யோக வாசிஷ்டம்
இந்தக் கட்டுரைக்கு மூலாதார முக்கிய ஆதாரம் : லகு யோக வாசிஷ்டம் என்ற ஆங்கில நூல் : கே . நாராயண ஸ்வாமி அய்யர் - Link ) முன்னுரை : சமீபத்தில் என் . கணேசன் என்பவரின் ‘ அறிவார்ந்த ஆன்மிகம் ’ என்ற தலைப்பில் ‘ யோக வாசிஷ்டம் ’ பற்றிய ஒரு கட்டுரையைப் படிக்க நேரிட்டது . அதன் சுருக்கத்தை இந்த இதழில் பகிர்ந்து கொண்டு , பிறகு , யோக வாசிஷ்ட மூல நூலில் சொல்லப்பட்டதை எளிய உரை நடையில் புரியும் படி சில மாதங்கள் எழுத விரும்புகிறேன் . அது உங்களால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன் . ‘ யோக வாசிஷ்டம் ’ என்ற உபதேச வாசகங்கள் ராமாயணத்தில் உள்ளது . இது குரு வசிஷ்டர் ராமபிரானுக்கு உபதேசம் செய்ததாகும் . இது பகவத் கீதைக்கு இணையான ஒரு ஞானப் பொக்கிஷமாகும் . திரிலோக சஞ்சாரியான நாரதர் யோக வாசிஷ்டம் பற்றிச் சொன்ன விமரிசனமே அதன் உத்தம உயர்வுக்கு ஒரு அத்தாட்சியாகும் : “ பிரம்ம லோகத்திலும் , சொர்க்கத்திலும் , பூமியிலும் யோக விசிஷ்டம் போன்ற மகத்தான உபதேசத்தை என் செவிப்புலன் கேட்டு புனிதம் அடைந்தது .” யோக வாசிஷ்டம...