ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி – 14-08-2017 & ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி – 25-08-2017



ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கொண்டாடப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணன் மதுரா சிறையில் அடைக்கப்பட்ட வசுதேவர்-தேவகி தம்பதிகளுக்கு கி.மு.3228-ம் ஆண்டு 18-ம் நாள் ஜுலை மாதம் பிறந்தார். ஆகையால் இந்த 2017 வருடம் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி 5244-வது வருட கிருஷ்ண ஜெயந்தியாகும். அவரது பிறப்பு மூன்றாவது யுகமான துவாபர யுகத்தின் இறுதியாகக் கணிக்கப்படுகிறது. அதன் பிறகு கலியுகம் பிறக்கிறது.

கிருஷ்ணனின் அவதாரத் தலம் மதுரா. மழலைப் பருவம் கோகுலம். பால்ய பருவம் பிருந்தாவனம். கம்ச வதம் மதுரா. குருகுலம் சாந்தீபனி ஆசிரமம் (உஜ்ஜையினி). அரசாட்சி துவாரகா. அவதாரம் நிறைவுற்றது பிரபாச க்ஷேத்திரம் (சோம்நாத்). ஸ்ரீகிருஷ்ணர் 126 வருடங்கள் 5 மாதங்கள் உயிர் வாழ்ந்து, கி.மு. 18-02-3102 அன்று வைகுண்டம் அடைந்தார். அவர் வேடுவன் ஒருவனின் விஷமுள்ள அம்பினால் காலில் தாக்கப்பட்டு தம் அவதாரத்தை முடித்துக் கொண்டார். அப்போது மாலை சுமார் இரண்டரை மணி என்று ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

வசுதேவரின் இன்னொரு மனைவி ரோகிணியின் வயிற்றில் கிருஷ்ணனுக்கு முன்னால் பிறந்தவர் ஆதிசேஷனின் அம்சமான பலராமர். ஸ்ரீகிருஷ்ணனுக்கு புல்லாங்குழல் எப்படியோ அதே போல் பலராமருக்கு ஏர்கலப்பை அவரது அடையாளமாகும். கிருஷ்ணர் கருப்பு. ஆனால் பலராமர் சிகப்பு.

அவர்களின் தங்கைதான் சுபத்திரா. சுபத்திரா ரோகிணி-வசுதேவருக்குப் பிறந்தவள். சுபத்திரா அர்ஜுனனைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர். அவரது மகன் தான் அபிமன்யு.

ஸ்ரீகிருஷ்ணர் – பலராமர் – சுபத்திரா ஆகிய மூவர்களையும் பூரி ஜகன்னாத்தில் தனித்தனித் தேரில் எழுந்தருளச் செய்து பூஜிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணனின் அவதார ரகஸ்யத்தை அவரே பகவத்கீதை அத்தியாயம் 4 – சுலோகங்கள் 7 & 8 மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளார்:

1.   யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
(அத்தியாயம் 4 - சுலோகம் 7)

பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைக் குனிவு ஏற்படுகிறதோ, எவ்வெப்பொழுது அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் இப்புவியில் அவதரிக்கிறேன்.

2.   பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
(அத்தியாயம் 4 - சுலோகம் 8)

பொருள்: சாதுக்களை ரட்சிப்பதற்காகவும், தீயவர்களை சம்ஹரிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்.

இந்தத் தத்துவக் கோட்பாடுகள் இருப்பினும், ஸ்ரீகிருஷ்ணனை குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, தெய்வக் குழந்தையாக அந்தக் கண்ணனை நம் வீட்டிற்கு வரவழைக்கும் விழாவாக அந்தக் குஞ்சுக் கண்ணனின் பாதத்தை மாக்கோலமிட்டு வரைந்து, குழந்தைகளுக்குப் பிடிக்கும் பட்சணங்களுடன் வெண்ணையைப் பிரதானமான நிவேதனமாகப் படைத்து, வணங்கி, ஆடிப்பாடி, ஆனந்தமான விழாவாக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவது இதன் சிறப்பாகும்.

கண்ணனின் கருணை நம் அனைவருக்கும் கிடைக்க அவன் பாதம் பற்றி அவன் அருளுக்கு நாம் அனைவரும் பார்த்திரமாகப் பிரார்த்திக்கிறோம். 

