ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்திய உள்ளக் குமுறல்கள்




ஜெயலலிதா ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்கள் தீர்ப்புடன் ஏழு பக்கங்கள் அடங்கிய இணைப்புத் தீர்ப்பையும் வழங்கி சாதனை படைத்துள்ளனர்.

அந்த இணைப்புத் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இங்கு கொடுத்துள்ளோம். (முழு விபரம் தெரிய தலைப்பைச் சொடுக்கவும்.)

Ø  இந்த வழக்கின் விசாரணையின் போது, எங்கள் மனதில் அமைதியுடன் அலைபாய்ந்து கொண்டிருந்த சில கருத்துக்களை இங்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் தான், இந்த இணைப்புத் தீர்ப்பு.
Ø  இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதங்கள், ஆதாரங்கள் உள்ளிட்டவை, எவ்வளவு ஆழமாக திட்ட மிட்டு, மிகப் பெரிய அளவில் சொத்து குவித்ததுடன், அவற்றை போலியான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது நம் சட்ட நடைமுறைகளை நீர்த்து போகும் வகையிலான திட்ட மிட்ட சதி.
Ø  இவ்வாறு பெரும் சொத்தை மோசடி வழியில் சம்பாதிக்க, இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ள பல நவீன, புதுமையான வழிமுறைகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
Ø  ஒரு ஆக்டோபஸ் போல, தன்னுடைய பல கைகளை விரித்து, இந்த ஊழல், அனைத்து துறைகளிலும் பரவியுள்ளதை, அமைதியாக நிராயுத பாணியாக வேடிக்கை பார்க்கும் நிலைக்கு இன்றைய சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
Ø  சரியான கண்காணிப்பு நடவடிக்கை இல்லாத நிர்வாகத்தால், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்யப்படும் ஊழல், நாட்டின் அடித்தளம் வரை அனைத்து தரப்பிலும், தேசத்தின் இழையாக மாறியுள்ளதை நாம் அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம்.
Ø  ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அளித்த உறுதி மொழியை மட்டும் மீறவில்லை; மக்களின் நம்பிக்கையையும் மீறுகின்றனர்.
Ø  நல்ல கோட்பாடுகளுடன், நாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் உள்ளவர்களைவிட, இது போன்ற ஊழல்வாதிகள் அதிக அதிகாரம், அந்தஸ்து, வெற்றி பெறுவது, நாட்டின் அஸ்திவாரத்தையே ஆட்டி விடும்.
Ø  ஊழல் எனும் பயங்கரமான ஆதிக்கத்துடன் உள்ளவர்களால், பெரும்பான்மையாக உள்ள நல்ல சிந்தனையாளர்களுக்கு தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
Ø  சுதந்திர இந்தியாவுக்காக போராடியது போல, இந்த ஊழலுக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தில், தன்னலம் இல்லாமல் அனைவரும் ஈடுபடவேண்டும்.

இந்த உணர்ச்சிகரமான இணைப்புத் தீர்ப்பிற்குக் காரணம் ஜெயலலிதா வுடன் சேர்ந்து மற்ற மூன்று பேர்களும் கற்பனைக்கும் எட்டாத பலவிதமான அரசாங்க துஷ்பிரயோகம், பல போலி நிறுவனங்கள், பலவிதமான மிரட்டலால் சொத்து சேர்ப்பு ஆகியவைகளாகும்.
(முழுவிபரம் அறிய இணைப்பைச் சொடுக்கவும்: இணைப்பு)

அந்த மூலத் தீர்ப்பில் உள்ள மிகவும் முக்கியமானவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

