நீதியால் தண்டிக்கப்பட்ட ஊழல், அரசியலால் கோலோச்சும் கொடுமை!
தமிழ் நாட்டு அரசிலும், அரசியலிலும் ஊழல் என்பது உலகரிந்த உண்மை.
இப்போது தான் முதல் முதலாக ஆட்சியில் ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாகச்
சொத்து சேர்த்ததற்காக காலம் சென்ற ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு
வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா காலமான காரணத்தினால், அவர்
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, மற்ற மூவருக்கும் பெங்களூரு
தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் 2014, செப்டம்பர் மாதம்
27-ல் அளித்த தண்டனையான நான்கு ஆண்டுகள் சிறை - ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி அபராதம் ஆகியவைகளை உறுதி
செய்து 14-ம் தேதி பிப்ரவரி 2017 தீர்ப்பு
வழங்கியது. ஜெயலலிதாவான முதல் குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை - 100 கோடி ரூபாய் அபராதம் என்று குன்ஹா
விதித்த தீர்ப்பில், சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்,
அபராதத் தொகையை அவரது சொத்துக்களின் மூலம் கட்டவும் உச்ச நீதிமன்றம்
உத்திரவு பிறப்பித்திருக்கிறது. ஆகையால் ஜெயலலிதா ‘ஊழல் புரிந்துள்ளார்; ஊழலை ஊக்கிவித்துள்ளார்’
என்பதையும் உச்ச நீதிமன்றம் மிகவும் தீர்க்கமாக தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
நீதிக்குத் தலைவணங்க அ.இ.அதிமுக தயாராக இல்லை.
இன்னமும் அந்த கட்சியும், கட்சியின் எம்.எல்.ஏ.க்களும் அரசியல் மூலமாக சதுரங்க
ஆட்டம் ஆடி தண்டனை பெற்ற மூவரையும் - குறிப்பாக ஜெயலலிதாவால்
தன் நம்மிக்கைக்குரிய உடன்பிறவாச் சகோதரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தன் போயஸ் கார்டனிலேயே வசிக்க அனுமதித்த மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவியான
சசிகலாவையாவது - விடுவிக்க எதையும் துணிந்து செய்ய முடிவெடுத்ததாகவே
தெரிகிறது.
அரசியலால் தர்மம் தாக்கப்பட்டு நிலைகுலையும் நேரத்தில், ஆண்டவன் அருளால்,
அம்மாவின் அன்பையும், நம்பிக்கையையும் முழுவதுமாகப்
பெற்ற பன்னீர் செல்வம் திடீரென்று சசிகலா கும்பலின் சூழ்ச்சி அரசியலின் உஷ்ணம் தாங்காமல்,
போர்க்கொடி தூக்கியது தமிழகம் செய்த பூர்வ புண்ணியம் என்று தான் சொல்ல
வேண்டும். ஆனால், இந்த தருணத்திலும்,
பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் அம்மாவை மறந்து சின்னம்மாவின் பின்னால் அணி சேர்ந்து,
சசிகலாவை முதல் அமைச்சராக முனைப்புக் காட்டியது, தமிழக அரசியலில் அதிர்ச்சியை உண்டாக்கியது. அவரை முதல்
அமைச்சராக ஆக்க ஆளுளரிடம் விண்ணப்பம் செய்தனர் மிகப் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள். ஆனால், உச்ச நீதி மன்றத் தீர்ப்பால், சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பாக
கட்சியின் செயலாளர் என்ற பதவியின் மூலமாக தமது உறவினர்களை - அம்மாவால்
நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கிய சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மன்னிப்புக் கடிதம்
மூலம் சேர்க்கப்பட்டு, உடனேயே துணைச் செயலாளர் என்ற புதிய பதவியையும்
அளிக்கப்பட்ட அவலம் அரங்கேறியது. அந்த துணைச் செயலாளர் சிங்கப்பூர்
பிரஜையாக தம்மை வெளிப்படையாகச் சொன்னதால் அதிலும் அரசியல் மற்றும் சட்டச் சிக்கல் உண்டாகும்
என்று தான் படுகிறது. இதை உள்கட்சி விவகாரம் என்று இலகுவில் அலட்சியம்
செய்ய முடியாது.
தனது சொல்லுக்கு அடிபணிந்து நடக்கும் இடைப்பாடி பழனிச்சாமியை
முதல் அமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டார் சசிகலா என்ற கைதி. இனி சின்னம்மா சிறையிலிருந்து
தமிழக அரசை ஆட்டிப் படைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நீதித் துறை நீதி வழங்கினாலும், அரசியல் அந்த நீதியை வலுவிழக்கச்
செய்யும் நிலைக்கு ஒரு வழி பிறக்க வேண்டும். கொள்கை அரசியல் போய்,
தனி நபர் துதிபாடும் அரசியல் கோலோச்சும் போது, அது குடும்ப அரசியலுக்கு வழிவகுக்கும் என்று தான் படுகிறது.
‘மக்களுக்காக நான்; மக்களால் நான்’ என்று தமது இரட்டை விரலைக் காட்டி இரட்டை இலைக்கு பெருவாரியான வாக்களர்களை
ஓட்டளிக்க வைத்து வெற்றிவாகை சூடிய அம்மாவின் பின்னால் தேர்தல் பிரசாரத்தில் அவரது
வாகனத்தில் அமர்ந்து இருந்த சின்னம்மாவை மக்கள் அம்மா இடத்தில் வைத்துப் பார்க்கத்
தயாரில்லை என்பதை எம்.எல்.ஏ.க்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடத்தி இதற்கு ஒரு நிரந்தர முடிவு
ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
வேண்டாத செலவு தான்.
வேண்டாத தேர்தல் தான். வேண்டாத கால விரயம் தான்.
ஆனால், நீதி உண்மையிலேயே நிலை நாட்டப்பட வேண்டு
மென்றால், தேர்தல் தான் இதற்கு ஒரே வழி.
அப்போது தான் நீதியை அரசியலிலும் எதிர்பார்க்கலாம்.
Comments