ஸ்ரீவிநாயகர் பிறப்பு பற்றிய புராணக் கதைகளில் முக்கியமாகக் கருதப்படுவது சிவபுராணத்தில் உள்ள பிரபலமான கதையைக் குறிப்பிடலாம். அதில் சிவன் கஜசுராவின் வயிற்றிலிருந்து விடுபட்டு கைலாசம் நோக்கி வருகிறார். கைலாசத்தைக் காவல் காக்கும் நந்தியும் இல்லாத காரணத்தினால், பார்வதி தான் குளிக்கும் போது, காப்பதற்கு தன் உடம்பில் உள்ள மஞ்சள் பொடியிலிருந்து ஒரு குழந்தையை உருவாக்கி அதற்கு உயிரும் கொடுத்து, காவல் காக்கும் படிப் பணித்தார்.
சிவன் கைலாசம் வந்து உள்ளே நுழைவதை அந்தக் குழந்தை தடுத்தவுடன், ‘பார்வதியின் கணவன் நான். என்னை உள்ளே அனுமதி’ என்று வேண்டியும், அந்தக் குழந்தை தடுத்ததால், தன் திரிசூலத்தால் அந்தக் குழந்தையின் தலையினைக் கொய்து விட்டார். குளித்து முடித்து வந்த பார்வதி, தாம் சிருஷ்டித்த குழந்தை தலை அறுபட்டுக் கிடந்ததை அறிந்து, பார்வதி கோபமடைந்து ‘அனைத்து உயிர்களையும் அழிக்கப்போகிறேன்’ என்று சொன்னவுடன், அதை அறிந்த பிரம்ம தேவன்’ ‘அன்னையே! சாந்தம். உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார். அன்னையும் அதற்கு ஒப்புக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். ‘ஒன்று: என் குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டும். இரண்டு: எந்தக் கடவுளை வணங்குவதற்கு முன்னால், என் இந்தக் குழந்தையை முதலில் வணக்கித்தான் எதையும் தொடங்க வேண்டும்.’

சிவனின் தூதுவர்கள் முதலில் பார்க்கும் வடக்கு நோக்கி முகத்தை வைத்து இறந்துள்ள முகத்தை சிவனின் உத்திரவுப்படி மிகவும் பலம் வாய்ந்த கஜசுராவின் தலையையே கொண்டு வர, அந்தத் தலையினை பிரம்மா அந்தக் குழந்தையின் உடம்பில் பொறுத்தினவுடன், அந்தக் குழந்தை ‘கஜானனா’ – ‘கணபதி’ – ‘விநாயகர்’ என்ற பெயருடன் உலகில் முதன் முதலில் வணங்கும் தெய்வமாக உருவானார்.

ஸ்ரீகிருஷ்ணரின் பகவத்கீதையை வியாசர் சொல்ல ஸ்ரீகணேச மூர்த்தி எழுதியதாகச் சொல்லப்படுகிறது. எழுதுகோல் உடைந்த போது, தமது ஒரு தந்தத்தையே ஒடித்து, தொடர்ந்து மஹாபாரதம் முழுவதையும் எழுதியதாகச் சொல்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தியில் பட்சணங்கள் பிரசித்தம் என்றால், விநாயகர் சதுர்த்தியில் கொழுக்கட்டை நிவேதனம் அவசியம் உண்டு. அதுவும் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பதார்த்தமாகும். மனிதர்களின் துக்கங்களைப் போக்கி, இனிமையான வாழ்வை அளிக்கும் தெய்வம் பிள்ளையாராவார். விநாயகக் கடவுள் நம் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக எப்போதும் நம்முடனேயே வாழும் தெய்வமாகும்.

மஹா கவி பாரதியின் பாட்டையே நாம் கணபதியின் காலடியில் சமர்ப்பித்து, நமக்கு நீண்ட புகழ், நிறை செல்வம், பேரழகு ஆகியவைகளை வேண்டு மட்டும் விரைவில் ஈய வேண்டுவோமாக.

உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்கேதம் யாவினையும் மாற்றிஎனக்கே நீ
நீண்ட புகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து.

விக்ன விநாயக பாத நமஸ்தே!



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017