மோடி-அமித் ஷா இரட்டையர்களின் வெற்றி
தேர்தல் கணிப்புகள்
- தேர்தலுக்கு முன்னால் நடத்திய கருத்துக் கணிப்புகளாகட்டும்,
தேர்தல் நடந்த பிறகு நடத்திய ஓட்டுக் கணிப்புகளாகட்டும் - அனைத்தும் மஹா தவறாகி, பாரதிய ஜனதா கட்சி முக்கியமாக
மிகவும் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும், சிறிய மாநிலமான
உத்திரகாண்டிலும் ஹிமாலய வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது என்றால் மிகையாகாது.
பஞ்சாபில் அகாலிதளம் கூட்டணி ஆட்சியில் இருந்தும், பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை
அடைந்தாலும், மற்ற இரண்டு மாநிலங்களான மணிப்பூர் (60 தொகுதிகள்), கோவா (40 தொகுதிகள்)
ஆகியவைகளிலும் காங்கிரசுக்கு அடுத்த படியாக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதுவும் முந்தைய மணிப்பூர் சட்ட சபையில் ஒரு தொகுதி கூட இல்லாத பா.ஜ.க. 21 தொகுதிகளில் வென்றுள்ளது.
காங்கிரசின் மெத்தனமான அனுகுமுறையால் மணிப்பூர் - கோவா மாநிலத்திலும் காங்கிரசை விட குறைந்த இடங்களில் வெற்றி பெற்றிருப்பினும்
அங்கும் பா.ஜ.க. ஆட்சி
பீடத்தில் அமர்ந்து விட்டது. ஆகையால், பஞ்சாப்
தவிர்த்து, பாஜகவின் வெற்றி மகத்தானதாகி மோடியின் மத்திய அரசின்
கொள்கைகளுக்குக் கிடைத்த - அதுவும் குறிப்பாக உயர்மதிப்பு ரூபாய்
செல்லாது என்ற அறிவிப்பிற்குக் கிடைத்த - வெற்றி என்று கொள்ள
வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
2012
ஆண்டு உ.பி. மாநிலத் தேர்தலில்
பி.ஜே.பி.க்கு வெறும்
15% சதவிகித ஓட்டு என்ற நிலை மாறி இந்தத் தேர்தலில் அதன் ஓட்டு சதவிகிதம்
41.4 என்பது கிட்டத் தட்ட லோக்சபாவில் அது பெற்ற 43.6% ஓட்டின் அளவிலேயே இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.
அமேதி தொகுதி ஒன்றில் தான் தலைமறைவாகி - நீதிமன்றத்தால் கைதுசெய்ய
பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்ட சமாஜ்வாத கட்சியின்
மந்திரி காயத்ரி பிரசாந்த் பிரஜாபதியை பி.ஜே.பி.யின் கரிமா சின்ஹ் தோற்கடித்துள்ளார். நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அகிலேஷ் அந்த மந்திரியை கைது செய்யாவிடினும்,
குறைந்த பட்சம் அவரை தம் மந்திரி சபையிலிருந்தாவது நீக்கி இருக்க வேண்டும்.
ஆனால் அதை அவர் செய்ய வில்லை. இது ஜனநாயக வழி முறைக்கும்,
தர்மத்துக்கும் இழைத்த மிகப் பெரிய அநீதி ஆகும். அதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டி விட்டார்கள். ஆனால்,
இப்போது பா.ஜ.க. ஆட்சியில் அமாராவிட்டாலும், பிராஜாபதி கைது செய்யப்பட்டு,
14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளான்.
கோவாவில் 40 தொகுதிகளிலும் போட்டி இட்ட ஆம் ஆத்மி கட்சி பெற்ற மொத்த ஓட்டுக்கள் வெறும்
57,420 - அது பதிவான ஓட்டுக்களில் 6% ஓட்டுக்களாகும்.
மேலும், போட்டி இட்ட 40 வேட்பாளர்களில்
39 பேர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். ஆனால்,
ஓட்டு எண்ணிக்கை நேரம் வரை ஆம் ஆத்மி கட்சியினர் தாங்கள் தான் வெற்றி
பெறுவோம் என்ற வெற்றிப் போதையில் குதித்துக் கும்மாளம் போட்டார்கள். அதுவும் பஞ்சாபைப் பொருத்த மட்டில், ஆம் ஆத்மி கட்சிதான்
வெல்லும் என்று நினைத்து, வெற்றி விழாவிற்கும் ஏற்பாடு செய்து
மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.
