அன்சாரி தமது பேச்சில் ஜின்னா போல் முஸ்லீம் சமூகத்தினருக்கு அவர்கள் ஜனத்தொகை அடிப்படையில் இரண்டு சபைகளிலும் இட ஒதிக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற தொனியில் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியோ இங்கு குறிப்பிடுகிறேன்:’இந்திய ஜனத்தொகையில் முஸ்லீம்கள் 14.23%. இரண்டு சபைகளின் மொத்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை: 790. முஸ்லீம் எம்.பிக்களின் எண்ணிக்கை: 1980 – 49; 1999 – 30; 2009 – 35; 2014 – 23. இதன் மூலம் மதச் சார்பின்மை – ஏற்றத் தாழ்வு ஆபத்து நிலை – ‘inequality traps’ - ஆகியவைகள் இந்தியாவில் நிலை நிறுத்தப்படும் என்று அன்சாரி தீர்மானிக்கிறார். இத்துடன் அன்சாரி நிற்கவில்லை. அவரது மதச்சார்பின்மைச் சாயம் வெளுக்கும் முறையில் அவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை விமரிசித்துள்ளார். ‘ஹிந்து மதம் வாழ்க்கை முறை என்று சில நீதித் தீர்ப்புகள் பல மதங்கள் கொண்ட சமூகத்திற்கு ஏற்புடையது இல்லை என்றும். மத நம்பிக்கைகளையும், கலாச்சார எல்லைகளையும் பிரித்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் மற்ற மதக் கொள்கையினரும் தங்கள் கலாச்சாரம் – சரித்திரம் ஆகியவைகளை ஊர்ஜிதம் செய்து நிலை நாட்ட முடியும். பெரும்பான்மையினர் – சிறுபான்மையினர் என்று பிரிப்பது, நமது அரசியல் சாதனத்தின் நோக்குரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சகோதரத்துவம்’ என்ற குறிக்கோளுக்கு மாறானதும், குடிமக்களைப் பிரிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகும். மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற கொள்கை அனைத்து குடிமக்களுக்கும் வளர்ச்சியில் பங்கு உண்டு என்பதை நிலை நாட்டுவதால், இதுவே அந்த பிரிக்கும் மன நிலைக்கு முற்றுப் புள்ளி வைப்பாதாக அமையும்.

நிருபர்: மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு முரணாக சுப்ரீம் கோர்ட் செயல்படுவதாக அன்சாரி குறைகூறுகிறார். குறிப்பாக 11-12-1995 சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதச் சார்பின்மைக்கு எதிரானது என்று சொல்லி, அதை மறுபரிசீலனை செய்து, இந்தப் பெரிய தீமையைக் களைய வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். மறுபரிசீலனைத் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் விதிப்பது எந்த நீதியைச் சார்ந்தது என்பதை அன்சாரி விளக்க வேண்டும். இது பி.ஜே.பி. தலைவர் முரளி மனோஹர் ஜோஷி மஹாராஷ்டிரா தாதர் அசம்பளி தேர்தலில் 27-02-1990-ல் காங்கிரசை எதிர்த்துப் போட்டி இட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். அந்தத் தேர்தலின் போது முரளி மனோஹர் ஜோஷி தாதரில் ஒரு கூட்டத்தில் 24-02-1990 அன்று, ‘முதல் ஹிந்து மாநில அரசு மஹாராஷ்டிராவில் அமையும்’ என்று பேசியது, அரசியல் தேர்தல் விதிமுறையை மீறியதாகும் – அதாவது மதத்தைப் பயன்படுத்தி ஓட்டுக் கேட்ட குற்றத்திற்கு ஆளாகிறார் என்று கேஸ் போடப்பட்டது. ‘ஹிந்து மாநில