(குறிப்பு: 1991-1996: ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்தக் காலகட்டத்தில் தான் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கப் போவதாக அறிவிக்கிறார். ஆனால், அந்த தியாக மனம் ஏன் இப்படி ஊழல் மனமாக மாறியது? என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. அதற்கு சகிகலா சேர்க்கை தான் காரணம் என்றால், தீர்ப்பின் பல வாசகங்கள் அதை முழுவதும் நம்பும் நிலையில் இல்லை என்றே தெரிகிறது. - ஆசிரியர்)

v  முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து, அவர் சார்பாக சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் பல நிறுவனங்கள் பெயர்களில் வைத்துக் கொண்டு, தன்னை மறைத்துக் கொண்டுள்ளார்.
v  ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தொடர்பாக, சசிகலாவுக்கு பவர் ஆப் அட்டர்னியை ஜெயலலிதா வழங்கியது, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காகத் தான்.
v  முதல்வராக இருந்த கால கட்டத்தில், பல நிறுவனங்களைத் துவங்கியதன் மூலம் இவர்களுக்கு இடையே இருந்த கூட்டு சதி உறுதியாகிறது. ஒரே நாளில், 10 நிறுவனங்கள் துவங்கப் பட்டுள்ளன. அது தவிர, சசிகலாவும், சுதாகரனும், தனியாக நிறுவனங்களை துவங்கி உள்ளனர். இந்த நிறுவனங்கள், சொத்துக்கள் வாங்கியது தவிர வேறு எந்த வணிக நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இந்த நிறுவனங்கள் எல்லாம், ‘நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் விரிவாக்கம் என்பதும், ஜெயலலிதா, சசிகலா விருப்பப்படி இந்த நிறுவனங்கள் வந்தன என்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி, சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
v  நிறுவனங்கள் எல்லாம் ஜெயல்லிதாவின் வீட்டில் இருந்து தான் இயங்கி உள்ளன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியவர்களின் நடவடிக்கைகள் பற்றி தனக்கு தெரியாது என, ஜெயலலிதா பாசாங்கு செய்வதை ஏற்க முடியாது. மூவரும், ஜெயலலிதாவுடன் - அவர்கள் ரத்த சம்பந்தமான உறவு இல்லாவிடினும் - வசித்து வந்தனர்.
v  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியவர்களின் பேர்களில் துவங்கிய போலி நிறுவனங்கள் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட பணத்தில் தான் ஏராளமான நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு வந்த பணத்தை பார்க்கும் போது, தீய வழியில் ஜெயலலிதா சேர்த்த செல்வத்தை வைத்து, நிறுவனங்கள் பெயர்களில் சொத்துக்களை வாங்குவதறகாக, தீவிர சதி நடந்திருப்ப்பது உறுதியாகிறது.
v  சென்னை போயஸ் தோட்டத்தில் பணியாற்றிய ஜெயராமன் என்ற ஊழியர் அளித்த சாட்சியத்தில், விஜயன் என்பவர் மூலம், வெவ்வேறு வங்கி கணக்குகளில் பணம் டிபாசிட் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். வங்கி விபரங்கள், சூட்கேஸ்களில் கொண்டு செல்ல வேண்டிய பணம் விபரங்கள் பற்றி, சசிகலா தான் உத்தரவுகள் வழங்குவது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
v  சென்னை வடக்கு கடற்கரை சார் பதிவாளரின் சாட்சியத்தில் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு, வாங்குபவர் பெயரே இல்லாமல் பத்திரப்பதிவுகள் வலுக்கட்டாயமாகச் செய்யப்பட்டதும் தெரிவந்துள்ளது

இவைகள் எல்லாம் நடந்தும், தமிழ் நாட்டு மக்கள் - அம்மா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் - என்று சொல்வதும், ..அதிமுக. கட்சியினர்மீண்டும் அம்மா அட்சி மலரும்என்று அம்மா சமாதியில் சபதம் செய்வதும், தமிழ் நாட்டு மக்களின் முதிர்ச்சியைக் காட்ட வில்லை.

இனி இலவசம் வேண்டாம்; நிரந்தர முன்னேற்றம், வளர்ச்சி, கல்வி, இருப்பிடம், வேலை’ - என்ற மன நிலை தமிழ் மக்களுக்கு வந்தால் தான், ஊழலும் ஒழியும், தூய்மையும் மலரும், தர்மமும் வெல்லும்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017