காசியில் அனைத்து எட்டுத் தொகுதியிலும் தாமரைதான் வெற்றிக் கொடி
நாட்டி உள்ளது என்பது மோடியிடம் மக்களுக்கு இருக்கும் மோகம் மிகவும் தெள்ளத் தெளிவாகத்
தெரிகிறது. இது
மோடியின் சுனாமி அலை என்ற பத்திரிகைகள் மதிப்பிட ஆரம்பித்துள்ளன.
டெல்லியைப் போல் காங்கிரசையும், அகாலி - பி.ஜே.பி.யையும் தோற்கடித்து விடலாம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் நம்பிக்கை தவிடு பொடியாகி
அதன் தலைவர் கெஜ்ரிவாலின் ஆத் ஆத்மி கட்சியை இந்தியாவின் பல மாநிலங்களில் விஸ்தரிக்கும்
கனவும், பிரதம மந்திரி பதவி ஆசையும் நிராசையாகி விட்டது.
வெற்றி பெற்ற பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் நல்லாட்சி வழங்கி மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த உழைக்க வேண்டும் என்று வாழ்த்துவோமாக.
மோடி
- அமித் ஷா - இரட்டையர்களின் அயராத உழைப்புடன்
மற்ற மந்திரிகள், தொண்டர்கள் என்று பலரும் பலன் பாராது இரவு பகலாக
களப்பணி ஆற்றி உள்ளார்கள். அதே போல் பஞ்சாப் தேர்தல் வெற்றியும்
காங்கிரசின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
மோடி பி.ஜே.பி.யின் டெல்லி தலைமையகத்தில்
தேர்தல் வெற்றி விழாவில் ஆற்றிய உரையும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அந்த உரையில், நமது நாடு சுதந்திரம் பெற்று
75 ஆண்டுகள் பூர்த்தி ஆகும் 2022 ஆண்டிற்குள் புதிய
இந்தியாவை உருவாக்கும் தமது செயல் திட்டக் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
‘இந்த வெற்றிகள் இந்தியாவின் கோடானு கோடி மக்களின் ‘புதிய
இந்தியா’வை அமைக்கும் அவர்களின் அபிலாஷைகளையே காட்டுகிறது.
தேர்தல்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம். பல
வெற்றிக் கனிகள் நம் மரத்தில் விளைந்துள்ளன. ஒரு கனி மரம் எப்படி
கனிகளின் சுமையால் பணிந்து வணங்குமோ, அதைப் போல், இந்த வெற்றியில் நாம் மிகவும் பணிவுடன் இருக்க வேண்டியது நமது கடமையாகும்.
ஏழைகள் முன்னேற விரும்புகிறார்கள். தங்களுக்கு
தகுந்த வாய்ப்புப் பெறவே அவர்கள் விழைகிறார்கள். அது தான் புதிய
இந்தியாவின் அடித்தளமாகும். நடுத்தர மக்களின் சுமைகள் குறைக்கப்படவேண்டும்.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியவர்களின் சக்திகள் தான் இந்தியாவை
புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும். இந்த வெற்றிகளினால் நமது
கடமைகளை மிகவும் பணிவாக இருந்து செயல்படவேண்டிய கட்டாயம் நமக்கு வந்துள்ளது.
அதிகாரம் என்பது பதவிகளைப் பற்றியது அன்று. அதிகாரம்
பெறுவதை மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகவே
கருதவேண்டும்.’
‘நான் புதிய இந்தியா’ - என்ற இணைய தள டிவிட்டர்
கணக்கில் பலரும் சேர்ந்து மோடியின் ‘புதிய இந்தியா’வின் செயல் திட்டங்களுக்கு பலம் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து கட்சியினருக்கும் மோடி அறைகூவல் விடுத்துள்ளார். இதை மக்களின் இயக்கமாக மாற்ற மோடி விழைகிறார். ஆனால்,
அதை மற்ற கட்சியினர் ஏற்பார்களா? என்பது சந்தேகம்
தான். இருப்பினும், பெருவாரியான மக்கள்
பலம் மோடிக்கு இருக்கும் வரை, இந்த புதிய இந்தியா செயல்திட்டம்
வெற்றி பெரும்.
உண்மையிலேயே ‘புதிய இந்தியா’ என்ற கருத்தின் மூல கர்த்தா சுவாமி விவேகானந்தராகும். விவேகானந்தரை மிகவும் மதித்து, போற்றி, வணங்கி, ஆராதிக்கும் மோடி விவேகானந்தரின் கனவுக் கொள்கையை
செயல்படுத்த முன் வந்திருப்பது இந்திய மக்களின் பூர்வ புண்ணியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
புதிய
இந்தியா மலரட்டும்! புதிய இந்தியா ஓங்கி உயரட்டும்!
Comments