அரசு உதயமாகும் என்று சொல்வது, மதத்தைக் காட்டி மக்களிடம் ஓட்டுக் கேட்பதாகாது’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டது சுப்ரீம் கோர்ட். அத்துடன் அன்சாரி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பான – ஹிந்து, ஹிந்துத்வா, ஹிந்துயிசம் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காது. அது ஒரு வழிகாட்டு முறையே தவிர, மதம் அல்ல’ என்பதையும் கேலியுடன் எதிர்க்கிறார். ரூல் ஆப் லா – என்பதைக் குறிப்பிட்டுப் பேசும் அன்சாரி – அதிலும் தெய்வத்திற்கும் மேலாக கருதப்படும் மிகவும் புனிதமான சொல்லான – செக்குலரிசம் என்ற வார்த்தை – இந்திரா காந்தியால் எமர்ஜன்சி நடைமுறையில் இருக்கும் கால கட்டத்தில் – நீதி – கோர்ட் ஆகியவைகள் முடக்கி வைக்கப்பட்ட நிலையில், அரசியல் சாதனத்தில் எந்தவிதமான விவாதமோ – விமர்சனமோ – பேட்டியோ இல்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று என்பதை அன்சாரிக்கு நினைவு படுத்த வேண்டும். அன்சாரியால் பாராட்டப்படும் அம்பேத்கர் – செக்குலரிசம் என்பதை அரசியல் சாதன ப்ரியாம்பலில் சேர்க்கக் கூடாது என்றே வாதிட்டு அப்போது வென்றுள்ளார். அதைத் தான் இந்திரா அம்பேத்கரின் கருத்துக்கு எதிராகச் செயல்பட்டு, செக்குலரிசம் என்ற புனித வார்த்தை சேர்க்கப்பட்டு, அதை வேதச் சொல்லாக மதிக்கும் அன்சாரி மறந்திருக்கக் கூடும். அனைத்து இந்தியர்களின் கேடயமாக செக்குலரிசம் இருக்க வேண்டும் என்ற அன்சாரி சொல்லும் ‘Indianess’ – இந்தியத் தன்மை – சுருங்கி, முஸ்லீம்களின் பாதுகாப்புக் கேடயமாக இருந்தால் தான் அது நீதியின் பால்படும் என்ற அன்சாரியின் வாதம் அவரது ‘சிறுபான்மைத் தனத்தையே’ வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அறிய வேண்டும். கோர்ட் தீர்ப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்தால் – அதன் நேர்மை – நம்மகத்தன்மை ஆகியவைகளை நீதிமன்றம் ஆராய்ந்து தீர்ப்புக் கூறினாலும் – அன்சாரி அவைகளை ஏற்காது குற்றம் சொல்வது, அவரது இஸ்லாமிய மதக் கருத்துக்களின் தாக்கத்தால் அவர் சகிப்புத் தன்மை இல்லாத மதத்தவர் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. ஆனால் இது தான் உண்மையான செகுலரிசம் என்று அன்சாரி சாதிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

விமரிசகர்: சகிப்புத் தன்மையைப் பற்றி அன்சாரியின் மன நிலையைப் பார்ப்போம் அவரது உரையிலிருந்தே அறிய முயல்வோம். “சகிப்புத் தன்மை என்பது நல்ல குணம். அது குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுவிக்கும் குணம். இருப்பினும், சகிப்புத் தன்மை மட்டும் போதாது. அது பிறரைப் பற்றிய புரிதலுடன், அவரை ஒப்புக் கொள்ளும் மனநிலையையும் ஏற்படுத்த வேண்டும். ‘மற்ற மதங்களைச் சகிப்பதுடன், அவைகளை ஆலிங்கனம் செய்ய வேண்டும். ஏனென்றால், உண்மை தான் அனைத்து மதங்களின் அடிப்படைத் தத்துவமாகும்’ என்ற விவேகானந்தரின் சொற்களை நாம் பின்பற்ற வேண்டும்” என்று போதிக்கிறார் அன்சாரி. சரியான சமயத்தில் சகிப்புத் தன்மைக்கு எதிரான செயல்களை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மவுனம் காக்கும் கலாசாரம் போராட்டங்களில் முடியும் என்று எச்சரிக்கிறார். ஆனால், முஸ்லீம்கள் கோஷிக்கும் – ‘அல்லாஹூ அக்பர்’ என்ற சொற்கள் சகிப்புத் தன்மைக்கு எதிராக எழுப்பப் படும் குரல் என்பதை அன்சாரி ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இதில் அன்சாரியின் குழப்பமான தர்ம சங்கடமான நிலையைக் காணலாம். ‘லோகல் நேஷனலிஸம்’ – உள்ளூர் தேசிய உணர்வு - என்ற சொற்றொடரை அன்சாரி உபயோகிக்கிறார். இது காஷ்மீர் பிரச்சனையின் பின்னணியில் குறிப்பிடுகிறார். பாதுகாப்புப் படைவீரர்களை நோக்கி அவர்கள் தீவிரவாதிகளைப் பிடிக்கும் போது கல்லெரிவதையும், தீவிரவாதிகளுக்கு உதவுவதையும் – உள்ளூர் தேசிய உணர்வு – என்று அன்சாரி குறிப்பிடுவது, அங்குள்ள முஸ்லீம்களின் மதத்தை மதிக்கும் உணர்வையே வெளிப்படுத்தும். இதன் மூலம் அன்சாரி முதலில் முஸ்லீம் – பிறகு தான் இந்தியக் குடிமகன் என்ற நிலையைத் தான் ஊர்ஜிதம் செய்யும். அன்சாரியின் உரையில் உள்ள Hyper Nationalism – Civic Nationalism - Llliberal form of nationalism – Arrogant patriotism -  என்ற வார்த்தைகள் எல்லாம் ஹிந்துக்களைக் குறிவைத்து எய்தப்படும் பாணங்களாகும். மேலும் இந்த சொற்றொடர்கள் எல்லாம், அன்சாரியின் குறுகிய சிறுபான்மை இன மனப்பான்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சம்பவத்தைப் பார்த்து – எது சரி? எது தவறு? யார் மீது குற்றம்? – என்று கணிப்பது சம நீதி. ஆனால், பாதிக்கப்பட்டது முஸ்லீமா? இந்துவா? என்று அறிந்து, பிறகு கணிப்பதை அன்சாரி தவறாகச் சொல்ல வில்லை. ஏனென்றால், சகிப்புத் தன்மை என்பதைப் பொதுவில் வைக்காமல், இந்துமத்தவர்கள் மட்டும் சுமக்கச் செய்வது எந்த விதத்தில் ஏற்புடையதாகும்?

பொதுஜனம்: அன்சாரியின் பேச்சிற்கு மோடி ராஜ்ய சபாவில் அளித்த பதில் மிகவும் சுருக்கமாக, ஆணித்தரமா, அழுத்தமாக, மனதில் தைக்கும் படி அமைந்துள்ளது. மோடி ராஜ்ய சபாவில் அன்சாரியின் பிரிவு உபசாரத்தின் போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி: “உங்கள் பதவிகள் எல்லாம் மேற்கு ஆசியாவைச் சுற்றியே தூதர் பணியிலும், சிறுபான்மை அமைப்புப் பதவி, அலிஹார் பல்கலைக் கழக வேலை என்றே அமைந்து விட்டது. உங்கள் வாழ்க்கை பூராவும் இந்த ஒரே வட்டத்திலேயே, அதே சூழ்நிலையிலேயே, அந்த எண்ணங்களிலேயே, அதே மக்களுடனேயே பழகி விட்டீர்கள். 10 வருடங்களாக ஓரு அரசியல் சாதனத்தின் அடிப்படையில் பதவி வகித்த காரணத்தினால், நீங்கள் உங்கள் கருத்துக்களை வெளியிடும் போது ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆனால், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், நீங்கள் இந்த நிர்பந்தங்களால் கட்டுண்டு இனி வாழ வேண்டியதில்லை. இத்தனை வருடங்கள், நீங்கள் உங்கள் உள் மனத்தில் சில போராட்டங்களால் தவித்திருப்பீர்கள். ஆனால், இனி, இந்த தர்ம சங்கடமான சூழ்நிலை உங்களுக்கு இல்லை.” 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017